Friday 17 August 2012

பெரும் இழுபறியில் விக்கிலீக் அசாஞ்சே

விக்கிலீக் என்னும் இணையத்தளத்தின் மூலம் அமெரிக்காவின் உலகெங்கும் உள்ள தூதுவராலயங்கள் படைத்தளங்களுக்கிடையிலான இரகசிய தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் அம்பலப் படுத்திய தகவல்கள் அமெரிக்காவையும் பல நாடுகளையும் சஞ்சலத்திற்கு உள்ளாக்கியது. ஈராக்கில் அமெரிக்கப்படைகள் செய்த அட்டூழியங்கள், குவாட்டனாமோ சித்திரவதைகள், அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது செய்யப்பட்ட மின்னஞ்சல்கள், ஷெல் எரிபொருள் நிறுவனம் நைஜீரிய அரசில் ஊடுருவியமை, சவுதி இளவரசரின் பாலியல் மற்றும் போதைப்பொருள் சாகசங்கள், சவுதி அரேபியா அல்கெய்தாவிற் நிதி உதவி செய்தமை, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா ஒற்றாடியமை, அமெரிக்க இரசியாவை மாபிய அரசு எனக் கருதியமை, ஈரானைத் தாக்கும் படி சவுதி மன்னர் அமெரிக்காவைத் தூண்டியமை எனப்பல தகவல்களை ஜுலியான் அசஞ்சே அம்பலப் படுத்தினார்.

குற்றம் சாட்ட முடியாமல் திணறிய அமெரிக்கா
விக்கிலீக்கினால் வெளிவிடப்படும் தகவல்கள் அமெரிக்கப் படைத்துறையைச் சேர்ந்த பிரட்லி மன்னிங் (Bradley Manning) என்பவரால்தான் பெறப்பட்டு விக்கிலீக்கிற்கு வழங்கப்பட்டது. இதில் பிரட்லி மன்னிங் (Bradley Manning)தான் தகவல் திருடியவராகக் கருதப்படவேண்டியவர். அவற்றை பிரசுரித்த குற்றம் தான் விக்கிலீக்கிற்க்கும் அதன் நிறுவனர் ஜுலியான் அசங்கே புரிந்ததாகக் குற்றம் சாட்டப்படமுடியும். அமெரிக்க அரச அல்லது படைத்துறை இரகசியங்களை திருடியவர்மீது குற்றம் சுமத்தப் பட்டு தண்டிப்பது அமெரிக்காவில் நடந்துள்ளது. அந்த இரகசியங்களை பிரசுரித்தவர் மீது எப்படி குற்றம் சாட்டுவது என்று அமெரிக்க இதுவரை தேடிக்கொண்டிருந்தது. கடைசியில் அமெரிக்க மக்களவை ஆய்வாளர்கள் ஒற்றாடல் சட்டத்தின் கீழ் ஜுலியான் அசங்கேயை மாட்டக்கூடிய ஒரு சட்டப் பிரிவை கண்டு பிடித்துள்ளனர். ஆனால் ஒரு பிரசுரிப்பாளரை அந்தச் சட்டப்பிரிவுகளின் கீழ் இதற்கும் முன் நீதிமன்றில் நிறுத்தப்படவில்லை. இதனால் அமெரிக்க சட்டவாளர்கள் திணறினர்.


வித்தியாசமான சட்டங்களைக் கொண்ட சுவீடன்.
பல தகவல்களை ஜுலியான் அசஞ்சே அம்பலப் படுத்தியதைத் தொடர்ந்து அவர் மீது கற்பழிப்பு வழக்கு ஒன்று சுவீடனில் பதிவு செய்யப்பட்டது. சுவீடன் தேசத்துச் சட்டங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் வித்தியாசமானவை. சுவீடனில் ஜூலியான் அசங்கே தனது இணையம் விக்கிலீக்கில் அமெரிக்க இரகசியங்களை வெளிவிடுவது குற்றம் ஆகாது. அதனால் அவர் அங்கிருந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள சுவீடன் அரசிடம் விண்ணப்பித்திருந்தார். சுவீடனில் கற்பழிப்புச் சட்டங்களும் விநோதமானவை. ஆகஸ்ட் மாதம் 11-ம் 18-ம் திகதிகளில் ஜூலியான் அசங்கே இரு பெண்களுடன் அவர்களின் சம்மதத்துடன் மேற்கொண்ட உடலுறவு அவருக்கு எமனானது. முதற் பெண்ணுடன் உறவு கொள்ளும் போது பாவித்த ஆணுறை கிழிந்து விட்டது. இரண்டாவது பெண் ஆணுறை அணியச் சொல்லியும் ஜூலியான் அசங்கே ஆணுறை அணியாமல் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது உடலுறவு கொண்டாராம். இவை இரண்டும் சுவிடன் நாட்டுச் சட்டப்படி குற்றமாகுமாம். ஆனால் இரு பெண்களும் தங்கள் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். இரு பெண்களும் ஜூலியான் அசங்கேஇற்கு அமெரிக்காவால் வைக்கப்பட்ட பொறியா என்ற கேள்வியும் எழுந்தது.

