Wednesday 24 July 2013

புதிய ஜப்பானும் பழைய இந்தியாவும் சீனாவிற்கு எதிராக கைகோர்க்குமா?

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் தாராண்மைக் குடியரசுக் கட்சி மூதவைத் தேர்தலில் வெற்றி பெற்றமை அவர் ஜப்பானை புதிய திசையில் இட்டுச் செல்லும் பணிக்கு இருந்த தடையை நீக்கியுள்ளது. பிரதமர் ஷின்சோ அபே உள் நாட்டில் பெரும் பொருளாதாரச் சவாலையும் வெளியில்சீனாவின் அச்சுறுத்தலையும் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் இந்த இரண்டு சவால்களையும் சமாளிக்க இந்தியாவின் உறவை வேண்டி நிற்கிறார்.

ஜப்பானிய அரசியல் யாப்பின் 9வது பிரிவின்படி ஜப்பான் தனது மற்ற நாடுகளுடனான பிணக்குகளைப் போர் மூலம் தீர்க்க முடியாது. இதைச் சாட்டாக வைத்துக் கொண்டு சீனா கடந்த சில ஆண்டுகளாக ஜப்பானைச் சீண்டிக் கொண்டிருக்கிறது. கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுத் தொகுதிகளை தனது என சீனா சொந்தம் கொண்டாடிக்கொண்டிருப்பது ஜப்பானுக்கு  அதனது படைத்துறையை மேம்படுத்தும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

கிழக்குக் கரை
கிழக்குச் சீனக் கடலில் உள்ள் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களில் 1968இல் எண்ணெய் வளம் இருக்கலாம் எனக் கண்டறிந்ததைத் தொடர்ந்து சீனா அவற்றிற்கு உரிமை கொண்டாடி வருகிறது. கிழக்குச் சீனக் கடலில் மொத்தம் ஐந்து தீவுக் கூட்டங்களிற்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வருகின்றன. 2012 டிசம்பர் ஆரம்பப்பகுதியில் இத் தீவுகளின் வான எல்லைக்குள் வந்த சீன விமானப்படை விமானங்களை ஜப்பானிய விமானங்கள் அலைவரிசைகளைக் குழப்பி திருப்பி அனுப்பின. அது மட்டுமல்ல தென் சீனக் கடலிலும் உள்ள எல்லாத் தீவுகளையும் சீனா தன்னுடையது என்கிறது. இதனால் சீனாவிற்கும் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், தாய்வான், இந்தோனிசியா ஆகிய நாடுகளிற்கும் இடையில் கடும் முறுகல் நிலைகள் ஏற்பட்டுள்ளது. கிழக்குச் சீன கடலில் இருந்து இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை விரட்டிய பின்னர் சன் பிரான்ஸிஸ்கோ உடன்படிக்கையின் படி அமெரிக்கா கிழக்குச் சீனக் கடல் தீவுகளைத் தனதாக்கிக் கொண்டது. பின்னர் 1972இல் இத் தீவுகளை அமெரிக்கா ஜப்பானிடம் கையளித்தது. கிழக்குச் சீனக் கடற்படுக்கையில் அறுபது முதல் நூறு பில்லியன் பீப்பாய் எரிபொருள் வளம் இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

1895இல் நடந்த சீன ஜப்பானியப் போர்
1894-95இல் நடந்த போரில் சீனா ஜப்பானிடம் படு தோல்வியடைந்தது. இதன் போது சீனாவிடமிருந்து கொரியாவையும் தாய்வானையும் ஜப்பான் பிடுங்கிக் கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பான் தாய்வானை சீனாவிடம் திருப்பிக் கொடுத்தது. சீனப் புரட்சியின் பின்னர் தாய்வான் தனி நாடாக இருக்கிறது. கொரியா வட கொரியா தென் கொரியா என இரு தனித்தனி நாடுகளானது. 

