Tuesday 18 June 2013

எரியும் இந்திய அரசியலும் சரியும் ரூபாவும்

அட்சயத் திதிக்கு தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என இந்துக்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்தியாவின் மத்திய வைப்பகமான பொதுஇருப்பு வைப்பகத்தைப் (Reserve Bank) பொறுத்தவரை இது பிழைத்து விட்டது. அட்சய திதிக்கு இந்தியர்கள் நிறைய தங்கத்தை இறக்குமதி செய்தனர். இதைத் தொடர்ந்து இந்திய ரூபாவின் மதிப்பு சரியத் தொடங்கியது. போதாக் குறைக்கு இந்திய மத்திய வங்கி நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கப்படும் என்று ஒரு சைகைப்பட அறிக்கையையும் விட்டது. இதனால் இந்திய ரூபாவின் மதிப்பு மேலும் சரியத் தொடங்கியது. அது மட்டுமா அமெரிக்காவின் வேலை வாய்ப்புத் தொடர்பான புள்ளிவிபரங்கள் அமெரிக்க பொருளாதாரம் சீரடையும் என்பதைச்  சுட்டிக்காட்டியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க நாணயமான டொலரின் மதிப்பு உயர்த் தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய்க்கு அடிக்கு மேல் அடி.

தெய்வம் ஒன்று நினைக்க நிதிச் சந்தை வேறு நினைத்தது

2014இல் அல்லது அதற்கு முன்னர் வரவிருக்கும் இந்திய பாராளமன்றத் தேர்தலுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை சற்று மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய மத்திய வங்கி நாட்டில் நாணயப் புழக்கத்தை அதிகரிக்க எண்ணியிருந்தது. அவர்களின் திட்டத்தில் மண்விழுந்து விட்டது. மாறாக இப்போது பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய வட்டி வீதம் அதிகரிக்கப்படும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சரியும் இந்திய ரூபாவின் மதிப்பை சமாளிக்க இந்திய அரசு எஃகு ஆணையத்தில் (Steel Authority)  தனக்கிருந்து பங்குகளை 15 பில்லியன்களுக்கு விற்றும் பயனளிக்கவில்லை. இந்த விற்பனையால் தனது நிதிக்கையிருப்பை அதிகரிக்கலாம் அது ரூபாவின் மதிப்பை உயர்த்தும் என் இந்திய மைய வங்கியான ரிசேர்வ் வங்கி கணக்கிட்டிருந்தது. ஆனால் அது சரிவரவில்லை. இந்திய ரூபாவின் மதிப்பு சரிந்தவுடன் வெள்நாடுகளில் வாழும் இந்தியர்கள் தம்மிடம் இருந்த பணைக்கையிருப்பை ரூபாக்களாக மாற்றி அதிக ரூபாக்களைப் பெறும் நோக்குடன் தமது பணங்களை இந்தியாவிற்கு அனுப்பினர். இந்திய ரூபா தொடர்ந்தும் சரிவடைந்ததால் அந்த நடவடிக்கைகளும் குறைந்து விட்டன. ஆசிய நாணயங்களில் இந்த ஆண்டு அதிக மதிப்பிறக்கம் அடைந்த நாணயமாக இந்திய ரூபா இருக்கிறது. இந்தியாவின் 650,000 கிராமங்களில் 36,000 கிராமங்கள் மட்டுமே வைப்பகங்கள் உள்ள கிராமங்களாகும். இந்தியாவின் நிதிச்சந்தை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது. கிராம மக்கள் தமது சேமிப்புக்களை தங்கத்தில் முதலிடுகிறார்கள். சிறந்த நிதிச் சந்தை இருந்தால் மட்டுமே சேமிப்பு உற்பத்தித் துறைக்கு திருப்பப்பட்டு பொருளாதாரம் மேம்படும். இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி கடந்த ஆண்டில் 90 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்தியா ஆண்டுக்கு 8.39 பில்லியன் டாலர்களுக்கு தங்கத்தையும் வெள்ளியையும் இறக்குமதி செய்கிறது.

