Wednesday 21 May 2014

மோடியும் மாநிலங்களவையும்(ராஜ்ய சபா)

பச்சை அம்புகள் தேர்ந்து எடுக்கப்படுவதைக் குறிக்கும்..
இந்திய மக்கள் இந்தியப் பெரு முதலாளிகளின் நலன்களை யார் பாதுகாப்பது என்பது பற்றி தேர்தல் மூலம் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களாட்சி முறைமையிலான தேர்தல் என்னும் பெயரில் இந்திய மக்கள் புது டில்லியில் உள்ள மக்களவைக்கும் 28 மாநிலங்களில் உள்ள் சட்ட சபைகளுக்கும்  உறுப்பினர்களைத் தேர்ந்து எடுப்பார்கள்.தேர்தல் முடிவுகளை கட்சிகள் செய்யும் பரப்புரைகள் முடிவு செய்யும். பரப்புரையின் வலுவும் திறனும் கட்சிகளுக்கு இந்தியப் பெரு முதலாளிகளிடமிருந்து கிடைக்கும் பணத்தால் நிர்ணயிக்கப்படும்.

இந்திய ஆட்சி  அதன் குடியரசுத் தலைவரிடமும், அதன் பாராளமன்றத்தின் இரு அவைகளான லோக் சபா எனப்படும் மக்களவையிடமும், ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையிடமும் இருக்கின்றது. மக்களவையின் 543 உறுப்பினர்களை மக்கள் நேரடியான வாக்களிப்பின் மூலம் தேர்ந்து எடுப்பார்கள். தற்போது மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த கட்சிகளுமாக 335 உறுப்பினர்களை மக்கள் தேர்ந்து எடுத்துள்ளனர். பரப்புரைக்கு முப்பதினாயிரம் கோடி ரூபாக்கள் செலவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.

250 உறுப்பினர்களைக் கொண்டது மாநிலங்களவை. இதில் 238 உறுப்பினர்களை மாநில சட்ட சபை உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பார்கள். மிகுதி 12 பேரையும் இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிப்பார். இதற்கு  இலக்கியம், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் இருந்து ஆட்களைத் தேர்ந்து எடுப்பது வழமை. கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரையும் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார்கள்.

இந்தியக் குடியரசுத் தலைவரை மாநிலங்களின் சட்ட சபை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பார்கள்.

இந்தியாவில் பொதுவாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட வேண்டுமாயின் பொதுவாக அது மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு அதில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கையொப்பம் இடவேண்டும்.  புதிதாக  இந்தியத் தலைமை அமைச்சரான நரேந்திர மோடிக்கு இப்போது உள்ள பிரச்சனை இது தான். முதலாவது இந்தியக் குடியரசுத் தலைவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து வந்தவர். இரண்டாவது தற்போது 245 உறுப்பினர்களைக் (5 பேர் மணடியைப் போட்டுவிட்டனராம் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம்) கொண்ட மாநிலங்களவையில் முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களின் விபரம் வருமாறு:

காங்கிரசுக் கட்சி                        --------------------------------- 68
பாரதிய ஜனதாக் கட்சி          ---------------------------------   42
ஜெயலலிதாவின் அதிமுக ---------------------------------  10
மம்தா பனர்ஜீயின் திரிணாமுல் காங்கிரசு---------------12
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ----------                  14
முலாயம் சிங்கின் சமாஜவாதக் கட்சி-------------- ----   9
 ஒரிசா நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா---------------- 6
தெலுங்கு தேசம் -------------------------------------------------6
பொதுவுடமைக் கட்சி (CPI) -----------------------------------2  
பொதுவுடமைக் கட்சி (மக்ஸியம்) (CPI(M)----------------9
மிகுதி பல்வேறுபட்ட மாநிலக் கட்சிகளின் உறுப்பினர்களாகும்.

இதுவரைகாலமும் காங்கிரசுக் கட்சி பாஜகாவின் ஆதரவுடனும் சில சட்டங்களை நிறைவேற்றியது. உதாரணமாக தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கும் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டியது என்ற படியால் பாஜகவின் ஆதரவுடன் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. போதிய ஆதரவு இல்லாததால் பல சட்ட மூலங்கள் இப்போதும் நிலுவையில் உள்ளன.     காங்கிரசிற்கும் அதன் கூட்டணிகளுக்கும் மொத்தமாக 102 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உண்டு.

எல்லாச் சட்டங்களுக்கும் மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லை. வரவு செலவுத் திட்டம உட்பட்ட நிதி தொடர்பான சட்டங்களை மக்களவை நிறைவேற்றி விட்டு மாநிலங்களவைக்கு அவற்றை அனுப்பும். மாநிலங்களவை அவற்றை நிராகரிக்க முடியாது. அதில் மாற்றம் செய்யும் படி வேண்டுதல் விடுக்கலாம். அந்த மாற்றங்களின்றி மக்களவை அவற்றை நிறைவேற்றலாம்.

தற்போது உள்ள மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம்  2016-ம் ஆண்டு முடிவடையும். அதன் பின்னர் அவர்களின் இடங்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்போதும் பெரிதான மாற்றங்கள் பாஜகவினருக்கு சாதகமாக ஏற்படாது. பாராளமன்றத் தேர்தலுடன் நடந்த ஆறு சட்டசபைகளுக்கான தேர்தலிலும் பாஜக பெரிய வெற்றி பெறவில்லை.  இதனால் மோடி பல சிறிய கட்சிகளுக்கு அமைச்சுப் பதவிகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

கூட்டுக் கூட்டம்
மாநிலங்களவையில் நரேந்திர மோடி ஒரு சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தால் அவர் இரு சபைகள் கூட்டுக் கூட்டத்தில் அதை நிறைவேற்றலாம். கூட்டுக் கூட்டம் கூட்டும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. அது மோடியின் முதல் பிரச்சனை.   அரசமைப்பு சட்டத்தின் மீது திருத்தம் கொண்டுவரும் சட்ட மூலங்களுக்கு கூட்டுக் கூட்டம் கூட்ட முடியாது. கூட்டுக் கூட்டம் கூட்டினால் அங்கு 543 மக்களவை உறுப்பினர்களும் 245 மாநிலங்களவை உறுப்பினர்களும் கூடி இருப்பார்கள். மொத்தம் 798. அதில் மோடியின் கூட்டணி கட்சியின் மக்களவை உறுப்பினர் 345 மாநிலங்களவை உறுப்பினர்கள் 42ம் சேர்ந்து மொத்தம் 386 உறுப்பினர்கள். இதற்கு செல்வி ஜெயலலிதாவின் கட்சி பெரிதும் பயன்படும்.  மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும் போதும் செல்வி ஜெயலலிதாவின் ஆதரவு மோடிக்குத் தேவை. மொத்தத்தில் அம்மா காட்டில் மழைதான். அந்த சொத்துக் குவிப்பு வழக்கு!!!!!

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...