 மோட்டாரில் போட்டா போட்டி

ஜப்பானும் சீனாவும் இரு பெரும் பொருளாதார வல்லரசுகள். கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுத் தொகுதிகளின் உரிமை தொடர்பாக சீனாவும் ஜப்பானும் மோதிக்கொள்ளுமா எனற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் மோட்டார் உற்பத்தித் துறைக்கு ஜப்பானிய மோட்டார் உற்பத்தித் துறை பெரும் சவாலாக இருக்கிறது. சீனர்கள் தமது நாட்டில் உற்பத்தியாகும் மோட்டார் வண்டிகளிலும் பார்க்க ஜப்பானிய மோட்டார் வண்டிகளை அதிகம் விரும்புகின்றனர். மோட்டார் உற்பத்தித் துறையில் சீனா ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியே இருக்கிறது. ஆனால் பல துறைகளில் சீனா ஜப்பானுக்கு பொருளாதார ரீதியில் பல சவால்களையும் கடும் போட்டிகளையும் உருவாக்கியுள்ளது. வேகமாக வளரும் சீனா தனக்கு பொருளாதார ரீதியாக மட்டுமல்ல படைத்துறை மற்றும் அரசியல் ரீதியாகவும் அச்சுறுத்தலாக அமையும் என ஜப்பான் கருதுகிறது. இதனால் சீன ஜப்பானிய முறுகல்கள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.

அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஜப்பான்
ஜப்பான் தனது வெளிநாட்டுப் பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் பெரிதும் தங்கியுள்ளது. ஆனால் அமெரிக்கா தனது பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தனது பாதுகாப்புச் செலவீனங்களை குறைத்துக் கொள்ளவிருக்கும் சூழலிலும் சீனா தனது படைத்துறை வலிமையை வேகமாக அதிகரித்து வரும் சூழலிலும் ஜப்பான் தனது பாதுகாப்பைப் பற்றி தீவிரமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே இரு பெரும் உபாயங்களை வகுத்துள்ளார். ஒன்று ஜப்பான் இந்தியாவுடன் படைத்துறையில் ஒத்துழைப்பது. மற்றது தமது நாட்டின் படைத்துறையை பாதுகாப்புக்கு மட்டும் என்ற நிலையில் இருந்து மாற்றி தாக்குதல் படைத்துறையாக மாற்றுதல். இதற்கு ஜப்பான் தனது அரசமைப்பு யாப்பை மாற்றி ஒரு புதிய ஜப்பானாக தனது நாட்டை மாற்றுதல் அவசியமானதாகிறது. 

ஜப்பானின் படைத்துறை தற்போதே பலமிக்கது.
இன்னொரு நாட்டுடன் போர் புரிய முடியாதவாறு அரசமைப்பு யாப்பு தடைசெய்திருந்தாலும் கடந்த காலங்களில் ஜப்பான் தனது படைத்துறையை வலிமை மிக்கதாகவே உருவாக்கி இருக்கிறது. தற்போது ஜப்பானின் படைத்துறைச் செலவு உலகில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. சிறந்த படைக்கலன்களைக் கொண்டதும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டதுமான 250,000 படையினரை ஜப்பான் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பல சமாதானப் பணிகளில் ஜப்பான் பெரும் பாங்காற்றிவருகிறது. ஜப்பானால் நினைத்த மாத்திரத்தில் அணுக்குண்டை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான தொழில்நுட்பமும் மூல வளமும் அதனிடம் இருக்கிறது.கடைசியாக ஜப்பான் flat-top destroyer என்னும் வகையைச் சேர்ந்த ஒரு பெரிய போர்க்கப்பலை தனது கடற்படைக்கு இணைத்துள்ளது. Izumo என்னும் பெயருடைய இந்தப் நாசகாரிக் கப்பல் 820 அடி நிளமுடையதும் ஒன்பதிற்கு மேற்பட்ட உழங்கு வானூர்திகளைத் தாங்கிச் செல்லக் கூடியதுமாகும். இதில் இன்னொரு ஆச்சரியம் இந்த Izumo என்னும் பெயருடைய கப்பற்படைத் தொகுதி 1937இல் சீனாவை ஜப்பான் ஆக்கிரமிப்பில் முக்கிய பங்கு வகித்தது. இந்தப் பெயரும் இந்தக் கப்பலில் பாரிய தன்மையும் சீனப் படைத்துறை ஊடகங்களில் பெரிதாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நாசகாரிக் கப்பல் தேவையேற்படும் போது முழுமையான ஒரு விமானம் தாங்கிக் கப்பலாக மாற்றப்படக் கூடியது என ஒரு சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

