Monday 11 February 2013

இந்திய உளவுத் துறைக்கும் ராஜபக்சேவிற்கும் இடையிலான உரையாடல்

ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்தே இலங்கையில் தமிழர்களுக்கு அள்ளிவைக்கும் கைங்கரியத்தை இந்தியா செய்து கொண்டே இருக்கிறது. இலங்கையில் மரபு வழியாக வடகுக் கிழக்கில் வாழும் தமிழர்களையும் மலையகத்தில் வாழும் தமிழர்களையும் பிரித்து வைத்து நேரு இந்த அள்ளி வைப்பை ஆரம்பித்து வைத்தார். இப்போது பன்னாட்டு அரங்கிலும் தொடர்கிறது.

இந்தியாவின் தமிழர்க்கு எதிரான அள்ளிவைப்பை எண்ணி பொருமிக் கொண்டிருக்கும் போது 2013 பெப்ரவரியின் இரண்டாம் வாரம் கிடைத்த செய்தி இந்திய உளவுத் துறைத் தலைவர் அலோக் ஜோசிக்கும் இலங்கை அதிபர மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இரகசியச் சந்திப்பு நடந்தது என்பது.  இதை எண்ணிக் கொதித்த படியே ஒரு தமிழன் கண்ணை மூடினான்.

அலோக் ஜோசி: வணக்கம்
மஹிந்த: வணக்கம்

அலோக் ஜோசி: உங்களை புதுடில்லிக்கு அழைத்து உங்களுடன் பேச்சுவாத்தை தலைமை அமைச்சர் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடாத்தினால் அது இப்போது உள்நாட்டிலும் பன்னாட்டு மட்டத்திலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பலாம் என்பதற்காக அனைவருக்கும் லட்டுக் கொடுத்துவிட்டு நீங்கள் தனிப்பட்ட ரீதியில் ஒரு புனிதப் பயணத்தை செய்வது போல உங்கள் இந்தியப் பயணத்தை ஒழுங்கு செய்துள்ளோம்.
மஹிந்த: அதற்கு உங்களுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

அலோக் ஜோசி: இலங்கை இந்திய உறவு தொடர்பாக உங்கள் எதிர்காலத் திட்டத்தைச் சொல்லுங்கள்.
மஹிந்த: அதற்கு முதலில் 2013 மார்ச் மாதம் நடக்க விருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் அமெரிக்கா எங்களுக்கு எதிராக முன்மோழிவு எதையும் கொண்டு வராமல் இருக்கும் படி நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இலங்கை இந்திய உறவைப் பற்றிக் உரையாடுவோம்.

அலோக் ஜோசி: பன்னாட்டு மட்டத்திலும் பிராந்திய ரீதியிலும் எமக்குள்ள பிரச்சனைகளை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அரபுக் கடலில் உள்ள் பாக்கிஸ்த்தானிய குவாடர் துறை முகம் அதிகாரபூர்வமாக சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது இந்து மாக்கடல் படைத்துறைச் சமநிலையை எமக்குப் பாதகமாக்கியுள்ளது. இந்தியாவின் மேற்குக் கரையோரம் அதிலும் முக்கியமாக எமது வர்த்தகத் தலைநகரான மும்பாய் ஆபத்துக்குள்ளாகியுள்ளது. தென் சீனக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுமானால் அது எமக்கும் தூர கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான கடற்போக்குவரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இப்படி நாம் சீனாவின் அச்சுறுத்தலுக்கு பல முனைகளில் உள்ளாகி இருக்கும் நிலையில் நாம் அமெரிக்காவுடனும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை அவர்களது நிலைப்பாடு எமது நிலைப்பாட்டிலும் வித்தியாசமாக உள்ளது. அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரின் போது நடந்த அத்து மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படவேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாகவும் விரைவாகவும் நடை முறைப் படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அவர்களைச் சமாளிக்க வேண்டியது ஒரு சவாலாக உள்ளது.
மஹிந்த: அவர்கள் பொறுப்புக் கூறல் நல்லிணக்கம் என்று அடிக்கடி கூறுகிறார்கள். நீங்கள் பன்னாட்டு அரங்கில் நாம் சொல்பவற்றைச் செய்யாவிடில் இலங்கைப் போரின் போது நீங்கள் எமக்கு இரகசியமாகச் செய்த உதவிகள்; நாம் 2009 ஆகஸ்ட் மாதம் முடிக்க இருந்த போரை இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் முடிக்க வேண்டும் என்று நீங்கள் எம்மை வேண்டிக்கொண்டது; போரில் பொது மக்களின் உயிரிழப்பைப்பற்றி கவலைப்படாமல் குண்டுகளைக் கண்மூடித்தனமாக வீசி போரை மே மாதம் நடுப்பகுதிக்குள் முடிக்கச் சொல்லி நீங்கள் எம்மை நிர்ப்பந்தித்தது; நீங்கள் உங்கள் படையினரை இரகசியமாக எமது நாட்டுக்கு அனுப்பி தமிழர்களை இலட்சக் கணக்கில் கொல்ல உதவியது எல்லாம் பொறுப்புக் கூறல் தொடர்பான பாராபட்சமான விசாரணையின் போது வெளிவரும். அதற்கு நீங்கள் தயாரா?

