Friday 7 September 2012

நகைச்சுவை: பெண்கள் கணனி போலே

பெண்களை பலர் பல விதமாக வகைப்படுத்தினர். சாமுத்திரிகா இலட்சணம், அத்தினி, சங்கினி, பத்தினி, சித்தினி அது இது என்று சொல்வார்கள். அது  அந்தக் காலம் இது கணனிக் காலம். கணனிப்படி பெண்களை இப்படித்தான் வகைப்படுத்தலாம், இதில் எந்தப் பெண்ணை உங்களுக்குப் பிடிக்கும்?

Hard Disk girsl : நிரந்த உறவை விரும்பும் பெண்கள்

RAM girls: உறவைத் தொடர்பு முடிந்தவுடன் மறக்கும் பெண்கள்.

Screen Saver girls: சைட் அடிக்க மட்டும்

Software girls: விசயம் நிறைய இருக்கு ஆனால் புரிந்து கொள்ள முடியாது.

Monitor girls: உங்களைக் கண்காணித்த படியே இருக்கும் பெண்கள்.

Window girls: அடிக்கடி மாறுவதாகச் சொல்வார்கள். ஆனால் அதே பழைய பிரச்சனைதான்

Speaker girls: வளா வளா என்று எந்த நேரமும் பேசிக் கொண்டே இருக்கும் பெண்கள்

Application girls: ஒரு காரியத்திற்கு மட்டும் பயன்படும் பெண்கள்.

Virus girls: உங்கள் மனதைக் கிறங்கடித்து உங்களை நிர்மூலமாக்கும் பெண்கள்.

Anti Virus girls: எந்த நேரமும் பல்லி சொல்ற மாதிரி ஏதாவது சொல்லி மிரட்டும் பெண்கள்

Search Engine girls: உங்கள் பணப்பையைக் காலி செய்யும் பெண்கள்.

Website girls: ஊர் வம்பெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு சொல்லாமல் பிகு பண்ணும் பெண்கள்.

Browser girls: உங்களைப் பற்றி அறிய அதிகம் துருதுருவிக் கேள்விகள் கேட்கும் பெண்கள்.

Internet girls: தேடிப் பிடிப்பது சிரமமான பெண்கள்

Keyboard girls: தொட்டல் சிணுங்கிகள்

Microsoft girls: சிறிய மென்மையான பெண்கள். ஆனால் பெரிய பிரச்சனை

Apple girls: தாங்கள் தனித்துவமானவரகள் என்று பீத்திக் கொள்ளும் பெண்கள்.

Server girls: உங்களைத் தாய் போல் கவனிக்கும் பெண்கள்.

Multimedia girls: வாய், கண், கை போன்றவற்றால் ஒரேயடியாக உரையாடும் பெண்கள்

Thursday 6 September 2012

கீழ் சாதி மீனவன் இந்தியனல்ல: ஊளையிடுகிறதா ஆர் எஸ் வாசன் என்னும் நரி.?

1980களின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் சிங்களப்பகுதியில் உள்ள கதிர்காமத்தை தனது குடும்பத்துடன் தரிசிக்கச் சென்ற ஒரு தமிழர் முகச் சவரம் செய்வதற்காக சலூன் சென்றபோது அங்கு அவர் சிங்களவர்களால் துடிதுடிக்கக் கத்தியால் குத்தப்பட்டுக் கோரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும்எந்தப் பார்ப்பன ஊடகமும் அதைக் கண்டிக்கவும் இல்லை. இந்திய அரசும் அலட்டிக் கொள்ளவில்லை.
ஆர் எஸ் வாசன்