ஷின்சோ அபேயின் புது ஜப்பான்
பிரதமர் ஷின்சோ அபே ஜப்பானை ஒரு புதிதாக மாற்றுவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். முக்கியமாக சீனாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய ஒரு நாடாக அவர் ஜப்பானை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012 டிசம்பரில் நடந்த கிழவைத் தேர்தலிலும் சரி, 2013 ஜூலையில் நடந்த மேலவைத் தேர்தலிலும் சரி ஜப்பானின் அண்மைக்கால வரலாற்றில் ஜப்பானின் தேசிய பாதுகாப்பு முதல் தடவையாக ஒரு பிரச்சனையாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அடிபட்டது. இரண்டிலும் வெற்றியீட்டிய ஷின்சோ அபே கடந்த 15 ஆண்டுகளில் முதல் தடவையாக ஜப்பானின் பாதுகாப்புச் செலவை அதிகரித்துள்ளார். ஷின்சோ அபே தற்போது மக்கள் முன் வைப்பது: ஜப்பான் மீது தாக்குதல் நடக்கும் என்று அறிந்தவுடன் ஜப்பான் எதிரியை முந்திக் கொண்டு எதிரி மீது தாக்குதல் நடத்தும் திறனையும் சட்ட அனுமதியும் உருவாக்க வேண்டும். 2013 ஜூலை 9-ம் திகதி ஜப்பான் வெளிவிட்ட ஜப்பானின் பாதுகாப்புத் தொடர்பான வெள்ளை அறிக்கையில் சீனாவின் ஆகிரமிப்புப்பற்றியே அதிகப் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமர் ஷின்சோ அபேயின் திட்டத்திற்கு இரு தடைகள் இருக்கின்றன. ஒன்று நலிவடைந்துள்ள ஜப்பானியப் பொருளாதாரம். மற்றது ஜப்பானிய மக்களில் மூன்றில் ஒரு பங்கினரே ஜப்பானை படைத்துறையில் வலிமை மிக்க நாடாக மாற்றுவதில் அக்கறை கொண்டுள்ளனர். இது ஜப்பானிய இந்திய உறவின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

நட்புத் தேடும் ஜப்பானும் நட்பைப்பற்றிக் கவலைப்படாத சீனாவும்.
தென் கொரியாவும் ஜப்பானைப் போலவே சீன படைத்துறை விரிவாக்கத்தையும் கிழக்குச் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்க முனைப்பையும் மிகுந்த கரிசனையுடன் பார்க்கிறது. ஆனால் ஜப்பான் அதன் அயல் நாடாகிய தென் கொரியாவுடன் தனது நட்பை மேம்படுத்த முடியாமல் இரண்டாம் உலகப் போரின் போது கொரியர்களை ஜப்பான் செய்த கொடுமைகள் தடுக்கின்றது. ஜப்பான் செய்த கொடுமைகளுக்கு போதிய பரிகாரம் செய்யவில்லை என கொரியர்கள் உறுதியாக நம்புகின்றனர். இதனால் ஜப்பான் சீனாவுடனான படைத்துறைச் சமநிலையைப் பேண இந்தியாவை நாடி நிற்கிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனா மற்ற நாடுகளுடனான நட்பைப்பற்றி அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. இதனால் சிலர் சீனாவை உலகிலேயே தனிமையான வல்லரசு என்கின்றனர். அமெரிக்கா, பிர்த்தானியா, பிரான்ஸ் ஆகிய வல்லரசுகள் தமக்கிடையே நட்பாக் இருப்பதுடன் கனடா, மற்றும் ஜேர்மனி உட்பட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் நெருக்கமான நட்பைப் பேணி வருகின்றன. அத்துடன் ஹங்கேரி, போலாந்து, குரோசியா உட்படப் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இந்த நட்பு வட்டத்துக்குள் அடங்குகின்றன. ஜப்பானும் இந்த நட்புக் கூட்டணியுடன் பல பன்னாட்டு விவகாரங்களில் ஒத்துழைத்து வருகிரது.

