Monday 7 January 2013

வல்லரசுகளால் சிரியப் பிரச்சனை முடிவின்றித் தொடர்கிறது.

 06-01-2013இலன்று சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தனது நாட்டில் கிளர்ச்சிக் காரர்களை அல் கெய்தா இயக்கத்தினருடனும் அமெரிக்காவுடனும் தொடர்புடையாவர்கள் எனக் குற்றம் சாட்டிய அவர் தான் கிளர்ச்சிக்காரர்களுடன் பேச முடியாது எனவும் அவர்களது எசமானர்களுடன் பேச விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அசாத்தும் இணக்கப்பாடு என்கிறார்
புது அரசமைப்பு யாப்பு, புது அரசு, இணக்கப்பாடு ஆகியவற்றை அசாத் நாட்டு மக்களுக்கு தான் ஆற்றிய உரையில் முன்மொழிந்தார். தனது நாட்டுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு மேற்கு நாடுகள் செய்யும் உதவியை உடன் நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார் அசாத். அவரது உரை சிரியாவின் மோதல்களை நிறுத்தாது என பலதரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர்.சிறுபான்மை இனக்குழுமமான அலவைற்றைச் சேர்ந்த அசாத் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் ஆட்சியில் இருக்கிறார்.

அறுபதினாயிரம் பேர் உயிர்ப்பலி, ஐந்து இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம், பல இலட்சக் கணக்கானோர் இடப்பெயர்வு, கணக்கிடமுடியாத சொத்துக்கள் அழிப்பு ஆகிய அனர்ந்தங்களுடன் சிரிய உள்நாட்டுப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் ஏதும் செய்யாமல் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழக ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையார் சிரியா தொடர்பாக ஐநா பாதுகாப்புச் சபை காத்திரமாக எதையும் செய்யாதது எம்மை வெட்கத்திற்கு உள்ளாக்குகிறது என்றார். ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் ஆட்சியாளர்கள் பன்னாட்டு நீதிமன்றிற்கு இழுக்கப்பட வேண்டியவர்கள் என்றார் நவி பிள்ளை அம்மையார். ஆனால் இலங்கையில் இதிலும் மோசமான கொலைகள் நடந்த போது நவி பிள்ளை இந்த மாதிரி எதுவும் செய்ய முடியாமல் ஐநா பொதுச் செயலர் பான் கி மூனாலும் அவரது ஆலோசகர் விஜய் நம்பியாராலும் அடக்கப்பட்டார்.

சிரியா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அரபுநாடுகளின் சபையும் முதலில் கோஃபி அனனை சிரியாவிற்கான சமாதானத் தூதுவராக நியமித்தன. அவர் பாதுகாப்புச் சபை எதுவும் செய்யவில்லை என்று சொல்லி தனது பதவியில் இருந்து விலகிவிட்டார். அதைத் தொடர்ந்து சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்ட லக்தர் பிரஹிமி பல நாடுகளுக்கு உல்லாசமாகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். உருப்படியாக எதுவும் செய்யவில்லை.

ஐந்து நாள் பயணமாக சிரியத் தலைநகர் டமஸ்கஸ் சென்று அதிபர் பஷார் அல் அசாத்தைச் சந்தித்த லக்தர் பிரஹிமி சிரியாவில் உண்மையான மாற்றத்திற்கு அசாத்தின் பதவிக்காலம் 2014இல் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். அதுவரை ஒரு அசாத்தின் தரப்பில் இருந்தும் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு  இடைக்கால அரசு சிரியாவில் அமைக்கும் ஆலோசனையை பிரஹிமி முன்வைத்தார். அவரது ஆலோசனை சிரியக் கிளர்ச்சிக்காரர்களால் நிராகரிக்கப்பட்டது. 2013இல் சிரியாவிலிருந்து வெளியேறியோர் தொகை ஒரு மில்லியன்களாக அதிகரிக்கும் என்றும் மேலும் பல பத்தாயிரக்கணக்கானோம் கொல்லப்படுவார்கள் என்றும் சமாதானத் தூதுவர் லக்தர் பிரஹிமி எச்சரிக்கின்றார்.

சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தன்னிடம் இருக்கும் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை இன்னும் பாவிக்கவில்லை. அவரது இருப்பு கேள்விக் குறியாகும் போது அவர் அவற்றைப் பாவிக்க மாட்டார் எனக் கூற முடியாது.

