Thursday 2 August 2012

மின் வெட்டு: முன்னாள் வருங்கால வல்லரசு இந்தியா.

அறுபத்திரண்டு கோடி மக்களுக்கு மின்வெட்டு. நாட்டின் அரைவாசிப்பகுதியில் அனர்த்தம். போக்குவரத்துத் தடை. அவசர சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு. சமிக்ஞை விளக்குகள் செயற்படாமல் போக்குவரத்து நெரிசல். தண்ணீர் வழங்கலின்றி மக்கள் தவிப்பு. சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்துள் சிக்குண்டு பரிதவிப்பு. அவசர அலுவலாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் நடுத்தெருவில் தலையில் கைவைப்பு.  தொடரூந்தில் தீ. பூனேயில் குண்டு வெடிப்பு. இந்தியா ஒளிர்கிறது.


Incredible India or Intolerable India
பொருளாதாரம் வளரும் போது சக்தி தேவையும் அதிகரிக்கும். அதற்கு ஏற்ப சகதி வழங்கலை அதிகரிக்க வேண்டும். சக்தி வழங்கல் துறையில் முதலீடு செய்ய வேண்டும். செய்யத் தவறியது யார் குற்றம்? திட்ட ஆணைக்குழு என்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது அது செயற்படுகிறதா? இந்த ஆண்டு மழைவீழ்ச்சி குறைந்த அளவில் இருந்ததால் நீர் மின் உற்பத்தி குறையும் என்றும் விவசாயிகள் நீரை இறைக்க அதிக மின்சாரம் பாவிப்பார்கள் என்பதையும் அது எதிர்பார்த்திருக்கவில்லையா?

காரணம் தெரியவில்லையாம்
உலகத்தில் என்றுமே நடந்திராத பாரிய மின் வெட்டு இந்தியாவில் நடந்துள்ளது. உலக மக்கள் தொகையில் 10%மானோர் இந்த மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட பெரிய ஒரு நிகழ்விற்கான காரணம் தெரியவில்லை. வழமை போல் இதைக் கண்டறிய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் தங்களது மின் பிறப்பாக்கிகளைக் கொண்டு செயற்பட்டன. ஆனால் மருத்துவ மனைகள் பல பாதிக்கப்பட்டன. அவற்றின் மின்பிறப்பாக்கிகளுக்கு எரிபொருள் இருக்கவில்லையாம். மின் தட்டுப்பாட்டால் எரிபொருள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. சில அரசியல்வாதிகள் உதரப் பிரதேசம், ஹரியான, பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் தமக்கு ஒதுக்கப்பட்ட அளவிலும் அதிக மின்சாரத்தைப் பெறுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் ஹரியான அரசு இதை மறுத்துள்ளது. மாநில அரசு அதிகம் மின்சாரம் பெறாமல் தடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்கிறது அது. சுற்றுச் சூழல் ஆர்வலரும் செயற்பாட்டாளருமாகிய சைலேந்திர தஷ்வந்த் சக்திப் பிறப்பாக்கும் அதிகாரம் மத்தியில் அளவிற்கு அதிகாமாகக் குவிந்து விட்டது அதை மாநில அரசுகளுக்கு பரவலாக்கம் செய்ய வேண்டும் என்கிறார்.

கேலிக்கூத்தான மக்களாட்சி
நாட்டை நன்கு நிர்வகிக்கக்கூடியவர்களை ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்காமல் இலவசங்களை வழங்குபவர்களை இந்திய மக்களாட்சி முறைமை தேர்தெடுக்கிறது. அரசியல் கட்சிக்குள் மக்களாட்சி முறைமை இல்லை. குடும்ப ஆட்சி முறைமையே நிலவுகிறது. இலவசமாக மின்சாரம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியவர்களுக்கு விவசாயிகள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தனர். பின்னர் தமக்குக் கிடைக்கும் மின்சாரத்தை மற்றவர்களுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்கின்றனர். இதனால் மின்சாரம் வழங்கும் அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. மின்சாரத்தேவையை சரியாகக் கணக்கிட முடியாமல் இருக்கிறது. ஜுலை 30-ம் திகதி உத்தரப்பிரதேசத்தில் 900மெகா வாட் மின்சாரம் வழமையிலும் அதிகமாக பெறப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவிற்கு ஏற்ப மின்சார விலையை அதிகரித்தால் வாக்காளர்கள் ஆத்திரப்படுவார்கள் என்று விலை அதிகரிக்கப்படுவதில்லை. மின்சார உற்பத்தித் துறையில் அரசுடமையாக இருப்பதால் அங்கு திறமையான வள முகாமைத்துவம் இல்லை.