ஊளையிடும் நரிக்கூட்டம்
அன்னை வேளாங்கன்னியைத் தரிசிக்க இலங்கையில் இருந்து வந்த பக்தர்களை திருச்சியில் வைத்துத் தாக்கியதைத் தொடர்ந்து சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலிகள் ஊளையிடத் தொடங்கி விட்டன. சிங்கள இனக் கொலையாளிகளினதும் அவர்களது பங்காளிகளான ஆரியப் பேரினவாதிகளினதும் பேச்சாளர்களாக சோ, ராம், சுப்பிரமணிய சுவாமி போன்றோருடன் கேர்ணல் ஹரிஹரன் என்னும் இந்தியப் படைத்துறையின் முன்னாள் உளவாளியும் இணைந்து கொண்டு ஆங்கிலத்தில் அவ்வப்போது ஊளையிட்டு வருகிறார். இவர்கள் போதாது என்று ஆர் எஸ் வாசன் என்றொரு நரியும் இவர்களோடு இணைந்து ஊளையிடத் தொடங்கியுள்ளது. இவர் அன்னை வேளாங்கன்னியைத் தரிசிக்க வந்தவர்களைத் தாக்கியதால் இந்தியாவிற்கு பெரும் கேடு விளையப்போவதாக ஊதிப் பெரிது படுத்துகிறார். இந்த வாசன் அமைதிப்படை என்ற பெயரில் வந்த கொலைவெறி நாய்ப்படைகளின் ரோந்துக் கடற்படப் பிரிவிற்குப் பொறுப்பாய் இருந்தவர். இவர் தமிழ்த்தேசியத்தை வெறுப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல.

அதிதி தேவோ பவ....தமிழன் அழிந்து போகட்டும் பவ
ஆர் எஸ் வாசன் "இலங்கை இந்திய உறவும் தமிழ் நாட்டுக் காரணியும்: மரத்திற்காகக் காட்டைத் தொலைத்தல்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களாக் நடப்பவை ஒரு நல்லவற்றிற்கான அறிகுறி அல்ல என்கிரார் ஆர் எஸ் வாசன். இலங்கைப் படை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்ச்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தமிழ்நாடு ஒரு நல்ல ஒளியில் இல்லை என்பதைக் காட்டுகிறது என்கிறார். ஆர் எஸ் வாசன் "அதிதி தேவோ பவ" என்னும் சமஸ்கிருத வாசகத்தை எடுத்துக் காட்டுகிறார். இந்தியா தனது விருந்தாளி கடவுளுக்குச் சமன் என்ற விருந்தோம்பும் பண்பைக் கைவிடக்கூடாதாம். இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பி பல நாடுகளுக்கு ஓடினர். சில நாடுகளின் அவர்கள் மாநகர சபை முதல்வராகக் கூட ஆகி இருகின்றனர். ஆனால் இந்தியாவிற்கு போன இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன? இந்தியாவின் பண்புகள் தமிழனுக்குச் செல்லு படியாகாதா?

விருந்தோம்பும் பண்பு சிங்களவனுக்கு மட்டும்தானா?
ஒரு வயோதிபப் பெண் மருத்துவச் சேவை பெற முறைப்படி இந்தியாவிற்குள் நுழையும் அனுமதி பெற்று வந்த போது அவரைப் பல மணி நேரம் வேண்டுமென்று காக்க வைத்துப் பின்னர் திருப்பி அனுப்பிய போது இந்தியாவின் "அதிதி தேவோ பவ" என்னும் தத்துவம் என்கே போயிருந்தது? இந்த வாசன் என்னும் நரிதான் எங்கே இருந்தது?

 இது பரந்தாமனின் நியாயம்
பாரதப் போரில் அபிமன்யூவை சக்கர வியூகத்துக்குள் வைத்து அநியாயமாகக் கொன்ற பின்னர் பரமாத்மா கண்ணன் இனி எமது தரப்பில் இருந்து போர்தர்மத்தை எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்லவில்லையா? முள்ளிவாய்க்காலில் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளால் கொல்லப்பட்ட பின்னர் தமிழர்களிடம் இருந்து மட்டும் நியாயத்தை எதிர்ப்பார்க்கலாமா?

