Tuesday 5 February 2013

பக்கிஸ்த்தானில் இந்தியாவிற்கு சீனா வைக்கும் ஆப்பு

அரபுக் கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சீன நிறுவனமான China Overseas Port Holdings இடம் கையளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முத்துமாலைத் திட்டத்தில் ஒன்றான குவாடர் துறைமுகத்தை கடந்த ஐந்து ஆண்டுகள் Port of Singapore Authority என்ற நிறுவனம் நிர்வகித்து வந்தது.

முத்துமாலை என்னும் சுருக்குக் கயிறு
இலங்கையில் அம்பாந்தோட்டை, பாக்கிஸ்த்தானில் குவாடர், மியன்மார் எனப்படும் பர்மாவில் சிட்வே, பங்களாதேசத்தில் சிட்கொங் ஆகிய நான்கு இடங்களிலும் சீனா அமைத்துள்ள துறை முகங்கள் இந்தியாவிற்கு எதிராக சீனா முத்துமாலைத் திட்டம் என்னும் பெயரில் போடப்படும் சுருக்குக் கயிறாகும். இந்தியாவின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகரான மும்பாயில் இருந்து 87 கடல் மைல்கள் தொலைவில் குவாடர் துறைமுகம் இருக்கிறது.  குவாடர் துறைமுகமும் தென் இலங்கையில் இருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போல் ஓர் ஆழ்கடல் துறைமுகமாகும். குவாடர் துறை முகத்தை நிர்மாணிப்பதற்கான செலவான $248மில்லியன்களில் 75% சீனாவால் செலவளிக்கப்பட்டது.

இந்து மாக்கடல் இந்தியாவின் கடல் அல்ல
குவாடர் துறைமுகத்தை சீன நிறுவனம் பொறுப்பேற்ற செய்தி வந்தவுடன் CCS எனப்படும் இந்தியாவின் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Security) அவசரமாகக் கூட்டப்பட்டது.  இது இந்தியாவிற்கு குவாடர் துறைமுகத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்தின் தன்மையைக் காட்டுகிறது. குவாடர் துறைமுகத்தில் இருந்து சீனாவால் இந்தியாவின் மேற்குக் கரையில் நடமாடும் கப்பல்களை வேவுபார்க்க முடியும்.இந்து மாகடல் இந்தியாவின் கடல் அல்ல என்பதே சீனாவின் நிலைப்பாடு. இந்து மாகடலிலும் அரபியக் கடலிலும் சீனாவின் கடற்படைகள் ஆதிக்கம் செலுத்துவதற்கு குவாடர், அம்பாந்தோட்டை, சிட்டகொங் ஆகியவற்றில் சீனக் கடற்படைத் தளங்கள் வழிவகுக்கும்.பர்மாவின் சிட்வே துறைமுகத்தில் சீனக் கடற்படைத் தளம் அமைந்தால் அது இந்தியாவிற்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் பசுபிக் நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலாகும். சீனா குவாடர் துறை முகத்தில் இருந்து சீனாவிற்கான நெடுஞ்சாலையையும் உருவாக்க்க பாக்கிஸ்த்தானுடன் இணங்கியுள்ளது. 900 கிமீ(550 மைல்கள்) நீளமான இப்பாதை 4,693மீற்றர் (15,397அடி) உயர மலைத்தொடரைக் கடந்து செல்ல வேண்டிய ஒரு சிரமமான பாதையாகும். இந்து மாக்கடலூடான தனது வழங்கற்பாதைக்கு மாற்றீடான ஒரு பதையாக சீனா இதைக் கருதுகிறது. இப்பாதை பாக்கிஸ்த்தானை சீனாவின் ஒரு செய்மதி நாடாக்கிவிடும்.

