Friday 30 November 2012

ஐநாவில் பலஸ்தீனம்: தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. 29/11/2012 வியாழன் (நியூயோர்க் நகர நேரப்படி) மாலை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்138 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேற்குக் கரையிலும் காசாவிலும் மக்கள் பட்டாசுகள் கொழுத்து ஆர்பரித்தனர்.

வாக்களிப்பில் பங்கெடுக்காத நாடுகள்- 41:
Albania,      Andorra,      Australia,      Bahamas,         Barbados,                   Bosnia/Herzegovina,    Bulgaria,    Cameroon,    Colombia,   Croatia,             Dem. Rep. of Congo, Estonia,                       Fiji,            Germany,      Guatemala,  Haiti,                 Hungary,                    Latvia,                Lithuania,  Malawi,         Monaco,      Mongolia,          Montenegro,              Netherlands,             Papua New Guinea,         Paraguay,    Poland,              Korea,                         Moldova,           Romania,   Rwanda,        Samoa,        San Marino,       Singapore,                  Slovakia, Slovenia, Macedonia, Togo,           Tonga,         United Kingdom, Vanuatu. 

எதிர்த்து வாக்களித்த நாடுகள்: 9
Canada,       Czech Republic,        Israel,       Marshall Islands,        Micronesia,      Nauru,     Palau, Panama,       United States
மூன்று நாடுகள் சமூகமளிக்கவில்லை.

சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர், 29/11/1947இல் பலஸ்த்தீனத்தை இரு நாடுகளாகப் பிரித்து ஐநா தீர்மானம் நிறைவேற்றி இஸ்ரேலை ஒரு தனி நாடாக்கியது. அப்பிராந்தியம் அதற்கு முன்னர் பிரித்தானிய ஆணைக்குட்பட்டிருந்தது. பிரித்தானியா தனது ஆணையை 18/02/947இலன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது.

28/11/2012 வரை  ஐநாவில் ஒரு தனியுரு (entity)வாகக் கருதப்பட்ட பலஸ்த்தீனம் 29/11/12இல் இருந்து ஒரு உறுப்புரிமையற்ற நாடாகக் கருதப்படும். இனி ஐநா பொதுச் சபை விவாதங்களில் பலஸ்த்தீனம் கலந்து கொள்ளலாம் ஆனால் வாக்களிக்க முடியாது. கத்தோலிக்கர்களின் வத்திக்கானும் ஐநா பொதுச் சபையில் ஒரு உறுப்புரிமையற்ற நாடாக உள்ளது.

பலஸ்த்தீனம் ஐநாவின் ஒரு முழு உறுப்புரிமை பெற எல்லாத் தகுதிகளும் அதற்கு உண்டு. ஆனால் 2011இல் ஐநா பாதுகாப்புச் சபையில் முழு உறுப்புரிமை பெறக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பாதுகாப்புச் சபையில் தோற்கடிக்கப்பட்டது. ஐநா சாசனத்தின் 4(2)இன்படி ஒரு நாடு முழு உறுப்புரிமை பெற பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று பாதுகாப்புச் சபையும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 2011இல் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து முழு உறுப்புரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு உறுப்புரிமையற்ற ஒரு நாடாக பலஸ்த்தீனத்தை ஏற்றுக் கொள்ளும் முன்மொழிவு பொதுச் சபையின் முன் வைக்கப்பட்டது.

உறுப்புரிமையற்ற நாட்டின் உரிமைகள்
ஏற்கனவே 132நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு நாடாக தனிப்பட்ட ரீதியில் அங்கீகரித்துள்ளன. உறுப்புரிமையற்ற ஒரு நாடால் ஐநாவின் மற்ற அமைப்புக்களில் உறுப்புரிமை கோர முடியும். முக்கியமாக பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு, கடற்சட்ட ஒப்பந்த அமைப்பு, பன்னாட்டு நீதி மன்றம், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் உறுப்புரிமை கோர முடியும் [ the International Civil Aviation Organization (ICAO), Law of the Sea Treaty (LST), NPT, International Court of Justice (ICJ), and International Criminal Court (ICC) ]ஆகிய பன்னாட்டு அமைப்புக்களில் உறுப்புரிமை பெற முடியும். நீர்வளம், கடல், வானம் ஆகியவற்றில் உரிமை கொண்டாட முடியும். ஆனால் ஐநாவைப் பொறுத்தவரை பலஸ்த்தீனம் ஒரு இறைமை உள்ள நாடு அல்ல. 29/11/2012இலன்று ஐநாவி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பலஸ்தீனர்களின் நாளாந்த அவல வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவர மாட்டாது.

