Monday 14 October 2013

சோனியா காந்திக்கு புதிய ஆபத்து?


இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீயை ஈழத் தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இலங்கையில் இனவழிப்புப் போர் நடந்த போது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். இறுதிப் போரின் போது இலங்கை அரசு போர் முனையில் எழுபதினாயிரம் பொது மக்கள் மட்டும் இருக்கின்றார்கள் என உண்மைக்கு மாறான தகவலைத் திரும்பத் திரும்பச் சொல்லிய போது அதை வழி மொழிந்தவர் பிரணாப் முஹர்ஜீ. இறுதிப் போரின் போது இலங்கையைப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக கொழும்பு செல்வதாகக் கூறிக் கொண்டு கொழும்பு போய் இலங்கைக்கு போரை வீரைவில் முடிப்பதற்கான தேவைகளை ஆய்வு செய்தவர் என்ற குற்றச் சாட்டும் இவருக்கு எதிராக உண்டு.

குடும்பக் குழப்பத்தில் சோனியா
ராகுல் காந்தி பிறக்கும் போதே அவர்தான் இந்தியாவின் அடுத்த தலைமை அமைச்சர் என இந்தியர்களின் தலையில் எழுதப்பட்டு விட்டது. "ராஜ மாதா"வும் தனது மகனின் பட்டாபிஷேகத்திற்குரிய ஏற்பாடுகளைக் கடந்த சில ஆண்டுகளாகச் செய்து வருகின்றார். கட்சியில் அவருக்கு இருந்த தடைகளை அகற்றிக் கொண்டே இருக்கிறார். இந்திய அரசியலில் எதிர்க்கட்சிகள் அவரை பேபி என்றும் பாப்பு என்றும் அழைக்கின்றனர். "ராஜ மாதா" பட்டாபிஷேகத்திற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. ராகுல் காந்தி மக்களைக் கவர்ந்திழுக்கும் திறமை மிக்கவர் அல்லர். இவரிலும் பார்க்க இவரது அக்கா பிரியங்கா வதேரா மக்களைக் கவரக்கூடியவர் என பல காங்கிரசுக் கட்சியினர் நம்புகின்றனர். Raul என்ற இத்தாலியப் பெயருடன் இருந்தவருக்கு இந்திய அரசியலுக்கு ஏற்ப ராகுல் எனப் பெயர் சூட்டப்பட்டது.  2005-ம் ஆண்டு ஓர் ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது தான் நினைத்திருந்தால் தனது 25வது வயதில் இந்தியாவின் தலைமை அமைச்சராகியிருந்திருக்கலாம் எனப் பேட்டியளித்து மாட்டிக் கொண்ட ராகுல் காந்தி அதன் பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதை நிறுத்தி விட்ட்டார். பிரியங்காவைத் தீவிர அரசியலில் ஈடுபடுத்தினால் ராகுலின் திறமையின்மை மேலும் அம்பலப்படுத்தப்படும் என்று "ராஜமாதா" கருதுகிறார். அத்துடன் அக்காவும் தம்பியை முந்திச் செல்ல விரும்பவில்லை. இதனால் 2014 நடக்க விருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியைச் சமாளிக்க இந்தியா முழுவதும் பிரியங்காவை ஈடுபடுத்தும் ஆலோசனை முன் வைக்கப்பட்டது. ஆனால் இரகசிய உளவுத் தகவல்களின் படி பிரியங்காவின் கணவர் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை எதிர்க்கட்சியிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவார்கள் என அறிந்து கொண்டனர். பிரியங்காவின் கணவர் வதேரா நாடு முழுவதும் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நிறைய அரச நிலங்களை அபகரித்துக் கொண்டார் என்ற குற்றச் சாட்டு பரவலாக உண்டு. இவர் எந்த வித முதலீடும் இன்றி பெரும் பணக்காரர் ஆகி விட்டார் என்கின்றார்கள் எதிர்க் கட்சியினர். அவர் இப்போது பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி என்கின்றனர் அவர்கள்.