ஹோமஸ் நீரிணை
குவாடர் துறைமுகத்தை சீனா படைத் துறை மயமாக்கும் நிலையில் அது இந்தியாவிற்கு மட்டுமல்ல யுனைட்டெட் அரபு எமிரேட், ஓமான், ஈரான் போன்ற நாடுகளுக்கும் சவாலாக அமையும். அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோமஸ் நீரிணையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானிற்கு அண்மையில் உள்ள் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. அமெரிக்கக் கடற்படையினர் ஹோமஸ் நீரிணையில் தமது பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களை நடமாடவிட்டு தமது கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர். சீனாவிற்கான எரிபொருள் வழங்கலில் 70% ஹோமஸ் நீரிணையூடாகச் செல்வதால் அது சீனாவிற்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ததாக அமைகிறது. தற்போது அமெரிக்கக் கடற்படை அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஈரானியத் துறைமுகத்திற்குப் போட்டி
குவாடர் துறைமுகத்தை சீனா படைத்தளம், மேற்குச் சீனாவிற்கான வழங்கற்பாதை முனையம், வர்த்தக விருத்தி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தலாம். குவாடர் துறை முகம் வர்த்தக ரீதியில் வளர்ச்சியும் முக்கியத்துவமும் பெறும் போது அது ஈரானின் சபஹார் துறைமுகத்திற்குச் சவாலாக அமையலாம். ஈரான் - ஈராக் போரின் ஹோமஸ் நீரிணையூடான எரிபொருள் ஏற்றுமதி தடைபட்ட போது ஈரான் சபஹார் துறைமுகத்தையும் அதை அண்டியுள்ள பிரதேசத்தையும் பெருமளவு அபிவிருத்தி செய்து வருகிறது. 1992இல் அங்கு ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தையும் உருவாக்கியது. 2002இல் அங்கு ஒரு பன்னாட்டுப் பலகலைக்கழத்தையும் உருவாக்கியது. சபஹாரில் இருந்து இந்தியா, இரசியா, ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கு போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியாவும் ஈரானுடன் இணைந்து செயற்பட்டது. கடற்படுக்கையூடாக சபஹாரில் இருந்து இந்தியாவிற்கு குழாய்களூடாக எரிவாயு விநியோகத் திட்டமும் அதில் அடக்கம். ஆனால் சபஹார் துறைமுகம் ஈரானின் பெரிய மாகாணமான சிஸ்ரன் - பலுச்சிஸ்த்தானில் இருக்கிறது. சியா முஸ்லிம் நாடான ஈரானின் சிஸ்ரன் - பலுச்சிஸ்த்தானில் சுனி முஸ்லிம்களே பெரும்பானமையானராக இருக்கின்றனர். இதனால் இங்கு பிரிவினை தோன்றலாம் என்ற அச்சத்தில் சபஹார் துறை முகத்தை மேம்படுத்த ஈரான் தயக்கம் காட்டுகிறது.

உடனடி ஆபத்து இல்லை ஆனால் நீண்டகாலப் பேராபத்து.
குவாடர் துறைமுகம் சரியான பாவனைக்கு வர இன்னும் பல காலம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. குவாடர் துறை முகத்திற்குத் தேவையான மற்ற வசதிகளான போக்கு வரத்து வசதி, பாரிய சேமிப்புக் கிடங்குகள் போன்றவை இன்னும் அங்கு உருவாக்கப்படவில்லை.  இவையாவற்றையும் அமைத்து குவாடர் துறமுகத்தை ஒரு பாரிய கடற்படைத் தளமாக மாற்ற இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும் எனப்படுகிறது. சீனா நீண்டகாலத் திட்டம் போட்டுச் செயற்படுவதில் திறமை மிக்கது. ஆழ்கடல் துறை முகமான குவாடரில் சீனாவால் பாரிய நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்த முடியும். சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களின் தொகையை பெருக்கி வருவதாகக் கருதப்படுகிறது. சீனா தற்போது ஆசியாவில் ஐந்தாவது பெரிய கடற்படை வலிமையை மட்டும் கொண்டிருக்கிறது. இதன் கடற்படை வலிமையிலும் பார்க்க இந்தியாவின் வலிமை பெரியது எனப்படுகிறது. ஆசியாவில் ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா போன்றவற்றின் கடற்படை வலிமையும் சீனாவிலும் பார்க்கப் பெரியதாகும். ஆனால் சீன தனது பாதுகாப்புச் செலவீனங்களை ஆண்டாண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. நீண்டகால அடிப்படையில் பார்க்கையில் சிட்டகொங், அம்பாந்தோட்டை, குவாடர் ஆகிய துறைமுகங்களில் சீனா படைத்தளம் அமைத்தால் அது இந்தியாவை சீனா அடக்கி விட்டது என்றே பொருள்படும்.சீனா குவாடரைப் பொறுப்பேற்கப் போகிறது என்ற அறிவுப்பு ஒரு எதிர்பார்த்திராத அறிவிப்புப் போல் இருக்கிறது. இந்துமாக்கடல் பிராந்தியத்தின் படைத்துறைச் சமநிலையை இது பாதிக்கிறது. இதை மீள் சமநிலைக்குக் கொண்டு செல்ல இந்தியா இனிக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அம்பாந்தோட்டையிலோ அல்லது இலங்கையில் வேறு என்கேயோ இனி சீனா எக்காரணம் கொண்டும் ஒரு படைத்தளம் அமைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக இந்தியா அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் சீனக் கடல் பிராந்திய நாடுகளுடன் இணைந்து  சீனாவை தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் வைத்தே முடக்குவது நீண்டகால அடிப்படையில் இந்தியாவிற்கு பெரும் நன்மையாக அமையும்.

