Tuesday 23 October 2012

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு தமிழர்களைத் தள்ளும் சதி

நீ ஆப்கானிஸ்த்தானில் செய்ததை நான் ஈழத்தில் செய்தேன்
1981இல் அமெரிக்கக் கைக்கூலியும் தந்தை செல்வாவின் மருமகனுமான பேராசிரியர் ஏ ஜே வில்சன் (இன்னொரு கைக்கூலியான நீலன் திருச் செல்வமும் அவருடன் இணைந்திருந்தார்) இலங்கையில் தங்கி இருந்து இலங்கை இனப்பிரச்சனைக்கு மாவட்ட சபைதான் ஒரு தீர்வு என்று அவரின் ஆலோசனைகளுடனும் பங்களிப்புக்களுடனும் முன்வைக்கப்பட்ட மாவட்ட சபைத் திட்டத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஏற்க மறுத்த  போது அதை ஏற்றும் கொள்ளும்படி அமெரிக்கா வற்புறுத்தியது.

1981இல் நடந்தமாவட்ட சபைத் தேர்தலில் கூட்டணியினர் பங்கு பற்றினர். விளைவு யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. தமிழர்கள் மீது மேலும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மாவட்ட சபைத் திட்டத்தை முன்வைத்த பேராசிரியர் ஏ ஜே வில்சன் அப்போது ஒரு கருத்தையும் கூறியிருந்தார். "இதிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரம் தமிழர்களுக்கு ஒரு அரசு வழங்கினால் அது தற்கொலைக்கு ஒப்பானதாகும்". அப்போது சிங்களவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்று அஞ்சி இருந்தனர். இப்போது தமிழர்களுக்கு உதவ ஒருவரும் இல்லை என்று சிங்களவர்கள் நம்புகின்றனர்.

1987இல் ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது இலங்கை ஒரு மோசமான நிலையில் இருந்தது:
1. இலங்கையின் எந்தப் பகுதியிலும் தமிழ்ப் போராளிக் குழுக்களால் தாக்குதல் நடாத்த முடியும்.
2. இலங்கைப் படையினர் தமது முகாம்களுக்குள் வெளிவர அஞ்சியிருந்தனர். பல பெரிய முகாம்களில் வெளியில் வராதபடி அவர்கள் முடக்கப்பட்டிருந்தனர்.
3. சிங்கள மக்கள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல அஞ்சினர்.
4. அனுராதபுரத்திற்கு சிங்கள மக்களால் ஒரு புனிதப்பயணத்தைக் கூட நிம்மதியாகச் செய்ய முடியாமல் இருந்தது.
5. இந்தியப்படைகள் இலங்கைக் கடற்பரப்புக்க்குள் நிலை கொண்டிருந்தன.
6. அப்போதைய இலங்கக் குடியரசுத் தலைவர் ஜே ஆர் ஜயவர்த்தனவிடம் ஆளும் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத பதவி விலகல் கடிந்தங்கள் இருந்தன.
7. ஜே ஆர்-ராஜீவ் ஒப்பந்தத்தைப் பிடிக்காத அப்போதைய பிரதம மந்திரி ஆர் பிரேமதாச நாட்டை விட்டு வெளியேறி ஜப்பானில் தங்கி இருந்தார்.

ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தம் கையோப்பமிட்ட போது எதிர்ப்புத் தெரிவித்துக் கிளர்ச்சி செய்த சிங்களவர்கள் மீது உலங்கு வானூர்தியில் இருந்து தாக்குதல் நடாத்தப்பட்டது. இலங்கையில் முதல் முதலாக சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக உலங்கு வானூர்தித் தாக்குதல் நடாத்தப்பட்டது.

பலத்த சிங்கள எதிர்ப்புக்கு மத்தியில் ஜேஆர் ஜயவர்த்தன தனக்குப் பிடிக்காத ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட்டிருப்பாரா? அப்போதே அவரிடம் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டாலும் அந்தப் ஒப்பந்தந்தத்தின் படி இலங்கை அரசியல் அமைப்புக்குச் செய்யப்பட்ட 13வது திருத்தத்தை நிறைவேற்றத் தேவையில்லை என்ற உறுதி மொழியை யாரோ ஒருவர் வழங்கி இருக்க வேண்டும். இதை உறுதி செய்யும் முகமாக 25 ஆண்டுகள் ஆகியும் அந்த திருத்தம் நிறைவேற்றப் படவில்லை.