விக்கிலீக் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேயின் குற்றத்தின் பின்னணி
ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் போரில் ஊடகங்களின் பங்கு பற்றி ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) நடந்த மாநாட்டில் உரையாற்ற ஜுலியன் அசாஞ்சே என்னும் அவுஸ்த்திரேலியாவில் பிறந்த முன்னாள் கணனி ஊடுருவி(computer hacker) அழைக்கப்படுகிறார். மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் மத்திய இடதுசாரி சகோதரத்துவ இயக்கம். இந்த இயக்கத்திற்காக பணியாற்றிய அழகி-1 (இவர் பெயர் வெளிவிடப்படவில்லை) ஜுலியன் அசாஞ்சேயுடன் தொடர்புகொள்கிறார். ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) தனது தங்குமிடத்தைப்பற்றி அழகி-1 இடம் ஜுலியன் அசங்கே விசாரிக்கிறார். தனது வீட்டில் (Flat) தங்கலாம் மாநாடு நடக்கும் வேளையில் தான் வீட்டில் இருக்கமாட்டேன் நகரத்திற்கு வெளியில்தான் தங்குவேன் என்று அழகி-1 கூறுகிறார்.
மாநாட்டிற்கு சென்ற ஜுலியன் அசாஞ்சே அழகி-1 இன் வீட்டிலேயே தங்குகிறார். ஆனால் அழகி-1 குறிப்பிட்ட தினத்திற்கு ஒரு நாள் முன்கூட்டியே தன் விட்டிற்கு திரும்புகிறார். ஜுலியன் அசாஞ்சேயும் அழகி-1 இரவு ஒரு உணவகத்திற்கு சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வீடுவந்து இருவரும் அழகி-1 இன் சம்மதத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். பாவம் ஜுலியன் அசங்கே அவர்கள் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் பாவித்த ஆணுறை கிழிந்து விடுகிறது. மறுநாள் அழகி-1 ஜுலியன் அசாஞ்சேயிற்கு ஒரு விருந்தும் வழங்குகிறார்(உணவுதான்).

அழகி-1 ஒரு பெண்ணுரிமைப் போராளி. பல்கலைக்கழகமொன்றில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றுகிறார். பெண்ணுரிமை உட்படப் பல முற்போக்கு இயக்கங்களில் பங்கு கொள்பவர். பல நாடுகளுக்கும் சென்று வருபவர்.

ஜுலியன் அசாஞ்சே மாநாட்டில் உரையாற்றும் போது அழகி-2 முன்வரிசையில் இருக்கிறார். அவர் அதிக புகைப்படங்கள் ஜுலியன் அசாஞ்சே உரையாற்றும் போது எடுக்கிறார். மாநாட்டின் பின்அழகி-1 அழகி-2ஐ ஜுலியன் அசாஞ்சேயிற்கு அறிமுகம் செய்கிறார். இருவரும் நகரத்தை சுற்றுகின்றனர். அழகி-2 இல் ஜுலியன் அசாஞ்சே மயங்கிவிடுகிறார். நீ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறாய் என்று ஜுலியன் அசாஞ்சே பிதற்றவும் செய்கிறார். இங்கும் உடலுறவு நடக்கிறது. அழகி-2 இன் சம்மதத்துடன்தான். ஆனால் அழகி-2 ஆணுறை அணியும்படி வேண்டியதை ஜுலியன் அசாஞ்சே மறுத்துவிடுகிறார். அழகி-1ம் அழகி-2ம் பின்னர் சந்தித்துக் கொள்கின்றனர். ஜுலியன் அசாஞ்சே உடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். பெண் உரிமைப் போராளியான அழகி-1 ஆணுறை இன்றி அழகி-2 உடன் உடலுறவு கொண்டதைக் கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தாராம். பின்னர் இருவரும் காவல் துறையில் முறையீடு செய்கின்றனர். உங்களையும் என்னையும் போலவே ஜுலியன் அசாஞ்சே இற்கு சுவீடன் தேசத்து கற்பழிப்புச் சட்டத்தைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். பெண் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் ஆணுறை கிழிப்பது ஆணுறை அணிய மறுத்து உறவு கொள்வது எல்லாம் அங்கு குற்றமாம். அழகி-2 தான் ஜூலியன் அசாஞ்சேயில் காமம் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அழகிகள் ஜுலியன் அசாஞ்சே நடந்த விததைப் பற்றி பத்திரிகைகளிலும் வெளியிருகின்றனர் ( தங்கள் பெயர் வெளிவராமல்தான்). தங்கள் சம்மதத்துடன் தான் ஜுலியன் அசாஞ்சே தம்முடன் உறவு கொண்டதாகவும் பத்திரிகைகளில் ஒத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

