Monday 11 March 2013

லயோலாக் கல்லூரி உண்ணா விரதமும் அடுத்த இந்தியப் பிரதமர்களும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கைப் படையினரின் முகாம்களைத் தாக்கி அழிப்பதற்கு அவர்கள் தூங்கி வழியும் பின்னிரவு நேரத்தைத் தேர்ந்தெடுப்பர். தமிழகக் காவற்துறையினரும் தமிழீழப் பிரச்சனையை அடிப்படையாக வைத்து இறக்கும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டம நடத்திய எட்டு மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களையும் அள்ளிச் சென்றுவிட்டது.

இயக்குனர் கௌதமன், இயக்குனர் களஞ்சியம், ம.தி.மு.க. மல்லை சத்யா , வேளச்சேரி மணிமாறன் திருமலை(சி.பி.ஐ), கென்னடி, மே 17 இயக்கம் திருமுருகன், தோழர்.கயல்விழி ,தோழர்.இராஜா ஸ்டாலின், செந்தில், அருண்செளரி,திருமலை கைதுசெய்யப்பட்டு அரும்பாக்கம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிந்திக் கிடைத்த செய்தி:
  • இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து விடுவித்தது காவல்துறை. 
  • நீங்கள் காவற்துறையினரால் மிரட்டப்பட்டீர்களா என்ற ஊடகர்களின் கேள்விக்கு உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டார்கள்.
அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் அரச பயங்கரவாதம்:
1) பாடசாலை நிர்வாகம் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் ஆதரவாக செயற்படுகிறது.
2) கல்லூரி முதல்வர் ஒவ்வொரு மாணவனின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு பிள்ளைகளை கல்லூரியில் இருந்து நீக்கப்போவதாக மிரட்டி உள்ளனர்.
3) எங்களை மட்டுமல்ல எண்களின் சகோதர, சகோதரிகளையும் நீக்க போவதாக தொடர்ச்சியாக மிரட்டுகிறார்கள்.
4) காங்கிரஸ் ஆதரவு பாடசாலை முதல்வரோடு திமுகவின் தீவிர ஆதரவு ஆசிரியர்களும் மிரட்டல் விடுக்கிறார்கள்.
5) போராட்டத்தை நிறுத்தாவிடில் கல்லூரியில் ஒருகாலமும் படிக்க முடியாது என்று மிரட்டுகிறார்கள்.
6) எது நடந்தாலும் அஞ்சோம், எம் கொள்கையில் இருந்து ஒரு படி கூட இறங்கி வருவதில்லை என்ற முடிவில் நாங்கள் இருக்கிறோம்.
7) இது எந்த அரசியல் சார்பற்ற மாணவர் போராட்டம்.
8)புலம்பெயர் தமிழர்களையும் அந்தந்த நாடுகளில் போராட சொல்லுங்கள்.
9) நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கமைப்பு குழு, பிற புலம்பெயர் அமைப்புகள் உடனடியாக புலம்பெயர் மக்களை திரட்டி அந்தந்த நாடுகளில் போராட்டத்தில் குதிக்க சொல்லுங்கள்.
10) மலேசிய தமிழர்களையும் இணைய சொல்லுங்கள்.
11) திமுக , காங்கிரஸ் தமிழர் எதிர்ப்பு அராஜகங்களை எல்லா செய்தி தளங்கள் மூலம் வெளிப்படுத்துங்கள்.
12) தமிழக மக்கள் அனைவரையும் எம்மோடு இணைய சொல்லுங்கள்.
குறைந்த அளவு எதிர்ப்பு உள்ள நேரமானதால் அடுத்த தலைமை அமைச்சர் கனவுடன் இருக்கும் செல்வி ஜெயலலிதா பின்னிரவு நேரத்தைத் தெரிந்தெடுத்தார். பெரிய எதிர்ப்பும் காவற்துறையின் கடுமையான தாக்குதலும் ஜெயலலிதாவின் அடுத்த தலைமை அமைச்சர் கனவைப் பெரிதும் பாதித்திருக்கும். 

முன்னதாக இலயோலாக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு "ஆதரவு தெரிவிக்க" வந்த காங்கிரசுக் கட்சிப் பிரமுகர் தங்கபாலு விரட்டியடிக்கப்பட்டார். 