அதிகரிக்கும் விலைகள்
சரியும் ரூபாவின் மதிப்பும் அதிகரிக்கு அமெரிக்க டாலரின் மதிப்பும் இந்திய இறக்குமதிப் பொருள்களின் விலைகளை அதிகரிகச் செய்தன. முக்கியமாக எரிபொருள்களின் விலை அதிகரித்தது. எரிபொருள் விலை அதிகரிக்கும் போது போக்குவரத்துக் கட்டணம், உள்ளூர் பொருள்களுக்கான உற்பத்திச் செலவு, விநியோகச் செலவு போன்றவை உயர்ந்து பொருள்களின் விலைகள் பரவலாக அதிகரிக்கும். இது ஆளும் காங்கிரசுக் கட்சியின் செல்வாக்குக்கு உகந்ததல்ல. ஒரு மாதத்திற்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி உத்தரவு கொடுத்த இந்திய இறக்குமதியாளார்கள் ரூபாவின் மதிப்பிறக்கத்தால் உத்தரவின் படி வந்து இந்திய துறைமுகங்களில் வந்திறங்கிய பொருட்களை வாங்குவதை தவிர்க்கிறார்கள்.

ஊழலால் உழலும் இந்தியப் பொருளாதாரம்.
சீனா உடபட முன்னணி நாடுகள் எல்லாம் வயது முதிர்ந்தவர்கள் தொகை அதிகரிப்பால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தியா மட்டும் மக்கள் தொகையைப் பொறுத்தவரை அதிக அளவிலான இளைஞர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் பொருளாதார அபிவிருத்திக்கு உகந்த அதிக நடுத்தர வர்க்க மக்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் நடுத்தர மக்கள் மக்கள் தொகை ஒஸ்ரேலியாவின் மொத்த மக்கள் தொகையிலும் அதிகமானதாகும். அத்துடன் திறன் மிக்க தொழிலாளர்களையும் இந்தியா கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சாதகமாக இத்தனை இருந்தும் ஊழல் மிக்க அரசும் அரச ஊழியர்களும் இந்தியப் பொருளாதாரத்தை முன்னேறவிடாமல் செய்கின்றனர்.

செல்வாக்கிழந்த தேசியத் தலைமை
இந்தியாவின் சிறந்த தேசியத்  தலைவர் என்று சொல்லும் படியாக ஒருவரும் இப்போது இல்லை. அரசியலில் மாநிலக் கட்சிகள் அதிக செல்வாக்குப் பெற்று வருகின்றன. தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை ஆளும் காங்கிரசுக் கட்சிக்கு அடுத்த தேர்தலில் தோல்வியடையச் செய்யும். பல கட்சிகள் கொண்ட கூட்டணி அரசு அமையும் போது அரசியல் திடநிலை கிடைக்குமா? அல்லது மோடியால் விடியுமா?

பாய நினைக்கும் பசி
இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தேவையான தலைமை ராகுல் காந்தியா நரேந்திர மோடியா என்பது இப்போது இந்தியர்கள் முன் உள்ள கேள்வி. எந்த ஒரு பொறுப்பான பதவியையும் இதுவரை வகிக்காத கற்றுக் குட்டி ராகுல் காந்தி தலைமை அமைச்சர் பதவியை விரும்பவில்லை. அவரை நிர்பந்தித்த போது அவர் தமது கட்சி அறுதிப் பெரும்பானமையுடன் வெற்றி பெற்றால் மட்டுமே தான் தலைமை அமைச்சர் பதவியை ஏற்பேன் என்றார் ராகுல். அறுதிப் பெரும் பான்மை கிடைக்காவிடில் தொடர்ந்து மன்மோகன் சிங் தலைமை அமைச்சர் பதவியில் இருப்பதை நிதிச் சந்தையைத் திருப்திப்படுத்த மாட்டாது. சரித்திர சாதனை படைத்த ஊழல்கள் அவரது ஆட்சியில் நடைபெற்றன. மாற்றீடாக ப. சிதம்பரம் அவர்கள் தலைமை அமைச்சராக பொறுப்பு ஏற்பதற்கு அவர் சிவகங்கைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும். சென்ற தேர்தலில் கருணாநிதி மாநில முதலமைச்சராக இருந்தார்.  வாக்கு எண்ணிக்கையின் போது பின் தங்கி இருந்த ப சிதம்பரம்  பின்னர் திடீரென வெற்றி பெற்றார். அப்படி இந்தத் தடவை நடக்க வாய்ப்பு இல்லை. இதனால் சிதம்பரம் அண்ணாச்சி புதுச்சேர்த் தொகுதிக்கும் பாயும் எண்ணத்துடன் இருக்கிறார். இன்னும் ஒரு சிறந்த நிர்வாகியான பிரணாப் முஹர்ஜி ராகுலை கட்சியில் முன்னுக்குக் கொண்டு வருவதற்காக ஓரம் கட்டப்பட்டு ராஸ்ட்ரபதி பவனுக்கு அனுப்பப்பட்டு விட்டார்.

