Tuesday 19 March 2013

கருணாநிதி ஏமாற்றுகிறாரா? ஏமாற்றப்பட்டாரா?

ஜெனிவாவில் நடக்கும் மனித உரிமைக் கழகத்தின் 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாணவர் எழுச்சி இந்திய அரசையே ஆட்டம் காண வைத்துள்ளது.

கருணாநிதி காங்கிரசுடனான கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டார். கருணாநிதியை ஏமாற்ற காங்கிரசு அரசு சில நகர்வுகளை மேற்கொண்டது.

இந்தியா தனது பிரதிநிதியை புதுடில்லிக்கு அழைத்தது.
இந்தியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்திற்கான பிரதிநிதி டிலிப் சிங்ஹா அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தற்போதைய தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த  நிலையில் டிலிப் சிங்ஹாவுடனான கலந்துரையாடல் அவர் ஜெனீவாவில் இருந்த படியே செய்ய முடியும். இருந்தும் அவர் புது டில்லிக்கு அழைக்கப்பட்டமைக்கு இரு காரணங்கள் இருக்கலாம். ஒன்று கலந்துரையாடப்படவிருப்பது மிகவும் இரகசியமாக வைக்க வேண்டிய அளவிற்கு தேசியப் பாதுகாப்பு அல்லது வெளியுறவுக் கொள்கை சம்பந்தமாக முக்கியமானதாக இருக்கலாம். அல்லது தமிழ்நாட்டில் எழுந்துள்ள எழுச்சி தொடர்பாக சோனியா காந்தி இந்திய பாதுகாப்புத் துறைச் செயலர் சிவ் சங்கர் மேனனை அழைத்து ஆலோசனை நடாத்த அவர் காலத்தை இழுத்தடிப்பதற்காக மனித உரிமைக் கழகத்திற்கான பிரதிநிதி டிலிப் சிங்ஹா அவசரமாக புதுடில்லிக்கு அழைத்து ஆலோசனை நடாத்த வேண்டும் என்று சொல்லியிருக்கலாம்.

இலங்கை இந்தியப் பாதுகாப்புப் பேச்சு வார்த்தை ஒத்தி வைப்பு
2013 மார்ச் 23-ம் திகதி நடைபெறவிருந்த இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்புச் செயலர் மட்டத்திலான பேச்சு வார்த்தை அடுத்த தேதி குறிக்கப்படாமலே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் கோத்தபாய ராஜபக்ச புதுடில்லிக்குப் போனால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.அமெரிக்காவின் தீர்மான வரைபை நாம் இன்னும் பார்க்கவில்லை டிலிப் சிங்ஹா அதைக் கொண்டு வருவார் அதைப்பார்தபின்னர் முடிவு எடுப்போம் என இந்தியா சொல்வது முழுப்பொய். தீர்மான வரைபை ஒரு மின்னஞ்சலிலோ அல்லது ஒரு தொலைநகலிலோ சில மணித்துளிகளில் பெற்றுக் கொள்ளலாம். தீர்மான வரைபு ஒன்றும் இரகசியப் பத்திரம் அல்ல. ஏற்கனவே ஜெனிவாவில் அமெரிக்கா கூட்டிய் கூட்டத்தில் இந்தியப்  பிரதிநிதி வாய் திறக்கவே இல்லை. காலாந்தர மீளாய்வுக் கூட்டத்தில் அவர் இலங்கையைப் பாரட்டிப் பேசினார்.

