Wednesday 2 October 2013

மஹிந்தரின் வேட்டியை உருவிய அல் ஜசீரா

அரசியல்வாதிகள் ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதாலும் பெரும் தொகைப் பணத்தைச் சம்பாதிப்பதுண்டு. சில அரசியல்வாதிகள் பேட்டியளிக்க முன்னர் பல நிபந்தனைகளை விதிப்பதுண்டு. பல பிரபல ஊடகங்கள் தாம் கண்ட பேட்டியில் சிலவற்றைத் தணிக்கை செய்து தாம் விரும்பியபடி திரித்து வெளியிடுவதுமுண்டு. பிரச்சனைக்குரிய கேள்விகள் கேட்பதால் பல பேட்டிகள் இடையில் முறிவதும் உண்டு. மஹிந்த ராஜபக்ச அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைப் பார்க்கையில் மனதில் படுவது:
1. பேட்டி கண்ட ஜேம்ஸ் பே தனது வீட்டு வேலையை மிகத் திறமையாகச் செய்திருந்தார். தற்போதைய இலங்கை நிலவரம் தொடர்பான முக்கிய விபரங்களைக் கவனமாகத் திரட்டி அவற்றை ஒட்டி தனது கேள்விகளை முன்வைத்தார். தான் இலங்கை மஹிந்தருடன் ஒரு மோதலை விரும்பவில்லை என்பதை  மஹிந்தருக்கு உணர்த்துவதாக அவரது கேள்விகள் அமைந்திருந்தன.
2. பேட்டி கண்ட ஜேம்ஸ் பே தனது பேட்டி இடையில் முறியாதிருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளர் தனக்குக் கொடுத்த நேரத்தை மிகச் சாதுரியமாகப் பயன்படுத்தினார்.

தங்கத் தாயத்து.
பேட்டி தொடங்கியதில் இருந்து முடியும் வரை பளபள என மின்னும் தங்கத்தால் அல்லது தங்க முலாம் பூசிய ஒரு அழகிய பௌத்த சின்னம் கையில் வைத்திருந்தார். அது அவர் நேபாளத்தில் இருந்து பெற்ற ஒரு வகைத் தாயத்து எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அவரது பேட்டிக்கு அந்தத் தங்க நிறத் தாயத்து எந்த உதவியையும் செய்யவில்லை. பேட்டியின் பல இடங்களில் மஹிந்தருக்கு வார்த்தைகள் தடுமாறின. ஜப்பானின் பெயருக்குப் பதிலாக ருஷ்யா எனக் குறிப்பிடத் தொடங்கிப் பின்னர் சுதாகரித்துக் கொண்டார்.
பேட்டி ஒளிபரப்ப முன்னர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் அசிங்கங்களைப் பற்றி சுருக்கமாக கூறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழக ஆணையாளர் நவி பிள்ளை இலங்கையைப் பற்றிக் கூறியவை ஒலிபரப்பப்பட்டது:
  • இலங்கைப் படைத்துறையினர் இலங்கையரின் வாழ்வில் பலவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அரசை விமர்சிப்பவர்கள் தாக்கப்படுகிறார்கள், மௌனிக்கப்படுகிறார்கள், கொல்லவும் படுகின்றார்கள். சிறுபான்மை கிருத்தவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல பௌத்தர்கள் கூட தாக்கப்படுகின்றார்கள். இவையாவும் மஹிந்த ராஜபக்சவின் கண்காணிப்பின்கீழ் நடக்கின்றன. நவி பிள்ளையின் அறிக்கை அரசாலும் அதன் ஆதரவாளர்களாலும் கடுமையாக மறுதலிக்கப்படுவதும் அவர் மீது வார்த்தைப் போர் தொடுக்கப்படுவதும் அவர் மீது தமிழ்ப் புலி எனப் பட்டம் சூட்டப்படுவதும் நடக்கின்றன.

இப்படி ஒரு "அறுமுகத்துடன்" தனது பேட்டி ஒலிபரப்பாகும் என ராஜபக்ச எதிர்பார்த்திருந்த்திருக்க மாட்டார்.

