Thursday 15 August 2013

எரியும் எகிப்தும் சரியும் அமெரிக்க ஆதிக்கமும்

2011இற்கு முன்னர் ஆட்சியை மக்களாட்சி மயப்படுத்தும் படி அமெரிக்கா எகிப்திய அதிபர் ஹஸ்னி முபாரக்கை வேண்டியது. அவர் மறுத்தார். அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர். மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்தார். அவரை எகிப்தின் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துச் செயற்படும்படி அமெரிக்கா வேண்டியது அவர் மறுத்தார். மொஹமட் மேர்சியை பதவியில் இருந்து எகிப்தியப் படைத்துறையினர் அகற்றி ஆட்சிப் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டனர். மோர்சியின் ஆதரவாளர்கள் படைத்துறைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். எகிப்தியப் படையினர் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கின்றனர். இப்போது அமெரிக்கா எகிப்தியப் படைத்துறையை கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட வேண்டாம் என வேண்டுகிறது. படைத்துறை செவிசாய்க்கவில்லை.

2011இல்  எகிப்திய மத்தியதர வர்க்கத்தினர் அப்போதைய ஆட்சியாளர் புரட்சி செய்தபோது அமெரிக்கா தனக்கு வேண்டப்பட்டவரான ஹஸ்னி முபாரக்கை பதவியில் தொடர விரும்பாமல் அவரை பதவியில் இருந்து விலகும்படி வற்புறுத்தியது. அமெரிக்கா தனது கைப்பொம்மையான எகிப்தியப் படைத்துறை புரட்சியாளர்களுடன் ஒத்துப் போவதை விரும்பியது. இதனால் புரட்சி இரத்தக் களரியின்றி 18 நாட்களில் ஹஸ்னி முபராக்கை ஆட்சியில் இருந்து விலக்கியது. ஆனால் தொடர்ந்து நடந்த தேர்தலில் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பால் உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி வெற்றி பெற்று மொஹமட் மோர்சி ஆட்சிக்கு வந்தார். ஒரு இசுலாமிய மதவாத ஆட்சி எகிப்த்தில் உருவானது. இது அமெரிக்கா விரும்பாத ஒன்றாக இருந்தாலும் அமெரிக்காவின் புவிசார் கேந்திரோபாய நலன்களுக்குப் பாதகமில்லாமல் மொஹமட் மேர்சி தன்னை மாற்றிக் கொண்டார். கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை ஏற்றுக் கொண்டார். இதனால் மோர்சி ஈரான் நீட்டிய நட்புக்கரத்தை ஏற்க மறுத்தார். இஸ்ரேலுடனான எகிப்திய வர்த்தகத்தை அதிகரித்தார். மோர்சி ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க ஆதரவுடன் எகிப்து இஸ்ரேலுடன் செய்யப்பட்ட காம்ப் டேவி ஒப்பந்தம் இரத்துச் செய்யபடுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் மோர்சி அப்படிச் செய்யவில்லை. சிரியக் கிளர்ச்சியில் அமெரிக்காவிற்கு ஏற்றபடி நடந்து கொண்டார். இப்படி மோர்சி அமெரிக்கவின் விருப்பங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டபடியால் அவர் உள்நாட்டில் செய்யப்படவேண்டிய சீர் திருத்தங்களைச் செய்யாமல் இசுலாமியச் சட்டங்களை அமூல் படுத்தத் தொடங்கினார். அத்துடன் தனது கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். எகிப்தில் புரட்சி செய்தவர்கள் ஹஸ்னி முபாரக் ஆட்சியில் நிலவிய ஊழல், வேலையில்லாப் பிரச்சனை, பொருளாதார மேம்பாடு, உல்லாசப்பயணத் துறை அபிவிருத்தி போன்றவற்றில் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மோர்சி தன்னைப் பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். அவசர அவசரமாக ஒரு அசமைப்பு யாப்பை உருவாக்கினார். படைத்துறைக்கும் அதில் அதிக அதிகாரங்களை வழங்கினார். தன்னை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாதவராக்கினார். அவரது அரசமைப்பிற்கு தாராண்மைவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அரசமைப்பு யாப்பிற்கான வாக்கெடுப்பில் 32விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே பங்கு பற்றினர். அதில் 67 விழுக்காட்டினரின் ஆதரவு கிடைத்திருந்தது. மோர்சி இசுலாமிய அடிப்படைவாதிகளுடன் தனது உறவைப் பலப்படுத்தினார். அரச உயர் பதவிகளில் இசுலாமியத் தீவிரவாதிகளை அமர்த்தினார். பெணகளுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தார். இவற்றை எல்லாம அமெரிக்கா கண்டுகொள்ளாத மாதிரி இருந்தது. மோர்சியை எப்படித் தன்வழிக்குக் கொண்டுவருவது என்பதில் அமெரிக்கா கவனமாக இருந்தது. மோர்சி பதவியேற்றதில் இருந்து பெண் உரிமைவாதிகள் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். வேறும் பல அதிருப்தியாளர்கள் மோர்சிக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் அடிக்கடி நடந்த படியே இருந்தன. மோர்சி பதவி ஏற்று ஓராண்டு நிறைவில் மோர்சியின் ஆட்சி தமது அடிப்படைப் பிரச்சனைகள் எதிலுமே கவனம் செலுத்தவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பல இலட்சக கணக்கான மக்கள் 2011இல் செய்தது போல் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு இரவு பகலாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எகிப்திய மக்களின் தற்போதைய முக்கிய பிரச்சனை நாட்டில் மோசமடைந்துள்ள பொருளாதாரமாகும். எகிப்தில் முதல் முதலாக மக்களாட்சி முறைப்படி நடந்த தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட மொஹமட் மேர்சி அவரது பதவி ஏற்று ஓராண்டு நிறைவு நாளான ஜூன் 30-ம் திகதி மக்கள் பல இலட்சக் கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து எகிப்தியப் படைத்துறை அவரைப் ஜூலை 3-ம் திகதி பதவியில் இருந்து விலக்கி நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் இரத்துச் செயத்துடன். புதிய அதிபராக உச்ச நீதிமன்ற நீதிபதி அட்லி மன்சூரையும் புதிய தலைமை அமைச்சராக நோபல் பரிசு வென்ற அல் பராடியையும் படைத்துறையுனர் நியமித்தனர்.

