Saturday 19 October 2013

அமெரிக்காவின் Ford விமானம்தாங்கிக் கப்பல் இரு தலைமுறை முந்திவிட்டது.

அமெரிக்கா உருவாக்கியுள்ள USS Gerald R. Ford விமானம் தாங்கிக் கப்பல் மற்ற நாடுகளின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறைகள் முந்தி விட்டது என சீன ஊடகம் ஒன்று கருத்துத் தெரிவித்துள்ளது. 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கப்பல் கட்டும் பணி தற்போது நிறைவு பெற்று ஒக்டோபர் 11-ம் திகதி மிதக்க விடப்பட்டுள்ளது. ஆனால் 2016-ம் ஆண்டுதான் அது முழுமையான பயன்பாட்டுக்கு விடப்படும்.

முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் அவர்களின் நினைவாக இந்த விமானம் தாங்கிக் கப்பல் பெயரிடப்பட்டுள்ளது. அவர் அமெரிக்கக் கடற்படையின் தளபதியாகவும் இருந்தவர். 

ஆயிரத்து நூற்று ஆறடி நீளமான USS Gerald R. Ford அணுவலுவில் இயங்குகின்றது. 12.8 பில்லியன் டொலர்கள் செலவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கப் படைத் துறை வரலாற்றில் மிக அதிகம் செலவு செய்து உருவாக்கப்பட்ட ஒரு படைக்கலனாகும்.

USS Gerald R. Fordஇன் சிறப்பு அம்சங்கள்:
  • ஒரு நாளில் இரு நூற்றி இருபது பறப்புக்களை மேற்கொள்ளக் கூடிய தொண்ணூறு விமானங்களை இது தாங்கக் கூடியது. 
  • இதன் இயக்கங்கள் யாவும் எண்மியப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக மின்சாரத்தில் இயங்கங்கக் கூடிய இந்த விமானம் தாங்கிக் கப்பலிற்குத் தேவையான மின்சாரம் அணுவலுவில் இருந்து பெறப்படுகின்றது. The comprehensive power system of the carrier refers to a wholly information-based digital system controlled by computer with electricity as the power.
  •  பொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் அசைந்து பறக்க ஆரம்பிக்க வேண்டும். இதற்காக இதுவரை விமானம் தாங்கிக் கப்பல்களில்  நீராவிக் கவண் அதாவது steam catapult போன்ற தொழில் நுட்பம் பாவிக்கப்படுகின்றது. ஆடு மேய்ப்பவர்கள் V வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். ஆனால் இந்த விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் முதல் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும்.
  • முப்பது கடல் மைல்களிற்கு அதிக வேகமாகப் பயணிக்கக் கூடியது. 112,000 எடையுள்ளது. இருபத்தைந்து மாடிகளைக் கொண்டது. 54 ஆண்டுகள் சேவையில் இருக்கக் கூடியது.
  • உலகின் எந்தப் பாகத்திற்கும் செல்லக் கூடியது.
  • மற்ற வகை விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் முப்பது விழுக்காடு குறைந்த பணியாட்கள் இதற்குப் போதும்.
  • இதில் Sea Sparrow missile எனப்படும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கப்பல்களைத் தாக்க வரும் உயர்வேக ஏவுகணைகளை அழிக்கக் கூடியவை.
  • அடுத்த தலைமுறை போர்விமானங்களையும் ஆளில்லாப் போர் விமானங்களையும் தாங்கக் கூடியது. இதன் மின்காந்த வீச்சு முறைமையால் சிறிய ரக ஆளில்லா விமான்ங்களும் பயன்படுத்தப்படலாம்.


அமெரிக்கக் கடற்படை தனது உலக ஆதிக்கத்தை தொடர்ந்து வைத்திருக்க USS Gerald R. Ford வகை விமானம் தாங்கிக் கப்பல்கள் மேலும் மூன்றை நாற்பத்தி மூன்று பில்லியன் டொலர்களைச் செலவளித்து உருவாக்க விருக்கின்றது அவற்றில் முதலாவதான USS John F Kennedyஇன் கட்டுமானங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. 