லயோலாக கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஈழப் போராட்டத்தின் உண்மைத் தன்மையும் அங்கு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளையும் தமிழ்நாட்டு மக்கள் பரவலாக உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதை உணர்த்துகிறது. அத்துடன் போராட்டம் தமிழகத்தில் பரவவும் தொடங்கிவிட்டது என்பதை: லயோலா கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக:
*மதுரை, பெரம்பலூரில் கல்லூரி மாணவர்கள்
*காரைக்குடி அழகப்பாகல்லூரி,ஆனந்தா கல்லூரி மாணவர்கள்
*திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள்
*திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் 10 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர்.
*சுமார் 2000 லயோலா கல்லூரி மாணவர்கள் லயோலா கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தை விரைவில் ஆரம்பிக்கிறார்கள்
*அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்

 ஆகியோரும் போராட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.

2014 தேர்தலை மையப் படுத்தி எல்லாம் நடக்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் தீவிரமடைவதற்கு 2014 நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தல் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் ஈழத் தமிழர்கள் பிரச்சனை முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. 2009இல் கருணாநிதியின் அரசு மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்காமல் கடுமையாகவும் நரித்தனத்துடனும் தடுத்தது. தற்போது ஆட்சியில் இருக்கும் செல்வி ஜெயலலிதா தானும் அப்படிச் செய்தால் 2014இல் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் தான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது என்பதை அறிவார். ஆனால் தமிழ்நாட்டில் இப்படிப் போராட்டங்கள் பரவலாக வெடித்தால் அதைச் சாக்காக வைத்து செல்வி ஜெயலலிதாவின் அரசை மைய இந்திய அரசு கலைத்து விடலாம். அது அவரின் 40 தொகுதிக் கனவைச் சிதைக்கும். இந்திய மைய அரசு தனது காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை 2014 தேர்தலுக்கு முன்னர் கலைத்து விட்டால் அந்த மாநிலங்களில் தமது வெற்றி வாய்ப்பை "ஊக்குவிக்கலாம்" என்று கருதுகிறது. அதில் முக்கியமான மாநிலங்கள் உத்தரப் பிரதேசமும் தமிழ்நாடுமாகும். குஜராத்தில் ஆட்சியைக் கலைத்தால் அது காங்கிரசுக்கு மேலும் மோசமான விளைவுகளைக் கொடுக்கும். ஜெயலலிதாவிற்கு தான் 2014 தேர்தலில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மையத்தில் அமையவிருக்கும் கூட்டணி அரசில் தான் தலைமை அமைச்சராகலாம் என்ற கனவில் இருக்கிறார். அதற்கு அவருக்கு தமிழுணர்வாளர்களின் ஆதரவு மிக முக்கியம். இதனால் அவர் உண்ணாவிரதப் போராட்டங்களை அடக்கக் கூடாது. ஆனால் போராட்டம் தீவிர மடைந்தால் அதை சாட்டாக வைத்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என்று ஜெயாவின் அரசை கலைத்தால் வாக்காளர்களை மகிழ்ச்சிப் படுத்தும் நோட்டு விநியோகங்கள் பாதிக்கப்படலாம். ஈழ ஆதரவுப் போராட்டத்திற்கும் அவரது தலைமை அமைச்சர் கனவிற்கும் பெரும் இழுபறி.


சும்மா விடுவாரா உண்ணாவிரத நாடகக் கலைஞர்
தனது அடுத்த தேர்தல் வெற்றிக்கு என்ன நாடகமாவது போட வேண்டும் என்று இருக்கும் கலைஞர் கருணாநிதி சும்மா விடவில்லை.  "உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் எங்களின் டெசொவை ஆதரித்துதான் உண்ணாவிரதம் இருக்கின்றனர்" என்று போட்டாரே ஒரு போடு. அத்துடன் உண்ணா விரதம் இருக்கும் இடத்திற்கு தனது கழகக் கண்மணிகளையும் அனுப்பி வைத்தார். ஆனால் அவர்களை உண்ணாவிரதம் செய்பவர்களுக்கு ஆதரவாக இருந்த இளைஞர்கள் விரட்டி விட்டனர்.

