Sunday 19 January 2014

தாய்லாந்தில் தொடரும் ஆர்ப்பாட்டமும் அண்ணன் காட்டிய வழியும்

சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தது அரபு வசந்தம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக பணக்காரர்கள் கிளர்ந்து எழுந்து போராடுவது தாயலாந்தில். தாய்லாந்தில் நடப்பது பல நூறு ஆண்டுகளாக உலகெங்கும் நடக்கும் உள்ளவர்களுக்கும் இலாதவர்களுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டமே.

 தாய்லாந்தில் பியூ தாய் கட்சி ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்கான சமூக நலன் திட்டங்களை செயற்படுத்தும். மக்களுக்கான இலகு மருத்துவ வசதி விவசாயிகளுக்கான உதவி போன்றவற்றை சரிவரச் செய்யும். இதற்கான அரச செலவைச் சமாளிக்க சூதாட்டம், மதுபான விற்பனை போன்றவற்றிற்கான வரியை அதிகரிக்கப்படும். இதனால் மக்களின் ஆதரவு பியூ தாய்க் கட்சிக்கு எப்போதும் உண்டு. தேர்தல் என்று வரும்போது பியூ தாய் கட்சி வெற்றி பெறும். உடனே எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சி தேர்தலில் குழறுபடி என்று பெரும் ஆர்ப்பாட்டங்கள் செய்யும். இது தாய்லாந்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்மை மக்களாட்சிக்கான கூட்டமைப்பு என அழைத்துக் கொள்கின்றனர். இவர்கள் மஞ்சள் சட்டை போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதால் இவர்களை மஞ்சள் சட்டைக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். எதிர்க் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் பியூ தாய் கட்சினர் செஞ்சட்டைக்காரர்கள் என்னும் பெயரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள். மக்கள் வலுக் கட்சிய் என்னும் பெயரில் தொடக்கப்பட்ட கட்சி தடை செய்யப்பட்டதால் இருதடவை பெயர்களை மாற்றிக் கொண்டது. தாய்லாந்தில் இரு பிரிவினர் உள்ளனர். ஒன்று நடுத்தர வர்கத்தினரையும் ஏழைகளையும் கருத்தில் கொண்ட கட்சியினர். இக்கட்சியினரே மக்கள் வலுக் கட்சி, பியூ தாய் கட்சி, தாய் ரக் தாய் கட்சி என்னும் பெயர்களில் செயற்படுகின்றனர்.  மற்றது அரச குடும்பம், படைத்துறை, பணக்காரர்களின் ஆதரவைக் கொண்ட மக்களாட்சிக் கட்சி.

தாய்லாந்தில் தேர்தல் மூலம் மக்கள் அரசைத் தெரிவு செய்வதும் பின்னர் அந்த அரசை படைத்துறையினர் கவிழ்ப்பதும் நடப்பதுண்டு. மஞ்சள் சட்டைக்காரர்கள் சிவப்புச் சட்டைக்காரர்கள் என இரு பிரிவாக மக்கள் பிரிந்து ஆர்ப்பாட்டங்கள் செய்வார்கள். இப்போடு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் முதலாளித்துவவாத மஞ்சள் சட்டைக்காரர்கள்.

கற்றறிந்த மேல் தட்டு வர்க்கத்தினரின் வாக்குகளுக்கு கல்லாத கிராமப்புற மக்களின் வாக்குகளிலும் பார்க்க ஆட்சியாளர்கள் அதிக மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பது மஞ்சள் சட்டைக்காரர்களின் தத்துவமாக இருக்கிறது. எமக்கு வாக்களிக்காத மேல் தட்டு வர்க்கத்தினரைப்பற்றி நாம் கவலைப்படப்போவதில்லை என்பது சிவப்புச் சட்டைகாரர்களின் அரசியல் கொள்கையாக இருக்கிறது.

2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த படைத்துறையினரின் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து தக்சின் ஷினவத்ராவின் மக்கள் வலுக் கட்சி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் துபாயில் இருந்த படியே தாய் ரக் தாய் கட்சியை (Thai Rak Thai party) தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து சமக் சுந்தர்வெஜ் தலைமை அமைச்சராக்கப்பட்டார். மஞ்சள் சட்டைக்காரர்கள் சமக் சுந்தர்வெஜ் தக்சின் ஷினவதாராவின் கைப் பொமை என எதிர்ப்புக் காட்டினார்கள். சமக் சுந்தர்வெஜ் தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். பின்னர் வெளிநாட்டில் இருக்கும் தக்சின் ஷினவத்ராவின் மைத்துனர் சோமாச்சி வொங்சவத் (Somchai Wongsawat) தலைமை அமைச்சரானார். இவரும் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். பின்னர் எதிர்க்கட்சியினர் 2010இல் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இவர்களின் ஆட்சியில் அதிருப்தி அடைந்த தக்சின் ஷினவதாராவின் கட்சியினர் செஞ்சட்டைக்காரர்கள் என்னும் பெயரில் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் தக்சின் ஷினவத்ராவின் அழகிய இளம் தங்கை யிங்லக் தலைமை அமைச்சராக வெற்றி பெற்றார். 2012-ம் ஆண்டு முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராக செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொலை செய்த குற்றம் சுமத்தப்ப்பட்டது. 2013-ம் ஆண்டு தங்கை யிங்லக் தனது அண்ணன் உடபடப் பல முன்னாள் ஆட்சியாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முயற்சி செய்தபோது மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. தங்கை யிங்லக் தனது பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தையும் கைவிட்டார். ஆனாலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. 2013-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மஞ்சள் சட்டைக்காரர்கள் ஒரு இலட்சம் மக்களைத் தெருவில் இறக்கியுள்ளனர். 2013 நவமர் மாதம் அவர்கள் தலைமை அமைச்சரின் பணிமனையையும் காவற்துறைத் தலைமைப் பணிமனையையும் ஆக்கிரமிக்கப் போவதாக அறிவித்தனர். வன்முறையை அவர்கள் மீது கட்டவிழ்த்து விடாமல் அவர்கள் அவ்விரு பணிமனைகளையும் கைப்பற்ற அனுமதிக்கப்பட்டனர்.

