Monday 3 March 2014

சீனாவிற்கு எதிரான கடலடிப் போர்க்கூட்டணி

சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் தமது விமானம் தாங்கிக் கப்பல்களை புதியனவாக்குதலிலும் வலிமிக்கவையாக்குவதிலும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.  சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறைகள் பின் தங்கி இருக்கின்றன. இந்த இடைவெளியை சீனா தனது நீர்மூழ்கிக்கப்பற்படையை வலுமிக்கதாக்கி நிரப்ப முயல்கின்றது. நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வீசக் கூடிஅ அதிவேகமாக நீருக்கடியில் செல்லும் ஏவுகணைகளை சீனா உருவாக்கிவருகின்றது.

சீனா மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய லயோனிங் எனப்படும் விமானம் தாங்கிக்கப்பல் வெறும் பயிற்ச்சிக் கப்பலாக மட்டுமே செயற்படக் கூடியது ஒரு போர் கப்பலாக அல்ல எனச் சொல்லப்படுகின்றது. தொழில்நுட்பக் கோளாறுகளும் ஒரு விமானம் தாங்கிக் கப்பலைப் பாதுகாக்கக் கூடிய திறன் மிக்க நாசகாரிக்கப்பல்கள் சீனாவிடம் இல்லை என்பதாலும் சில படைத் துறை ஆய்வாளர்கள் சீனாவின் லயோனிங் விமானம் தாங்கிக் கப்பல் போர்முனைக்கு உகந்தது அல்ல என்கின்றனர்.

சீனாவின் லியோனிங்கின் விமானம் தாங்கு மேடை 999 அடி நீளமானது. இந்தியாவின் விக்ராந்தின் மேடை 860 அடி நீளமானது. ஜப்பானின் இஜுமோ என்னும் உழங்கு வானூர்தி தாங்கிக் கப்பலின் மேடை 814 அடி நீளமானது. ஜப்பானிய அரசமைப்புச் சட்டம் ஜப்பான் ஒரு விமானம் தாங்கிக்கப்பலை வைத்திருப்பதைத் தடை செய்கின்றது. இதனால் ஜப்பானில் இஜுமோ ஓர் உழங்கு வானூர்திக் கப்பலாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தேவை ஏற்படும்போது ஐம்பது போர்விமானங்களை தாங்கிச் செல்லக் கூடியது. இந்தியாவின் விக்ராந்தில் 36 விமானங்கள் மட்டுமே.


சீனாவுடனும் இந்தியாவுடனும் ஒப்பிடுகையில் ஜப்பானிடம் மிகவும் திறன்மிக்க கப்பல்கட்டும் தொழிற்துறை இருக்கின்றது. ஜப்பான் தனது நாசகாரிக் கப்பல்களில் இருந்து நிலையான இறக்கைகள் கொண்ட ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை உள்ளடக்குவது குறித்து தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றது. இவற்றால் கிழக்குச் சீனக் கடலில் சீனப் படையினரின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் என ஜப்பான் நம்புகின்றது. ஜப்பான் தனது நாசகாரிக் கப்பல்களை சிறிய விமானம் தாங்கிக் கப்பலாக மாற்றவும் திட்டமிடுகின்றது. ஏற்கனவி ஜப்பானிடம் மூன்று உழங்கு வானுர்தி தாங்கிக் கப்பல்கள் இருக்கின்றன.  RQ-4 Global Hawk என்னும் அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்களையும் ஜப்பான் வாங்க உத்தேசித்துள்ளது.

2014-ம் ஆண்டு சீனா தனது புதிய ரக நீர்மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவின் தாக்கும் திறனை அதிகரிக்கவுள்ளது. சீனாவின் JL-2 நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு ஏவுகணைகள் 14,000 கிலோமிட்டர் அதாவது 8,699 மைல்கள் வரை பாயக் கூடியவை. இவற்றால் ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய், அலஸ்கா போன்ற மாநிலங்கள் மீது அணுக்குண்டுத் தாக்குதல்களை செய்யும் திறனை சீனா பெறுகின்றது.