Thursday 17 October 2013

கடன் நெருகடி: அமெரிக்கா இல்லா உலகம் வேண்டுமென்கிறது சீனா.

அமெரிக்காவின் கடன் நெருக்கடி அபாயத்தால் சலிப்படைந்த சீனா அமெரிக்கா இல்லாத உலகம் வேண்டும் எனச் சொல்லியுள்ளது. அமெரிக்காவிற்கு அதிக கடன் கொடுத்த நாடு என்ற வகையில் சீனா அமெரிக்காவில் ஏற்படவிருந்த கடன் நெருக்கடியை இட்டு கடும் அச்சத்தில் இருந்தது.

உலகின் பல நாடுகள் தமது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அமெரிக்காவின் நாணயமான டொலரில் வைத்திருக்கின்றன.  அமெரிக்க நாணயத்தின் பெறுமதி மற்ற நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது எனப் பல நாடுகள் நம்புகின்றன.  அமெரிக்க அரசின் கடன் முறிகளை வாங்கி அதில் கிடைக்கும் வட்டியை பல நாடுகளும் பெரும் நிதி நிறுவனங்களும் வருமானம் ஈட்டுகின்றன. ஒரு அரசு தான் கடன் வாங்கும் போது கொடுக்கும் பத்திரம் கடன் முறி எனப்படும். அத்துடன் பல உலக வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்க டொலர்களிலேயே நடை பெறுகின்றன. இதனால் அமெரிக்க டொலர் ஒரு உலக நாணயமாகப் பார்க்கப்படுகிறது. சீனா இந்த நிலை மாறவேண்டும் எனச் சொல்கிறது. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேய்ன் அரபு நாடுகளின் எரிபொருள் வர்த்தகம் யூரோ நாணயத்தில் நடக்க வேண்டும் எனச் சொன்னார் அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். கொல்லப்பட்டார். லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபி அரபுநாடுகள் எரிபொருள் வர்த்தகத்தை தங்கத்திற்காக மேற்கொள்ள வேண்டும் என்றார். அவருக்கும் அதே கதிதான். இப்போது சீன அரசு ஊடகம் அமெரிக்க டொலர் உலக நாணயமாக இருக்கக் கூடாது என்கிறது. சீனா தனது ஏற்றுமதிக்கு பெரிதும் அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் அறுபது விழுக்காட்டிற்கு மேலானவை அமெரிக்கா உட்படப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் செய்யும் உற்பத்திப் பொருட்களாகும்.