இந்தியாவை அடிக்கடி சீண்டிப்பார்க்கும் சீனா
காஷ்மீரிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் முறுகல் நிலை இருக்கிறது. 10-10-1962இற்கும் 21-11-1962இற்கும் இடையில் நடந்த இந்திய சீனப் போரில் இந்தியா அக்சாய் சின் என்னும் பிரதேசத்தில் சுவிற்சலாந்து தேசத்தின் நிலப்பரப்பு கொண்ட இடத்தையும் (அதாவது 38,000சதுர கிலோ மீட்டர்) அருணாசலப் பிரதேசத்தில் ஒஸ்ரியா நாட்டின் நிலப்பரவளவு இடத்தையும் (90,000சதுர கிலோ மீட்டர்)சீனாவிடம் பரிதாபகரமகப் பறிகொடுத்தது.எஞ்சியிருக்கும் அருணாசலம் பிரதேசம் தன்னுடையது என அடிக்கடி சீனா மறை முகமாகச் சொல்லி வருகிறது. இமய மலையை ஒட்டிய இந்திய சீன எல்லையில்  4800 கிலோ மீட்டர் தூரம் பிரச்சனைக்கு உரியதாக இருக்கிறது. இப்பகுதியில் சீனா 2012இல் நானூற்றிற்கு மேற்பட்ட தடவை ஊடுருவல்களை மேற்கொண்டது. பல இடங்களில் இருந்து சீனா ஊடுருவிய பின்னர் விலகிச் சென்றாலும் சில இடங்களில் சீனா தனது படை முகாம்களை நிறுவி நிரந்தரமாகத் தங்கியுள்ளது. 2013 ஏப்ரல் நடுப்பகுதியில் சீனப்படையினர்  காஷ்மீர்  மாநிலம் லடாக் பகுதியில்  டேப்சாங் பள்ளத்தாக்கில்   19 கிலோ மீட்டர் தூரம்ஊடுருவி முகாம் அமைத்துள்ளனர்.  ஒரு நாள் கழித்தே இது இந்தியப்படையினருக்குத் தெரிய வந்தது. புது டில்லியில் உள்ள சீனத் தூதுவரை அழைத்து இந்தியா தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. அதற்குச் சீன கொடுத்த பதில் மேலும் இரண்டு முகாம்களை அங்கு அமைத்தமையே. நீண்ட இழுபறிக்குப் பின்னர் சீனப் படைகள் விலகிச் சென்றன. சீனா அடிக்கடி இந்திய எல்லைகளில் செய்யும் சீண்டல் வேலைகள் இந்தியாவை மேலும் அதிக படையினரை சீன எல்லையில் குவிக்க வைத்தது. இந்தியாவும் சீனாவைப் படைத்துறை ரீதியில் சமநிலைப்படுத்த ஜப்பானின் உதவி தேவை என உணர்ந்துள்ளது. அமெரிக்காவும் சீனாவை படைத்துறை ரீதியில் சமப்படுத்த இந்தியாவுடன் கை கோர்த்துக் கொள்ள விரும்புகிறது. ஆனால் இந்தியா அமெரிக்காவும் ஜப்பானும் நீட்டும் நட்புக் கரங்களை அரை மனதுடனே பற்றியுள்ளது. சீனாவுடன் தனது வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா விரும்புகிறது. இதைச் சில இந்தியப் பெரு முதலாளிகள் விரும்புகின்றனர்.  புது டில்லியைச் சேர்ந்த கேந்திரோபயக் கற்கைகளுக்கான பேராசிரியர் பிரம்மா செல்லனி (Brahma Chellaney, professor of strategic studies at the Centre for Policy Research) இந்தியா சீனாவுடனான வர்த்தகத்தைப் பெருக்கினால் அதனால் இரு நாடுகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் சீனாவுடனான முறுகல்களை தவிர்ப்பதற்கு அது உதவும் என்றும் இந்திய ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள் ஆனால் இந்த நம்பிக்கை சரிவரவில்லை. இப்போது அரசியலும் பொருளாதாரமும் எதிர் எதிர்த் திசையில் செல்கின்றன  என்கிறார்.  ஆனால் பன்னாட்டு உறவு நிபுணரான கரெத் பிரைஸ் (Gareth Price, a senior research fellow at Chatham House, a London-based foreign-affairs think tank) ஒரு படி மேலே போய் இந்திய வர்த்தகர்களைக் குற்றம் சாட்டுகிறார். இரு நாடுகளிற்கிடையிலான வர்த்தகம் பெருகும் போது ஒரு வியாபார் பெரும் இலாபம் ஈட்டுவான். அவனுக்கு எல்லையில் நடக்கும் மோதலைப் பற்றிக் கவலையில்லை. "If you are a businessman doing big business with China, then you don't care about an incursion somewhere up in Ladakh," .