மிரட்டும் அமெரிக்கா
பலஸ்த்தீனம் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றில் உறுப்புரிமை கோரினால் அமெரிக்கா தனது பலஸ்த்தீனத்திற்கான நிதி உதவிகளை நிறுத்தும் என்று மிரட்டியது. இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் இனக்கொலைகள் தொடர்ப்பாக் பலஸ்தீனம் பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றம் சென்றால் தனது பதில் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலும் பலஸ்த்தீனத்தை மிரட்டியது. ஆனால் ஐநா தீர்மானத்தின் பின்னர் பலஸ்த்தீனத் தலைவர் மஹ்மூட் அபாஸ் முறிந்து போயுள்ள இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தையை மீளாரம்பிக்க தான் தயார் என அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஆத்திரம்
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனியப் பிராந்தியத்தின் மீதான பன்னாட்டுச் சட்டப்படியான ஆதிக்கத்தை ஐநாவின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாதிக்காது. ஐநா பொதுச் சபையில் பலஸ்த்தீன ஆணையத் (Palestine Authority) தலைவர் மொஹ்மூட் அபாஸ் உரையாற்றும் போது இஸ்ரேலைக் கடுமையாகச் சாடி இருந்தார். ஆனால் அவர் பன்னாட்டு நீதிமன்றம் பற்றிக் குறிப்பிடவில்லை. அபாஸின் உரை ஒரு சமாதான விரும்பியின் உரை அல்ல என இஸ்ரேலியம் பிரதமர் பெஞ்சமின் நெத்தென்யாஹு தெரிவித்தார். பலஸ்த்தின வெளிநாட்டமைச்சர் இஸ்ரேல் தொடர்ந்தும் சட்ட விரோதக் குடியேற்றங்களை மேற்குக் கரையில் செய்தால் தாம் பன்னாட்டு நீதிமன்றம் போக வேண்டி வரும் என்றார். ஆனால் இஸ்ரேல் தான் மேற்குக் கரையோரத்தில் யூதக் குடியேற்றங்களைத் தொடரப் போவதாகவும் அறிவித்தது.

தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை:

பரவலான ஆதரவு மட்டும் போதாது. பலமான ஆதரவும் வேண்டும். பலஸ்த்தீனியர்களுக்கு உலகெங்கும் பரவலான ஆதரவு உண்டு இருந்தும் அதனால் ஐநாவில் ஒரு தனியான நாடாக அங்கீகாரம் பெற முடியவில்லை. அமெரிக்கா போன்ற பலமான நாடுகள் பலஸ்த்தீனத்திற்கு எதிராக நிற்பதுதான் காரணம். எமக்கு ஆதரவான நாடுகள் என்ற வகையில் நாம் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். போக வேண்டிய தூரம் மிக மிக நீண்டது.

அமெரிக்க மாமாவை நம்பாதே
அமெரிக்கா பலஸ்த்தீனர்களுக்கு சொல்வதையே தமிழர்களுக்கும் சொல்கிறது. நேரடிப் பேச்சு வார்த்தை மூலமே பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்.

பொருளாதாரத்திற்கு எதிரிகளில் தங்கியிருக்கக் கூடாது.
பலஸ்த்தீன ஆணையம் 1993இல் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இஸ்ரேலும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்டது. ஆனால் பலஸ்த்தீன ஆணையம் தனது வருமானத்திற்கு இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் தங்கியிருக்கிறது. இதனால் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலையில் பலஸ்த்தீன மக்கள் உள்ளனர்.