மீனவன் கீழ் சாதிக்காரன். அவன் இந்தியன் அல்ல
ஆர் எஸ் வாசன் இந்திய மீனவர்கள் எல்லையைத் தாண்டிச் செல்வதால் கொல்லப்படுகிறார்களாம். தாக்கப்படுகிறார்களாம். அவர் இலங்கையை இந்தியாவின் நட்புறவு நாடு என்கிறார். ஒரு நட்புறவு நாட்டுக் குடிமகன் தனது நாட்டு எல்லைக்குள் வந்தால் எந்த ஒரு நாடும் அவன் மீது தாக்குதல் நடாத்த மாட்டாது. கொல்ல மாட்டாது. ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்தாது.  தமிழனை சிங்களவன் மட்டுமா தாக்குகிறான்? மலையாளி தாக்குகிறான். கன்னடத்தான் தாக்குகிறான். மும்பாய்க்காரன் தக்குகிறான்.  மீனவர்கள் தாழ்ந்த சாதிக் காரர்கள் என்பதால் தான் இப்படி இவர் ஊளையிடுகிறார். ஒரு பார்ப்பனனை சிங்களவன் தாக்கினால் இப்படிச் சொல்வார்களா? ஆர் எஸ் வாசன் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தாக்கப்படுகிறார்கள் என்று எழுதிய சில மணித்தியாலங்களுக்குள் தமிழக மீனவர்கள் கடுமையாக சிங்களப்படையினரால் தாக்க்ப்பட்டுள்ளனர்.  எல்லை தாண்டியிருந்தால் கைது செய்து நீதியின் முன்னர் நிறுத்த வேண்டும். தாக்கப்படுவதோ அல்லது அவர்களது உபகரணங்களை நிர்மூலமாக்குவதோ நியாயம் அல்ல. ஆர் எஸ் வாசன் எழுதிய சிலமணித்தியாலங்களுக்குள் இத்தாக்குதல் நடந்த படியால் ஆர் எஸ் வாசன் கும்பல் தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல்களை ஊக்குவிக்கிறதா?

மரத்திற்காகக் காட்டைத் தொலைப்பது யார்?
தமிழ்நாட்டினர் மஹிந்த என்ற கொடுங்கோலனுக்காக சிங்களவரக்ளைப் பகைப்பது ஒரு மரத்திற்காகக் காட்டைத் தொலைப்பது போன்றது என்கிறார் ஆர் எஸ் வாசன். ஒரு கோடி சிங்களவர்களின் உறவிற்காக இந்திய அரசுதான் ஏழு கோடி தமிழர்களைப் பகைக்கிறது. சிங்களவர்கள் என்ற நச்சு மரத்திற்காக தமிழர்கள் என்னும் சந்தனக்காட்டை இந்தியா இழக்கப்போகிறது.

Tuesday 4 September 2012

எச்சரிக்கை: Win 8 வைரஸ்

விண்டோ - 8 வெளிவர முன்னரே Win 8 Security system என்னும் பெயரில் ஒரு வைரஸை சிலர் உலவ விட்டுள்ளனர் என பிரபல வைரஸ் ஒழிப்பு (ஆன்ரி வைரஸ்) நிறுவனமான MacAfee எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த Win 8 Security system தன்னை ஒரு இலவச வைரஸ் ஒழிப்பு மென்பொருள் போல இனம் காட்டிக்கொள்கிறது. இதை நீங்கள் உங்கள் கணனிகளில் பதிவேற்றினால் அது உங்களுக்கு சில போலியான எச்சரிக்கைகளை விடுக்கும். அந்த எச்சரிக்கைகளில் சொல்லப்படும் வைரஸ்களை நீக்குவதற்கு உங்களிடம் இருத்து கட்டணம் அறவிடும்.

“The Win 8 Security System is typical rogue, or fake, antivirus software,” என்கிறார் நாகநாதன் ஜவாகர் என்னும் கணனி வைரஸ் நிபுணர். அத்துடன் இந்த வைரஸை உங்கள் கணனியில் இருந்து நீக்குவது சிரமம் என்றும் எச்சரிக்கிறார்.

நாகநாதன் ஜவாகரின் பதிவை இந்த இணைப்பில் காணலாம்: http://blogs.mcafee.com/mcafee-labs/win-8-security-system-another-fake-antivirus-malware 

இந்த வைரஸை எப்படி நீக்குவது என்பது பற்றி இந்த இணைப்பில் காணலாம்:
http://www.2-viruses.com/remove-windows-8-security-system

மைக்குறோசொஃப்ர் அறிமுகம் செய்யவிருக்கும் விண்டோ - 8 இற்கு வைரஸ் ஒழிப்பு மென்பொருள் தேவை இல்லை எனச் சிலர் கொள்கின்றனர். சிலர் இதை ஏற்க மறுக்கின்றனர். நோட்டன் நிறுவனம் தனது மென்பொருள்கள் விண்டோ - 8 இற்கு தயாராகிவிட்டன என்று அறிவித்துள்ளது.