14/05/2013 புதன்கிழமையில் இருந்து எகிப்தியப் படையினர் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து தமக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் மோர்சியின் ஆதரவாளர்களுக்கு எதிராக கொடூரமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பல பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். ஸ்கை நியூஸின் படப்பிடிப்பாளர் மைக் டீனும் அமீரகத்தின் பத்திரிகையாளர் ஹபீபா அல் அசீஸும் கொல்லப்பட்டனர். பல ஊடகவியலாளர்கள் கைது செய்யபப்ட்டனர். பத்திர்கையாளர்களின் மடிக்கணனிகள் பறிக்கப்பட்டு அதன் கடவுட்சொற்களை அடித்து மிரட்டி வாங்கினர் எகிப்தியக் காவற்துறையினர். எகிப்தின் வரலாற்றில் என்றும் இப்படி ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டதில்லை.

இதுவரை(15/08/2013- GMT - 12.00) 525 கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3,700இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எகிப்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படைத்தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளர்ச்சிக்காரர்கள் பல கிருத்தவ தேவாலயங்களைத் தாக்கியதாகச் சொல்லப்ப்டுகிறது.
எல் பராடி பதவி விலகினார்
படைத்துறையினரால் பதவிக்கு அமர்த்தப்பட்ட எகிப்திய துணை அதிபர் எல் பராடி படைத்துறையினரின் அடக்கு முறைக்கு ஆட்சேபம் தெரிவித்துப் பதவி விலகினார். இறைவனின் முன்னிலையில் ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்தார்.

மோர்சிக்கு எதிரானவர்கள் படைத்துறைக்கு ஆதரவு
மோர்சிக்கு எதிரான கட்சிகளின் கூட்டமைப்பான National Salvation Front என்னும் தேசிய விடுதலை முன்னணி படைத்துறையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மதத்தின் பெயரைச் சொல்லி எகிப்திய அரசியலை திசை திருப்புவதற்காக வீதிகளில் அமர்ந்து கிளர்ச்சி செய்பவர்களை அடக்கியமைக்காக இன்று எகிப்து தலை நிமிர்ந்து நிற்கிறது என அவர்களது அறிக்கை தெரிவிக்கிறது.