என்னடா இந்த வாஷிங்டனுக்கு வந்த சோதனை
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்கர்கள் எல்லோருக்கும் மருத்துவக் காப்புறுதி கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். இதற்காக அவர் ஒரு காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது அமெரிக்க அரசின் செலவை அதிகரிக்கும் என பழமைவாதிகளைக் கொண்ட ரீபார்ட்டிக் குழுமத்தை சேர்ந்த அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் நம்புகிறார்கள். அமெரிக்க அரசின் செலவு கூடினால் அது மக்கள் மீதான வரிச் சுமையை அதிகரிக்கும் என அவர்கள் வாதிடுகிறார்கள். இதனால் அவர்கள் ஒபாமாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டத்திற்கு பல விதத்தில் மக்கள் பிரதிநிதி சபையில் முட்டுக் கட்டை போட்டார்கள்.  அமெரிக்காவின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற விடாமல் தடுத்தார்கள். இதனால் பல அமெரிக்க அரச பணிமனைகள் இழுத்து மூடப்பட்டன. அத்துடன் அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்த மறுத்தார்கள். அமெரிக்க அரசு எவ்வளவு கடன் படலாம் என்பதற்கு என்று ஒரு உச்ச வரம்பு (debt ceiling) உள்ளது. இதை அமெரிக்க பாராளமன்றத்தின் (காங்கிரசு) இரு அவைகளான மக்களவையும் மூதவையும் முடிவு செய்கின்றன. அமெரிக்க அரசின் செலவுகள் அதிகரித்து சென்றும் வரிவிதிப்பு வருமானம் குறைந்தும் செல்லும் போது அமெரிக்க அரசின் கடன் கட்டு மீறி அடிக்கடி செல்லும். அப்போது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் அமெரிக்காவில் கடன் நெருக்கடி ஏற்படும். ஒரு அரசு தான் பட்ட கடன்களுக்கான நிலுவைகளையும் வட்டிகளையும் உரிய நேரத்தில் செலுத்த முடியாமலும் புதிய கடன்கள் பெற முடியாமலும் இருக்கும் போது கடன் நெருக்கடி உருவாகும். இதனால் அந்த அரசுக்கு மற்ற நாடுகளும் நிதி நிறுவன்ங்களும் கடன் கொடுக்கத் தயங்கும். இதனால் அந்த நாட்டின் கடன்படு தரம் தாழும். கடன் படு தரம் தாழும் போது புதிய கடன் பெறுவது கடினமாகவும் அதிக வட்டி கொடுக்க வேண்டியதாகவும் இருக்கும்.  ஒரு அரசு தான் பட்ட கடன்களுக்கான நிலுவைகளையும் வட்டிகளையும் உரிய நேரத்தில் செலுத்த முடியாமலும் புதிய கடன்கள் பெற முடியாமலும் இருக்கும் போது கடன் நெருக்கடி உருவாகும். இதனால் அந்த அரசுக்கு மற்ற நாடுகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்கத் தயங்கும். இதனால் அந்த நாட்டின் கடன்படு தரம் தாழும். கடன் படு தரம் தாழும் போது புதிய கடன் பெறுவது கடினமாகவும் அதிக வட்டி கொடுக்க வேண்டியதாகவும் இருக்கும்.  ஒபாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தில் தமக்கு வேண்டியபடி மாற்றம் செய்யாவிடில் அமெரிக்காவின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுத்தும் கடன் உச்சவரம்பை உயர்த்த மாட்டோம் என்றும் அமெரிக்கப் பாரளமன்றத்தின் மக்கள் சபையில் உள்ள பழமைவாதிகளைக் கொண்ட ரீபார்ட்டி குழுமம் எச்சரித்துக் கொண்டிருந்தது.  இது உலகெங்கும் உள்ள நிதிச் சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இறுதியில் கடைசி நேரத்தில் அமெரிக்கப் பாராளமன்றம் பெரும் இழுபறிக்குப் பின்னர் அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தை அங்கிகரித்துடன் கடன் உச்ச வரம்பையும் அதிகரித்தது.

பராக் ஒபாமாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தை எதிர்க்கும் பாராளமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து கொண்டிருப்பதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்த பின்னர் பலர் மனம் மாறினர். பராக் ஒபாமா மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். அவரது எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் மக்களவையில் பெரும்பான்மையினாராக இருக்கின்றனர். மூதவையில் மக்களாட்சிக் கட்சியினர் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். அமெரிக்க கடன் உச்சவரம்பை உயர்த்தும் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

அமெரிக்கக் கடன் நெருக்கடி தவிர்க்கப்பட்டதால் உலகெங்கும் பங்குச் சந்தைகளிலும் நிதிச் சந்தைகளிலும் நிம்மதிப் பெருமூச்சு விடப்படுகின்றன. உலகெங்கும் பங்குகளின் விலைகள் அதிகரித்தன. 

