Saturday 23 February 2013

தமிழர் பிணங்களில் பணம் தேடும் இந்தியாவும் அமெரிக்காவும்.

சனல் - 4 இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களில் சிலவற்றை அம்பலப்படுத்தியது. போர் கமெரா முனையில் நடப்பதில்லை. தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடூரங்களை முழுமையாக எவராலும் அம்பலப்படுத்த முடியாது. தமிழர்களுக்கு எதிரான கொடூரங்களுக்கான ஆதாரப் படங்களையும் காணொளிப் பதிவுகளையும் சனல் - 4 ஏன் ஆண்டு தோறும் வெளிவிடுகிறது?

இலங்கையின் போரின் போது போர் முனைக்கு எந்த ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவைக் சங்கம் உடபடப் எல்லா தொண்டு நிறுவனங்களும் போர் முனையில் இருந்து மிரட்டி அகற்றப்பட்டனர். இலங்கையின் இறுதிப் போரின் போது நடக்கும் கொடூரங்களை அவ்வப் போது சில சிங்களப் படை வீரர்கள் தமது கைப்பேசி மூலமும் மற்றும் படப்பதிவு கருவிகள் மூலமும் பதிவு செய்ததுண்டு. அவர்கள் அவற்றைத் தமது நண்பர்களுக்கு அனுப்பியதுண்டு. அவற்றில் சில இலங்கைப் பத்திரிகையாளர்கைகளின் கையில் சிக்கியது. அதை அவர்கள் சனல் - 4 இற்கு கொடுத்துள்ளனர். அரசில் அதிருப்தியடைந்த படை வீரர்களும் தமது படப்பதிவுகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கியதுண்டு. அதை அவர்கள் சனல் - 4 இற்கு கொடுத்துள்ளனர்.

சனல் - 4 தனது கையில் கிடைத்த படங்களையும் ஒளிப்பதிவுகளையும் ஏன் ஒவ்வொரு ஆண்டுகளும் வெளிவிடுகிறது. சனல் - 4 இற்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறதா? அல்லது இது திட்டமிட்டு இலங்கை அரசை படிப்படியாக மிரட்டும் செயலா? ஒரேயடியாக எல்லாப் போர்க்குற்ற ஆதாரங்களையும் வெளிவிட்டு இலங்கையை முழுமையாக மிரட்டினால் அது சீனாவின் பக்கம் முழுமையாகச் சாய்ந்துவிடும் என்று அமெரிக்கா கருதுகிறதா?  போரின் போது நடந்த சிங்களப்படையினரின் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்கள் பல இந்தியாவினதும் அமெரிக்காவினதும் செய்மதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேற முடியாமல் சிங்களப்படையினர் திணறிக் கொண்டிருக்கும் போது இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் போரை முடிக்க வேண்டும் என்பதால் அப்போது தடைசெய்யப்பட்ட குண்டுகள் தமிழர்கள் மீது வீசப்பட்டமைக்கும். போரின் இறுதி வாரத்தில் தடைசெய்யபட்ட குண்டுகள் போடப்பட்டமைக்குமான ஆதாரங்கள் இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் இருக்கின்றன. இந்தியா தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட்டால் இலங்கை தன்னிடம் இருக்கும் போரில் இந்தியாவின் பங்களிப்பிற்கான ஆதாரங்களை வெளிவிடும் என மிரட்டிய படியால் இந்தியா ஒருபோதும் அவற்றை வெளிவிடாது.

2009-ம் ஆண்டு போர் முடிந்தவுடன் இதே மனித உரிமைக் கழக்த்தில் போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததால் இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த போது அமெரிக்கா நடுநிலை வகுத்தது. இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் சீனாவுடன் இணைந்து அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. அப்போது போருக்குப் பின்னரான அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கையைப் பொருளாதார ரீதியில் சுரண்ட அமெரிக்கா தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் எனக் காத்திருந்தது. ஆனால் போருக்குப் பின்னர் இலங்கையில் சீனாவே அதிக முதலீடுகளைச் செய்தது. அரச பணிகள் பல ஒப்பந்தக் கோரிக்கைக்ள்(tender) இல்லாமல் சீனாவிற்கு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அமெரிக்கா இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அதன் பின்னர் 2010இல் இருந்து ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமைக்கழகத்திலும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகிறது.

அமெரிக்கா தன்னிடமுள்ள போர்க்குற்ற ஆதாரங்களை வெளிவிட இன்னும் சில காலம் எடுக்கலாம் அல்லது இலங்கை அமெரிக்காவிடம் சரணடைந்து அமெரிக்காவை இலங்கையில் பொருளாதார ரீதியாகச் சுரண்ட அனுமதி வழங்கினால் அந்த ஆதாரங்கள் ஒரு போதும் வெளிவிடப்படாமல் போகலாம்.

இந்தியா ஒவ்வொரு ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழக கூட்டத் தொடரின் போதும் இலங்கைகு ஆதரவாக செயற்பட்டும் அமெரிக்காவின் நிலைப்பாட்டின் கடுமையைக் குறைத்தும் இலங்கை  திருப்திப்படுத்தி இலங்கையில் முதலீடு செய்ய ஒப்பந்தங்களைச் செய்கிறது.

அமெரிக்கா இலங்கையின் மனித உரிமை மீறல்களை வைத்து மிரட்டி தனது கையாள் சரத் பொன்சேக்காவை சிறையில் இருந்து மீட்டது. தனது பொருளாதாரச் சுரண்டல்களை இலங்கையில் விரிவு படுத்தும்வரை அமெரிக்கா இலங்கையைத் தொடர்ந்து மனித உரிமைகள் தொடர்பாக மிரட்டிக் கொண்டே இருக்கும். அதுவரை சனல் - 4 கும் தனது ஆவணப்படங்களை ஆண்டு தோறும் வெளியிட்டுக் கொண்டே இருக்கும். மனித உரிமைக் கழகத்தில் மட்டுமல்ல ஐநா பாதுகாப்புச் சபையிலேயே கொண்டுவரப்படும் தீர்மானங்கள் கூட தமிழர்களுக்கு எந்த பயனும் தராது என்பதற்கு பாலஸ்த்தீனம் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களே சான்றாகும்.

1983-ம் ஆண்டு பத்தாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட இனக்கலவரத்தை அப்போதைய பாரதப் பிரதமரும் இந்திய சட்டவாளர் சபையும் இனக்கொலை என்றனர். ஆனால் 2008-2009 இல் இலங்கையில் மூன்று இலட்சம் அப்பாவிகள் கொல்லப்பட்டத ஒரு இனக் கொலை என இந்தியப் பாராளமன்ற உறுப்பினர் ராஜா பாராளமன்றத்தில் தெரிவ்ததை அவைத் தலைவர் அவைக் குறிப்பில் இருந்து விலக்கியது ஏன்? இந்தியாவும் இந்த இனக்கொலையில் ஒரு பங்காளி என்பதாலா? 

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை ஐநா சபை நேரடியாகவே பன்னாட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல  பன்னாட்டுச் சட்டத்தில் இடமுண்டு என சட்ட அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள் அமைத்த  டப்ளின் தீர்ப்பாயமும் ஐநா சபை நியமித்த நிபுணர்கள் குழுவும் இலங்கையில் போர்க்குற்றம் நடந்தமைக்கான காத்திரமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தன. இவற்றைப் புறந்தள்ளி விட்டு இந்தியாவும் அமெரிக்காவும் இதில் இருந்து இலங்கையைப் பாதுகாக்க நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்னிலைப்படுத்துகின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...