Thursday 6 December 2012

சிரியா அல் கெய்தாவின் கைகளுக்குப் போகுமா

சிரிய அதிபர் பஷார் அல் அசாத் கியூபாவிற்குத் தப்பி ஓடப் போகிறார் என்ற செய்தி 05/12/2012இலன்று வந்த வேளை அவருக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சிக்காரர்களில் பலர் அல் கெய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றிய பின்னர் அமெரிக்காவிற்கு எதிராகப் போர் புரியப் போவதாக சூளுரைத்துள்ளனர் என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தவிக்கும் சிரிய அதிபர் அசாத்
சிரிய அதிபர் தற்போது நாட்டை விட்டு ஓடவும் முடியாமல் தனது ஆட்சியை பாதுகாக்கவும் முடியாமல் தவிக்கிறார். சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். அலவைற் இனக்குழுமம் கிரித்தவர்களுடன் மோதாமல் அவர்களையும் அணைத்து நடக்கிறது. சிரிய அதிபர் பஷார் அல் அசாத பதிவியில் இருந்து விலகினால் அது அலவைற் இனக்குழுமத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும். அதனால் அலவைற் இனப் படையினர் கிளர்ச்சிக்காரர்களைக் கொல்லாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்ற நிலையில் உறுதியாகப் போராடுகின்றனர். பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கான ஆதரவு மன்னராட்சி நிலவும் சவுதி அரேபியாவிலிருந்தும்  கட்டாரிலிருந்தும் கிடைக்கின்றன. அண்மையில் சிரிய அதிபரைச் சந்தித்த இரசியாவின் இராசதந்திரி ஒருவர் அசாத் ஒரு சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார் என்றார். அவர் மீது அலவைற்றினரும் ஆத்திரம் கொண்டுள்ளனர்.

ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை நடாத்திய அல் கெய்தா இயக்கத்தின் ஒரு அங்கமான ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் ஈராக்கில் இருந்து சிரியா சென்று அங்குள்ள கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து போராடுகின்றனர். இவர்கள் பல தற்கொலைத் தாக்குதல்களையும் நடாத்தியுள்ளனர் எனப்படுகிறது. மேலும் ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் பல கிருத்தவர்களைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர் என்றும் கிருத்தவத் தேவாலயங்களை இடித்துத் தள்ளியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு காட்டார் நாட்டினூடாக ஐக்கிய அமெரிக்கா அனுப்பிய படைக்கலன்கள் புனிதப் போராளிகளைச் சென்றடைந்தன என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. இதில் படைக்கலன் வியாபாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனராம்.

ஹமாஸ் இயக்கமும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களும்
பலஸ்த்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் சிரியாவில் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக சிரியாவில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் வெளியேற்றப்பட்டனர்.

சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமது பல களமுனைத் தாக்குதல்களுக்கு ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர்மீது பெரிதும் தங்கியிருக்கின்றனர். ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினரின் பல தாக்குதல்கள் களமுனைச் சமநிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் கார் குண்டுத்தாக்குதல்களிலும் வல்லவர்கள். இவர்கள் கொடூரமாகப் போர் புரிகின்றனர். தம்மிடம் அகப்படும் எதிரிகளைக் கொடூரமாகக் கொல்கின்றனர்:


ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் அவ்வப் போது அமெரிக்கத் தேசியக் கொடிகளைக் கொழுத்தியும் அமெரிக்க எதிர்ப்பு வாசகங்களை உரக்கக் கூவியும் வருகின்றனர்.

சிரியாவில் சகோதரப் போர் வெடிக்கலாம்
சிரியாவில் பல தரப்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன. அதில் சுதந்திர சிரியா படையினர் ஐக்கிய அமெரிக்க ஆதரவு இயக்கமாகக் கருதப் படுகிறது. அமெரிக்காவும் வேறும் பல மேற்கு நாடுகளும் ஜபத் அல் நஸ்ரா உட்பட சில சிரிய இயக்கங்களை பயங்கரவாத அமைப்புக்களாக அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளன. அசாத் பதவியில் இருந்து அகற்றப்பட்டபின்னர் பெரும் சகோதரப் போர் சிரியாவில் உருவாக்கப்படலாம்.

இரசாயனக் குண்டுப் புரளி
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின்னர் சிரியாவில் மேற்குலகத் தலையீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. மேற்குலகும் தமது தலையீட்டின் முன்னொடியாக சிரியாவின் வேதியியல் படைக்கலன்கள் இருக்கின்றன அவற்றை சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பாவிப்பார் என்று செய்திகள் பரப்பி விடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரிய அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் வேதியியல் படைக்கலன்கள் பாவிக்கப்பட்டால் அது ஆத்திர மூட்டும் குற்றச் செயலாகக் கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமாவும் அசாத்தை வேதியியல் படைக்கலன்கள் பாவிப்பதற்கு எதிராக எச்சரித்துள்ளார்.

அசாத் தப்பி ஓடப் போகிறாரா?
சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் துணை வெளிநாட்டமைச்சர் கியூபா, எக்குவேடர், வெனிசுலேவியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளி வந்துள்ளன. அசாத் இந்த நாடுகளில் ஒன்றில் தஞ்சம் கோரப்போகிறார் என்ற வதந்தியும் பரவியுள்ளது. ஆனால் அசாத் இப்படிச் சூளுரைக்கிறார்:
  • “I am not a puppet. I was not made by the West to go to the West or to any other country,” Assad said. “I am Syrian, I was made in Syria, I have to live in Syria and die in Syria."

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...