ஒரு பயனுள்ள காணொளி:

Monday 3 September 2012

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்துமா?

ஈரான் அணுக்குண்டை உற்பத்தி செய்தால் அது தனது இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று இஸ்ரேல் பல ஆண்டுகளாக அச்சம் கொண்டுள்ளது. இஸ்ரேலிய மக்களில் கால்வாசிப்பேர் ஈரான் அணுக்குண்டு தயாரித்தால் தாம் நாட்டை விட்டு வெளியேறப்போவதாகத் தெரிவித்துள்ளனர். ஈரானிய அணு விஞ்ஞானிகள் இருவர் கொல்லப்பட்டார். ஒருவர் கொலை முயற்ச்சியில் இருந்து தப்பினார். ஈரானிய யூரேனியம் பதனிடும் நிலையங்கள் மீது பல கணனி ஊடுருவித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் ஈரான் எதற்கும் அஞ்சாமல் தனது யூரேனியம் பதனிடும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது.

ஈரான் தனது அணு ஆராய்ச்சி நிலையங்களை ஐந்து இடங்களில் வைத்துள்ளது.

மார்தட்டும் ஈரான்
இஸ்ரேலின் அச்சத்தை அதிகரிக்கும் வகையில் 04/07/2012 புதன்கிழமை ஈரான் வெற்றீகரமாக பல தரப்பட்ட ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்ததாக ஈரானிய செய்தி நிறுவனமான ஃபாஸ் அறிவித்துள்ளது. இவற்றில் "Persian Gulf" எனப் பெயரிடப்பட்டுள்ள தரையில் இருந்து கடலுக்கு செலுத்தி(shore-to-sea ballistic missile) பெரிய கடற்படைக் கப்பல்களைத் தாக்கியளிக்கும் வல்லமையுள்ள ஏவுகணைகளும் Shahab-3 எனப் பெயரிடப்பட்ட தரையில் இருந்து தரைக்குச் செலுத்தி 2000கிலோ மீற்றர் வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளும் முக்கியமானவை. தன்னால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகளைத் தாக்க முடியும் என ஈரான் மார்தட்டியது.

ஈரான் மீது தொடர் வைரஸ் தாக்குதல்கள்
2010இல் ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தை இஸ்ரேலிய உளவுத்துறை இணைய வழி ஊடுருவி Stuxnet என்னும் வைரஸ் மூலம் சேதப் படுத்தியது அதன் பின்னர் ஈரானிய ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது.  இது இஸ்ரேலின் Dugu கணனி வைரஸின் வேலை என்று சந்தேகிக்கப்பட்டது. ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களில் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தனியாகவும் இணைந்தும் பல இணைய வெளித்தாக்குதல்களை நடாத்தின என்று நம்பப்படுகிறது. இவை எவையும் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியை நோக்கி நகர்வதைத் தடுக்கவில்லை. ஈரானிய மதத் தலைவர் அயத்துல்ல அஹமத் கதாமி ஈரான் தக்கப்பட்டால் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவீவ் சாம்பலாகும் என எச்சரித்துள்ளார்.

பெருமை தேடும் ஈரானும் பொறுமை இழக்கும் இஸ்ரேலும்
தனது அணுக்குண்டு உற்பத்தியை அமெரிக்காவும் இஸ்ரேலும் தடுக்கப்போகிறது என்று உணர்ந்த ஈரான் தனது அணுக்குண்டு உற்பத்தி நோக்கிய நகர்வைத் துரிதப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. ஈரானின் அணுகுண்டு உற்பத்தி அதற்கு இப்போது ஒரு கௌரவப் பிரச்சனை என்று சொல்லப்படுகிறது. சிரியாவில் பஷார் அல் அசாத்தை அகற்றினால் ஈரான் பணியும் என்று சிலர் ஆலோசனை கூறினர். ஆனால் அது ஈரானிய ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை அதிகரித்து அவர்களின் அணுக்குண்டுத் திட்டத்தை விரைவு படுத்தும் என்று வேறு சிலர் கருதினர்.

