Tuesday 19 February 2013

என்ன இந்த அமெரிக்காவின் செயன் முறைத் தீர்மானம் (procedural resolution)?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் 22வது கூட்டத் தொடர் 25/02/2013இலிருந்து 22/03/2013 வரை நடை பெறவிருக்கிறது. இதிலும் ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வரவிருப்பதாகச் சொல்கிறது. ஏற்கனவே கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதுவும் நடக்கவில்லை.

அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரப்போகிறதென்றவுடன் பல ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதத் தொடங்கிவிட்டன.
  •  "அச்சத்தில் இலங்கை"
  • "கலக்கத்தில் மஹிந்தா"
  • "மஹிந்தவின் கழுத்துக்கு வீசப்படும் பாசக் கயிறு" 
  • அமெரிக்கத் தீர்மானத்தால் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தல்.
என்றேல்லாம் எழுதப்படுகின்றன. என்ன தீர்மானம் வரப்போகிறது என்று அறியுமுன்னரே இவர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

2009-ம் ஆண்டு போர் முடிந்தவுடன் இதே மனித உரிமைக் கழக்த்தில் போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததால் இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த போது அமெரிக்கா நடுநிலை வகுத்தது. இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் சீனாவுடன் இணைந்து அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. அப்போது போருக்குப் பின்னரான அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கையைப் பொருளாதார ரீதியில் சுரண்ட அமெரிக்கா தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் எனக் காத்திருந்தது. ஆனால் போருக்குப் பின்னர் இலங்கையில் சீனாவே அதிக முதலீடுகளைச் செய்தது. அரச பணிகள் பல ஒப்பந்தக் கோரிக்கைக்ள்(tender) இல்லாமல் சீனாவிற்கு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அமெரிக்கா இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இதுபற்றிய முன்னைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்: அவிற்பாகம்

சென்ற முறை இலங்கைக்கு கால அவகாசத்துடன் கூடிய சில வேண்டு கோள்களை விடுவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட இருந்தது அதில் இருந்து கால அவகாசத்தை இந்தியா அமெரிக்காவிடம் வலியுறுத்திக் கேட்டு நீக்கிவிட்டது. இம்முறை வரவிருக்கும் தீர்மானத்தின் சாரல் இந்தியப்பத்திரிகை ஒன்றில் வெளிவிடப்பட்டுள்ளது, அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானம் இந்தியாவின் கலந்தாலோசித்த பின்னரே கொண்டு வரப்படவிருக்கிறது என்று தெரிகிறது. இம்முறையும் தீர்மானம் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் சுற்றியே இருக்கிறது. அத்துடன் வழமையான மனித உரிமை மீறல்கள், காணாமல் போவோர், ஐநா அதிகாரிகளை தடையின்றி இலங்கை சென்று நிலமைகளை ஆராய அனுமதித்தல் போன்றவையே இருக்கின்றன.

இம்முறை ஒரு செயன் முறைத் தீர்மானம் (procedural resolution) கொண்டுவரப் போவதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. என்ன இந்த செயன் முறைத் தீர்மானம் (procedural resolution)? ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தவரை இருவகைத் தீர்மானங்கள் உள்ளன. அவை தன்னிலையான தீர்மானம் (Substantive resolution) என்றும் செயன் முறைத் தீர்மானம் (procedural resolution) எனப்படும். இதற்கான விளக்கம்:
  • Substantive resolutions apply to essential legal principles and rules of right, analogous to substantive law, in contrast to procedural resolutions, which deal with the methods and means by which substantive items are made and administered.
 தன்னிலையான தீர்மானங்கள் என்பன எழுதப்பட்ட சட்டங்கள் போல் முக்கிய சட்ட தத்துவங்களுக்கும் உரிமை விதிகளுக்கும் பிரயோகிக்கப்படும் மாறாக செயன் முறைத் தீர்மானங்கள் தன்னிலையான தீர்மானங்களை நிர்வகிப்பதற்கான முறைகளையும் வகைகளையும் கொண்டது.

