Saturday 6 July 2013

நாசமாகும் எகிப்தும் மோசமான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்

முன்பு ஒரு நாட்டைத் தமது ஆதிக்கத்திக்குள் கொண்டுவர அந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தன வல்லாதிக்க நாடுகள். பின்னர் தமது கைப்பொம்மைகளை ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. எகிப்தில் அமெரிக்கா செய்வது சற்று வித்தியாசமானது. எகிப்தியப் படைத் துறைய தனது சுண்டுவிரலின் கீழ் வைத்துக் கொண்டு எகிப்தைத் தனது ஆதிக்கத்துக்குள் அமெரிக்கா வைத்திருக்கிறது.

அமெரிக்கா மற்ற நாடுகளில் மக்களாட்சி முறைமை வேண்டும் என்று சொல்லிக் கொண்டு அங்கு ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும். தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்கள் இருக்கும் நாடுகளில் மக்களாட்சி முறைமையைக் குறை கூறிக் கொண்டு அமெரிக்கா அவற்றிற்கான நிதி உதவியை நிறுத்தும். ஆனால் எகிப்தில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அதிபர் மொஹமட் மோர்சியை எகிப்தியப் படைத் துறை பதவியில் இருந்து அகற்றிய போதிலும் எகிப்தியப் படைத்துறைக்கான உதவியை அமெரிக்கா இடை நிறுத்தப் போவதாகச் சொல்லவில்லை. அமெரிக்கா ஆண்டு தோறும் எகிப்தியப் படைத்துறைக்கு சராசரியாக 1.3பில்லியன் டாலர்களை நிதி உதவியாக வழங்கி வருகிறது. எகிப்தியப் படைத்துறையின் உயர் அதிகாரிகள் யாவரும் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்று அமெரிக்காவிற்கு சாதகமாக நடக்கும்படி மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள்.

மோர்சியின் பதவிக் கவிழ்ப்பைக் கொண்டாடும் மக்கள்:


