Monday 10 September 2012

சாஞ்சியில் ஆசை தீர்க்கும் ராஜபக்ச

ஐம்பது பழம்பெரும் பௌத்த தூபிகளைக் கொண்டது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் சாஞ்சி மலை. இந்தியாவிலேயே அதிகம் பேணப்படும் பௌத்த நிலையம் இதுவாகும். கிருத்துவுக்கு முன்னர் மூன்னூறு ஆண்டிலிருந்து கிருத்துவிற்குப்பின்னர் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை கட்டப்படவை இந்தத் தூபிகள். யுனெஸ்க்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, கலாச்சாரம் மற்றும் விஞ்ஞானத்திற்கான அமைப்பு இதை ஒரு பாதுகாக்கப்படவேண்டிய மத நிலையமாக அறிவித்துள்ளது. சாஞ்சி போபாலுக்கு வடக்கே 68கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது பௌத்தக் கலைகளினதும் கட்டிட நிர்மாணத்தினதும் மேன்மைக்கு ஒரு எடுத்துக் காட்டாக உள்ளது. இத்தனை பெருமைகள் சாஞ்சிக்கு இருந்த போதும் கௌதம புத்தரின் வாழ்வின் எந்த ஒரு நிகழ்விற்குமோ அல்லது பௌத்தமத சரித்திர நிகழ்வுகள் எதற்குமோ சாஞ்சியுடன் தொடர்பில்லை. முதலில் அசோகப் பேரரசன் எட்டு தூபிகளை சாஞ்சிமலையின் உச்சியில் நிர்மாணித்தான். அதன் பின்னர் பலர் அங்கு தூபிகளை நிர்மாணித்தனர். கடைசியாக குப்தர்கள் அங்கு தூபிகளை நிர்மாணித்தனர். அசோகன் இந்தியாவையும் ஆப்கானிஸ்த்தானையும் ஒரு குடைக்குக் கீழ் ஆண்டவன்.

அசோகன் சாஞ்சி மலையைத் தேர்ந்தது ஏன்?
பௌத்த மதத்தின் படி பிக்குகள் ஒரு நாளின் அரைப் பகுதியை பிச்சை எடுப்பதிலும் மற்ற அரைப்பகுதியை சமயப் பணிகளிலும் ஈடுபட வேண்டும். சாஞ்சி மலைச் சாரலை அண்டி பெரும் வர்த்தகப் போக்கு வரத்து அமைந்திருந்தபடியால் அங்கு பிச்சை எடுப்பதற்கு இலகு. இதனால் சாஞ்சி மலை பௌத்த மத வளர்ச்சிக்கு உகந்தது என அசோகன் கருதினான். இந்தியாவில் உள்ள மிகப் பழமை வாய்ந்த கற் கட்டிடம் சாஞ்சி மலையில் இருக்கும் அசோகன் நிர்மாணித்த தூபியாகும்.
இந்தியாவின் மிகப்பழைய கற் கட்டிடம்
பிரித்தானிய ஆட்சியின் போது 1912இற்கும் 1919இற்கும் இடையில் சாஞ்சியில் பல புனரமைப்பு வேலைகள் செய்யப்பட்டன.

மஹிந்த சாஞ்சியைத் தெரிந்து எடுத்தது ஏன்?
மஹிந்த ராஜபக்சவின் ஆசைகளில் ஒன்று வெளிநாடுகளில் நிகழும் நிகழ்வுகளில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்பது. அவர் பயணம் செய்யும் நாட்டில் தமிழர்கள் இருந்தால அது பெரும் பிரச்சனையில் முடியும்.  இதனால் இந்தி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்தியப் பிரதேசம் அவருக்கு பெரும்  வாய்ப்பான ஒரு இடம்.சாஞ்சியில் ஒரு பௌத்த கல்வி கலாச்சார கற்கை நிலையத்தை அமைப்பதற்கான கட்டிடத்தின் அடிக்கல்லை செப்டம்பர் 21-ம் திகதி நாட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்பாடு செய்தவர் யார்?  இந்த நிகழ்வில் பூட்டான் பிரதமர் லியொன்பி தின்லியும் கலந்து கொள்வார். பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவி சுஸ்மா சுவராஜ் அவர்களின் தொகுதியின் சாஞ்சி இருக்கிறது. சாஞ்சில் அமைக்கப்படவிருக்கும் கற்கை நிலையத்தில் உலகெங்கிலும் இருந்து பௌத்த பிக்குகள் வந்து பயிலுவர். அவர்கள் முதலில் பயிலப்போவது "ஆசையினல் துன்பம் உண்டாகிறது".