கருணாநிதியைச் சந்தித்த சோனியாவின் தூதர்கள் மூவர்
கலைஞர் கருணாநிதி தான் 2014இல் நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் எல்லத் தொகுதிகளிலும் தோல்வியைத் தவிர்க்க அவர் ஏதாவது  காத்திரமான நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும் அல்லது ஒரு முழு ஏமாற்று நாடகம் ஒன்றை அரங்கேற்ற வேண்டும். ஈழத் தமிழர்கள் சம்பந்தமாக ஏதாவது செய்து தனது அரசியல் இருப்பை இப்போது தக்க வைத்துக் கொள்ளாவிடில் தனது அரசியல் செல்வாக்கின் முழுமையான சரிவு 2014இல் ஆரம்பமாகும் என கருணாநிதி நன்கறிவர்.  இதனால் அவர் சோனியா அரசுடன் முரண்டு பிடிக்கிறார். கருணாநிதி கூட்டணி ஈழத் தமிழர்கள் தொடர்பாக தானது கோரிக்கைகளை நடுவண் அரசு நிறைவேற்றாவிடில் அரசில் இருந்து வெள்யேறுவேன் என்று அறிவித்தவுடன் பல விமர்சனங்கள் எழுந்தன. கருணாநிதி அடுத்த பல்டிக்குத் தயாராகிறார்; இப்போது இப்படிச் சொல்பவர் பின்னர் மதசார்புடைய பாரதிய ஜனதாக கட்சி ஆட்சிக்கு வராமல் இருக்க தான் அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சொல்லலாம் போன்ற கிண்டல்கள் வெளிவரத் தொடங்கி விட்டன. கருணாநிதி தனது கட்சியினரை அமைச்சர் பதவியைத் துறக்கச் சொல்லிவிட்டு ஆட்சி கவிழாமல் இருக்க தொடர்ந்தும் தான் ஆதரவு வழங்குவேன் எனச் சொல்லலாம். இந்த விமர்சனங்களை முறியடித்து கருணாநிதி அரசில் இருந்து வெளியேறினார். கருணாநிதியைச் சந்திக்க சோனியா காந்தி ப. சிதம்பரம், ஏ கே அந்தோனி, குலாம் நபி அசாத் ஆகியோரை அனுப்பினார். இவர்கள் கருணாநிதியை அவரது இரண்டாவது மனைவியின் இல்லமான சிஐடி காலனியில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்தினர்.பேச்சுவார்த்தை முறிந்து விட்டது என NDTV செய்தி வெளியிட்டது: Congress ministers fail to broker peace with DMK over Sri Lanka.  ஆனால் இந்து பத்திரிகை UPA buys time from DMK - ஐக்கிய மக்கள் கூட்டணி என்னும் சோனியாவின் கூட்டணி கருநாநிதியிடம் நேரம் வாங்கியுள்ளது எனச் செய்தியை வெளிவிட்டது. இலங்கை அரசும் ஜெனிவாவில் இந்தியா மூலமாக நேரம் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. சோனியாவும் கருணாநிதியிடம் நேரம் வாங்குகிறாராம். ஆனால் நடுவண் அரசில் இருந்து கருணாநிதி வெளியேறியது இந்துப் பத்திரிகையின் செய்தியைப் பொய்யாக்கியது. 

ஆளும் காங்கிரசுக் கூட்டணியின் பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை 246இல் இருந்து 228ஆகக் குறைந்துள்ளது. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜவாதக் கட்சி உட்படப் பல சிறு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதால் ஆளும் கட்சிக்கு 286 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகிறது. 540 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் 271 உறுப்பினர்கள் தேவை. ஆனால் முலாயம் சிங் யாதம் காங்கிரசு அமைச்சர் ஒருவருடன் கடுமையாக மோதிக்கொண்டார். உருக்குத் துறை அமைச்சர் பேனி பிரசாத் முலாயம் சிங் யாதவை பயங்கரவாதி என விமர்சித்தார். முலாயம் சிங்கின் கட்சிக்கு 22 உறுப்பினர்களும் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 உறுப்பினர்களும் இருக்கின்றனர். இவற்றையெல்லாம் கணக்கிட்டு சோனியாவின் தூதுவர்கள் மூவரும் கருணாநிதியும் ஒன்றுபட்டுத்தான் விலகும் தீர்மானம் எடுத்திருக்கலாம். கருணாநிதி விலகியதற்காக இதுவரை எந்த ஒரு காங்கிரசுக்காரனும் கருணாநிதியைக் கடுமையாக விமர்சிக்கவில்லை.