மோசமான மொஹமட் மேர்சி
2011இல்  எகிப்திய மத்தியதர வர்க்கத்தினர் அப்போதைய ஆட்சியாளர் புரட்சி செய்தபோது அமெரிக்கா தனக்கு வேண்டப்பட்டவரான ஹஸ்னி முபாரக்கை பதவியில் தொடர விரும்பாமல் அவரை பதவியில் இருந்து விலகும்படி வற்புறுத்தியது. அமெரிக்கா தனது கைப்பொம்மையான எகிப்தியப் படைத்துறை புரட்சியாளர்களுடன் ஒத்துப் போவதை விரும்பியது. இதனால் புரட்சி இரத்தக் களரியின்றி 18 நாட்களில் ஹஸ்னி முபராக்கை ஆட்சியில் இருந்து விலக்கியது. ஆனால் தொடர்ந்து நடந்த தேர்தலில் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பால் உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி வெற்றி பெற்று மொஹமட் மோர்சி ஆட்சிக்கு வந்தார். ஒரு இசுலாமிய மதவாத ஆட்சி எகிப்த்தில் உருவானது. இது அமெரிக்கா விரும்பாத ஒன்றாக இருந்தாலும் அமெரிக்காவின் புவிசார் கேந்திரோபாய நலன்களுக்குப் பாதகமில்லாமல் மொஹமட் மேர்சி தன்னை மாற்றிக் கொண்டார். கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை ஏற்றுக் கொண்டார். இதனால் மோர்சி ஈரான் நீட்டிய நட்புக்கரத்தை ஏற்க மறுத்தார். இஸ்ரேலுடனான எகிப்திய வர்த்தகத்தை அதிகரித்தார். மோர்சி ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க ஆதரவுடன் எகிப்து இஸ்ரேலுடன் செய்யப்பட்ட காம்ப் டேவி ஒப்பந்தம் இரத்துச் செய்யபடுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் மோர்சி அப்படிச் செய்யவில்லை. சிரியக் கிளர்ச்சியில் அமெரிக்காவிற்கு ஏற்றபடி நடந்து கொண்டார். இப்படி மோர்சி அமெரிக்கவின் விருப்பங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டபடியால் அவர் உள்நாட்டில் செய்யப்படவேண்டிய சீர் திருத்தங்களைச் செய்யாமல் இசுலாமியச் சட்டங்களை அமூல் படுத்தத் தொடங்கினார். அத்துடன் தனது கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். எகிப்தில் புரட்சி செய்தவர்கள் ஹஸ்னி முபாரக் ஆட்சியில் நிலவிய ஊழல், வேலையில்லாப் பிரச்சனை, பொருளாதார மேம்பாடு, உல்லாசப்பயணத் துறை அபிவிருத்தி போன்றவற்றில் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மோர்சி தன்னைப் பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். அவசர அவசரமாக ஒரு அசமைப்பு யாப்பை உருவாக்கினார். படைத்துறைக்கும் அதில் அதிக அதிகாரங்களை வழங்கினார். தன்னை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாதவராக்கினார். அவரது அரசமைப்பிற்கு தாராண்மைவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அரசமைப்பு யாப்பிற்கான வாக்கெடுப்பில் 32விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே பங்கு பற்றினர். அதில் 67 விழுக்காட்டினரின் ஆதரவு கிடைத்திருந்தது. மோர்சி இசுலாமிய அடிப்படைவாதிகளுடன் தனது உறவைப் பலப்படுத்தினார். அரச உயர் பதவிகளில் இசுலாமியத் தீவிரவாதிகளை அமர்த்தினார். பெணகளுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தார். இவற்றை எல்லாம அமெரிக்கா கண்டுகொள்ளாத மாதிரி இருந்தது. மோர்சியை எப்படித் தன்வழிக்குக் கொண்டுவருவது என்பதில் அமெரிக்கா கவனமாக இருந்தது. மோர்சி பதவியேற்றதில் இருந்து பெண் உரிமைவாதிகள் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். வேறும் பல அதிருப்தியாளர்கள் மோர்சிக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் அடிக்கடி நடந்த படியே இருந்தன. மோர்சி பதவி ஏற்று ஓராண்டு நிறைவில் மோர்சியின் ஆட்சி தமது அடிப்படைப் பிரச்சனைகள் எதிலுமே கவனம் செலுத்தவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பல இலட்சக கணக்கான மக்கள் 2011இல் செய்தது போல் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு இரவு பகலாக ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைக் காரணமாக வைத்து எகிப்திய படைத்துறையினர் மொஹமட் மோர்சியின் ஆட்சிக்கு 48 மணித்தியால நேர அவகாசம் கொடுத்தனர். மோர்சி பதவி விலக மறுத்ததால் அவரை வீட்டுக்காவலில் தடுத்து வைத்து அவரது ஆட்சியைக் கலைத்து எகிப்திய உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்களைக் கொண்ட ஒரு ஆட்சியை நிறுவினர்.

மோர்சியைச் சந்தேகித்த படைத்துறையினர்.
எகிப்தையப் பொருளாதாரத்தில் 30விழுக்காட்டை ஏப்பமிடும் படைத்துறையினர் மோர்சி தனது நிலையைப் பலப்படுத்தி அமெரிக்காவுடனான தனது உறவையும் மேம்படுத்திக் கொண்டால் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள் என்ற நிலையைத் தாம் இழந்து விடுவோமோ என்ற அச்சம் கொண்டதன் விளைவே மோர்சியின் ஆட்சிக் கலைப்பு எனக் கூறலாம்.