நவி பிள்ளையை மஹிந்தரும் விட்டு வைக்கவில்லை. நவி பிள்ளை இலங்கைக்கு வர முன்னரே தனது அறிக்கையைத் தயார் செய்துவிட்டார் என்றார் மஹிந்தர். நவி பிள்ளை தன்னிடம் எந்த ஒரு குற்றச் சாட்டையும் முன்வைக்கவில்லை என்றார் மஹிந்தர். நவி பிள்ளையை இலங்கை சென்று நிலைமையை அவதானித்து மனித உரிமைக்கழகத்திற்கு அறிக்கை சமர்பிக்கும்படியே பணிக்கப்பட்டார். மஹிந்தரிடம் புகார் கொடுப்பது அவரது பணி அல்ல என்பதை மஹிந்தர் உணர மறுத்து விட்டார்.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த இலங்கை அரசியல்வாதிகள்
  • வட மாகாண சபைத் தேர்தலின் போது நடந்தவை பற்றிக் கதை எடுத்தவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வடக்கில் தேர்தல் நியாயமாகவும் சுததிரமாகவும் நடந்ததாகக் கூறினார்கள் என்றார் மஹிந்தர். ஐரோப்பிய ஒன்றியம் தான் வட மாகாணசபைக்கு கண்காணிப்பாளர்களை அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டது. மஹிந்தவின் பதில் உண்மைக்கு மாறானது. ஜேம்ஸ் பே பொதுநலவாய நாடுகளின் அறிக்கையில் இருந்து முக்கிய பகுதியை வாசித்துக் காட்டினார். தேர்தல் முடிவுகள் தனக்கு பாதகமாக இருந்ததை மஹிந்த தனக்கு ஆதாரமாக முன் வைத்தார். 
  • ஆள் கடத்தல் பற்றிக் கேள்வி கேட்டால் இதுவரை அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி விட்டார்கள் எனக் கூறி வந்த மஹிந்தர் இப்போது ஒரு புதுக் கவிதையை அவிழ்த்து விடுகிறார். காணாமல் போனவர்கள் ஒட்டல்களில் காதலர்களுடன் களவாகத் தங்கி இருக்கிறார்களாம்.  
  • தமிழர் பிரதேசங்களில் அளவிற்கு அதிகமாகப் படையினர் இருக்கின்றனர் என்பது பற்றிக் கேட்ட போது மஹிந்த ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டார். தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு எட்டாயிரம் அல்லது மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பன்னிரண்டாயிரம் படையினர் மட்டுமே இருக்கின்றனர் என்றார். ஆனால் தமிழர் பிரதேசத்தில் எழுபத்தையாயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடைப்பட்ட படையினர் இருக்கின்றனர்.
  • சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக தாக்குதல் நடந்தப்படுவதாக ஜேம்ஸ் பே கேட்டதற்கு மஹிந்தவின் பதில் ஆறுவயதுச் சிறுமியைக் கற்பழித்ததால் மக்கள் ஆத்திரப்பட்டு ஒன்று கூடித் தாக்குதல் நடாத்துகிறார்கள் என்றார். 
  • கம்பஹா மாவட்டத்தில் உள்ள வெலிவேரியாவில் குடிதண்ணீர் மாசுபட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது இலங்கைப் படையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதைப் பற்றி கேட்டபொது அது பற்றி விசாரணை நடக்கிறது அறிக்கைக்கு  தான் காத்திருப்பதாக மஹிந்த கூறினார் ஆனால் இலங்கைப் படைத்துறை விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்துப் பல நாட்களாகிவிட்டன.  
  • வட மாகாண சபைத் தேர்தலில் தனது கட்சி தோல்வியடையும் எனத் தனக்குத் தெரியும் என்றார் மஹிந்தர். ஆனால் அவர் தேர்தல் பிரச்சார மேடையில் கூறியவை வேறு விதமாக இருந்தது.