மஹிந்த ராஜபக்சவும் 13வது திருத்தமும்
மஹிந்த இலங்கைக்கு வரும் சகலரிடமும் தான் 13வது திருத்தத்திற் இணங்க இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப் போவதாக தெரிவிப்பார். செல்லும் இடங்களிலும் அதையே சொல்வார். 2009இல் இலங்கைக்குப் பயணம் மேற் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூனுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் 13வது திருத்தத்தின் படி இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார். டில்லிக்கு போய் இந்தியப் பிரதமரைச் சந்தித்து பதின் மூன்றாம் திருத்தத்திற்கு மேற் சென்று இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றார். 13+ என்ற புதிய பதம் இலங்கை அரசியலில் பாவிக்கப்படத் தொடங்கியது. அதை சொல்பவர்க்கோ அல்லது கேட்பவர்க்கோ அது என்ன அந்த 13+என்று தெரியாது. விளக்கம் கேட்டால் இரண்டாம் மேற்சபை என்பார்கள். மஹிந்தவைப் பொறுத்தவரை இலங்கை என்பது ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு இனம், ஒரு மதம் எனற அடிப்படையில் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும்.

அமெரிக்காவும் 13வது திருத்தமும்
இலங்கையில் சிங்களவர்களைப் பொறுத்தவரை 13வது திருத்தம் என்பது ஒரு கெட்டவார்த்தை என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது. அமெரிக்கா ஒருபோதும் சிங்கள மக்களைப் பகைக்க மாடாது. அது தனது ஆசியப் பிராந்திய நலன்களுக்கு உகந்ததல்ல என்று அது உணர்ந்துள்ளது. அதனால் அமெரிக்கா 13வது திருத்தம் என்ற பதத்தைப் பாவிப்பதில்லை. போருக்குப் பின்னரான நல்லிணக்கம் என்ற பதத்தை பாவித்து வருகிறது. அதைப் பொறுத்தவரை நாட்டில் சுமூக நிலை ஏற்படவேண்டும். அப்போதுதான் வடக்குக் கிழக்கில் மக்டொனால்ட், பேர்கர் கிங் போன்றவை வியாபாரம் செய்ய முடியும். நாடெங்கும் கோக்கும் பெப்சியும் தங்கு தடையின்றி விநியோகிக்க முடியும். கொலிவூட் படங்களைத் திரையிட முடியும். அமெரிக்காவிடம் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்கள் நிறைய உண்டு. அமெரிக்கா அதை தனது தேவைக்குப் பாவிக்கும் என்று இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது இங்கு அதைப்பற்றி எழுதப்பட்டது அதைக் காண இங்கு சொடுக்கவும்: எல்லாவற்றையும் மேலுக்கு இருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அமெரிக்கா தன்னிடம் உள்ள போர்க்குற்ற ஆதாரங்களை முன்வைத்து இலங்கையை மிரட்டி தன் வழிக்குக் கொண்டுவந்துவிட்டதாக லங்காஇநியூஸ் இணையத் தளம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் செய்யவிருக்கும் இரகசிய உடன்பாட்டில் அதில் மூன்று முக்கிய அம்சங்கள் பகிரங்கப்படுத்தப் பட்டுள்ளன:
1. முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மன்னிப்புக் கொடுத்து விடுதலை செய்தல்.
2. இலங்கை அமைத்த நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற கால அட்டவணையுடன் கூடிய ஒரு செயற்திட்டத்தை உருவாக்குதல்.
3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஒரு உடன்படு ஒப்பந்தம் செய்தல்.
13வது திருத்தத்தை 25 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிக்கும் சிங்களவர்களுக்கு அமெரிக்காவுடனான இரகசிய உடன்பாட்டை இழுத்தடிப்பது பெரிய பிரச்சனை அல்ல.

இந்தியாவும் 13வது திருத்தமும். 
1987இல் இருந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப இலங்கையில் திருக்கோணாமலையிலும் சிலாபத்திலும் அமெரிக்கா கால்பதிப்பதைத் தமிழ் போராளிக் குழுக்களைப் பயன்படுத்தி தடுத்து விட்டது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை 1. தமிழன் ஒரு சூத்திரன் அவன் ஆளக்கூடாது. 2. இலங்கையில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் இந்தியாவில் உள்ளதை மிஞ்சக்கூடாது. உண்மையில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை 13வது திருத்தம் நிறைவேற்றப் படவேண்டிய அவசியம் இல்லை. 13வது திருத்தத்தின் படி இணைத்த வடக்கு-கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் வாய் திறக்கவே இல்லை. திவிநெகும சட்டம் 13வது திருத்தத்தின் அதிகாரத்தைப் பறிக்கப்போகிறது என்று தெரிந்தும் இந்தியா அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. 25 ஆண்டுகளாக இது இழுத்தடிக்கப் பட்டமைக்குக் காரணம் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்த 13வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று திரைமறைவில் தெரிவித்தனர் என்பதைத் தவிர வேறு எதாக இருக்கும்?