சிதம்பர இரகசியம்
நிதியமைச்சர் ப. சிதம்பரம் 2009 மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு கருணாநிதி ஆட்சியில் இருந்தது எப்படி உதவியது என்பது சிதம்பர இரகசியமல்ல. இம்முறையும் அப்படி வெல்வதற்கு ஜெயலலிதா ஆட்சியில் இருப்பது தடயாக இருக்கிறது. அவரது ஆட்சியைக் கலைத்தால் ப. சிதம்பரம் வெற்றி பெறும் வாய்ப்புக்களை அதிகரிக்கலாம். ப. சிதமபரத்திற்குத் தெரியும் அவரது காங்கிரசுக் கட்சியை தமிழ்நாட்டில் எல்லாத் தொகுதிகளிலும் தோற்கடிக்கும் உறுதியுடன் தமிழின உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்று. சென்ற முறை "வென்றது" போல்தான் அவர் இந்த முறையும் வெல்ல வேண்டும். ராகுல் காந்தி தான் தலைமை அமைச்சர் ஆக மாட்டேன் என்று அடம் பிடித்தால் தான் தலைமை அமைச்சராகலாம என்ற கனவுடன் ப. சிதம்பரம் இருக்கிறார். ராகுல் காந்திக்கு திமுக்வை பிடிக்காது. அவரும் கருணாநிதியும் இதுவரை சந்தித்து  பேச்சு வார்த்தை நடத்தியதே இல்லை. அடுத்த தலைமை அமைச்சராக வேட்டி கட்டியவரே வரவேண்டும் என கருணாநிதி விரும்புகிறார். அதனால் விஸ்வரூபம் எடுத்தவருக்கு ஏற்கனவே பல கோடி இழப்பு. டெசோ அமைப்பினர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை குலைக்கக்கூடிய போராட்டத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டு ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்க வழி தேடலாம். டெசோவின் வேலை நிறுத்தமும் இதன் ஒரு அம்சமாக இருக்கலாம். டெசோவின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தமிழ்நாடு வருவாரா?
கடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு பலத்த பாதுகாப்புக்களுடன் சோனியா காந்தி சென்னையில் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். கருணாநிதி ஆட்சியில் இருந்த படியால் சாவுவீட்டில் புரியாணி சாப்பிட வர விடமாட்டோம் என்று சீறிய "தமிழ்ச்சிங்கங்களின்" பணிமனைகள் தாக்கப்பட்டு அடக்கப்பட்டனர். இப்போது இலங்கை இன அழிப்பில் இந்தியாவின் பங்களிப்பை தமிழ்நாட்டுத் தமிழர்கள் பரவலாக அறிந்த பின்னர் ராகுல் காந்தி 2014 நடக்க விருக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவாரா?

தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக ஈழத்தில் மாணவர்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதிக் கூறப்பட்டவை:

எமக்காய் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் தாய்த்தமிழகத்து மாணவத்தோழர்களுக்கு...

இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது. ஜந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது...
நேர்த்தியாக முறைப்படுத்தப்பட்ட இனஅழிப்பு (structural genocide)வல்லரசுகளின் வழிகாட்டலில் முழு வீச்சில் நடைபெறுகிறது.
எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம்..

திருமணத்துக்கு கூட இராணுவத்துக்கு முதல்மரியாதை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..
எமக்கு இங்கு சாப்பிட மாத்திரமே வாய்திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது..

‘’நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு’’ என்பது போல் சர்வதேசமும் சிங்கள அரசுடன் மறைமுகமாக கைகோர்க்கிறது..
இங்கு தினம் தினம் இசைப்பிரியாக்களும் பாலச்சந்திரன்களும் புதைக்கப்படுகிறார்கள்..

இந்நிலையில் எம்மக்களுக்கு நீதி சொல்ல தமிழகத்தை விட்டால் யாருமில்லை..

போராட இடம் கூட மறுக்கப்பட்ட நிலையில் எமக்காய் போராடும் எம் இரத்தத் உறவுகளே...
லோயலா கல்லூரியில் எழுந்துள்ள இத்தீப்பொறியை தமிழக கல்லுரிகள் அனைத்துனுள்ளும் பரப்புங்கள்
அன்று மாவீரர் முத்துக்குமாரன் எழுப்பிய தீயை அரசியல் அணைத்தது போல் இன்று உங்களுடைய போராட்டத்தை அணையை விடாதீர்கள்.. சமரசங்கள் பல வடிவில் வரும் சோர்ந்து போய் விடாதீர்கள்,ஏமாந்து போய் விடாதீர்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...