பன்முகத் திறமை கொண்ட பிரணாப்
சட்டத்திலும் சரித்திரத்திலும் பட்டதாரியான பிரணாப் முஹர்ஜீ  அரசறிவியலில் முதுமானிப் பட்டம் பெற்றவர். அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றைக் கொண்ட எழுபத்தெட்டு வயதான பிரணாப் முஹர்ஜீ 1969-ம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்தியப் பாராளமன்றத்தின் மேலவையான ராஜ்ஜ சபாவின் உறுப்பினராக்கப் பட்டார். தனது நேர்மையான பற்றால் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவரானர் பிரணாப் முஹர்ஜீ. காங்கிரசின் ஆட்சியிலும் கட்சியிலும் பல பதவிகளை வகித்தவர். காங்கிரசுக் கட்சிக்கும் ஆட்சிக்கும் பிரச்சனை வரும்போதெல்லாம் தலையிட்டுப் பிரச்சனைகளத் தீர்த்து வைப்பதில் வல்லவர். கட்சியின் பல மட்டத்திலும் நல்ல தொடர்புகளை வைத்திருப்பவர். தொழில் அபிவிருத்தித் துறை, வருவாய்த் துறை, வங்கித் துறை, வர்த்தகத் துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை என அத்தனை முக்கிய அமைச்சுப் பதவிகளையும் வகித்தவர். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றின் ஆளுனராகவும் இருந்தவர். 1984இல் இந்திரா காந்தியின் மறைவிற்குப் பின்னர் இவரை தலைமை அமைச்சராக்காமல் ராஜீவ் காந்தியைத் அப்பதவியில் அமர்த்தியது இவரைக் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. பின்னர் ராஜீவ் காந்தியால் ஓரம் கட்டப்பட்டார் பிரணாப் முஹர்ஜீ. இதனால் அவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகி தனியாக ராஷ்ட்ரீய சமாஜ்வாதி காங்கிரஸ் என்னும் கட்சியைத் தொடக்கினார். பின்னர் ராஜிவின் மறைவிற்குப் பின்னர் அவரது கட்சி காங்கிரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டது. இந்திரா காந்தியின் ஆட்சியில் இரண்டாம் தலையாக இருந்த பிரணாப் பின்னர் நரசிம்ம ராவ் தலைமை அமைச்சரான போது மீண்டும் இரண்டாம் நிலைக்கு வந்தார். இந்திய திட்ட ஆணையகத்தின் தலையாக அவரது காங்கிரசுனடான மீள் இணைவு ஆரம்பமானது. 1998இல் சோனியா காந்தியை காங்கிரசுக் கட்சியின் தலைவராக்குவதற்கு முன்னின்று செயற்பட்டவர் பிரணாப்.

2004-ம் ஆண்டு நடந்த பாராளமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் போது மீண்டும் பிரணாப் முஹர்ஜீயின் முதுகில் குத்தியது நேரு-காந்தி குடும்பம். கட்சியின் மூத்த உறுப்பினரான அவரைத் தலைமை அமச்சராக்கினால் அவர் தமது குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி விடுவார் என்ற அச்சத்தால் சோனியா காந்தி தன் கைப் பொம்மையாகச் செயற்படக்கூடிய மன் மோஹன் சிங்கை சோனியா தலைமை அமைச்சராக்கினார். இந்த முறை பிரணாப் பொறுமையைக் கடைப்பிடித்தார். ஆனால் அவர் கடந்த முறையைப் போல் கட்சியை விட்டு வெளியேறாமல் கட்சிக்குள் இருந்து தம்மைப் பழிவாங்கப் போகிறாரா என சோனிய ஐயப்பட்டார். அவரது பணிமனை, நடமாட்டங்கள் போன்றவற்றை சோனியா காந்தி உளவுத் துறை மூலம் கடுமையாகக் கண்காணித்தார் என்ற குற்றச் சாட்டு முன் வைக்கப்பட்டது. ஆனால் பிரணாப் முஹர்ஜீ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அமைச்சரவையிலேயே சுதந்திரமாகச் செயற்படும் ஒருவராக இருந்தார். இவர்மீது பாரிய ஊழல் குற்ற சாட்டுக்கள் ஏதும் இல்லை.



சோனியா மன் மோஹன் சிங்கிற்குப் பின்னர் தனது பேபி ராகுல் காந்தியைத் தலைமை அமைச்சராக்குவதற்கு பிரணாப் முஹர்ஜீ தடையாக இருப்பார் என ஐயப்பட்ட சோனியா அவரை 2012இல் இந்தியாவின் குடியரசுத் தலைவராக்கினார்.  ஆனால் இப்போதும் நேரு-காந்தி குடும்பத்தின் மீது பிரணாப்பிற்கு வஞ்சம் இருப்பது தவிர்க்க முடியாது. பிரணாப் மீது இப்போதும் அவர்களுக்கு ஐயமிருப்பது தவிர்க்க முடியாது. இந்த முரண்பாட்டு நிலைக்கு இரு சம்பவங்கள் உரம் ஊட்டுபவை போல் அமைந்துள்ளது.