1978-ம் ஆண்டு சீனப் பொதுவுடமைக் கட்சி சீனப் பொருளாதாரத்தில் அரசின் கட்டுப்பாட்டைக் குறைப்பதாகவும் சந்தைப் பொறிமுறைமைப்படி பொருளாதாரம் செயற்பட அனுமதிப்பதாகவும் முடிவு செய்தது. பின்னர் 1980இல் ஐஎம்F எனப்படும் பன்னாட்டு நாணய நிதியத்திலும் இணைந்து கொண்டது. 1981இல் விவசாயிகளின் இலாபத்தை அரசுக்கு கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்ள் அனுமதித்தது. 1984இல் தனது கரையோர நகர்களில் வெளிநாடுகள் முதலிடலாம் என அறிவித்தது. கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவின் தாரக மந்திரம் "எம் கடன் அமெரிக்காவிற்கு மலிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதே" என்பதே. அமெரிக்கர்களும் சீனப் பொருட்களை மலிவாக வாங்கினர். அமெரிக்காவின் தொழிலாளர்களின் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் சீனாவில் ஊதியம் இருபதில் ஒரு பங்காகும். இதனால் பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தமது பொருட்களை உற்பத்தி செய்தன. அமெரிக்காவிற்கு தற்போது சீனா ஆண்டு ஒன்றிற்கு இரு நூறு பில்லியன் டொலர்களுக்கு அதிகமான ஏற்றுமதியைச் செய்கிறது. அமெரிக்காவில் சீனா ஐந்து பில்லியன் பெறுமதியான முதலிட்டையும் சீனாவில் அமெரிக்கா 51பில்லியன்கள் பெறுமதியான முதலீட்டையும் செய்துள்ளன.
அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த கடன் 1.28ரில்லியன் டொலர்கள். அதாவது 1.28இலட்சம் கோடி. இதில் எத்த அளவு என்பதை ஆர் இராசவிடம் அல்லது கனிமொழியிடம்தான் கேட்க வேண்டும். இந்த 1.28ரில்லியன்கள் அமெரிக்காவின் திறைசேரிக்கடனில் 22.8விழுக்காடும் அமெரிக்காவின் மொத்தக் கடனில் 8 விழுக்காடுமாகும். இப்போது கடன் பட்டவர்களிலும் பார்க்க கடன் கொடுத்தவர்கள்தான் அதிகமாகக் கலங்குகிறார்கள். அமெரிக்காவிற்கு கடன் கொடுத்த சீனாவும் கலங்கி நிற்கிறது. இதனால் சீன ஊடகம் 'de-Americanized world' - அமெரிக்கா இல்லாத உலகம் வேண்டும் என்றது. ஆனால் அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் சீனா தனது அந்நியச் செலவாணியை முதலிட அமெரிக்காவிற்கு கடன் கொடுப்பதைத் தவிர வேறு சிறந்த வழிகள் இல்லை என்கின்றனர். அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தையும் நிதிச் சந்தையையும் தனது சொந்த நலனுக்காக விளையாடுகிறது எனப் பல சீனர்கள் நம்புகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னரே சில சீன பொருளாதார நிபுணர்கள் அமெரிக்காவில் சீனா முதலிடுவதைக் குறைத்து சீனா தனது முதலீட்டைப் பரவலாக்க வேண்டும் என்றனர். ஆனால் சீனா தொடர்ந்தும் அமெரிக்கக் கடன் முறிகளை வாங்கிக் குவித்துக் கொண்டே இருந்தது. இதைத் தவிர சீனாவிற்கு வேறு பாதுகாப்பான வழிகளும் இல்லை. சிலர் சீனா அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம் எனவும் ஆலோசனை கூறினார்கள்.

சீனா அமெரிக்காவிற்கு கடன் கொடுக்காவிடில் அமெரிக்க டொலரின் மதிப்புக் குறையும். சீன நாணயமான யுவானின் மதிப்பு அதிகரிக்கும். இப்படி நடந்தால் சீனாவின் பொருட்களை அமெரிக்கர்களால் வாங்க முடியாத அளவிற்கு டொலரின் மதிப்புக் குறைந்தால் சீனாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி குறையும். அமெரிக்க நிறுவனங்கள் சினாவை விட்டு அமெரிக்காவிலேயே தமது பொருட்களை உற்பத்தி செய்யும். இவை இரண்டாலும் சீனாவில் உற்பத்தி பெரிதும் குறைவடையு. இதன் விளைவாக சீனாவில் வேலையில்லாப் பிரச்சனை பெரிதாகத் தலை தூக்கும். மக்கள் சீன அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள். இதனால் சீனா அமெரிக்காவிற்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்து கொண்டிருக்க வேண்டுமாயின் சீனா அமெரிக்கத் திறைசேரியின் கடன் முறிகளை வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது அமெரிக்க அரசுக்கு சீனா கடன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்த ஆண்டும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பார்க்க அதிகமாக இருக்கும். இதனால் சினா தனது வெளிநாட்டுக் கையிருப்பில் மேலதிகமாக ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டொலர்களை எங்காவது முதலிட வேண்டும். சீனாவில் சிலர் அமெரிக்காவின் திறைச் சேரி முறிகளில் சீனா முதலிடுவதைக் குறைக்க வேண்டும் எனக் கூச்சலிடுகின்றனர். அப்படி முதலிடாவிட்டால் அது சீனாவிற்கே பாதகமான விளைவை ஏற்படுத்தும்.