பாங்கொக்கை மூடும் போராட்டம்
ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து தங்கை யிங்லக் பாராளமன்றத்தைக் கலைத்து 2014 பெப்ரவரி மாதம் தேர்தல் நடக்கும் என அறிவித்தார். தேர்தலில் தாம் வெற்றியடையப் போவதில்லை என உணர்ந்த மஞ்சள் சட்டைக்காரர்கள் தாம் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறை கூவல் விடுத்ததுடன் தேர்தல் நடக்க விடப்போவதில்லை எனவும் அறிவித்தனர். தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் பணிமனை சென்று வேட்பு மனு பதிவு செய்யவிடாமல் மஞ்சள் சட்டைக்காரர்கள் தடுத்தனர். மஞ்சள் சட்டைக்காரர்கள் தமது ஆர்ப்பாட்டத்திற்கு Bangkok shutdown எனப் பெயரிட்டுள்ளனர். இந்த ஆண்டு (2014) ஜனவரி 12-ம் திகதியில் இருந்து அவர்கள் தமது ஆர்ப்பாட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தலைநகர் பாங்கொக்கை மஞ்சள் சட்டைக்காரர்கள் ஆக்கிரமித்து பல பணிமனைகளுக்கான மின்சார விநியோகத்தைத் தடை செய்தனர். தங்கை யிங்லக்கின் தலைமையிலான இடைக்கால அரசை நீக்கி நிபுணர்களைக் கொண்ட ஒரு இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என மஞ்சள் சட்டைக்காரர்களின் தலைவர் சுதேப் அறிவித்துள்ளார். தாமது ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கை யிங்லக்கைக் கைப்பற்றி இடைக்கால அரசுத் தலைவர் பதவியில் இருந்து விலக்குவோம் என சுதேப் தௌக்சுபன் கூறியுள்ளார். சுதேப் தௌக்சுபனின் இந்த மாதிரியான வன்முறைப் பேச்சுக்களுக்காக அவர்மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லை என உறுதியாக இருக்கிறார் யிங்லக்.

மக்களாட்சி முறைமைப்படி தேர்தல் நடத்த விடாமல் தொடர் ஆர்ப்பாட்டங்களைச் செய்து தாய்லாந்தில் பணக்காரர்களுக்கு சார்பான ஒரு படைத்துறை ஆட்சியை அமைப்பதை மஞ்சள் சட்டைக்காரர்கள் விரும்புகிறார்களா என்ற ஐயம் இப்போது எழுந்துள்ளது.  மஞ்சள் சட்டைக்காரர்கள் வெளிநாட்டில் இருக்கும் அண்ணனினதும் தாய்லாந்தில் இருக்கும் தங்கையினதும் கட்சியினர் மக்களுக்கான சமூக நலன் திட்டங்களை அறிவித்து அவர்களால் தேர்தலில் பெரும் வாக்கு வேட்டையாட முடியும் என கருதுகின்றனர். ஆனால் ஆர்ப்பாட்டங்களால் தாய்லாந்தின் பொருளாதார வளர்ச்சி 2013-ம் ஆண்டு பாதியாகக்  குறைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீட்டில் நான்கு பில்லியன்களை தாய்லாந்தில் இருந்து திரும்பப் பெற்றுவிட்டனர்.

தாய்லாந்தின் நகரவாசிகளும் நடுத்தர வர்க்கத்தினரும் மஞ்சள் சட்டைக்காரர்களின் தொடர் ஆர்ப்பாட்டங்களால் தமது அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்படுவதால் மிகவும் சலிப்படைந்து வருகிறார்கள். இதனால் மஞ்சள் சட்டைக்காரர்களுக்கான ஆதரவு குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. 

மக்களாட்சிப்படி எல்லா நாடுகளிலும் தேர்தல் நடைபெற்று ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனப் பரப்புரை செய்யும் ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தாய்லாந்தில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களையும் மஞ்சள் சட்டைக்காரர்கள் சட்ட விரோதமாக அரச பணிகளை நடக்க விடாமல் தடுப்பதையும் பற்றி இதுவரை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இலண்டனில் இருந்து செயற்படும் Amnesty International எனப்படும் பன்னாட்டு மன்னிப்பு சபை ஆர்ப்பாட்டக்காரர்களின் மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் என்கிறது. அமெரிக்காவின் மனித உரிமை கண்காணிப்பகம் 2010-ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்ட 98 செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களை யிங்லாக் தண்டிக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறது. பெரும்பாலான மேற்கத்தைய ஊடகங்கள் அண்ணனையும் தங்கையையும் ஊழல் மிக்க ஆட்சியாளர்களாகவே சித்தரிக்கின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...