அமெரிக்க அதிபர் தேர்தலும் ஈரானும்
தற்போது அதிபர் தேர்தல் அமெரிக்காவில் சூடு பிடித்திருப்பதால் பராக் ஒபாமா இப்போது இன்னொரு போர்முனையைத் திறப்பதை அவரது வாக்காளர்கள் விரும்பமாட்டார்கள். இந்தப் பலவீனத்தை ஈரான் பயன்படுத்துகிறது என்று இஸ்ரேல் கருதுகிறது. 2012 நவம்பர் ஆறாம் திகதி அமெரிக்க அதிபர்த் தேர்தல் நடைபெற இருக்கிறது. அமெரிக்காவில் பலம் மிக்கவர்களாகத் திகழும் யூதர்களின் வாக்கும் தேர்தலின் முக்கியமான ஒரு அம்சம். இஸ்ரேலிற்கு ஆதரவற்ற நிலை தேர்தல் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம். பராக் ஒபாமாவிற்கும் இஸ்ரேலிற்கும் ஒரு உன்னத நட்புறவு இல்லை என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் பேரம் பற்றி பரவிய வதந்தி
 பராக் ஒபாமாவின் நிர்வாகம் இரு ஐரோப்பிய நாடுகளின் இராசதந்திரிகளூடாக ஈரானுடன் இரகசியமாகத் தொடர்பை ஏற்படுத்தி இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அதற்குப் பதிலடியாக அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் அதற்காக அமெரிக்கா இஸ்ரேலின் தாக்குதலில் பங்காளியாக இருக்காது என்று ஒரு பேரம் செய்ய முயல்வதாக இஸ்ரேலிய ஊடகங்கள் ஒரு வதந்தியை அல்லது உண்மையைப் பரப்பின. இஸ்ரேலியப் பிரதமர் இதை மறுத்துள்ளார்.  அமெரிக்க அரசும் இதை வன்மையாக மறுத்துள்ளது. இதற்கிடை மத்திய கிழக்கு விவகாரங்களில் அதிக அக்கறை காட்டும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் பாரிய விளைவுகள் ஏற்படுத்தும் என்று கூறுகிறது. இதுவும் பிரான்ஸ் தன்னை ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதலில்  இருந்து தன்னைத் தூரப்படுத்தும் தந்திரமாக இருக்கலாம். இதற்கிடையில் லெபனானில் ஈரானின் ஆதரவுடன் செயற்படும் தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அமெரிக்க நிலைகளை ஈரான் தாக்கும் என எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடி உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முயலலாம் என்பதற்காக அமெரிக்கா ஏற்கனவே பாரசீகக் குடாவில் நிற்கும் கண்ணி வெடி வாரும் கடற்படைக் கலன்களை இருமடங்காக அதிகரித்துள்ளது. செட்ம்பர் மாத இறுதியில் தனது ஆதரவு நாடுகள் இருபத்தைதுடன் இணைந்து உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய கண்ணி வெடி வாரும் ஒத்திகையை மேற்கொள்ள விருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா தனது நட்பு நாடுகளான துருக்கியிலும் இஸ்ரேலிலும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உருவாக்கியுள்ளது. அது இப்போது காட்டார் நாட்டிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஈரான் மார்தட்டும் தனது புது ஏவுகணை உருவாக்கங்களை புஸ் வாணம் ஆக்கி விடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. ஈரான் அணுக்குண்டைத் தாயாரித்தாலும் அது ஈரானின் எல்லையைத் தாண்டி எங்கும் செல்லாதவாறு அமெரிக்கா பல தடைகளை ஈரானைச் சுற்றி உருவாக்கி வருகிறது. இதனால் அமெரிக்கா ஈரானுக்கு அதன் அணுக்குண்டு உற்பத்தி எந்தப் பயனையும் அதற்குத் தராது என்ற செய்தியையும் இஸ்ரேலுக்கு ஈரானின் அணுக்குண்டைப்பற்றி எந்தக் கவலையும் கொள்ளவோ அல்லது ஈரான் மீது தாக்குதல் நடத்தவோ தேவையில்லை என்ற இரு செய்திகளையும் தெரிவிக்க விரும்புகிறது.