இந்திய ஜப்பானிய படைத்துறை ஒத்துழைப்பு
2001இல் இருந்தே இந்தியாவும் ஜப்பானும் பல முனைகளில் தமது உறவை மேம்படுத்தி வருகின்றன. 2013ஜுலை மாத முதல் வாரம் ஜப்பான் சென்ற இந்தியப் பிரதமர் மன்ன் மோகன் சிங் இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார். இரு நாடுகளும் இணைந்து படைக்கல உற்பத்தி செய்வதாக ஒத்துக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் இணைந்து போர் ஒத்திகை செய்தல், கடற்படை ஒத்துழைப்பு போன்றவை பற்றி ஒத்துக்கொள்ளப்பட்டன. இந்தியா ஜாப்பானை நெருங்கிச் செல்வதால் ஆதிரமடைந்த சீன ஊடகமான குளோபல் ரைம்ஸ் இந்தியா ஆபத்தைத் தேடிச் செல்கிறது என்றது. ஆனால் மன் மோகன் சிங் இந்தியாவின் திடத்தன்மைக்கான தேடலில் ஜப்பானிய உறவு தவிர்க்க முடியாததும் முக்கியத்துவமானதும் என்றார்.

சீனாவே தன் எதிரிகளை ஒன்றிணைக்கிறது. 
இந்தியாவுடனான எல்லையிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனா செய்யும் அத்து மீறல்களும் சீண்டல்களுமே இந்தியாவையும் ஜப்பானையும் இணைக்கின்றன. இந்த இணைப்பு வலுப்பெறுமானால் தென் சீனக் கடலில் சீனாவுடன் முறுகல் நிலையில் உள்ள நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்னாம், இந்தோனேசியா போன்ற ஆசியான் கூட்டமைப்பு நாடுகளும் இந்த இணைப்பில் இணைந்து கொள்ளும். மேலும் தென் கொரியா, ஒஸ்ரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் ஒன்றிணைந்தால் சீனா அடக்கப்படலாம். 

ஆபத்து தமிழர்களுக்கே
ஜப்பானும் இந்தியாவும் சிங்களவர்களுடன் நெருங்கிய நட்புறவை பேணும் நாடுகள். 1951-ம் ஆண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மாநாட்டில் அப்போதைய இலங்கை நிதியமைச்சர் ஜே ஆர் ஜயவர்த்தன ஜப்பானுக்கு ஆதரவாகப் பெரும் குரலெழுப்பினார். அப்போது உலக அரங்கில் தனிமைப்படுத்தப் பட்ட ஜப்பானுக்கு இது பெரும் உதவியாக அமைந்தது. அதற்கு நன்றிக் கடனாக ஜப்பான் சிங்களவர்களுக்கு என்றும் சாதகமாக நடந்துகொள்கிறது. இந்தியா பன்னாட்டரங்கில் சிங்களவர்களின் கைக்கூலி போல் செயற்படுகிறது. இந்த இரண்டு நாடுகளும் ஒன்றிணையும் போது தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகிறது. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...