உள்ளகப் பிளவுடனும் முன்னோக்கி நகரலாம்
2007இல் பலஸ்த்தீனர்களின் இரு பிரிவுகளான ஹமாஸ் இயக்கமும் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் மோதிக் கொண்டன. ஹமாஸ் காசா நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பல சிறு கூறுகளாக இஸ்ரேலால் பிரிக்கப்பட்ட மேற்குக் கரையோரத்தில் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சில பிரதேசங்களில் இஸ்ரேலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இணைந்து அதிகாரம் செலுத்துகின்றன. ஹமாஸ் இஸ்ரேலுடன் ஆயுத முனையில் மோதிக் கொண்டிருக்க பலஸ்த்தீன விடுதலை இயக்கம் பேச்சு வார்த்தை மூலம் முன்னோக்கிச் செல்கிறது

ஐரோப்பாவை மாற்றலாம்
மேற்கு ஐரோப்பிய நாடுகள் பல பலஸ்த்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. முறையான பிரச்சாரம் இதற்கு உதவியுள்ளது. பலஸ்த்தீனியப் பிரச்சனை ஊடகங்கள் முதல் கொண்டு பல்கலைக் கழகங்கள் வரை ஆய்வு செய்யப்படுகின்றன. பாடசாலைகளும் பலஸ்த்தீனப் பிரச்சனை ஆய்வு செய்யப்படுகின்றது. இதனால் பலஸ்த்தீனியர்களின் போராட்டத்தின் நியாயமும் இஸ்ரேலின் அக்கிரமமும் ஐரோப்பிய நாடுகளில் நன்கு உணரப்பட்டுள்ளன்.

பொருளாதார பலம்
ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நாடுகள் மத்திய கிழக்கில் தமது வர்த்தகத்தை விரிவு படுத்த விருப்பம் கொண்டுள்ளன. பலஸ்த்தீனத்திற்கு எதிரான நிலைப்பாடு இதற்கு உதவாது என்பதை அவை உணர்ந்தே பலஸ்தீனத்தை ஐநாவில் ஆதரித்தன.  உலகெங்கும் வாழ் தமிழர்கள் பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்து திரள வேண்டும். ஏற்கனவே அரபு நாடுகளுடன் நல்ல வர்த்தக உறவைக் கொண்ட பிரித்தானியா தனது வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டே நடுநிலை வகித்தது. பலஸ்த்தீனத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஜேர்மனி நடுநிலைவகித்ததும் வர்த்தக நலன்கள் சார்ந்தே.

புலம் பெயர்ந்தோர் பலம் நிறைந்தோர்
அரபு நாடுகளில் அதிக ஆதிக்கம் செலுத்த விரும்பும் பிரான்ஸ் லிபியா, சிரியா, ஈரான் போன்ற நாடுகளின் பிரச்சனையில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டது. இஸ்ரேலுடன் மறைமுகமாக நல்ல உறவையும் பிரான்ஸ் பேணிவருகிறது. ஆனால் தற்போது பிரான்ஸில் ஆட்சியில் இருப்பவர்கள் அங்கு வாழ் இசுலாமியர்களின் வாக்கு வங்கியில் பெரிதும் தங்கியிருக்கின்றனர். பிரான்ஸ் பலஸ்த்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு அங்கு வாழும் இசுலாமியர்களே முக்கிய காரணம்.

வடக்குக் கிழக்கை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்க வேண்டும்
இலங்கையின் வடக்குக் கிழக்கை சிங்களப்படைகள் மீட்கப்பட்ட பிரதேசம் என்கின்றன. அது தமிழர்களின் பாரம்பரியத் தாயக பூமி  அது ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமிழர்கள் முதலில் இழந்தனர். 1980களின் பின்னர் அதில் பெரும் பகுதியை தமிழர்கள் தமது படைக்கலலேந்திய போராட்டத்தின் மூலம் மீட்டனர். தற்போது தமிழர் தாயகம் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகிவிட்டது என்ற உண்மையை உலகம் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.

ஆட்சி மாறலாம் காட்சி மாறாது
ஜேர்ஜ் புஷ்ஷின் ஆட்சி போய் பாராக் ஒபாமாவின் ஆட்சி வந்தது மத்திய கிழக்கில் அமெரிக்கக் கொள்கை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கக் கொள்கையில் மாற்றம் இல்லை. இதே போல் இந்தியாவில் காங்கிரசின் ஆட்சி போய் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு சாதகமான சூழல் உருவாகலாம் என்கின்றனர் சிலர். ஆனால் தற்போது பெரிய நாடுகள் தமது வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை, நிதிக் கொள்கை ஆகியவற்றில் ஆட்சிகள் மாறும் போது மாறாமல் இருக்கக் கூடிய நிலையை உருவாக்கியுள்ளன. பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு மோசமான நிலை ஏற்படலாம் என்பதை சுஸ்மா சுவராஜ்ஜிற்கும் சிங்களவர்களுக்கும் இடையில் உருவாகிய உறவு உணர்த்துகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...