இசுலாமின் எதிரிகள்
மோர்சியின் ஆட்சிக் கவிழ்ப்பை இசுலாமிய மதத்தின் எதிரிகள் அரசியலுக்குள் மதத்தைக் கொண்டுவரக்கூடாது. கொண்டுவந்தால் அது தோல்வியில் முடிவடையும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மோர்சிக்கு மோசமாக இருந்த எகிப்தியப் பொருளாதாரத்தையோ அதன் ஊழல் நிறைந்திருந்த நிர்வாகக் கட்டமைப்பைச் சீர் செய்யவோ ஓர் ஆண்டு போதாது என்கின்றனர் அவரது ஆதர்வாளர்கள். மொஹமட் மோர்சியை வீட்டுக் காவலில் வைத்தமையை ஐநா மனித உரிமைக்கழக ஆணையாளர் நவி பிள்ளையும் மற்றும் பல மனித உரிமை அமைப்புக்களும் கண்டித்துள்ளன. பல இசுலாமியத் தீவிரவாதிகளும் எகிப்தில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆபிரிக்க ஒன்றியம் எகிப்தைத் தமது அமைப்பில் இருந்து நீக்கியுள்ளது. 1991இல் அல்ஜீரியாவில் இசுலாமிய விடுதலை முன்னணி என்னும் இசுலாமிய மதவாதிகள் தேர்தல் மூலம் பதவிக்கு வந்த போதும் படத்துறையினர் அவர்களுக்கு எதிராக அடைக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். இரண்டு இலட்சம் பேர்வரை கொல்லப்பட்டனர். மோர்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டவுடன் மோர்சியின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எசாம் எல் ஹதாத் தனது முகநூல் நிலைத்தகவலில் எழுதியது: "The message will resonate throughout the Muslim World loud and clear: democracy is not for Muslims."

புதிய ஆட்சியின் ஆரம்பம்
மோர்சிக்குப் பின்னர் பதவிக்கு வந்த அரசு முதல் செய்யும் பணி மோர்சிக்கு ஆதரவான ஊடகங்களைத் தடை செய்வதே. மோர்சிக்கு எதிரான தாராண்மைவாதிகள் மோர்சிக்கு எதிராக கிளர்ந்து எழும்படி தமது ஆதரவாளர்களைக் கேட்டுள்ளனர். மத்திய கிழக்கில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகள் மோர்சியின் ஆட்சிக் கலைப்பை தமக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகக் கருதுகின்றனர். மோர்சியின் ஆட்சி கலைக்கப்பட்டதில் இருந்து 06/07/2013 GMT காலை 10.00 மணிவரை எகிப்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2011இல் நடந்த புரட்சியின் போது சிறையில் இருந்து தப்பியமை குற்றம் என மோர்சியின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மோர்சிக்குப்பின்னர் வலுக்கும் மோதல்கள்
மோர்சி பதவி விலக்க்கப்பட்டதை இசுலாமிய மதவாதிகள் விரும்பவில்லை. 84 ஆண்டு வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மோர்சியின் இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு சமூக ரீதியாகவும் மத ரீத்ரியாகவும் எகிப்தில் பல நல்ல செயற்பாடுகளைச் செய்து வந்துகொண்டிருப்பதால் அதற்கு என்று ஒரு பெரும் ஆதரவுத் தளம் இருக்கிறது. மோர்சியின் ஆதரவாளர்களுடன் படைத்துறை ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதை விரும்பாதவர்களும் எகிப்தில் அமெரிக்க ஆதிக்கத்தை விரும்பாதவர்களும் மோர்சியின் ஆதரவாளர்களுடன் இணைகிறார்கள். இதனால் மோர்சியின் ஆட்சிக்கலைப்பிற்கு எதிரான கிளர்ச்சி நாளுக்கு நாள் வலுப்பெறுகிறது. எகிப்தில் 1991இல் அல்ஜீரியாவில் உருவாகியது போல் ஒரு நிலைமையோ அல்லது தற்போது சிரியாவில் உள்ளது போல் ஒரு நிலைமையோ உருவாக வாய்ப்பு உள்ளது. புவிசார் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாட்டில் இப்படி ஒரு நிலைமை உருவாகுவதை வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் விருப்பப் போவதில்லை. படைத்துறையினருக்கு உள்ள ஒரே ஒரு வழி மீண்டும் எகிப்தில் தேர்தல் நடத்துவதுதான். அதற்கு உரிய அரசமைப்பு யாப்பை முதலில் உருவாக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் காலத்தை இழுத்தடித்தால் எகிப்தில் பெரும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்து நாடே நாசமடையும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...