முதலாவது சம்பவம்: இந்திய உச்ச நீதிமன்றம் குற்றச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் இந்தியப் பாராளமன்றத்திலோ மாநில சட்ட சபையிலோ உறுப்பினராக இருக்க முடியாது எனத் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பை மறுதலிக்கும் வகையில் இந்தியக் காங்கிரசுக் கட்சியின் உள்ள அதிகார மையம் ஒன்று கூடி ஒரு அமைச்சரவை ஆணை ஒன்றைப் பிறப்பித்து  அதில் கையொப்பமிடும்படி பிரணாப் முஹர்ஜீக்கு அனுப்பியது. இந்திரா காந்தி காலத்திலிருந்தே இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் ஒரு ரபர் ஸ்டாம்ப் போல் செயற்படுவது வழக்கம். ஆனால் பிரணாப் முஹர்ஜீ அந்த அரச ஆணை ஏன் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என விளக்கம் கோரி உள்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டேயையும் சட்டத் துறை அமைச்சர் கபில் சிபாலையும் தனது பணிமனைக்கு ஆலோசனைக்கு அழைத்தார். இது காங்கிரசு ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே அவர்கள் ஒரு யூ திருப்பத்தைச் செய்தனர. ராகுல் காந்தி அரசு பிறப்பித்த சட்ட ஆணை முட்டாள்த்தனமானது என்றும் கொழுத்தப்படவேண்டியது என்றும் ஒரு குத்துக் கரணம் அடித்தார்.



இரண்டாவது: இந்தியக் குடியரசுத் தலைவர்  பிரணாப் முஹர்ஜீ ஒக்டோபர் 26-ம் திகதி பிகார் மாநிலத் தலைநகர் பட்னாவில் ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு செல்கின்றார். அவர் அங்கு இரு நாட்கள் தங்கி இருந்து மறு நாள் 27-ம் திகதி திரும்புவதாக ஏற்பாடாகி இருந்தது. ஒக்டோபர் 27-ம் திகதி எதிர்க் கட்சியான் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடி பட்னாவில் ஒரு பெரும் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடாகி இருந்தது. மோடியின் கூட்டத்திற்கு பெரும் திரளாக மக்கள் வருவதால் பரதிய ஜனதாக் கட்சியினர் பிரணாப்பைச் சந்தித்து அவரது பயணத்தை ஒரு நாளாகக் குறுக்கி 26-ம் திகதியே பட்னாவில் இருந்து புது டில்லி திரும்பும்படி கேட்டுக் கொண்டன்ர். இதற்கு பிரணாப்பும் ஒத்துக் கொண்டது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.

இரண்டு சம்பவங்களும் பிரணாப் முஹர்ஜீ பாரதிய ஜனதாக் கட்சியினருடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.


சோனியாவின் தெலுங்கானா சொதப்பல்.
சோனியா காந்தி தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கினால் அது காங்கிரசின் செல்வாக்கைக் கூட்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் தெலுங்கானாவைத் தனி மாநிலமாகப் பிரித்தது காங்கிரசுக் கட்சிக்கு மோசமான விளைவுகளை ஏற்படுதியுள்ளது. பிரணாப் முஹர்ஜீ தனது அரசியல் அனுபவத்தை வைத்து தெலுங்கானாவைத் தனியாகப் பிரிக்க வேண்டாம் என சோனியாவை எச்சரித்திருந்தார். காங்கிரசின் முன்மாதிரியைப் பின்பற்றி 2014இல் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றால் அது தனது கட்சிக்கு வாய்ப்பாகவும் காங்கிரசுக் கட்சிக்கு பாதகமாகவும் அமையக் கூடிய வகையில் மாநில எல்லைகளை மாற்றி அமைக்கலாம் எனவும் பிரணாப் சோனியாவை எச்சரித்திருந்தார். 2014-ம் ஆண்டு காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்தால் அதன் பின்னர் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் சோனியாமீது பிரணாப் போட முயலலாம்.


காங்கிரசு ஆட்சியின் பெரும் ஊழல்களாலும் மோடியின் செல்வாக்கு நாட்டில் வளர்ந்து வருவதாலும் இனி காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் பிரணாப் முஹர்ஜீ  தனது எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றார். எதிர்காலத்தில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தான் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பதவியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  இதற்காக அவர் தற்போதைய காங்கிரசு ஆட்சியின் கைப்பொம்மையாக இருக்க மாட்டார் என எதிர் பார்க்கலாம். இது சோனியா குடும்பத்திற்கு ஒரு சோதனையாக இருக்கலாம். 2014 மே மாதத்திற்கு முன்னர் நடக்க விருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசு படு தோல்வியடைந்தால் பிரணாப் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விலகி காங்கிரசுக் கட்சியைத் தனதாக்கலாம். தேர்தலில் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறாத நிலையில் பிரணாப் முஹர்ஜீ ஒரு தேசிய அரசின் தலைமை அமைச்சராக அவதாரம் எடுக்கலாம். பிரணாம் மூன்று முறை தலைமை அமைச்சராகும் வாய்ப்பை பறித்த சோனியாவின் குடும்பத்தை பிரணாப் சும்மா விடுவாரா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...