இரு அதிகார மையங்கள்
இந்தியாவின் ஆட்சி அதிகார மையங்கள் இரண்டாகும். ஒன்று பிரதம மந்திரி தலைமையிலான மந்திரிசபை மற்றது சோனியா காந்தி குடும்பத்திடமும் அவரது ஆலோசகர்கள். முதலாவது இரண்டாவது அதிகார மையத்திற்கும் வாக்கு வங்கிக்கும் பயப்படுகிறது. இரண்டாவது வாரிசு அரசியலை எப்படித் தக்க வைப்பது என்பதிலும் தமக்கு ஆதரவு கொடுக்கும் பெரு முதலாளிகளைத் திருப்திப்படுத்துவதிலும் முழுக்கவனத்தையும் செலுத்துகிறது. இந்திய அரச் நிர்வாகக் கட்டமைப்பு இந்த இரு அதிகார மையங்களையும் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிக படித்த அரசுத் தலைவர் மன்மோகன் சிங். உலகிலேயே திறமையான நிதி அமைச்சர் இதுவரை பதவியில் இருந்த பிரணாப் முஹர்ஜீ. இப்படி இருந்தும் இந்தியப் பொருளாதாரம் ஏன் சிக்கலில் இருக்கிறது. வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைப் பொறுத்தவரை சீனா முதலாவது இடத்திலும் இந்தியா 150வது இடத்திற்குக் கீழும் இருப்பது ஏன்? போதாக் குறைக்கு சகல மட்டங்களிலும் ஊழல். இப்போது சகலரினதும் கவனம் 2014 தேர்தல் பற்றியதே. ஒரு மாநிலம் அதிக மின்சாரம் பெறும் போது அதைக் கட்டுப்படுத்த இந்திய மின்கட்டமைப்பிடம் சிறந்த circuit breakers இருக்கின்றன ஆனால் அவற்றை அரசியல்வாதிகளுக்குச் சார்பான அதிகாரிகள் செய்றப்பட விடுவதில்லை என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிராந்தியத்திற்கு மின்சாரம் தடைபட்டால் அது சிலரின் தேர்தல் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்பதற்காக அதிக மின்சாரம் பெறுவதை circuit breakersமூலம் தடுக்காமல் செய்து விருகின்றனர். மத்தியிலும் மாநிலத்திலும் அதிக மின்சாரம் பெறுவதைத் தடுக்கக் கூடிய வசதிகள் இருந்தும் அரசியல் காரங்களுக்காக தடுக்காமல் விட்டதால்தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது என்கிறார் முன்னாள் மின்சாரத்துறை அதிகாரியான சுரேந்திர ராவ். ஆனால் அதிக மின்பெறுதல் மட்டும் மின் தட்டுப்பாட்டுக்குக் காரணமல்ல.

பொருளாதாரத்தைப் பாதிக்கும்
வழமையான நிலையிலேயே இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் மின்சார விநியோகம் இன்றியே இதுவரை தங்கள் வாழ் நாட்களைக் கழித்து வருகிறார்கள். இவர்கள் மின்சாரம்ப் பாவனையாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? இந்த வாரம் செய்யப்பட்ட மின் வெட்டால் இந்தியப் பொருளாதாரத்திற்கு பல ஆயிரங் கோடி ரூபாக்கள் நட்டம் ஏற்ப்பட்டுள்ளது என இந்திய கைத்தொழில் பேரவை அறிவித்துள்ளது. மின்சார உற்பத்தியில் பல மாற்றங்கள் தேவை என அது வலியுறுத்தியுள்ளது. மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு உடனடித் தீர்வு இல்லை என அமைச்சர் வீரப்ப மௌலி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய் பொருளாதார மையங்களான மும்பாயும் பெங்களூருவும் பாதிக்கப்படாதது ஒரு நிம்மதியான செய்தியாகும். சரியான முதலீடு இல்லாமையால் பலகாலமாகச் செயற்பட்டுவரும் பழைய மின்பிறப்பாக்கித் தொகுதிகளை மாற்றீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரத் தட்டுப்பாடு உலக ரீதியில் இந்தியப்பொருளாதாரத்தின் போட்டியிடு திறனை ஏற்கனவே குறைத்துள்ளது. மின்சார நெருக்கடி வெளிநாட்டு முதலீடுகளைப் பாதிக்கும்.ஏற்கனவே கண்டபடிக் கூடிக் குறையும் voltageஆல் பல தொழிற்சாலைகள் பாதிப்புக்களையும் நட்டங்களையும் அடைந்துள்ளன.பல அரச அதிகாரிகள்
மெழுகு திரியோளியில் சிகை அலங்காரம்

வல்லரசுக் கனவு பலிக்குமா?
மின்சார உற்பத்தியில் உ:ள்ள குறைபாடுகளான திட்டமிடல் திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடு, ஊழல், அரசினால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாமை போன்றவை மின்சார உறப்த்தித் துறைக்கு மட்டுமல்ல இந்தியாவின் சகல துறைக்களுக்கும் பொதுவானவை. இந்திய உணவு உறபத்தியில் 30%மானது மக்களைச் சென்றடையமுன்னர் பழுதடைந்து விடுகிறது. விநியோகச் சீர் கேடு தகுந்த வைப்பிடல் இல்லமை போன்றவையே இதற்குக் காரணம். ஊழலால் இந்திய திறைசேரிக்கு பல பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இழப்பு ஏற்படுகிறது. இனத் சீர்கேடுகளைச் திருத்க் கூடிய தலைமை இலகுவிலோ அல்லது விரைவாகவோ இந்தியாவிற்குக் கிடைக்கும் சாத்தியங்கள் இல்லை. வருங்கால பெரு வல்லரசாகக் கருதப்படும் இந்தியா சரியான தலைமை கிடைக்காவிடில் முன்னாள் வருங்கால வல்லரசாக மாறிவிடும்.

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

கரண்ட் இல்ல வல்லரசு
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...