சீனா அகலக் கால் வைக்கிறதா?
தென் சீனக் கடலிலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் பல நாடுகளுடன் முறுகிக் கொண்டிருக்கும் சீனா அரபுக் கடலிலும் ஒரு முறுகல் நிலையை உருவாக்குவது சீனா அகலக் கால் வைக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அமெரிக்காவிடமிருந்து பாக்கிஸ்த்தான் விலகுகிறதா?
அண்மைக்காலங்களாக சியா முஸ்லிம்களுக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான முறுகல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் சில சுனி முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கத்தையும் உறவையும் அதிகரித்து வருகின்றன.  சுனி முஸ்லிம் நாடான பாக்கிஸ்த்தான் சியா முஸ்லிம் நாடான ஈரானுடன் பெரும் எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி செய்துள்ளது. அத்துடன் பாக்கிஸ்த்தானூடாக ஈரானில் இருந்து சீனாவிற்கு எரிபொருள் விநியோகக் குழாய்கள் தொடுக்கும் திட்டமும் சீனாவிடம் இருக்கிறது. சீனா, பாக்கிஸ்த்தான், ஈரான ஆகிய மூன்று நாடுகளும் நெருங்கி படைத்துறை ரீதியில் ஒத்துழத்தால் அது வளை குடாவில் அமெரிக்காவிற்கும் இந்தியாவின் மேற்குக் கரைக்கும் பெரும் சவாலாக அமையும். இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் போது குவாடர் துறைமுகம் இருக்கும் பாலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் பிரிவினைவாதத்தை அமெரிக்கா ஊக்குவித்து பாக்கிஸ்தானில் பிரச்சனையை ஏற்படுத்தும். பாலுச்சிஸ்த்தான் மாகாணம் கனிம வளங்கள் நிறைந்த ஒரு பிரதேசமாகும். அங்கு வாழும் மக்கள் பாக்கிஸ்த்தானிய அரசால் பாகுபாடுகாட்டப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இந்தியாவை நேசிக்கிறார்கள். ஆப்கானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு பாக்கிஸ்த்தானுடாக விநியோகங்கள் செல்லவதை பாக்கிஸ்த்தானிய அரசு தடை செய்ந்திருந்தபோது பாலுச்சிஸ்த்தானின் சுய நிர்ண்ய உரிமையை அங்கீகரிப்போம் என்று சில அமெரிக்க மூதவை உறுப்பினர்கள் மிரட்டினார்கள். பாலுச்சிஸ்த்தான் மக்கள் தமது தாயக நிலங்களை சீனாவிடம் கையளிப்பதை எதிர்த்து வருகிறார்கள். இப்படிப் பட்ட ஒரு பாதகமான சூழலிலும் சீனா குவாடர் துறைமுகத்தைப் பொறுப்பேற்றமை அந்தத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

சீனாவின் ஆப்பை எப்படி இந்தியா சமாளிக்கும்?
மும்பாயிலும் குஜராத் மாநிலத்திலும் இந்தியா வலிமை மிக்க கடற்படைத் தளங்களை கட்டி எழுப்ப வேண்டிவரும். இதற்காக இந்தியா அமெரிக்காவை நோக்கி தனது தந்திரோபாய நகர்வுகளை நகர்த்த வேண்டிவரும்.

1 comment:

Anonymous said...

பனிப்போரின் போது அமெரிக்கா செய்தது போல் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று கூறி ஒரு போர் மிரடலை இப்பொழுதே இலங்கை மீது விடுக்க வேணடும், சீனா உறுதியாக உடனடி போரில் அதுவும் இலங்கையில் மேற்கொள்ள விரும்பாது..... இதுதான் தற்காலிக சமநிலையை ஏற்ப்படுத்தும் வழி.......

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...