தமிழர்களும் 13வது திருத்தமும்
1987இல் சட்ட அறிஞர் நடேசன் சத்தியேந்திராவும் அண்மையில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான குமரகுருபரனும் 13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை என்று ஆதார பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் மத்தியில் இருக்கும் இந்தியக் கைக்கூலிகள் 13வ்து திருத்தம் சிறந்த நிவாரணி என்று மாரடித்துக் கதறுவர். முதலமைச்சராக இருந்த பிள்ளையான் என்னத்தை கிழித்தார் என்பதை இவர்கள் கூறுவதில்லை. 13வது திருத்தம் எந்த ஒரு தீர்வுக்கும் அடிப்படையாக அமையாது என்றும் தாயகம், தேசியம், தன்னாட்சி கோட்பாட்டிற்கும் 13வது திருத்தத்திற்கும் இடையில் வெகு தூரம் என்றும் தமிழர்கள் கருதுகின்றனர்.

இனி 13வது திருத்தம்
தமிழர்கள் மத்தியில் பரவலாக 13வது திருத்தம் போதாது என்ற நிலைப்பாடு இருப்பதை இந்தியாவும் அமெரிக்காவும் நன்கு உணர்ந்துள்ளன. காணி மற்றும் காவல்துறை அதிகாரமற்ற ஒரு மாகாண சபையை மட்டுமே சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வர். இந்த இரண்டுடன் கூடிய மாகாண சபைமூலம் தீர்வு காணவேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தினால் அது சீனாவின் பக்கம் மேலும் சாய்ந்துவிடும் என்று இந்தியாவும் அமெரிக்காவும் நம்புகின்றன. இதற்காக அமெரிக்காவும் இந்தியாவும் செய்யும் சதிகள்:

1. எரிக் சொல்ஹெய்ம் மூலம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துதலும் தமிழர்களின் விடுதலை மீதான நம்பிக்கையை இழக்கச் செய்தலும்.
2. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களைப் பல கூறுகளாகப் பிரித்தல்.
3. போரின் போது இலங்கைக்கான பிபிசியின் செய்தி முகவராகப் பணியாற்றிய பிரான்சிஸ் ஹரிசன் மூலம் இலங்கையில் போர்க் குற்றம் நடந்தது என்ற பிரச்சாரத்தை மேற் கொண்டு இலங்கையை மிரட்டுதல்.
4. இலங்கை அரசு 13வது திருத்தத்தை இரத்துச் செய்யப்படும் என்ற மிரட்டலை தமிழர்கள் மீது சிங்களவர்கள் வைப்பது. கோத்தபாய ராஜபக்ச இந்த மிரட்டலை விட்டபோது இதை கொண்டுவந்த இந்தியாவோ மஹிந்தவுடன் கூட்டறிக்கை விட்ட பான் கீ மூனோ எதுவும் கூறவில்லை. சில இந்தியக் கைக்கூலிகள் 13வது திருத்தம் இரத்துச் செய்தால் இலங்கை இந்தியாவிற்கு இடையில் பெரும் முரண்பாடு ஏற்படும் என்ற பொய்ப்பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர்.
5. இலங்கை அரச படைகள் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக மோசமான அடக்கு முறையைத் தொடர்தல். இன்றும் நடக்கும் அரசபடைகள் செய்யும் மோசமான வன்முறைகளை அமெரிக்காவோ இந்தியாவோ கண்டு கொள்வதில்லை.
6. தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்து சிங்களவர்களைக் குடியேற்றல். அதற்கு உரிய உதவிகளை இந்தியா அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் உதவுதலும் சிங்களவர்களின் போக்கு வரத்திற்கு வசதியாக வடக்கிற்கு தொடரூந்துச் சேவையை மீள ஆரம்பித்தல்

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செய்யும் இந்தச் சதிகள் இலங்கை சீனா பக்கம் மேலும் சாயாமல் இருக்கவும் தமிழர்கள் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பது போல் 13வது திருத்தமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஆளை நிம்மதியாக இருக்கவிடு என்று சொல்ல வைக்கவுமே.

2 comments:

Anonymous said...

Nalla thelivaana aaraivu thunukku.
Nandri

Mani

Anonymous said...

இனி சிங்களம் சீனாவின் பக்கம் சாய என்ன இருக்கின்றது? ஏற்கனவே சீனாவின் ஒரு மாநிலமாகவே மாறிவிட்டது. விரல்களுக்கு இடையால் ஒழுகும் துக்கடாக்களைத் தான் இந்தியாவும் அமெரிக்கனும் பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எது எப்படியோ மறு படியும் தமிழன் ஆயுதம் தூக்கும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன் என்பது நிச்சயம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...