இஸ்ரேலில் கருத்தொற்றுமை இல்லை

ஈரான் மீது தாக்குதல் நடாத்துவதை இஸ்ரேலிய உயர் படை அதிகாரிகளிடை பெரும் வரவேற்பு இல்லை என்றே கூறப்படுகிறது. அத்துடன் இஸ்ரேலிய அமைச்சரவை ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக பிளவு பட்டே இருக்கிறது. இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்துமா என்ற கேள்வியிலும் பார்க்க முக்கியமானதும் சிக்கலானதுமான கேள்வி இஸ்ரேலால் ஈரானில் தாக்குதல் நடாத்த முடியுமா என்பதுதான். 2007இல் சிரியாவிலும் 1981இல் ஈராக்கிலும் இஸ்ரேல் இலகுவாக அங்குள்ள அணு ஆராய்ச்சி நிலையங்களில் தாக்குதல்களை நடாத்தியது. ஆனால் இப்போது நிலைமைகள் வேறு. ஈரான் தனது அணு ஆராய்ச்சி நிலையங்களை பல வேறு இடங்களில் அமைத்துள்ளது. அத்துடன் அவை 30 அடி ஆழமான கொன்கிறிட் பாதுகாப்புச் தடுப்புக்களுக்குக் கீழ் உள்ளன. இஸ்ரேலிய விமானங்கள் ஈரானைத் தாக்க நீண்ட தூரம் பறக்க வேண்டும். சிரியாவும் ஈராக்கும் இஸ்ரேலுக்கு அண்மையில் இருக்கின்றன. சிரியாவிலும் ஈராக்கிலும் ஒரு இடத்தில் நிலத்தின் மேல் அணு ஆராய்ச்சி நிலையங்கள் இருந்தன.
மூன்று மாற்று வழிகளில் இஸ்ரேலிய விமானங்கள் செல்லலாம்.

 ஈரானைத் தாக்க இஸ்ரேலிய விமானங்களுக்கு மூன்று பாதைகள் இருக்கின்றன. ஒன்று லெபனான் துருக்கியூடாக. இரண்டாவது ஜோர்டான், இராக் ஊடான நேர்வழிப்பாதை. மூன்றாவது சவுதி அரோபியா மற்றும் பரசீக வளைகுடா ஊடான பாதை. இவற்றின் தூரங்கள்அண்ணளவாக 1,500km (930 miles)இலிருந்து  1,800km (1,120 miles)வரை இருக்கும். இந்த அளவு தூரம் பயணம் செய்து பல இலக்குக்களைத் தாக்கி அழிக்கும் பாரிய குண்டுகளைத் தாங்கிச் செல்லும் விமானங்கள் இஸ்ரேலிடம் இருக்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நீண்ட தூரத் தாக்குதல்களுக்கு வானில் வைத்தே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டி இருக்கும்.
நீண்ட தூரத் தாக்குதல்களுக்கு ஒரு விமானத்தில் இருந்து மற்ற விமானத்திற்கு வாலின் வைத்தே எரிபொருள் நிரப்ப வேண்டும்

30அடி ஆழமாக ஊடுருவிச் சேதம் விளைவிக்கக் கூடிய குண்டுகளை இஸ்ரேல்உருவாக்கியிருக்க வேண்டும் அல்லது அமெரிக்காவிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும். அமெரிக்கா 1981இல் நிலத்திற்குள் துளைத்துச் சென்று தாக்கக்கூடிய GBU-28 குண்டுகளை உருவாக்கி இருந்தது. இது இஸ்ரேலின் கைக்குச் சென்றுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இஸ்ரேலின் F-151விமானங்களால் ஒரு குண்டை மட்டுமே காவிச் செல்ல முடியும். இதனால் இஸ்ரேல் பல விமானங்களை தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டும். ஆனால் 1981இல் உருவாக்கிய GBU-28 குண்டுகள் இப்போது பல வகைகளில் மேம்படுத்தப்பட்டிருக்கலாம் இப்போது அவற்றின் எடை குறைவாக இருக்கலாம். தற்போது உள்ள GBU-28 குண்டுகள் ஆறு மீட்டர் ஆழ கொன்கிரீட்டைத் துளைத்துப் பின்னர் 30 மீட்டர் ஆழ மண்ணைத் துளைத்த பின்னர் வெடிக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