பொய்யை அனுமதித்த ஜேம்ஸ் பே
மஹிந்தர் தனது மோசமான ஆங்கிலத்தில் Al Jazeera was in front of the battle field என்றார். ஜேம்ஸ் பே அல் ஜசீரா போர் முனைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என தான் நினைக்கவில்லை எனக் கூறினார். மஹிந்தர் இல்லை அல் ஜசீராவை நாம் அனுமதித்தோம் என்றார். அதை தன் உடல் மொழி மூலம் உதாசீனம் செய்த ஜேம்ஸ் பே கேள்வியை போர்க் குற்றத்திற்கு மாற்றினார். ஆனால் மஹிந்த முன்பு கூறியது போல் தனது படையினர் ஒரு கையில் மனித உரிமை பற்றிய கையேட்டையும் மறு கையில் துப்பாக்கியையும் வைத்துக் கொண்டு போர் புரிந்தார்கள் என்று சொல்லவில்லை.

அமெரிக்கா மீது கடும் தாக்குதல்
பேட்டியில் அமெரிக்காவை மறை முகமாகவும் கடுமையாகவும் மஹிந்தர் தாக்கினார்.  சில நாடுகள் தம்மை காவற்துறையினராகக் கருதிக் கொண்டு செயற்படுகின்றார்கள் என்றும் சின்ன நாடுகளை மிரட்டுகிறார்கள் என்றும் மஹிந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கூறியதை பேட்டியில் மீண்டும் கூறினார். எந்த நாடுகள் என ஜேம்ஸ் பே கேட்ட போது  சிலர், சில நாடுகள் என்றார் மஹிந்தர். இந்தியா இலங்கை பற்றிக் கூறும் குற்றச் சாட்டுகளைப் பற்றி கேட்ட போது. இந்தியா எமது நெருங்கிய நண்பன் அது (உள்ளூர்) அரசியல் காரணங்களுக்காக சிலவற்றைச் சொல்கிறது என்றார்.

களம் பல கண்ட வீரரின் மோசமான மொழி வளம்
மஹிந்த ராஜபக்சவின் தந்தையார் எஸ் ஆர் டபிளியூ பண்டாரநாயக்கவின் அமைச்சரவையிலும் தொடர்ந்து வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசுகளிலும் முக்கிய அமைச்சராக இருந்தவர். மஹிந்த ராஜபக்ச நீண்டகாலம் அரசியலில் இருப்பவர். நீண்டகாலம் பாராளமன்ற உறுப்பினராக இருந்தவர் பிரேமதாசாவின் ஆட்சியில் நடந்த மனித உரிமை மீறல்களை ஜெனிவாவரை சென்று எடுத்துச் சொன்னவர். எல்லாவற்றிற்கும் மேலாக சட்டம் படித்துத் தேறியவர். ஆனால் அவரது ஆங்கில உச்சரிப்புக்களும் வார்த்தைப் பிரயோகங்களும் மோசமானவையாக இருந்தன. உதாரணமாக நவி பிள்ளையை He என்றார்.  Isolated incidents என்று பாவிக்கப்பட வேண்டிய இடங்களில்  individual incidents என்று பாவித்தார்.  ஒரு நண்பரிடம் மஹிந்தரின் பேட்டி சட்டம் படித்தவன் கதைக்கும் ஆங்கிலம் போல் இல்லை என்றேன். அதற்கு அவர் கொடுத்த பதில்: மச்சான் உவன் குதிரை ஓடித்தான் பாஸ்பண்ணினவன். கொழும்பு ஊடகமொன்றில் பின்னூட்டமிட்ட ஒரு வாசகர் மஹிந்தர் இரசியத் தலைவர்கள் போல தாய் மொழியில் பேட்டி கொடுத்திருந்திருக்கலாம்; ஆங்கிலத்தில் உபதலைப்பிட்டு பேட்டியை ஒளிபரப்பி இருந்திருக்கலாம் எனப் பதிவிட்டார்.

பேட்டியின் இறுதியில் உங்களது நாடு பற்றிய உங்களது நோக்கு என்ன எனக் கேட்டபோது செழுமை எனப் பதில் கூறிப் பேட்டியை முடித்தார். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் காணாமல் போனோர் பட்டியலில்!

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...