Tuesday 15 October 2013

ஒலியிலும் ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய வட கொரிய ஏவுகணைகள்.


ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய குறுந்தூர ஏவுகணைகளை வட கொரியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஏவுகணைகள் தரையில் இருந்து கப்பல்களை நோக்கி ஏவக் கூடியவை (ground-to-ship ballistic missile). இவை அதி உயர் வேகத்தில் பாய்வதால் இவற்றை இடை மறிக்க முடியாது.

வட கொரியா உருவாக்கும் ஏவுகணைகள் இரு நூறு முதல் முன்னூறு கிலோ மீட்டர் பாயக் கூடியவை. இந்த ஏவுகணை உருவாக்கும் திட்டத்தில் வட கொரியாவுடன் ஈரானும் இணைந்துள்ளது. ஏற்கனவே அணுக்குண்டு உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதாக நம்பப்படுகிறது.

வட கொரியா ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குவது உண்மையானால் இது தென் கொரியாவிற்குப் பெரும் சவாலாக அமையும்.

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய ballistic DF-21D ஏவுகணைகள் 1500 கிலோ மீட்டர்கள் பாயக் கூடியவை. இவை அமெரிக்காவின் கடற்படைக்கு இவை பெரும் சவாலாக அமைந்துள்ளன. இத்துடன் வட கொரியா புதிதாக உருவாக்கும் ஏவுகணைகளும் அமெரிக்காவினதும் தென் கொரியாவினதுக் கடற்படைக்கு பெரும் ஆபத்தாக அமையும்.

வட கொரியா உருவாக்கும் அதி உயர் வேக ஏவுகணைகள் ஈரானின் கையில் கிடைக்குமாயின் அவற்றால் அது ஹோமஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கனவை நிறைவேற்றலாம். அது உலக எரி பொருள் விநியோகத்தின் 35 விழுக்காட்டை ஈரான் கட்டுப்படுத்தக் கூடிய நிலையை உருவாக்கும்.

Monday 14 October 2013

சோனியா காந்திக்கு புதிய ஆபத்து?


இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீயை ஈழத் தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இலங்கையில் இனவழிப்புப் போர் நடந்த போது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். இறுதிப் போரின் போது இலங்கை அரசு போர் முனையில் எழுபதினாயிரம் பொது மக்கள் மட்டும் இருக்கின்றார்கள் என உண்மைக்கு மாறான தகவலைத் திரும்பத் திரும்பச் சொல்லிய போது அதை வழி மொழிந்தவர் பிரணாப் முஹர்ஜீ. இறுதிப் போரின் போது இலங்கையைப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக கொழும்பு செல்வதாகக் கூறிக் கொண்டு கொழும்பு போய் இலங்கைக்கு போரை வீரைவில் முடிப்பதற்கான தேவைகளை ஆய்வு செய்தவர் என்ற குற்றச் சாட்டும் இவருக்கு எதிராக உண்டு.