போருக்குத் தயாராகும் இஸ்ரேல்
அணமைக்காலமாக இஸ்ரேல் ஒரு போருக்கான தயார்படுத்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பதற்காக சொல்லப்படும் காரணிகள்:

  • இஸ்ரேல் மீதான ஏவுகணைத்தாக்குதல்களிற்கு எப்படி முகம் கொடுப்பது என்பதுபற்றி அண்மைக்காலமாக இஸ்ரேல் பல ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. 
  • இஸ்ரேலிய மக்களுக்கு இரசாயனத் தாக்குதலை எதிர்கொள்ளும் முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ ஈரானுடனான சகல இராசதந்திர நடவடிக்கைகளும் தோல்வியில் முடிவடைந்தன என்று அறிவித்துள்ளார். 
  • ஈரான் மீதான தாக்குதலுக்கான இஸ்ரேலியக் கடிகாரம் அமெரிக்கக் கடிகாரத்திலும் பார்க்க விரைவாகச் செயற்படுவதாக அமெரிக்காவிற்கான இஸ்ரேலியத் தூதுவர் தெரிவித்துள்ளார். 
  • முன்னாள் இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டின் தலைவர் தான் ஒரு ஈரானையராக இருந்தால் இப்போது பயத்துடன் இருப்பேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
  • சகல மேற்குலக அழுத்தங்கள் மத்தியிலும் ஈரான் தனது பதப்படுத்தப்பட்ட யூரேனிய இருப்பை இப்போது இரட்டிப்பாக்கி உள்ளது  என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
  • ஒக்டோபர் முதலாம் திகதி ஈரான் ஒரு அணுகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பதப்படுத்தப்பட்ட யூரேனியத்தை உருவாக்கிவிடும் என படைத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
  • ஈரான் தனது மக்களை இரண்டு வாரங்கள் வீடுகளுக்குள் இருக்கும் படி பணித்துள்ளதாம்.
அமெரிக்க உச்சப் படைத்துறை அதிகாரியான மார்ட்டின் டிம்சே இஸ்ரேல் ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களைத் தாக்குவது ஈரானின் அணுக் குண்டு உற்பத்தியை நிறுத்தாது மாறாக துரிதப்படுத்தும் என்று சொல்லியுள்ளார். இது இஸ்ரேலியத் தாக்குதலிற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்பது போல் காட்டுகின்ற முயற்ச்சியாக இருக்கலாம். 

இஸ்ரேலின் தாக்குதல் திட்டம்
இஸ்ரேல் முதலில் இணையவெளியில் ஊடுருவி ஈரானின் பாதுகாப்புத் துறையின் கணனிகளை செயலிழக்கச் செய்யும். பின்னர் கண்ண்டம் விண்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் ஈரானின் படைத்துறை மற்றும் அணு ஆராய்ச்சித்துறை நிலைகளை நிர்மூலம் செய்யும். தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் ஈரானுக்குள் சென்று வேவு பார்க்கும். இறுதியாக விமானத் தாக்குதல்கள் நடைபெறும்.

பல படைத்துறை வல்லுனர்கள் இஸ்ரேலால் ஈரானிய அணுக்குண்டு உற்பத்தித் திறனை நிறுத்த முடியாது என்று சொல்கின்றனர். ஆனால் படைத்துறை வல்லுனர்களை கடந்த காலங்களில் இஸ்ரேல் பல தடவை அதிச்சிக்குள்ளாக்கி உள்ளது.

2013இல் சீனப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை எதிர் நோக்குகிறது.

சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைகிறது என்பதை உற்பத்தித்துறை, வங்கித் துறை போன்ற பலவற்றின் சுட்டிகள் எடுத்துக் காட்டுகின்றன. ஐக்கிய அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதரத்தைக் கொண்ட சீனாவின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாக பெரும் வளர்ச்சியைக் கண்டது. கடந்த சில ஆண்டுகளாக பன்னாட்டு நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பிலும் பார்க்க அதிக வளர்ச்சியைக் கண்டது. இந்த ஆண்டு சீனாவின் பொருளாதாரம் அதன் ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பிலும் பார்க்க குறைந்த அளவுதான் வளர்ச்சியடையும். இந்த ஆண்டு சீனப் பொருளாதாரம் 7.5% வளர்ச்சியடையும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தனர். அது இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7.5%இலும் குறைவாகவே இருக்கும்.