உலகிலேயே படைத்துறைச் செலவு அதிகரிப்பு ஆசிய நாடுகளில்தான் நடந்து கொண்டிருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஆசியப் படைத்துறைச் செலவு 2011இலும் பார்க்க 9.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் சீனாவின் படைத்துறைச் செலவு மற்றா ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருக்கிறது.

சீனா உருவாக்கியுள்ள அதிவேகமாகச் செல்லும் ஏவுகணைகள் அமெரிக்கா பல பில்லியன்கள் செலவி உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமையை செல்லுபடியற்றதாக்கியுள்ள வேளையில் சீனா தனது புதிய தர நீர்மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ள. சீனாவிடம் மொத்தமாக 60 நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் ஆறு அணுவலுவில் இயங்கிக் கொண்டு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசக் கூடியவை.

சீனாவின் முத்துமாலைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட துறைமுகங்களான அம்பாந்தோட்டை, சிட்வே, சிட்டகொங், குவாடர் ஆகிய துறை முகங்கள் ஆழ்கடல் துறைமுகங்களாக இருக்கின்றன. சீனா தனது எதிர்கால கடற்படை வலுவில் நீர் மூழ்கிக் கப்பல்களிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது என இது சுட்டி நிற்கின்றது. சீனா தனது நீர் மூழ்கிகளில் இருந்து வீசக் கூடிய ஏவுகணைகளில் வலுவையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வலிமைக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் தனது நீர் மூழ்கிக் கப்பல்கள் இருக்க வேண்டும் என சீனா விரும்புகிறது. சீனா நீர் மூழ்கிக் கப்பல்களில் அதிக அக்கறை காட்டுவதன் மற்ற நொக்கம் நீர் மூழ்கிக் கப்பல் தொடர்பான தகவல்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என்பதாகும்.

சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் வலுவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா 35 பில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கிய P-8A Poseidon என்னும் ஏவுகணைகளை வேட்டையாடும் போர் விமானங்கள் பரீட்சித்துப் பார்த்த வேளையில் அவை வெற்றி அளிக்கவில்லை. இந்த P-8A Poseidon விமானங்கள் எட்டை இந்தியாவும் வாங்கியிருந்தது.

தாய்லாந்தின் கடற்படையினருக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான பயிற்ச்சிகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் தாய்லாந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவிருக்கின்றது.  வியட்னாம் ஏற்கனவே இரசியாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கிவிட்டது. பிலிப்பைன்ஸ்சும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது. மியன்மார் இந்தியாவிடமிருந்து நீர் மூழ்கிக்கப்பல்களைக் கண்டறியும் உணரிகளை வாங்கியுள்ளது. ஜப்பான் தனது நாட்டில் உள்ள தளங்களில்  அமெரிக்க நீர்மூழ்கி வேட்டை விமானங்களை நிறுத்த அனுமதித்துள்ளது. சீனாவிற்கு கிழக்கேயும் தென் கிழக்கேயும் உள்ள இந்தச் சிறிய நாடுகளின் நிதிவளம் பெரும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடமளிக்காத வேளையில் இவை தமது கடற்படைப் படகுகளின் திறனையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கின்றன. இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து நீர்மூழ்கி போர் ஒத்திகையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. இரு நாடுகளும் மேலும் பல படைத்துறைகளில் இணைந்து செயற்படலாம். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தாய்வான் பெரிய நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் ஒத்திகையைச் செய்துள்ளது. இதில் நீர்மூழ்கிகளை அழிக்கும் முறைமை பரீட்சிக்கப்பட்டது. மியன்மார் 2015-ம் ஆண்டில் இருந்து தனக்கு என ஒரு நீர்மூழ்கிப் படையை உருவாக்கவிருக்கின்றது. மலேசியாவிடமும் சிங்கப்பூரிடமும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன அவை தமது நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையையும் வலுவையும் அதிகரிக்கவிருக்கின்றன. சீனாவிற்கு சவால் விடும் வகையில் ஜப்பானிடம் பெரிய நீர்மூழ்கிப்படை இருக்கின்றது.

அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல்
2015-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் புதிப்பிக்கப்பட்ட ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல் ஜப்பானில் நிலை கொள்ளவிருக்கின்றது. தற்போது ஜப்பானில் இருக்கும் ஜோர்ஜ் வாஷிங்டன் கப்பலுக்குப் பதிலால ரொனால்ட் ரீகன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வர்ஷா திட்டம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டனத்தில் இருந்து 200 கிலொ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுகத்தில் உயர் தொழில் நுட்ப கடற்படைத் தளம் ஒன்று சீன அச்சுறுத்தல்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்தியக் கடற்படையின் கிழக்குக் கட்டளையகத்தின் கீழ் வரும் இந்தத் தளத்தில் நிலத்துக் கடியில் இந்தியாவின் அணுக்குண்டுகள் தாங்கிய அரிகாந்த் நீர்மூழ்கிக் கப்பலை மறைத்து வைத்துக் கொள்ளக் கூடிய வசதி உண்டு. இந்தியக் கடற்படையின் கிழக்குக்கட்டளையகத்தின் கீழ் அரிஹாந்த் நீர்மூழ்கிக்கப்பல், ஜலஷ்வா என்னும் ஈருடகக் கப்பல், சக்ரா என்னும் அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட ஐம்பது கடற்கலன்கள் இருக்கின்றன. இந்தத் துறைமுகத்தில் எதிரிப்படைகளின் தாக்குதல்களிலும் கண்காணிப்பிலும் இருந்து கடற்படைக்கலன்களை மறைத்து வைக்கக் கூடிய வசதிகள் உண்டு.

வலிமை மிக்க இந்தியக் கடற்படை
இந்தியா தனது கடற்படை வலுவை நிதானமாகவும் உறுதியாகவும் வளர்த்து வருகின்றது. மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிக நீண்டதும் எதிரிகளின் அச்சுறுத்தல் மிகுந்ததுமான கடற்பரப்பைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. பாக்கிஸ்த்தான், இலங்கை, மியன்மார், சீனா, பங்களாதேசம் ஆகிய நாடுகளுடன் கடல் எல்லையைக் கொண்ட இந்தியாவிற்கு மிக வலிமையுள்ள கடற்படை அவசியம். இந்தியாவிடம் 160 கப்பல்கள் கொண்ட இரு கடற்படைப் பிரிவுகள் இருக்கின்றன. ஒரு விமானம் தாங்கிக் கப்பல், இருபது நாசகாரிக் கப்பல்கள், ஒரு அணுவலுவில் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல், 14 மற்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் என ஒரு பெரும் கடற்படை இந்தியாவிடம் உண்டு. அத்துடன் ஆசியாவிலேயே சிறந்த அனுபவமும் பயிற்ச்சியும் இந்தியக் கடற்படைக்கு உண்டு. பாக்கிஸ்த்தானிடம் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் உண்டு. இவை இந்தியாவிற்கு எதிராக மட்டுமே செயற்படும் என எதிர்பார்க்கலாம். இவற்றைச் சமாளிக்க வேண்டிய நிலையும் இந்தியாவிற்கு உண்டு.

ஜப்பானைச் சுற்றியுள்ள நாடுகள் தமது படைத்துறை வலுவை சீனாவிடமிருந்து தம்மைப் பாதுகாக்கும் நோக்குடனேயே வளர்த்து வருகின்றன. இந்த நாடுகள் யாவும் ஒன்றிணைந்து செயற்பட்டால் சீனாவின் சவாலை சமாளிக்க முடியும். ஆசிய ஆட்சியாளர்களுக்கு படைத்துறைப் போட்டி அவசியமாக இருக்கலாம். ஆனால் ஆசிய மக்களுக்குத் தேவைப்படுவது அமைதியும் அபிவிருத்தியுமே.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...