குடும்பக் குழப்பத்தில் சோனியா
ராகுல் காந்தி பிறக்கும் போதே அவர்தான் இந்தியாவின் அடுத்த தலைமை அமைச்சர் என இந்தியர்களின் தலையில் எழுதப்பட்டு விட்டது. "ராஜ மாதா"வும் தனது மகனின் பட்டாபிஷேகத்திற்குரிய ஏற்பாடுகளைக் கடந்த சில ஆண்டுகளாகச் செய்து வருகின்றார். கட்சியில் அவருக்கு இருந்த தடைகளை அகற்றிக் கொண்டே இருக்கிறார். இந்திய அரசியலில் எதிர்க்கட்சிகள் அவரை பேபி என்றும் பாப்பு என்றும் அழைக்கின்றனர். "ராஜ மாதா" பட்டாபிஷேகத்திற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. ராகுல் காந்தி மக்களைக் கவர்ந்திழுக்கும் திறமை மிக்கவர் அல்லர். இவரிலும் பார்க்க இவரது அக்கா பிரியங்கா வதேரா மக்களைக் கவரக்கூடியவர் என பல காங்கிரசுக் கட்சியினர் நம்புகின்றனர். Raul என்ற இத்தாலியப் பெயருடன் இருந்தவருக்கு இந்திய அரசியலுக்கு ஏற்ப ராகுல் எனப் பெயர் சூட்டப்பட்டது.  2005-ம் ஆண்டு ஓர் ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது தான் நினைத்திருந்தால் தனது 25வது வயதில் இந்தியாவின் தலைமை அமைச்சராகியிருந்திருக்கலாம் எனப் பேட்டியளித்து மாட்டிக் கொண்ட ராகுல் காந்தி அதன் பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதை நிறுத்தி விட்ட்டார். பிரியங்காவைத் தீவிர அரசியலில் ஈடுபடுத்தினால் ராகுலின் திறமையின்மை மேலும் அம்பலப்படுத்தப்படும் என்று "ராஜமாதா" கருதுகிறார். அத்துடன் அக்காவும் தம்பியை முந்திச் செல்ல விரும்பவில்லை. இதனால் 2014 நடக்க விருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியைச் சமாளிக்க இந்தியா முழுவதும் பிரியங்காவை ஈடுபடுத்தும் ஆலோசனை முன் வைக்கப்பட்டது. ஆனால் இரகசிய உளவுத் தகவல்களின் படி பிரியங்காவின் கணவர் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை எதிர்க்கட்சியிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவார்கள் என அறிந்து கொண்டனர். பிரியங்காவின் கணவர் வதேரா நாடு முழுவதும் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நிறைய அரச நிலங்களை அபகரித்துக் கொண்டார் என்ற குற்றச் சாட்டு பரவலாக உண்டு. இவர் எந்த வித முதலீடும் இன்றி பெரும் பணக்காரர் ஆகி விட்டார் என்கின்றார்கள் எதிர்க் கட்சியினர். அவர் இப்போது பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி என்கின்றனர் அவர்கள்.

பன்முகத் திறமை கொண்ட பிரணாப்
சட்டத்திலும் சரித்திரத்திலும் பட்டதாரியான பிரணாப் முஹர்ஜீ  அரசறிவியலில் முதுமானிப் பட்டம் பெற்றவர். அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றைக் கொண்ட எழுபத்தெட்டு வயதான பிரணாப் முஹர்ஜீ 1969-ம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்தியப் பாராளமன்றத்தின் மேலவையான ராஜ்ஜ சபாவின் உறுப்பினராக்கப் பட்டார். தனது நேர்மையான பற்றால் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவரானர் பிரணாப் முஹர்ஜீ. காங்கிரசின் ஆட்சியிலும் கட்சியிலும் பல பதவிகளை வகித்தவர். காங்கிரசுக் கட்சிக்கும் ஆட்சிக்கும் பிரச்சனை வரும்போதெல்லாம் தலையிட்டுப் பிரச்சனைகளத் தீர்த்து வைப்பதில் வல்லவர். கட்சியின் பல மட்டத்திலும் நல்ல தொடர்புகளை வைத்திருப்பவர். தொழில் அபிவிருத்தித் துறை, வருவாய்த் துறை, வங்கித் துறை, வர்த்தகத் துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை என அத்தனை முக்கிய அமைச்சுப் பதவிகளையும் வகித்தவர். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றின் ஆளுனராகவும் இருந்தவர். 1984இல் இந்திரா காந்தியின் மறைவிற்குப் பின்னர் இவரை தலைமை அமைச்சராக்காமல் ராஜீவ் காந்தியைத் அப்பதவியில் அமர்த்தியது இவரைக் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. பின்னர் ராஜீவ் காந்தியால் ஓரம் கட்டப்பட்டார் பிரணாப் முஹர்ஜீ. இதனால் அவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகி தனியாக ராஷ்ட்ரீய சமாஜ்வாதி காங்கிரஸ் என்னும் கட்சியைத் தொடக்கினார். பின்னர் ராஜிவின் மறைவிற்குப் பின்னர் அவரது கட்சி காங்கிரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டது. இந்திரா காந்தியின் ஆட்சியில் இரண்டாம் தலையாக இருந்த பிரணாப் பின்னர் நரசிம்ம ராவ் தலைமை அமைச்சரான போது மீண்டும் இரண்டாம் நிலைக்கு வந்தார். இந்திய திட்ட ஆணையகத்தின் தலையாக அவரது காங்கிரசுனடான மீள் இணைவு ஆரம்பமானது. 1998இல் சோனியா காந்தியை காங்கிரசுக் கட்சியின் தலைவராக்குவதற்கு முன்னின்று செயற்பட்டவர் பிரணாப்.

