Saturday 31 August 2013

சிரிய வேதியியல் குண்டுத் தாக்குதல் ஏற்கனவே அமெரிக்காவிற்குத் தெரியும்

சிரியாவில் வேதியியல்(இரசாயன) குண்டுத் தாக்குதல் நடக்க விருப்பது அமெரிக்காவின் உளவுத் துறைக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே தெரிந்திருந்தது. சிரியப் படையினரின் தொடர்பாடல்களை அமெரிக்க உளவுத் துறை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதால் இதை அறியக் கூடியதாக இருந்தது.

அமெரிக்கா இந்தத் தகவலை சிரியக் கிளர்ச்சிக் காரர்களுக்கு தெரிவித்ததா இல்லையா என்பது இப்போது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இதைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்க அமெரிக்க உளவுத் துறை மறுத்து விட்டது. சில சிரியக் கிளர்சி அமைப்புக்கள் தமக்கு இதை அமெரிக்கா தெரிவிக்காததை இட்டு கடும் கண்டனம் தெரிவிக்கின்றன.

சிரியாவில் ஆகஸ்ட் 21-ம் திகதி நடந்த குண்டுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார் என்பது பற்றிய தகவல்களை அமெரிக்க உளவுத் துறையால் அறிந்து கொள்ள முடியவில்லை. குண்டுத் தாக்குதல் நடந்த பின்னர் சிரியப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவருக்கும் வேதியியல் படைக்கலன்களுக்கு பொறுப்பான ஒருவருக்கும் இடையில் கலவரமான உரையாடலை அமெரிக்க உளவுத்துறை ஒட்டுக் கேட்டதன் பின்னர் வேதியியல் குண்டுத் தாக்குதல் சிரிய ஆட்சியாளர்களால் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவின் கணிப்பின்படி 426 சிறுவர்கள் உட்பட 1429பேர் சிரிய வேதியியல் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

சில கிளர்ச்சிக்காரர்களுக்கு ஏற்கனவே வேதியியல் குண்டுத் தாக்குதல் நடக்கும் என்று தெரியும் அவர்கள் இது வழமையான சிறிய ரக குண்டுத் தாக்குதல் என இருந்து விட்டனர். இஸ்ரேலிய உளவுத் தகவல்களின் படி சிரியாவில் அடிக்கடி சிறிய ரக வேதியியல் குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன ஆனால் ஆகஸ்ட் 21-ம் திகதி ஒரு வலுமிக்க குண்டை வீசி விட்டார்கள். இதுதவறுதலாக நடந்திருக்க வேண்டும் அல்லது சிரிய மோதலை மோசமடைவதை விரும்பும் சிலரால் இது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சதிக் கோட்பாடு
எந்த ஒரு நிகழ்விற்கும் ஒன்று அல்லது பல சதிக் கோட்பாடு இருப்பது வழக்கம். ஆகஸ்ட் 21-ம் திகதி நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருக்கும் சதிக்கோட்பாடு இப்படிப் போகிறது: சிரியப் போர் இப்போது ஒரு தேக்க நிலையில் இருக்கிறது. இதைச் சிரிய கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக மாற்ற ஒன்றில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் வழங்க வேண்டும். படதடவை அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வலிமை மிக்க படைக்கலன்கள் வழங்குவதாக தெரிவித்த போதும் அப்படி எதுவும் நடக்கவில்லை. துருக்கி மட்டும் லிபியாவில் இருந்து  படைக்கலன்கள் கடத்தப்படுவதற்கு உதவுகிறது. கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக மாற்றச் செய்ய வேண்டிய மற்றது சிரியாவின் விமானப்படை, தாங்கிப்படை, படைக்கலன் கிடங்குகள், வேதியியல் படைக்கலன் கிடங்குகள், கட்டளைப்பணியகம், தொடர்பாடல் நிலைகள் போன்றவற்றில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடாத்தி அழிக்க வேண்டும். இதற்கான ஒரு சாட்டாக சிரிய அரசு வேதியியல் குண்டுத்தாக்குதல் நடாத்தியதாக ஒரு குற்றச்சாட்டை உருவாக்க கிளர்ச்சிக்காரர்களே வேதியியல் குண்டுத் தாக்குதல்களைச் செய்தனர். இப்படிப் போகிறது சதிக் கோட்பாடு.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...