Friday, 22 March 2013

ஜெனீவாத் தீர்மானம் தரும் படிப்பினைகளும் பயன்களும்

ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் 22வது கூட்டத் தொடரில் 22/03/2013-ம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் நேரடியாக எந்த நன்மைகளையும் ஈழத் தமிழர்களுக்கு தராவிடினும் தீர்மானத்தை ஒட்டி நடந்த நிகழ்வுகள் நீண்ட கால அடிப்படையின் நன்மை பயக்கும்.

இலக்குத் தவறிய பரப்புரையும் அதன் நன்மையும்
19வது கூட்டத் தொடரிலும் 22வது கூட்டத் தொடரிலும் அமெரிக்க அனுசரணையுடன் இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஒட்டி இலங்கை பற்றி பல பரப்புரை நடவடிக்கைகள் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களும் சனல் - 4 தொலைக்காட்சியும் தமிழர் தரப்பினரும் தீவிரமாக மேற்கொண்டிருந்தனர். மனித உரிமைக் கழகத்திற்கான ஒரு நாட்டின் பிரதிநிதி இந்தப் பரப்புரைகளைப் பார்த்துவிட்டு தனது வாக்களிக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளமாட்டார். அவரது வாக்களிக்கும் தீர்மானம் அவரது நாட்டின் வெளிநாட்டமைச்சில் முடிவு செய்யப்பட்டிருக்கும். இப்படிப் பட்ட பரப்புரைகளைக் கேட்கும் முன்னரே எப்படி வாக்களிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும். இலங்கையுடனான உறவும் தமக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதற்கு இலங்கையின் ஆதரவின் தேவைப்பாடுமே வாக்களிப்பது தொடர்பான தீர்மானத்தை நிர்ணயிக்கும். இதில் நாம் படித்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் இலங்கைக்கு எதிரானதும் எமது சுதந்திரம் தொடர்பான பிரச்சாரம் தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு நாட்டு ஆட்சியாளர்களையும் குறிப்பாக வெளிநாட்டு அமைச்சைச் சேர்ந்தவர்களையும் நோக்கி செய்யப்பட வேண்டும். தற்போது மனித உரிமைக் கழக்த்தின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் இனி வரும் காலத்தில் தனது நாட்டின் வெளிநாட்டமைச்சில் முக்கிய பதவியில் அமரும் வாய்ப்புக்கள் அதிகம். அப்போது அவருக்கு இலங்கை தொடர்பான நல்ல புரிந்துணர்வு இருக்கும்.

தமிழனுக்கு என ஒரு நாடு தேவை
நவநீதம் பிள்ளை என்று ஒரு தமிழர் மனித உரிமைக்கழக்த்தின் ஆணையாளராக இருப்பதால் அவர் தமிழர் விவகாரத்தில் நீதியாக நடந்து கொள்கிறார். அவரது இடத்தில் ஒரு சுஸ்மா வராஜ் என்பவரோ அல்லது ஒரு சரிபாமா ராவோ என்பவரோ  இருந்திருந்தால் அவர் இலங்கை சென்று ராஜபக்சே கொடுக்கும் விருந்தையும் அனுபவித்து விலையுயர்ந்த வைரங்கள் பதித்த கழுத்துச் சங்கிலியை வாங்கிக்கொண்டு இலங்கையில் எல்லாம் நல்லபடியாக இருக்கிறது என்று அறிக்கை கொடுத்திருப்பார். ஆனால் நவநீதம் பிள்ளையை இலங்கைப் பிரதிநிதி மஹிந்த சமரசிங்க கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவளித்த நாடுகளில் அமெரிக்கா உட்படப் பெரும்பாலான நாடுகள் இலங்கையைப் பாராட்டிப் பேசின. ஒரு நாடு கூட சமரசிங்கவின் நவி பிள்ளையைக் கடுமையாக விமர்சித்ததைச் சுட்டிக் காட்டவில்லை. தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்து அப்பிரதிநிதி ஒழுங்கானவராக இருந்தால் அங்கு இலங்கையைக் காரசாரமாக விமர்சித்து நவி பிள்ளையை கடுமையாக விமர்சித்தமைக்கு கண்டனம் தெரிவித்திருப்பார். உலகின் பலநாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் அவர்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசும் மக்களும் மோசமாக நடந்து கொண்டு இனவழிப்புச் செய்தால் நாம் எல்லாம் முடிந்த பின்னர் கண்டன ஊர்வலம் நடத்துவதா? இந்த இனவழிப்பு தமிழ்நாட்டிலும் நடக்கலாம்.

தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு பெரும் வலுவான அமைப்பாக வேண்டும்
மனித உரிமைக் கழகத்திற்கு தீர்மானம் வந்ததை ஒட்டி தமிழ்நாட்டு மாணவர்கள் ஒன்றுபட்டு ஒரு போராட்டம் செய்து கொண்டிருப்பது கோபாலபுரத்தை கலக்கியடித்தது புது டில்லிக்கு தலையிடியானது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்றுபட்டு, முக்கியமாக சாதியத்தை முதலில் ஒழித்துக்கட்டி, ஒரு பெரும் வலுவாகத் திரண்டால் தமிழர்களின் வாழ்வில் பெரு மாற்றம் ஏற்படுத்தலாம். அடம்பன் கொடிப் பழமொழியில் இருந்து நண்டுகளின் கதைவரை தமிழர்கள் நிறையக் கேட்டுவிட்டார்கள். தமிழர்கள் ஒருவரை ஒருவர் தூக்கிவிடும் செயலில் ஈடுபட வேண்டும். அனைத்துத் தமிழர்களும் பொருளாதார ரீதியில் உயர்ந்தவர்களாகவும் வரவேண்டும்.

முக்கிய பதவிகளைத் தேடி தமிழர்கள் போக வேண்டும்
நவி பிள்ளை அவர்கள் மனித உரிமைக்கழக ஆணையாளராக இருப்பதால் சில சந்தர்ப்பங்களில் எமக்கு அநீதி நடக்காமல் தடுக்கிறார். 2009-ம் ஆண்டின் போரின் போது அவர் சில நடவடிக்கைகளை எடுக்கும் படி ஐநாவின் பொதுச் செயலர் பான் கீ மூனை வேண்டிய போது அவரை பான் கீ மூனும் அவரது ஆலோசகர் விஜய் நம்பியாரும் அடக்கி விட்டனர். விஜய் நம்பியாரின் இடத்தில் ஒரு தமிழர் இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அந்த நாட்டு வெளிநாட்டமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, ஐநா போன்ற உலக மன்றங்கள் ஆகியவற்றில் முக்கிய பதவிகளில் அமரவேண்டும்.

தமிழர்கள் படைத்துறை வல்லுநர்களாக வேண்டும்
தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் படைத்துறையில் இணைந்து அதில் வல்லுனர்களாக வேண்டும். இப்போது எல்லா நாடுகளும் இணையவெளிப் போரில் (Cyber warfare) அதிக கவனம் செலுத்துகின்றன. தமிழர்கள் இலகுவாக அமைக்கக் கூடிய படையணி இணையவெளிப்படையணியாகும். அத்துடன் ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்கும் திறனை தமிழர்கள் பெறவேண்டும்.