2004-ம் ஆண்டு நடந்த பாராளமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் போது மீண்டும் பிரணாப் முஹர்ஜீயின் முதுகில் குத்தியது நேரு-காந்தி குடும்பம். கட்சியின் மூத்த உறுப்பினரான அவரைத் தலைமை அமச்சராக்கினால் அவர் தமது குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி விடுவார் என்ற அச்சத்தால் சோனியா காந்தி தன் கைப் பொம்மையாகச் செயற்படக்கூடிய மன் மோஹன் சிங்கை சோனியா தலைமை அமைச்சராக்கினார். இந்த முறை பிரணாப் பொறுமையைக் கடைப்பிடித்தார். ஆனால் அவர் கடந்த முறையைப் போல் கட்சியை விட்டு வெளியேறாமல் கட்சிக்குள் இருந்து தம்மைப் பழிவாங்கப் போகிறாரா என சோனிய ஐயப்பட்டார். அவரது பணிமனை, நடமாட்டங்கள் போன்றவற்றை சோனியா காந்தி உளவுத் துறை மூலம் கடுமையாகக் கண்காணித்தார் என்ற குற்றச் சாட்டு முன் வைக்கப்பட்டது. ஆனால் பிரணாப் முஹர்ஜீ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அமைச்சரவையிலேயே சுதந்திரமாகச் செயற்படும் ஒருவராக இருந்தார். இவர்மீது பாரிய ஊழல் குற்ற சாட்டுக்கள் ஏதும் இல்லை.



சோனியா மன் மோஹன் சிங்கிற்குப் பின்னர் தனது பேபி ராகுல் காந்தியைத் தலைமை அமைச்சராக்குவதற்கு பிரணாப் முஹர்ஜீ தடையாக இருப்பார் என ஐயப்பட்ட சோனியா அவரை 2012இல் இந்தியாவின் குடியரசுத் தலைவராக்கினார்.  ஆனால் இப்போதும் நேரு-காந்தி குடும்பத்தின் மீது பிரணாப்பிற்கு வஞ்சம் இருப்பது தவிர்க்க முடியாது. பிரணாப் மீது இப்போதும் அவர்களுக்கு ஐயமிருப்பது தவிர்க்க முடியாது. இந்த முரண்பாட்டு நிலைக்கு இரு சம்பவங்கள் உரம் ஊட்டுபவை போல் அமைந்துள்ளது.


முதலாவது சம்பவம்: இந்திய உச்ச நீதிமன்றம் குற்றச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் இந்தியப் பாராளமன்றத்திலோ மாநில சட்ட சபையிலோ உறுப்பினராக இருக்க முடியாது எனத் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பை மறுதலிக்கும் வகையில் இந்தியக் காங்கிரசுக் கட்சியின் உள்ள அதிகார மையம் ஒன்று கூடி ஒரு அமைச்சரவை ஆணை ஒன்றைப் பிறப்பித்து  அதில் கையொப்பமிடும்படி பிரணாப் முஹர்ஜீக்கு அனுப்பியது. இந்திரா காந்தி காலத்திலிருந்தே இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் ஒரு ரபர் ஸ்டாம்ப் போல் செயற்படுவது வழக்கம். ஆனால் பிரணாப் முஹர்ஜீ அந்த அரச ஆணை ஏன் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என விளக்கம் கோரி உள்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டேயையும் சட்டத் துறை அமைச்சர் கபில் சிபாலையும் தனது பணிமனைக்கு ஆலோசனைக்கு அழைத்தார். இது காங்கிரசு ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே அவர்கள் ஒரு யூ திருப்பத்தைச் செய்தனர. ராகுல் காந்தி அரசு பிறப்பித்த சட்ட ஆணை முட்டாள்த்தனமானது என்றும் கொழுத்தப்படவேண்டியது என்றும் ஒரு குத்துக் கரணம் அடித்தார்.