இலங்கையில் இனக்கொலை நடந்தது என்ற வாசகமும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சுதந்திரமான பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என்ற வாசகமும் இலங்கை தொடர்பான அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தில் இடம்பெற வேண்டும் எனக் கருணாநிதி கேட்பதை இந்தியாவால் ஒரு போதும் நிறைவேற்ற முடியாது. இதை நிறைவேற்றினால் அது இந்தியாவின் காங்கிரசு ஆட்சியாளர்களுக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் பெரும் ஆபத்தாக முடியும். கருணாநிதிக்கும் இது நன்கு தெரியும். தெரிந்தும் அக்கோரிக்கைகளை முன்வைத்து கருணாநிதி கூட்டணியை முறித்ததற்கான காரணம் அவர் தேர்தல் தொகுதிகளின் நாடிகளைப் பிடித்துப் பார்ப்பத்தில் அனுபவ ரீதியான திறமைசாலிகளில் உலகத் தரம வாய்ந்தவர். காங்கிரசுடன் கூட்டணியாக அடுத்த பாராளமன்றத் தேர்ந்தலில் போட்டியிட்டால் எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைய நேரிடும் என்பதை கருணாநிதி உணர்ந்து விட்டார். இனி அவர் தன்னை காங்கிரசு ஆட்சி ஏமாற்றிவிட்டதாக பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறார். தீவிர ஈழத் தமிழர்களின் விடுதலை ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொள்ளப் போகிறார்.

ஜெனிவாவில் இருந்து பிரித்தானியத் தமிழ்த் தொலைக்காட்சியான தீபத்திற்கு சீமான் அளித்த பேட்டியில் கருணாநிதி ஏமாற்றுகிறார் என்றார். ஜீ கே வாசன் தலைமையில் சில காங்கிரசுக் கட்சியினர் கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் தமிழ்நாடு மாநில காங்கிரசை உருவாக்கி அது திமுகாவுடனும் விஜயகாந்துடனும் இணைந்து அடுத்த பாராளமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்றார் சீமான். கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கான நன்மையைக் கருத்தில் கொள்பவராக இருந்தால் அவர் 2007-ம் ஆண்டே காங்கிரசுடனான உறவை முறித்திருக்க வேண்டும் என்றார் சீமான்.


கருணாநிதி தமிழர்களை ஏமாற்றவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவரிடமே இருக்கிறது. ஏனெனில் அவர் பலதடவை தமிழர்களை ஏமாற்றி விட்டார். இனி காங்கிரசுக் கட்சியுடன் கூட்டணி இல்லை என அவர் அறிவிப்பாரா? இனி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படும்  கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்பேன் என அறிவிப்பாரா? ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு ஒன்றே தீர்வாகும் என அறிவிப்பாரா?

காங்கிரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும்
காங்கிரசுக் கட்சி ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு எதிராகச் செயற்பட்டதும் அதை மோசமாக நசுக்கியதும் இனி தமிழ்நாட்டில் எந்த ஒரு விடுதலைக் கோரிக்கையும் எழக்கூடாது என மறைமுக எச்சரிக்கை விடுக்கவே. இப்போது உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இனி எந்த ஒரு இந்திய ஆட்சியாளர்களும் தமிழர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைத்தால் அது பேராபத்தில் முடியும் என்னும் வகையில் பல முனைகளில் தமிழின விரோதிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும். இதே பாடத்தை திமுகாவிற்கும் புகட்ட வேண்டும்.

இலங்கை இனக் கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது:
வெறும் காங்கிரசு திமுக கூட்டணிப் பிரச்சனையல்ல
வெறும் இலங்கை இந்திய உறவுப் பிரச்சனையல்ல
வெறும் இலங்கையில் அதிகரிக்கும் சினாவின் ஆதிக்கப் பிரச்சனையல்ல
வெறும் அமெரிக்காவின் பிராந்திய அரசியல் பிரச்சனையல்ல
வெறும் ஈழ விடுதலைப் பிரச்சனை மட்டுமல்ல

இது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு மனிதாபிமானம் மிக்கவர்களினதும் கடமையாகும். இனி எந்த ஒரு நாட்டிலும் உள்நாட்டுப் போரில் மக்களை உணவின்றி, நீரின்றி, மருத்து வசதிகளின்றி வதைத்து உயிரடன் புதைத்து இனக்கொலை புரிய எவரும் முயலாமல் தடுக்க வேண்டிய எல்லோரினதும் கடமையாகும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...