மோடியுடன் மோதி விளையாடும் அத்வானித் தாத்தா.
குஜராத் மாநிலத்தை இந்தியாவின் முதல்தர மாநிலமாக்கியவர் நரேந்திர மோடி என அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அவர் மூன்று தடவை தொடர்ந்து வெற்றி பெற்று குஜராத் முதலமைச்சராக இருக்கிறார். பிரித்தானியா வாழ் குஜராத்திய மக்களை அவதானிப்பவர்களுக்கு குஜராத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது  இலகுவானது என்று தெரியும். அத்துடன் அண்மைக்காலங்களாக வெளிநாடு வாழும் குஜராத்தியர் அதிகமாக இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் பெரிய அளவு ஊழலற்ற ஒரு ஆட்சியை நரேந்திர மோடி குஜராத்திற்கு வழங்கி இருக்கிறார். ஆனால் பின் தங்கிய மக்களின் கல்வி, பெண்களின் கல்வி போன்றவற்றில் குஜராத் மாநிலம் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியுள்ளது. இந்துத்துவா கொள்கை பின் தங்கிய மக்களையும் பெண்களையும் புறம் தள்ளுகிறதா? மோடி தொடர்ந்து வெற்றி பெற்றதும் மதவாதக் கும்பலான ஆர்.எஸ்.எஸிற்கு மோடியை ரெம்பப் பிடித்து விட்டது. பொட்டுக்காரி சுஸ்மிதா சுவராஜும் மோடியை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார். அத்துடன் கருத்துக் கணிப்புக்கள் மோடி பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அமைச்சர் வேட்பாளாரக்கி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் எனச் சுட்டிக் காட்டியது. இதனால் கோவாவில் கூடிய பாரதிய ஜனதாக் கட்சியினர் மோடியை முன்னிலைப்படுத்தினர். இது பழம் பெரும் தலைவரான எல் கே அத்வானிக்குப் பிடிக்கவில்லை கோவாக் கூட்டத்தைப் புறக்கணித்தார். தனக்கு ஆறுமாதமாவது இந்தியத் தலைமை அமைச்சராக இருக்க வேண்டும் என அடம்  பிடித்தாராம் அத்வானி. மோடியை முன்னிலைப்படுத்தினால் தலித் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை இழக்க வேண்டும் என்பதால் நிதிஸ் குமாரும் சரத் பவாரும் தமது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பா.ஜ.க.  உடனான உறவை முறித்துக் கொண்டனர். இவர்களுக்கு காங்கிரசுக் கட்சி தூண்டில் போடுகிறது. 18/06/2013 செவ்வாய்க் கிழமை அத்வானியைச் சந்தித்து "ஆசி" பெற்றார் மோடி. ஆனால் அத்வானி ஆர்.எஸ்.எஸ் தவிர்ந்த மற்ற மதவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து மோடியின் காலை வாரும் திட்டத்துடன் இருக்கிறாராம். காங்கிரசின் ஊழலால் அதிருப்தி அடைந்த மக்கள் மோடி-அத்வானி மோதல் மீண்டும் காங்கிரசை பதவிக்குக் கொண்டுவருமா என்று தவிக்கின்றனர். மோடி அத்வானி மோதல் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலைமையை ஏற்படுத்தலாம்.

கனவு பெரிது! கனவு காண்போர் பலர்!!

பா.ஜ.க உள் மோதலால் உந்துப்பட பல பிராந்தியக் கட்சிகள் இந்தியாவில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜீ, உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ், பிகார் சரத் யாதவ், பிகார் நிதிஷ்குமார் போன்ற பலர் இந்தியாவின் அடுத்த தலைமை அமைச்சராகும் நப்பாசையுடன் இருக்கிறார்கள். பொதுவுடமைவாதிகள் மூன்றாம் அணி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதில் மம்தா பனர்ஜீயை இணைக்கத் தயாரில்லை.  ஜெயலலிதா மூன்றாம் அணி வெற்றி பெற்று தான் தலைமை அமைச்சராகும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே மூன்றாம் அணியில் இணைவார். மூன்றாம் அணியிலும் பார்க்க அவர் பா.ஜ.கவுடன் தேர்தலின் பின்னர் கூட்டணி அமைக்கவே திட்டமிட்டுள்ளார்.  2014இல் அல்லது அதற்கு முன்னர் நடக்கும் தேர்தலில் பிராந்தியக் கட்சிகள் கணிசமாக வெற்றி பெற்றால் மைய அரசில் ஒரு நிலையற்ற ஆட்சி ஏற்படலாம். அது இந்திய பொருளாதாரத்திற்கோ அல்லது ரூபாவின் மதிப்பிற்கோ உகந்ததல்ல.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...