Tuesday 21 August 2012

சிவந்த வாய்க்கால்

நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்
என்னைக் கடந்து ஓடுகின்றனர்
என்னில் இடறி விழுகின்றனர்
உயிரில்லாச் சிறு உடலை
கையிலெடுத்துக் கொண்டு
உயிரைப் பிடித்துக் கொண்டு
தலை தெறிக்க ஓடுகின்றார் ஒருவர்
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்

என் உடலெங்கும் பெரும் வலி
எங்கு வலி என்று சொல்ல முடியவில்லை
எல்லா இடத்திலும் வலி
யாரும் யாருக்கும் உதவவில்லை
விண்ணில் மிகையொலி இரைச்சல்
மண்ணின் அவல ஓலத்தில்
அடங்கிப்போய் விடுகிறது
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்

நன்கு தெரிந்த வீதிகள்
உருத்தெரியாமல் சிதைந்து போனது
திசையே தெரியாமல் இருக்கிறது
நாதியற்ற இனத்தின்
திக்கற்ற நிலைதான் இது
போக என ஒரு இடமில்லை
போகத்தான் முடியுமா
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்


வரண்டு போனது நாக்கு
தேடிப்பார்க்கிறேன்
அங்கு ஒரு வாய்க்கால்
அதை நாடிப் போகிறேன்
தட்டுப்பட்டது ஒரு சிறு கை
தவழ்கிறேனா ஊர்கிறேனா
எனக்கே தெரியவில்லை
ஆனால் அசைகிறேன்
வாய்க்காலை நொக்கி
ஆனால் வாய்க்கால் சிவந்திருந்தது
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்

பொழுது சரிந்துவிட்டது
சூரியனும் மறைந்து விட்டது
கந்தகப் புகையினூடே
தெரிகிறது ஒரு செய்மதி
என் கண்கள் மூடிக் கொள்கின்றன

2 comments:

rajamelaiyur said...

//வரண்டு போனது நாக்கு
தேடிப்பார்க்கிறேன்
அங்கு ஒரு வாய்க்கால்
அதை நாடிப் போகிறேன்
தட்டுப்பட்டது ஒரு சிறு கை
தவழ்கிறேனா ஊர்கிறேனா
எனக்கே தெரியவில்லை
ஆனால் அசைகிறேன்
வாய்க்காலை நொக்கி
ஆனால் வாய்க்கால் சிவந்திருந்தது
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்
///

அழகான வரிகள்

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை நெகிழ வைக்கும் வரிகள்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...