ஐக்கிய அமெரிக்கா கொண்டுவரும் செயன் முறைத் தீர்மானம் (procedural resolution) என்பது ஏற்கனவே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எப்படி நிர்வகிப்பது என்பது தொடர்பாகவே இருக்கும். புதிதாக ஏதும் செயன் முறைத் தீர்மானம் (procedural resolution)என்பதில் இருக்க முடியாது.

2012 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துமாறு இலங்கை அரசைக் கோரும் அதே வேளை பொருத்தமான சட்டரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து இலங்கையருக்கும் நீதி,சமத்துவம்,என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் வேண்டும்.

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேசச் சட்டம் மீறப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நடவடிக்ககைகளை துரிதமாக மேற்கொள்வதோடு ஒட்டுமொத்தமான நடவடிக்கைத் திட்டத்தை இலங்கை அரசு சமர்ப்பிக்க வேண்டும்.


3. மேற்படி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாராய்ந்தும் இணக்கப்பாட்டின் அடிப்படையிலும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தையும் தொடர்புபட்ட விசேட நடைமுறை ஆணையைக்கொண்ட தரப்பினரையும் ஊக்குவிப்பதுடன் மனித உரிமைகள் பேரவையின் 22வது அமர்விற்கு மேற்படி ஏற்பாடுகளைப் பற்றிய ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை வேண்டுகின்றோம்.



இலங்கைக்காக நேரம் திருடும் அயோக்கிய இந்தியா
இதற்கு இப்போது இலங்கை அரசு சொல்லும் பதில் Lessons Learnt and Reconciliation Commission இன் பல பரிந்துரைகளை நாம் நிறைவேற்றி விட்டோம். எஞ்சியவற்றிற்கு எமக்குக் கால அவகாசம் தேவை என்பதே. சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கால அவகாசம் எதுவும் கொடுக்காமல் அயோக்கிய நாடாகிய இந்தியா பார்த்துக் கொண்டது. இலங்கை இப்பொதும் காலம் கடத்தும் தந்திரத்தை இந்தியாவும் இலங்கையும் இணைந்து கையாளுமா?

நவி பிள்ளை
2012இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முக்கியமான ஒரு அம்சம் ஐநா மனித உரிமைக்கழக ஆணையாளர் தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகள் பற்றி 22வது கூட்டத் தொடரில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதாகும். மனித உரிமைக் கழக ஆணையாளர் நவநீதம் பிள்ளை சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கைக்கு இலங்கை 39 திருத்தங்களை முன்வைத்துள்ளது. நவி பிள்ளையின் அறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்: http://www.ohchr.org/Documents/HRBodies/HRCouncil/RegularSession/Session22/A-HRC-22-38_en.pdf . இனி வரும் நாட்களில் இலங்கையில் நவி பிள்ளைக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து வரும். அவர் ஒரு புலி ஆதாரவாளராகச் சித்தரிக்கப்படுவார்.

பொத்திக்கிட்டு இருக்கும் தந்திரம்
சென்ற முறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்த இலங்கையை இந்த முறை எதிர்க்காமல் அமைதியாக இருக்கும் படி இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. இந்த நல்ல பிள்ளைத்  தந்திரம் பல பாதகமான வாசகங்கள் வராமல் இருக்க உதவும் என இந்தியா எதிர்பார்க்கிறது.  அத்துடன் மனித உரிமைக் கழக ஆணையாளர் நவநீதம் பிள்ளை சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையின் பாதகமான விளைவுகளையும் சமாளிக்க உதவும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியாவின் இணக்கப்பாடு
இந்த முறை அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்க்காமல் இருக்கும் படி இந்தியா இலங்கையை இரக்சியமாக வேண்டியுள்ளபடியால வாக்கெடுப்புக்கு விடாமலேயே அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். அதற்கேற்ப அமெரிக்காவும் தீர்மானத்தின் கடுமையை மீண்டும் இந்தியாவின் நிர்பந்தத்திற்கு ஏற்ப குறைக்கும். இலங்கை அண்மையில் இந்தியாவிற்கு அம்பாந்தோட்டையில் ஒரு சீனித் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. எல்லாமே தட்சணைக்காகத்தான்!!!!

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.........


நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...