மஹிந்த தேர்ந்தெடுத்த நாள்
செப்டம்பர் 21-ம் திகதி கௌதம புத்தர் ஞானம் பெற்று 2600 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது அதை ஒட்டி இந்த பௌத்த கலாச்சார கலை கற்கை நெறி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்படவிருக்கிறது. செப்டம்பர் மூன்றாம் வாரம் இலங்கை அரசைப் பொறுத்த வரை ஒரு முக்கியமான வாரமாகும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழக்த்தின் 21ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை தொடர்பான மீளாய்வு செய்யப்படவிருக்கிறது. இந்த மீளாய்வுக் குழுவில் இந்தியா, ஸ்பெயின் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் இடம் பெறுகின்றன. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இலங்கையில் இருந்து இது தொடர்பான காய் நகர்வுகளை மேற் கொள்வதை விட்டு மஹிந்த இந்தியா சென்றது ஏன்? அங்கு உரியவர்களுக்கு தட்சணை வழங்கி தனக்கு வேண்டியதை ஜெனீவாவில் சாதிக்கவா?

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது.
இந்திய வெளியுறவுத் துறை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளமன்ற உறுப்பினர்களை சுஸ்மா சுவராஜ் தலைமையைல் இலங்கைக்கு அனுப்பியது. பின்னர் புது டில்லியில் இருக்கும் இலங்கைத் தூதுவரகத்தில் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து பௌத்த மதத்தை அசோகன் மகன் மஹிந்தவும் சங்கமிதிரையும் பரப்பியது சம்பந்தமான ஓவியத்தை திறந்து வைத்திருக்கிறார். இவை 2014இல் காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்து பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் இலங்கையின் தமிழின அழிப்புப் பணிகளுக்கு இந்தியாவின் உதவி தொடந்து கிடைக்கும் என்பதை இலங்கைக்கு உறுதி செய்யவே.

எல்லாக் கட்சிகளும் மஹிந்தவைத் தாம் அழைக்கவில்லை என்கின்றன.
மத்தியப் பிரதேச மாநிலத்தை பாரதிய ஜனதாக் கட்சி ஷிவ்ராஜ் சிங் சௌஹானை முதலமைச்சராகக் கொண்டு ஆள்கிறது. மஹிந்த ராஜபக்சவை தனது கட்சி அழைக்கவில்லை என்கிறார் அவருடன் கொழும்பில் இரகசியப் பேச்சு வார்த்தை நடாத்திய சுஷ்மா சுவராஜ் அம்மையார். ஆனால் முதலில் தொலைக்காட்சியில் தோன்றி வாயெல்லாம் பல்லாக மஹிந்த ராஜபக்சவின் வருகையை முதலில் அறிவித்தவர் இந்த சுஸ்மா சுவராஜ்தான். இவர் கொழும்பில் மஹிந்தவுடன் இரகசியப் பேச்சு வார்த்தை செய்யும் போதே சாஞ்சி உடன்பாடு செய்யப்பட்டதா? தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரத ஜனதாக் கட்சித் தலைவர் பொன் இராதா கிருஷ்னன் தமது கட்சிக்கும் மஹிந்தவின் இந்தியாவில் உள்ள சாஞ்சிக்கு மேற்கொள்ளும் பயணத்திற்கும் தொடர்பில்லை என்கிறார். அப்படியாயின் ஆளும் காங்கிரசுக் கட்சி அழைத்ததா? மத்திய ஆளும் காங்கிரசின் அமைச்சர் ஜி கே வாசன் மஹிந்தவைத் தனது அரசு அழைக்கவில்லை மத்தியப் பிரதேச அரசுதான் அழைத்தது என்றார். ஆனால் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் வை. கோபாலசுவாமியைத் தொடர்பு கொண்டு தாம் மஹிந்தவை அழைக்கவில்லை என்றார். ஆனால் வைக்கோ மஹிந்தவிற்கு விட்ட அழைப்பு பிரச்சனைக்கு விடப்பட்ட அழைப்பு என்றதுடன் தான் தொண்டர்களை ஆயிரக்கணக்கில் திரட்டிக்கொண்டு மதியப் பிரதேசம் சென்று ஆர்ப்பாட்டம் செய்வேன் என்கிறார். கலைஞர் கருணாநிதி முதலில் மஹிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை எதிர்த்தார். பின்னர் வழமை போல் ஒரு குத்துக் கரணம் அடித்து தான் எதிர்க்கவில்லை என்றார். இவர்கள் எல்லோரும் இப்படி யார் அழைத்தது என்று மோதிக் கொண்டிருக்க புது டில்லியில் தென் மண்டலத்தில் ஒரு சிலர் தம் பூனூல்களைத் தடவியபடியே தமது தட்சணைகளை கணக்கிட்டுப் புன்னைகைக்கின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...