அந்நிய சக்திகளை விரட்டியடிக்க வேண்டும்
மனித உரிமைக் கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் வந்த போது பாக்கிஸ்த்தான் பத்திரிகை அதற்கு ஆதரவாக ஆசிரியத் தலையங்கம் தீட்டியதுடன் பாக்கிஸ்த்தான் அரசும் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்  என்றது. ஆனால் இந்து பத்திரிகை? 22வது கூட்டத் தொடர் தீர்மானத்திற்கு சுப்பிரமணிய சுவாமி என்ன செய்தார்? எம்முள்ளே இருந்து கொண்டு தங்களையும் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு எமக்கு எதிராக மோசமாகச் செயற்படுபவர்கள் பலருண்டு. அவர்கள் எமக்கு பாதகங்களை இலகுவாகச் செய்யக் கூடிய அளவிற்கு திற்மையும் பலமும் மிக்கவர்களாக இருக்கிறார்கள். எம்மைச் சுரண்டியே அவர்கள் தம் வளங்களைப் பெருக்கிக் கொண்டனர்.  சுப்பிரமணிய சுவாமி, சோ, இந்து ராம் போன்றவர்கள் வெளிப்படையாகவே தமது தமிழின விரோதப் போக்கை துணிந்து காட்டுகிறார்கள். எமது இளிச்ச வாய்தனத்தை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வந்தாரை வாழவைத்தது போதும் ஆளவைத்ததும் போதும்.
சென்ற ஆண்டு நண்பர் ஒருவர் கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் முதல் முறையாகச் சென்றார். கொச்சினினில் இருந்து சென்னைக்கு வந்தவருக்கு ஒரே ஆச்சரியம் கொச்சினில் இல்லாத மக்கள் நெருக்கடி சென்னையில் எல்லாச் சாலைகளிலும் இருந்தது. தனது வண்டி ஓட்டுனரிடம் ஏன் கொச்சினில் இல்லாத மக்கள் நெருக்கடி சென்னையில் இருக்கிறது என்று கேட்டதற்கு அவர் கொடுத்த பதில் "முழு மலையாளிகளும் இங்குதான் வேலைக்கு வந்திருக்கிறார்கள்". அது முழுமையாக உண்மையாக இல்லாவிடினும் அதில் உண்மை உண்டு. ஒருவன் ஏதாவது ஒரு துறையில் திறமையாகச் செயற்பட்டால் அவன் தமிழனல்லாவிடில் அவனை ரசிக்கலாம் ஆனால் அவனைத் தூக்கி தலையில் வைக்கக் கூடாது. அடுத்த தலைவன் நீதான் எனலாம். சுப்பர் ஸ்டார், தல, கப்டன் எல்லாம் தமிழரல்லாதவர்களாக இருப்பது தமிழனிடம் திறமை இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. வந்தாரை வாழ வைத்ததும் போதும் ஆளவைத்ததும் போதும்.

வந்தாரை வாழ வைத்தது தமிழனின் பெருமை
வந்தாரை ஆள வைத்தது தமிழனின் மடைமை
என உணர்ந்ததால் வெடித்ததங்கு மாணவர் எழுச்சி

தாய்மண் என நம்பியிருந்த பாரததேசம்
வாய்மண்ணான பாதகதேசம் மட்டுமே
என் உணர்ந்ததால் வெடித்ததங்கு மாணவர் எழுச்சி

சிங்களத்துக்கு படைக்கலனும் பயிற்ச்சியும் கொடுத்து
பல்லாயிரம் படைகளையும் பின்கதவால் அனுப்பி
எம்படை அழித்து அப்பாவிகள் உயிர்கள் குடித்து
செய்த அழிவை இன்று அறிந்ததனால் வெடித்ததங்கு மாணவர் எழுச்சி

அன்று தமிழர் அவலங்களை ஊடகங்களை அடக்கி
உண்மைகளை மூடி மறைத்து உண்ணாவிரத நாடகமாடி
மழைவிட்டது தூவானம் விடவில்லை எனச் சொன்ன பொய்
இன்றறிந்ததால் வெடித்ததங்கு மாணவர் எழுச்சி

இத்தாலி நச்சரவத்துடன் ஆரிய பேய்கள் கைகோர்த்து
வஞ்சகத் வந்தேறிய நரி எச்சத்திற்கு நாவூறநிற்க
செய்த தூரோகங்கள் இன்று பகிரங்கமானதால்

வெடித்ததங்கு மாணவர் எழுச்சி

ஈழமண்ணில் விழுந்த ஒவ்வொரு குண்டும் இந்தியத் துரோகம்
வீரமண்ணில் சிதறிய ஒவ்வொரு உடலும் இந்தியத் துரோகம்
எம் பெண்கள் உடல் சிதைத்த ஒவ்வொரு கரமும் இந்தியத் துரோகம்

இதை உணர்ந்ததால் வெடித்ததங்கு மாணவர் எழுச்சி

ஐந்தாம் ஈழப்போர் வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
மீண்டும் தமிழ் ஆளும் நாள் வெகு தொலைவில் இல்லை
தமிழிழம் தனி நாடாக உதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
எனப் பறை சாற்றுகிறது மாணவர் எழுச்சி
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...