Saturday 30 May 2015

வெள்ளை மாளிகையில் பர்மிய இனக் கொலையாளி: தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.

இது 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் இட்ட பதிவு:

பர்மிய(மியன்மார்) படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயின் ஐக்கிய அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துள்ளார். பல மனித உரிமை அமைப்புக்களினதும் தெயின் செயினால் பாதிக்கப்பட்டவர்களினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது நடந்துள்ளது. 

பர்மாவா மியன்மாரா?
பர்மாவில் பல முசுலிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் அதிபர் தெயின் செயின் இருந்த செய்தி எமது காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தெயின் செயினைச் சந்தித்துள்ளார். இதுவரை காலமும் படைத்துறை ஆட்சியாளர்கள் பர்மாவிற்கு வைத்த மியன்மார் என்னும் பெயரை வெள்ளை மாளிகை ஏற்க மறுத்திருந்தது. இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றி  மியன்மார் எனச் சொல்லத் தொடங்கிவிட்டது. 

ஒரு சில மாதங்களின் முன்னர் தீண்டத்தகாத ஆட்சியாளர் என "பன்னாட்டுச் சமூகத்தினரால்" கருதப்பட்ட தெயின் செயின் திடீரென நல்லவராகி விட்டது எப்படி? பத்திரிகைகளில் தனக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவரை அறுபது ஆண்டுகள் சிறைத்தண்டன வழங்கியவரை ஒபாமா எப்படி வெள்ளை மாளிகைக்கு அழைத்தார்? பர்மாவில் சில அரசியல் சீர்திருத்தங்கள் செய்தது உண்மைதான் ஆனால் இப்போதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை படைத்துறையினரால் கலைக்க முடியும். 

ராகினிய மாகாணத்தில் இனச் சுத்திகரிப்பு
பர்மாவின் ராகினி மாகாணத்தில் வாழ்ந்த முசுலிம்களை அங்குள்ள பௌத்தர்கள் அரச படையினரின் உதவியுடன் கொன்று குவித்து வீடுகளைக் கொழுத்தித் தரைமட்டமாக்கி பெரும் இனச் சுத்திகரிப்பைச் செய்தனர். பல மனித உரிமை அமைப்புக்கள் இதை ஒரு மானிடத்திற்கு எதிரான ஒரு குற்றமாக கருதுகின்றன. ராகினி மாகாணத்தில் இருக்கும் எரிபொருள் வளமே அங்கு வாழ்ந்த முசுலிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உலை வைத்தது. "பன்னாட்டுச் சமூகம்" சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறது. மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாக இலங்கை அரசு நம்பியது ஞாபகத்திற்கு வருகிறது. புத்த பிக்குக்க்கள் முசுலிம் மக்களுக்கு எதிரான தாக்குதலை முன்னின்று நடாத்துகின்றனர். 2007இல் இலங்கையில் போர் வேண்டாம் என படையினரும் போர் வேண்டும் என பிக்குகளும் கருதுவதாக ஆய்வுகள் தெரிவித்தன. மிதிவண்டியில் சென்ற இசுலாமியப் பெண் ஓர் 11 வயது பிக்குவின் மீது மோதி அவரது கையில் இருந்த பிச்சாபாத்திரத்தை உடைத்ததால் இனக்கலவரம் மூண்டது எனச் சொல்லப்படுகிறது.

கச்சின் மாகாணத்தில் இனக்கொலை
பர்மாவின் கச்சின் மாகாணத்தில் சிறுபான்மைக் கிருத்தவர்கள் பெரும்பானமை பௌத்தர்களின் அடக்கு முறைக்கு எதிராக பிரிவினைப் போரை ஆரம்பித்தனர். பின்னர் போர் நிறுத்தம் செய்து சுயநிர்ணய உரிமை கோரி சமாதானப் பேச்சு வார்த்தையை 1994இல் ஆரம்பித்தனர் (ஈழத் தமிழர்களைப் போலவே). 14 ஆண்டுகள் இழுபட்ட பேச்சு வார்த்தையின் பின்னர் கச்சின் போராளிகளை படைக்கலன்களை ஒப்படைத்து விட்டு பர்மியப் படையினருடன் இணையும் படி வற்புறுத்தினர். பின்னர் பேச்சு வார்த்தை 2011இல் முறிந்து போர் மூண்டது. (ஈழத்தைப் போலவே). போர் முனைக்கு உணவு மற்றும் மருந்துகள்  செல்வதை பர்மியப் படைகள் தடுத்தன. (ஈழத்தைப் போலவே). போர் முனையில் அகப்பட்ட மக்களுக்கு உணவு போடச் செல்வதாகப் பொய் சொல்லிக் கொண்டு பர்மிய விமானங்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசின. ( பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்பதற்கான போர் என இலங்கை அரசு பொய் சொல்லிக் கொண்டு அப்பாவிகளைக் கொன்று குவித்தது போல். )  போர் நடக்கும் போது அமெரிக்காவும் சீனாவும் தமது கரிசனையைத் தெரிவித்தன. ( ஈழத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் செய்தது போல்). நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூயி அம்மையார் தான் இந்த இனக்கொலையில் தலையிடப்போவதில்லை என்றார். (வாக்கு வேட்டை அரசியல்). 2013 ஜனவரியில் கச்சின் மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றது ஐக்கிய நாடுகள் சபை. கடுமையான விமானத் தாக்குதலையிட்டு தாம் கவலையடைந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய அமெரிக்கா பிரச்சனைக்கு படைத்துறத் தீர்வு கிடையாது எனவும் கூறியது. ( ஈழத்திலும் இதையே சொன்னார்கள்). 

இத்தனைக்கும் மத்தியில் ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயினை வெள்ளை மாளிகையில் ஏன் சந்தித்தார்? ஒரு அரசியல் ஆய்வாளர் இப்படிச் சொன்னார்:
  • The reopening of Burma to the Western world is a blow to Chinese influence in Southeast Asia. For much of the past 20 years China was one of the big investors in Burma.
பர்மிய அரசு சீனாவில் இருந்து விலகி மேற்கு நாடுகளின் சார்பாக மாறியதுதான் காரணம். சீனப் பிடியில் இருந்து இலங்கையில் சீன ஆதிக்கம் அகற்றப்படுமானால் நாளை ராஜ்பக்ச சகோதரர்கள் வெள்ளை மாளிகையில் விருந்து உண்பார்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...