இரசியா சிரியாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கான காரணங்கள்:

1. Tartus துறைமுகத்தில் படைத்தளம் 
இரசியா சோவியத் ஒன்றியம் என்றிருக்கும் போது எகிப்தில் இரு கடற்படைத் தளங்களையும் சிரியாவில் ஒரு கடற்படைத்தளத்தையும் அமைத்தது. பின்னர் எகிப்தில் இருந்த தளங்கள் மூடப்பட்டு அங்கிருந்தவை சிரியாவிற்கு நகர்த்தப்பட்டன. மத்திர தரைக்கடலில் இரசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு சிரியா. இரசியாவிற்கு வெளியே உள்ள ஒரே ஒரு இரசியக் கடற்படைத்தளம் சிரியாவின் Tartus துறைமுகத்தில் இருக்கிறது. நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கக் கூடிய ஆழ்கடல் துறைமுகமான டார்டஸை இரசியா இழக்க விரும்பாது. தற்போது உள்ள சிரிய மக்களின் பெரும்பான்மையானவர்களின் மனப்பாங்கின்படி சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் டார்ட்டஸ் துறைமுகத்தில் இருந்து இரசியா வெளியேற்றப்படும்.

2. படைக்கலன்கள் விற்பனை
லிபியாவிலும் ஈராக்கிலும் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றங்கள் இரசியாவின் படைக்கலன்களின் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2010இல் சிரியாவிற்கு 1.1 பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஏற்றுமதியை இரசியா செய்திருந்தது. இரசியாவின் 7வது பெரிய படைக்கலன் கொள்வனவாளராக சிரியா இருக்கிறது. சிரியாவிற்கான விற்பனையை இரசியா இழக்க விரும்பவில்லை.

3. பெரும் முதலீடு
சிரியாவை நட்பு நாடாக வைத்திருக்க இரசியா தனது சிரியாவிற்கன கடனில் 9.4பில்லியன் டாலர்கள் கடனை விட்டுக் கொடுத்தது. 2009இல் சிரியாவில் இரசியா 19.4பில்லியன்கள் டாலர்கள் முதலிட்டிருந்தது.

4. நீண்ட கால நட்பு
மத்திய கிழக்கில் மிக நீண்டகால நட்பை சிரியாவும் இரசியாவும் கொண்டிருக்கின்றன. இந்த நட்பு பஷார் அல் அசாத்தின் தகப்பனார் காலத்தில் இருந்த சோவியத்-சிரிய நட்பில் இருந்து தொடர்கின்றது.

5. சிரியாவை இழந்தால் ஈரானையும் இரசிய இழக்க வேண்டிவரும்.
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதன் நெருங்கிய நட்பு நாடான ஈரானில் இருக்கும் ஆட்சியாளர்களும் பெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டி வரும். தனது அடுத்த நட்பு நாடும் படைக்கலன் கொள்வனவு நாடுமான ஈரானையும் இரசியா இழக்க விரும்பவில்லை.

இரசியா சிரிய ஆட்சி மாற்றத்திற்கு செய்யும் தடைகள்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் மேற்கு நாடுகள் சிரியாவிற்கு எதிராகக் கொண்டு வந்த இரு தீர்மானங்களை இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்தது. லிபியாவில் செய்தது போல் விமானங்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் குண்டுகளை வீச மேற்கு நாடுகள் திட்டமிட்டிருந்தன. துருக்கி மீது சிரியப்படைகள் குண்டுகள் வீசியதாக ஒரு நாடகமாடி சிரியாமீதான குண்டுத் தாக்குதலுக்கு அவை வழிவகுக்கலாம் என உணர்ந்த இரசியா சிரியாவிற்கு தனது விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் அதை இயக்கும் நிபுணர்களையும் அனுப்பியது. இதனால் மேற்கு நாடுகளால் ஒரு நேரடித் தலையீட்டை சிரியாவில் செய்ய முடியவில்லை.

வல்லரசு நாடுகளிடை உள்ள பிராந்திய ஆக்கிரமிப்புப் போட்டி சிரியாவிலும் பெரும் இரத்தக் களரியை ஏற்படுத்தும்.

சிரியா தொடர்ப்பான முந்தைய பதிவு: இன மோதலாகும் சிரியக் கிளர்ச்சியும் ஐநாவின் கையாலாகத்தனமும்


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...