Thursday 5 September 2013

இந்திய நாணய நெருக்கடியைத் தொடர்ந்து கடன் நெருக்கடி ஏற்படுமா?

நாணய நெருக்கடி என்பது ஒரு நாட்டிற்குத் தேவையான நிலையில் அதன் நாணயத்தின் மதிப்பு இல்லாமல் இருக்கும்போது ஏற்படுகிறது. இது நாட்டின் ஏற்றுமதியிலும் பார்க்க இறக்குமதி அதிகரித்தும் வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் உள்வராத போதும் ஏற்படும்.

கடன் நெருக்கடி என்பது ஒரு நாடானது அளவிற்கு அதிகமாகக் கடன் பட்டு தனது கடனிற்கான தவணைப் பணத்தையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த முடியாமலும் புதிதாகக் கடன் பெறமுடியாமலும் இருக்கும் போது ஏற்படும். கிரேக்க நாடு இப்படி ஒரு நெருக்கடிக்கு உள்ளானது.

அண்மைக்காலங்களாக  இந்தியாவின் ரூபாவின்  மதிப்பு கட்டுகடங்காமல் வீழ்ச்சிக்கு  உள்ளானது. ரூபாவின் வீழ்ச்சி இந்தியப் பொருளாதரத்தைப் பொறுத்த வரை ஒரு நோய் அல்ல ஒரு பெரும் நோயின் அறிகுறியே. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2013 மார்ச் மாதம் முடிவடைந்த ஓராண்டு காலத்தில் 13 விழுக்காடு அதிகரித்துது. அது390 பில்லியன் அமெரிக்க டொலர்களானது.  இந்தியாவின் குறுங்காலக் கடன் 2013 மார்ச் மாதம் 172 பில்லியன் டாலர்களானது. 2014 மார்ச் மாதம் இந்தியா எப்படி தனது குறுங்காலக் கடனை அடைக்கப் போகிறது என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு இந்தியா பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் பெறச் செல்ல வேண்டும். அது இந்தியாவின் ரூபாவின் பெறுமதியைக் குறைக்கச் சொல்லி கேட்கும். இதனால் இந்திய ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக 70வரை செல்லலாம். ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் Deutsche Bank இந்திய ரூபா 70 வரை விழலாம் என எதிர்வு கூறிய போது நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது அதிலும் மோசமான நிலை இந்திய ருபாவிற்கு ஏற்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதிக கடனை இந்திய அரசு குறைக்குமா
இந்திய அரசு அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் பாராளமன்றத் தேர்தலை எதிர் கொள்ள வேண்டும். ஆளும் கட்சியின் வெற்றி வாய்ப்புக் குறையாமல் இருக்க இந்திய அரசு அதிக செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதில் ஒன்றுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டம். இது இந்தியாவின் அரசின் செலவீனங்களை அதிகரிக்கும். இது இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை வயிற்றோட்டத்தால் அவதிப் படும் நோயாளிக்கு பேதி மருந்து கொடுத்தது போலாகும்.

அதிகரித்துக் கொண்டிருக்கும் எரிபொருள் நிலை இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதிப் பற்றாக்குறையை இன்னும் மோசமாக்கும். அத்துடன் பல இந்திய நிறுவனங்கள் தாம் பட்ட கடன்களுக்கான வட்டியை மீளளிக்கும் திறன் இன்றி(negative interest cover) இருக்கின்றன. இது இந்தியாவின் வங்கிகளிற்கு ஒரு நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். இந்திய வங்கிகள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் போது இந்திய மைய வங்கியான ரிசேர்வ் வங்கி அவற்றிற்கு உதவி செய்ய முடியாத நிலை ஏற்படும். காய்ந்து போன நிலங்கள் எல்லாம் வற்றாத நதியைப்பார்த்து ஆறுதலடையும். ஆனால் அந்த நதியே காய்ந்து போய் கிடக்கும் போது நிலங்கள் என்ன செய்ய முடியும். Moody's Investors Service பதினொரு இந்திய வங்கிகளின் கடன்படு தரத்தை குறைத்துள்ளது.  4.8விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் 4.4 விழுக்காடு மட்டுமே வளர்ந்ததுள்ளது. பொருளாதாரம் வளரும் வேகம் குறையும் போது இந்திய நிறுவனங்களின் இலாபம் குறைய இந்திய வங்கிகள் அவற்றிற்கு கொடுத்த கடன்கள் அந்த நிறுவனங்களால் மீளளிக்க முடியாத நிலை மேலும் மோசமாகும். இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததிலும் குறைவாக வளரும் போது அரசின் வரி வருமானம் குறையும். இதனால் அரச கடன் நெருக்கடி மேலும் மோசமாகும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...