உற்பத்தித் துறை பாதிப்பு
 சீனாவின் உற்பத்தித் துறைக்கு (Manufacturing) வழங்கப்படும் உற்பத்திக் கட்டளைகள் குறைவடைந்தது கடந்த சில நாட்களாக பொருளாதார ஊடகங்களில் முக்கியமாக அடிபடும் செய்தியாக அடிபட்டது.2005இல் இருந்து 2011 வரை சீனப் பொருளாதாரம் 10.09% வளர்ந்தது. 2007இல் சீனப் பொருளாதாரம் 14.7% வ:ளர்ச்சியைக் கண்டது. உருக்கு உற்பத்தித் துறையின் இலாபம் 96% ஆல் குறைவடைந்தட்து. உலகின் மூன்றாவது பெரிய கட்டிக உபகரண உற்பத்தி நிறுவனமான Hitachi Construction Machinery Co அக்டோபர் மாதம் வரை தனது உற்பத்தியை மாதத்தில் இருவார்ங்கள் மூடி வைத்திருக்கத் தீர்மானைத்துள்ளது. சீன உற்பத்தித் துறையின் பயன்படு நிலை இப்போது 60% மட்டுமே.

அதிகரிக்கும் இருப்புக்கள்
சீனாவில் பல உற்பத்தி நிறுவனங்களும் விநியோக நிறுவங்களும் தமது சரக்கு இருப்பு அதிகரிப்பதை இட்டு கவலை அடைந்துள்ளன. அவர்களின் விநியோக்கங்களுக்கான கேள்விகள் குறைந்துவிட்டன என்பதையிட்டு சீன ஆட்சியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

பங்குச் சந்தைச் சுட்டெண் வீழ்ச்சி
சீனப் பங்குச் சந்தைச் சுட்டியான Shanghai Composite Index (SHCOMP) இந்த ஆண்டு 6.9% விழுக்காடைக் கண்டது. கடந்த வாரம் மட்டும் 2% விழுக்காட்டை சந்தித்தது. 1990இல் ஆரம்பிக்கப்பட்ட Shanghai Composite Index (SHCOMP) கடந்த மூன்று ஆண்டுகளாக வீழ்ச்சியையே கண்டது.

கடன் நெருக்கடி
சீனாவின் ஐந்து பெரிய வங்கிகளின் கொடுத்த கடன்கள் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட நிலுவைகள் சென்ற ஆண்டினுடன் ஒப்பிடுகையில் 27% ஆல் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி மற்றும் உறபத்தித் துறையில் கடன் நிலுவைகள் 16.8 பில்லியன் யூவான் ($2.6 billion) ஆல் அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் அரசியல் நெருக்கடி தீவிரமடையலாம்
கடந்த பல ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியோடு தொழிலாளர்கள் மீதான கெடுபிடியும் தீவிரமடைந்தன. செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடஇப்போது பொருளாதார நெருக்கடிக்கான ஆரம்பம் என்று பல அவதானிகள் கருதுகின்றனர். சீனப் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளானால் தொழிலாளர்கள் பொறுமை இழந்து கிளர்ந்தெழலாம். இது பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கலாம். இந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் ஆட்சியாளர் மாற்றம் ஏற்படவேண்டும். பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சியாளர்கள் மாற்றப்படவேண்டும். அடுத்த ஆட்சியாளர்கள் பெரும் சவாலை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்

எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை
பொருளாதாரத்தை தூண்டும் விதமாக கடந்த சில காலங்களாக சீன் ஆட்சியாளர்கள் பல நடவடிக்கைகளை எடுத்தனர். அதிக தொடர் குடியிருப்புக்களைக் கட்டினர். ஆனல் அவற்றில் 50%மானவை வெறுமையாகவே இருக்கின்றன.

அடுத்த ஆண்டு பெரும் நெருக்கடி
லி ஜௌஜுன் என்னும் சீன ஆட்சியாளர்களின் பொருளாதார நிபுணர் சீனா பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள நேரிடும் என ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...