சூயஸ் கால்வாயால் எகிப்து புவிசார் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு நாடாகும். அது தமது எதிரிகளின் கைகளுக்குப் போவதை அமெரிக்கா ஒரு போதும் விரும்பாது. அமெரிக்கா எகிப்து கொந்தளிக்கத் தொடங்கியவுடன் தனது படைகளை இத்தாலியில் குவித்தது. பின்னர் அமெரிக்கா தனது கடற்படையின் ஈரூடகப் பிரிவினரில் பலரை மத்திய கிழக்கை நோக்கி நகர்த்தியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

எகிப்தில் பெரும் கிளர்ச்சியும் அதற்கு எதிரான மோசமான அடக்கு முறையும் நடந்து கொண்டிருக்கையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது விடுமுறையை கோல்ஃப் திடல் ஒன்றில் கழித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்கா காத்திரமான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

வட ஆபிரிக்காவிலேயே அமெரிகாவின் செல்வாக்கு அதிகம் உள்ள நாடாக எகிப்து கருதப்பட்டது. அமெரிக்கா எகிபதியப் படைத்துறைக்கு ஆண்டொன்றிற்கு 1.6 முதல் 2 பில்லியன் டாலர்களை உதவியாக வழங்குகிறது. இந்தத் தொகை 1986இல் இருந்து வழங்கப்படுகிறது. 1986இல் இரண்டு பில்லியன் டாலர்கள் பெரும் தொகைதான் ஆனால் இப்போது அதன் பெறுமதி மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.  அதிலும் பெரும் பகுதி அமெரிக்காவில் இருந்து படைக்கலன்களை இறக்குமதி செய்யச் செலவளிக்கப்பட வேண்டும். 250மில்லியன் டாலர்கள் மட்டுமே படைத்துறையினருக்குச் செல்கிறது. இசுலாமிய சகோதரத்து அமைப்பைப் பிடிக்காத நாடுகளான சவுதி அரேபியாவும் குவைத்தும் மொஹமட் மேர்சி பதவ்வியில் இருந்து விலக்கபட்டவுடன் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை எகிப்திற்கு உதவியாக வழங்கின. இதனால் எகிப்த்தியப் படைத்துறைக்கு அமெரிக்காவின் உதவி தேவையற்ற ஒன்றாக மாறி விட்டது எனச் சொல்லப்படுகிறது. சிலர் அமெரிக்காவின் செல்வாக்கு எகிப்தில் சரிந்து விட்டது எனச் சொல்கின்றனர்.  ஆனால் உண்மை நிலை வேறு.

அமெரிக்காவை படைத்துறையினரும் அவருக்கு ஆதரவாக நிற்கும் தேசிய விடுதலை முன்னணியினரும் தமக்கு எதிராக அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுப்பதாக நம்புகின்றனர். மொஹமட் மேர்சியும் அவரது இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் அவருக்கு ஆதரவு வழங்கு மத தீவிரவாதிகளும் அமெரிக்கா படைத் துறையினருக்கு ஆதரவாக நடப்பதாக நினைக்கின்றனர். இதை அமெரிகாவும் அறியும். எகிப்தில் தான் தலையிட்டால் அது அல் கெய்தா போன்ற தீவிரவாதிகளுக்கு பெரும் பிரச்சார வாய்ப்பாக அமையும் என்பதை அமெரிக்கா அறியும். இதனால் தான் தலையிடாமல் இருப்பது போல் காட்டிக் கொண்டும் எகிப்தில் நடக்கும் வன்முறைகளைத் தான் கண்டிப்பது போல காட்டிக் கொண்டும் இருக்கிறது. உண்மையில் அமெரிக்காவின் ஆதரவுடனும் வேண்டுதலின் பேரிலும் சவுதி அரேபியாவும் குவைத்தும் எகிப்தியப் படைத்துறையினருக்கு உதவி செய்கின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...