Friday 28 June 2013

இந்திய ரூபாவின் சரிவின் காரணங்களும் நன்மைகளும் தீமைகளூம்

பொதுவாக ஒரு நாட்டின் நாணயம் மதிப்பிழக்கும் போது அந்த நாட்டின் மைய வங்கி  நிதிச் சந்தையில் தமது வெளிநாட்டு நாணயக் கையிருப்பை விற்று தமது சொந்த நாணயத்தை வாங்கி தமது நாணயத்தின் மதிப்பைப் பாதுகாக்கும். இந்திய மைய வங்கியான இந்திய ரிசேர் வங்கியின் கையிருப்பில் இப்படி ஒரு நடவடிக்கையைச் செய்யக் கூடிய அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இல்லை.  இதனால் இந்திய ரூபா கைகொடுப்பாரின்றிச் சரிந்து கொண்டிருக்கின்றது,

இந்திய ரூபாவின் மதிப்பு குறைந்தமைக்கான காரணங்கள்

1. அதிக தங்க இறக்குமதி

கிராமப் புறங்களுக்கு வங்கி வசதிகள் இல்லாமையாலும் சிண்ட் பண்ட்காரர்களால் ஏமாற்றப்பட்டமையாலும் இந்தியக் கிராமப் புற மக்களுக்கு தங்கம் ஒரு சிறந்த முதலீடு. இந்தியப் பொருளாதார வளர்ச்சியால் கிராமப்புறமக்களுக்கு கிடைத்த வருவாயில் சேமித்தவற்றை அவர்கள் தங்கத்தில் முதலிட்டமையால் இந்தியா உலகிலேயே அதிக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கிறது. 2013 மே மாதம் இந்தியா 162 தொன் தங்கத்தை இறக்குமதி செய்தது.

2. வெளிநாட்டு முதலீட்டாளரகள் நம்பிக்கை இழந்தமை.
2ஜி அலைக்கற்றை ஊழல் அம்பலமானதும் அதைத் தொடர்ந்து இந்திய அரசு தனது விற்பனையைத் திரும்பப் பெற்று மீள விற்பனை செய்ததும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. ஒன்றில் முதலீட்டாளர்களிடம் இலஞ்சம் பெறாமல் செயற்பட வேண்டும் அல்லது அவர்களிடம் பெற்ற இலஞ்சத்திற்கு உரிய இலாபம் அவர்கள் பெற வழி செய்ய வேண்டும். இந்திய அரசின் இரண்டும் கெட்டான் நிலை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. 2012இல் வெளிநாட்டு நேரடி முதலீடு 29 விழுக்காட்டால் குறைந்தது. முதலீடுகள் உள்ளே வரும் போது இந்திய ரூபாவின் மதிப்புக் கூடும். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்றுக் கொண்டு வெளியேறும் போது ரூபாவின் மதிப்பு குறையும்.

3. தன்வாயால் கெட்ட இந்திய மத்திய வங்கி
2014-ம் ஆண்டு இந்தியப் பாராளமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வரவிருப்பதால் இந்திய மக்களின் கைகளில் பணத்தை அதிகம் புழங்க விடவேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்திய ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கி இந்திய வட்டி வீதம் குறைக்கப்படலாம் என்ற பொருள் பட அறிக்கை விட்டமை உலக நிதிச் சந்தையில் இந்தியா ரூபாவின் மதிப்பை பாதித்தது,

4. இந்திய முதலாளிகளை வெளிநாடுகளில் கடன பெற அனுமதித்தமை

இந்திய ரிசேர்வ் வங்கி இந்தியப் பெரு முதலாளிகளை 2004இல் இருந்து 220பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப் பெற அனுமதித்தது. இது டாலருக்கான கேள்வியை(கிராக்கியை) அதிகரித்து ரூபாவிற்கான கேள்வியைக் குறைத்து ரூபாவின் மதிப்பைக் குறைத்தது.

5. இறக்குமதி அதிகரிப்பு.
இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 43 விழுக்காடு அதிகரித்துள்ளது. கோதுமை அதிகரித்துள்ளது. மோசமான இறக்குமதி -ஏற்றுமதிப் பற்றாக்குறையுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது.

இந்திய ரூபாவின் மதிப்பிறக்கத்தில் உள்ள நன்மைகள்:


1. ஏற்றுமதி அதிகரிக்கும்
ரூபாவின் மதிப்பிறக்கத்தால் இந்தியப் பொருட்களை வெளிநாட்டவர்கள் மலிவான விலைக்கு வாங்கலாம். இது இந்திய ஏற்றுமதியை அதிகரிக்கும்.
2. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நன்மையடையும்
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப வேலைகளைச் செய்யும் நிறுவங்கள் ரூபாவின் மதிப்பிறக்கத்தால் நன்மையடையும்,
3. உல்லாசப் பயணிகள் வருகை அதிகரிக்கலாம்
வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவிற்குப் பயணம் செய்யும் போது மலிவான ரூபாவால் அவர்களின் செலவீனங்கள் இந்தியாவில் குறைவானதாக இருக்கும்.
4. வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் வரலாம்
இந்திய ரூபா ஆகக் குறைந்த மதிப்பை அடையும் போது இந்தியாவில் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்ய விரும்புபவர். பின்னர் இந்திய ரூபாவின் மதிப்பு அதிகரிக்கும் போது அவர்கள் தமது முதலீட்டை விற்று இலாபமீட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
5. வெளிநாடுகளில் வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்குவார்கள்
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்க விருப்பம் காட்டுவார்கள். இந்திய ரூபா மதிப்பிறக்கமடைந்திருக்கும் போது இந்தியச் சொத்துக்கள் அவர்களுக்கு மலிவானதாக இருக்கும்.
6. ரூபா உரிய மதிப்பை பெறுகிறது.  இந்திய ரூபாவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக அதிக மதிப்பைக் கொண்டிருந்தது. இந்த மதிப்பிறக்கத்தால் ரூபா உரிய மதிப்பை அடையும் என்கின்றனர் சிலர்.
7. மிகப்பெரிய நன்மை ராகுல் காந்தி அடுத்த தலைமை அமைச்சராக வரும் வாய்ப்புக்கள் குறைவு.


இந்திய ரூபாவின் மதிப்பிறக்கத்தில் உள்ள தீமைகள்:

1. எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும். இதனால் பல உற்பத்திப் பொருட்களின் விலைகள், பயணச் செலவுகள் அதிகரிக்கும். இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொதுவாக விலைவாசி அதிகரிக்கலாம்.
2. இறக்குமதித் துறை பாதிப்படையும். இறக்குமதி செய்த பொருட்களை வர்த்தகம் செய்வோர், முலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உற்பத்தி செய்வோர் தமது இலாபத்தை இழக்க வேண்டி வரும்.
3. வெளிநாட்டில் படிப்பை மேற்கொள்வோரும் இனிப் படிக்க விரும்புவோரும் அதிக செலவைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
4. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்களுக்கு இந்திய அரசும் இந்தியப் பெரு முதலாளிகளும் அதிக வட்டியைக் கொடுக்க வேண்டி இருக்கும்.
5. இந்திய விமானப் போக்குவரத்துத் துறை பெரும் சுமையைச் சுமக்க வேண்டி வரும்.

பிந்திக் கிடைந்த செய்திகளின் படி அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபா சற்று மதிப்பேற்றம் பெற்றுள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...