சுவீடனில் விக்கிலீக் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேயின் சட்டவாளராக செயல்படும் பி ஹன்ரிங் தன்னிடம் ஜூலியன் அசாஞ்சே மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக முக்கிய தகவல் உள்ளதாகவும் அதை வெளியிட சட்டம் தன்னைத் தடுப்பதாகவும் கூறியுள்ளார். சுவீடன் அரச புலன் விசாரணைப் பத்திரங்களின்படி அசங்கே தம்முடன் பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் குற்றம் சாட்டும் இரு பெண்களும் பொய் சொல்கிறார்கள் என்றும் அவர்கள் ஒரு இரகசிய ஏற்பாட்டின் பேரில் செயற்படுகிறார்கள் என்றும் சொல்கிறார் ஜூலியன் அசாஞ்சேயின் சட்டவாளர் பி. ஹன்ரிங். மேலும் பி. ஹன்ரிங் தெரிவிக்கையில் இருவரும் பொறாமையுள்ளவர்களென்றும் ஒருவர் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் செயற்படுகிறார் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு பிரித்தானிய நீதிமன்றில் சாட்சியமளிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் இந்த கற்பழிப்பு குற்றச் சாட்டு ஒரு நாடகம் என்று தன்னால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். சுவீடனில் உள்ள சட்டம் ஜூலியன் அசாஞ்சேயின் சட்டவாளராக செயல்படும் பி ஹன்ரிங் இத்தகவல்களை வெளியிடத் தடை செய்கிறது. மீறி வெளியிட்டால் அவர் தனது தொழிலை இழக்கவேண்டிவரும்.

பிரித்தானியாவில் நாடுகடத்தும் வழக்கு
சுவிடனில் ஜூலியன் அசாஞ்சேயை நாடுகடத்தும் வழக்கு நீதி மன்றத்திற்கு வந்தது. 2010 டிசம்பர் 8-ம் திகதி மறைந்திருந்த அசாஞ்சே பிரித்தானிய காவல்துறையினரிடம் சரணடைந்தார். 2011 பெப்ரவரி 24-ம் திகதி பிரித்தானிய நீதி மன்றம் அசாஞ்சே சுவீடனுக்கு நாடுகடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேன்முறையீடு செய்த அசாஞ்சே உயர்நீதிமன்றிலும் தோல்விகாண்கிறார். 2012 மே மாதம் 30-ம் திகதி பிரித்தானி உச்ச நீதிமன்றமும் அசாஞ்சே நாடுகடத்தப்பட வேண்டும் என உறுதி செய்கிறது. 2012ஆகஸ்ட் 15-ம் திகதி இலண்டனில் உள்ள எக்குவேடர் நாட்டின் தூதுவரகத்தில் அசாஞ்சே அரசிய்ல் தஞ்சம் கோருகிறார். ஆகஸ்ட் 15-ம் திகதி எக்குவேடர் நாட்டு வெளியுறவுத்துறை தமது நாட்டை பிரித்தானிய மிரட்டியதாகக் குற்றம் சுமத்தியது. அடுத்த நால் எக்குவேடர் அரசி அசாஞ்சேயிற்கு அரசியல் தஞ்சம் வழங்கியது.

எக்குவேடர் ஜூலின் அசாஞ்சேயிற்கு அரசியல் தஞ்சம் கொடுத்தவுடன் பிரித்தானியக் காவல்துறை இலண்டனில் உள்ள எக்குவேடர் தூதுவரகத்தைச் சூழ்ந்து கொண்டது. நாற்பதிற்கும் அதிகமான காவற்துறையினர் இதில் ஈடுபட்டனர். அசாஞ்சே தூதுவரகத்திற்கு வெளியில் காலடி எடுத்து வைக்கும் பட்சத்தில் கைது செய்யப்படுவார் என எச்சரித்தனர். அசஞ்சே பொதிகளுக்குள் மறைத்து வைத்துக் கடத்தப்படலாம் என்ற சந்தேகத்தில் தூதுவரகத்தில் இருந்து வெளிவரும் பொதிகள் பைகள் போன்றவை இலத்திரனியல் கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகின்றது. சட்ட நடைமுறைகளில் இருந்து தப்ப அசான்சேயிற்கு அரசியல் தஞ்சம் வழங்கியமை தப்பு என்கிறார் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லிய ஹேக். தென் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடாகிய எக்குவேடர் இந்த ராஜதந்திர இழுபறியில் எவ்வளவு தூரம் தாக்கும் பிடிக்கும் என்பதே இப்போது உள்ள கேள்வி. 1984இல் லிபியத் தூதுவரகத்தில் இருந்து செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு பிரித்தானியப் பெண்காவற்துறையச் சேர்ந்த பெண் ஒருவரைக் கொன்றததைத் தொடர்ந்து பிரித்தானிய தனது தூதுவராலய நிலச் சட்டத்தை மாற்றிக் கொண்டது.

எக்குவேடர் தூதுவராலயத்தில் இருக்கும் ஜூலியன் அசாஞ்சே அதன் சாளரத்தூடாக அல்லது காணொளி மூலமாக வெளியுலகத்திற்கு ஒரு உரையை ஆற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய அரசு ஜூலியன் அசாஞ்சேயைக் கைது செய்ய எக்குவேடருடனான தனது இராஜதந்திர உறவுகளை முறிக்குமா? பின்னிருந்து இயக்கும் அமெரிக்காவுக்தான் பதில் தெரியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...