அலோக் ஜோசி: (சற்றுக் கடுப்படைகிறார். ஆனாலும் வேறு வழியின்றி தன்னத் தானே அடக்கிக் கொள்கிறார்) போரில் நமது பங்கு தொடர்பாக வெளியிடாமல் இருக்க நீங்களும் நாமும் ஒரு உடன்பாட்டிற்கு ஏற்கனவே வந்துள்ளோம். அதன்படி உங்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை வராமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம். உங்களுக்கு எதிரான கடுமையான தீர்மானங்கள் எதுவும் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம். 13வது தீர்மானத்திற்கு நீங்கள் என்ன வேண்டுமானலும் செய்யலாம். ஆனால மனித உரிமைக் கழகத்தில் வரும் தீர்மானங்களிற்கு எதிராக நாம் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. அவற்றால் உங்களுக்குப் பெரும் பாதிப்பு எதுவும் வராது. ஜெனிவாவில் உங்களுக்கு எதிரான கடும் தீர்மானங்கள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வோம்.
மஹிந்த: மனித உரிமைக்கழக ஆணையாளர் எமக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் தன்னிச்சையாகக் கொண்டுவரப்பார்க்கிறார் என  நினைக்கிறேன்.

அலோக் ஜோசி: (இடை மறித்து) பாதுகாப்புச் சபையைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அங்கு உங்களுக்கு எதிரான தீர்மானத்தை இரத்துச் (வீட்டோ) செய்யும்படி இரசியாவிடம் நாம் சொன்னால் அவர்கள் செய்வார்கள்.
மஹிந்த: எங்களுக்காக எதையும் செய்ய சீனா தயாராக இருக்கிறது. ஜெனிவாவின் எமக்கு எதிரான பொருளாதரத் தடை கொண்டுவந்தால்.....

அலோக் ஜோசி: அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் கடுமையான தீர்மானம் வராமல் நாம் பார்த்துக்கொள்வோம். அப்படித் தீர்மானம் வரப்போவதாக சில தமிழ் ஊடகங்கள் பரபரப்பு ஊட்டுவதற்காகச் சொல்கின்றன. உங்கள் மீது பொருளாதரத் தடை வந்தால் அதை ஈடுகட்டும்படி நாங்கள் ஆவன செய்வோம்.
மஹிந்த: உங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சீனாவும் செய்யும். என்னை பிஹரில் இரகசியமாகச் சந்தித்த உங்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகளிடமும் இதைத்தான் சொன்னேன்.

அலோக் ஜோசி: (கடுப்படைகிறார். பின்னர் அடக்கிக் கொள்கிறார்.) சரி வடக்க்குக் கிழக்கில் விரைவாக தமிழர்களைச் சிறுபான்மையினராக்க்கவும். அதற்கு வசதியாக நாம் வடக்கிற்கான தொடரூந்துப் பாதையை அமைத்து அது முடிக்கும் தறுவாயில் உள்ளது. தமிழர்களுக்கு எதிரான எமது நீண்டகாலத் திட்ட அடிப்படியிலான வெற்றிக்கு வடக்குக் கிழக்கில் அவர்கள் சிறுபானமையினராக்கப் பட வேண்டும்.
மஹிந்த: கிழக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அங்கு ஏற்கனவே அவர்களை சிறுபான்மையினராக்குவதில் முக்கால் வாசி வெற்றி கண்டுள்ளோம். வடக்கில் நிலக் கொண்டிருக்கும் படையினர் ஐந்து இலட்சம் பேரையும் அங்கு குடும்பத்தினருடன் குடியேற்றினால் பாதி வெற்றி. மேலும் ஒரு இலட்சம் மக்களை அங்கு குடியேற்றினால் வடக்கிலும் தமிழர்கள் சிறுபானமையினராகி விடுவார்கள். அதன் பின்னர் அதிகாரப் பரவலாக்கம் பற்றி யாரும் கதைக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் சிலர் இன்னும் அடங்குகிறார்கள் இல்லை.

அலோக் ஜோசி: அந்தக் கோமாளிகளைப்பற்றிக் கவலைப் பட வேண்டாம் என்று எத்தனை தடவை உங்களுக்குச் சொல்வது. (சிரிக்கிறார்)
மஹிந்த: (சிரிக்கிறார்)

அலோக் ஜோசி: நன்று. எனது மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.( தலையைச் சொறிகிறார்)
மஹிந்த: அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஜெனிவாவில் பார்த்துக் கொள்ளுங்கள்.

அலோக் ஜோசி: நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம்.
மஹிந்த: நன்றி வணக்கம்.

இப்போது தூங்கிய தமிழன் விழித்துக் கொண்டான். தான் அலோக் ஜோசிக்கும் மஹிந்தவிற்கும் உரையாடல் நடப்பது போலக் கனவு கண்டேன் என்பதை உணர்ந்து கொண்டான். கண்டது கனவு என் எண்ணி அவன் திருப்தியடையவில்லை. அதுதான் யாதார்தமாகவும் இருக்கும் என அவன் எண்ணினான்.

1 comment:

Anonymous said...

அட அதற்குள் அந்த தமிழர் எழுந்துவிட்டாரா? இன்னும் பல தமிழர்கள் உறங்காமலே இந்தியா தமக்கு ஆதரவாக இருக்கும் என்று இத்தனை அநியாயங்களை செய்த பின்னும் பகல் கனவு காண்கின்றார்களே, இவர்கள் இப்போதாவது கனவுலகில் இருந்து எழுநந்து யாதார்த்தத்தை உணர்ந்து கொள்வார்களா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...