இரண்டாவது: இந்தியக் குடியரசுத் தலைவர்  பிரணாப் முஹர்ஜீ ஒக்டோபர் 26-ம் திகதி பிகார் மாநிலத் தலைநகர் பட்னாவில் ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு செல்கின்றார். அவர் அங்கு இரு நாட்கள் தங்கி இருந்து மறு நாள் 27-ம் திகதி திரும்புவதாக ஏற்பாடாகி இருந்தது. ஒக்டோபர் 27-ம் திகதி எதிர்க் கட்சியான் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடி பட்னாவில் ஒரு பெரும் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடாகி இருந்தது. மோடியின் கூட்டத்திற்கு பெரும் திரளாக மக்கள் வருவதால் பரதிய ஜனதாக் கட்சியினர் பிரணாப்பைச் சந்தித்து அவரது பயணத்தை ஒரு நாளாகக் குறுக்கி 26-ம் திகதியே பட்னாவில் இருந்து புது டில்லி திரும்பும்படி கேட்டுக் கொண்டன்ர். இதற்கு பிரணாப்பும் ஒத்துக் கொண்டது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.

இரண்டு சம்பவங்களும் பிரணாப் முஹர்ஜீ பாரதிய ஜனதாக் கட்சியினருடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.


சோனியாவின் தெலுங்கானா சொதப்பல்.
சோனியா காந்தி தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கினால் அது காங்கிரசின் செல்வாக்கைக் கூட்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் தெலுங்கானாவைத் தனி மாநிலமாகப் பிரித்தது காங்கிரசுக் கட்சிக்கு மோசமான விளைவுகளை ஏற்படுதியுள்ளது. பிரணாப் முஹர்ஜீ தனது அரசியல் அனுபவத்தை வைத்து தெலுங்கானாவைத் தனியாகப் பிரிக்க வேண்டாம் என சோனியாவை எச்சரித்திருந்தார். காங்கிரசின் முன்மாதிரியைப் பின்பற்றி 2014இல் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றால் அது தனது கட்சிக்கு வாய்ப்பாகவும் காங்கிரசுக் கட்சிக்கு பாதகமாகவும் அமையக் கூடிய வகையில் மாநில எல்லைகளை மாற்றி அமைக்கலாம் எனவும் பிரணாப் சோனியாவை எச்சரித்திருந்தார். 2014-ம் ஆண்டு காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்தால் அதன் பின்னர் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் சோனியாமீது பிரணாப் போட முயலலாம்.


காங்கிரசு ஆட்சியின் பெரும் ஊழல்களாலும் மோடியின் செல்வாக்கு நாட்டில் வளர்ந்து வருவதாலும் இனி காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் பிரணாப் முஹர்ஜீ  தனது எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றார். எதிர்காலத்தில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தான் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பதவியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  இதற்காக அவர் தற்போதைய காங்கிரசு ஆட்சியின் கைப்பொம்மையாக இருக்க மாட்டார் என எதிர் பார்க்கலாம். இது சோனியா குடும்பத்திற்கு ஒரு சோதனையாக இருக்கலாம். 2014 மே மாதத்திற்கு முன்னர் நடக்க விருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசு படு தோல்வியடைந்தால் பிரணாப் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விலகி காங்கிரசுக் கட்சியைத் தனதாக்கலாம். தேர்தலில் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறாத நிலையில் பிரணாப் முஹர்ஜீ ஒரு தேசிய அரசின் தலைமை அமைச்சராக அவதாரம் எடுக்கலாம். பிரணாம் மூன்று முறை தலைமை அமைச்சராகும் வாய்ப்பை பறித்த சோனியாவின் குடும்பத்தை பிரணாப் சும்மா விடுவாரா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...