Monday 30 July 2012

இலங்கை இந்திய ஒப்பந்தம்: கேணல் ஹரிகரனின் கோணல் கதை

அரசியல் அரைவேக்காடு ராஜிவ் காந்தியும் முதுபெரும் குள்ள நரி ஜே ஆர் ஜயவர்த்தனவும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்ப்பது என்ற போர்வையில் ஒப்பந்தம் செய்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதைப்பற்றி இந்தியாவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரியான கேர்ணல் ஹரிஹரன் ஒரு கட்டுரையை வரைந்துள்ளார். அதைப் பல பார்ப்பன ஊடகங்களும் சிங்கள் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துள்ளன. கேர்ணல் ஹரிகரன் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அடிக்கடி கொச்சைப் படுத்தி எழுதி வரும் ஒருவர். 2009 மே மாதம் இலங்கையில் போர் "முடிந்தவுடன்" இனித் தமிழர்களுக்கு உள்ள ஒரு தெரிவு Hobson Choice தான் என்று எழுதியவர். Hobson Choice என்பது ஆங்கிலத்தில் வழக்கொழிந்து போன வார்த்தைத் தொடர். அதன் பொருள் கொடுப்பதை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். தமிழர்கள் ஒரு பிச்சைக்கார நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்ற பொருள்பட எழுதியவர்தான் இந்த கேர்ணல் ஹரிகரன்.

ஹரிகரனின் பேய்க்கதை: பிரிக்கப் போனதும் பிரிவதைத் தடுக்கப் போனதும்
A Tale Of Two Interventions (இரு தலையீடுகளின் கதை)  என்னும் தலைப்பில் கேர்ணல் ஹரிகரன் கதை விட்டுள்ளார். இதில் அவர் 1971இல் இந்திரா காந்தி கிழக்குப் பாக்கிஸ்த்தான் பிரச்சனையில் தலையிட்டதையும் 1987இல் அரசியல் கற்றுக் குட்டி ராஜிவ் காந்தி இலங்கையில் தலையிட்டதையும் ஒப்பிடுகிறார். இரண்டு தலையீடுகளிலும் ஹரிகரன் ஒரு படை வீரனாகப் பங்குபற்றினாரம் இரண்டு தலையீட்டுக்களுக்கும் அடிப்படையில் பெரும் முரண்பாடு இருந்தது. 1971இல் இந்தியா செய்த தலையீடு பாக்கிஸ்தானைத் பிரித்து புது நாடு உருவாக்கச் செய்யப்பட்ட தலையீடு. 1987இல் இலங்கையில் செய்த தலையீடு பிளவு பட இருந்த இலங்கையை பிளவுபடாமல் பாதுகாக்கச் செய்யப்பட்ட தலையீடு. சிங்கள் அமைச்சர்களே இந்திய "அமைதிப்படை" வந்திருந்திருக்காவிடில் இலங்கை இரு நாடுகளாகப் பிளவு பட்டிருக்கும் என்றனர். பாக்கிஸ்த்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் என்ற அடை மொழியுடன் தான் இந்தியாவின் சகல அரசதந்திர அறிக்கைகளும் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களும் 1983இல் இருந்து இன்று வரை வந்து கொண்டிருக்கின்றன. 1987இல் இந்தியப் படைகள் இலங்கை வரமுன்னர் இலங்கையில் பல படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. அவை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டாலும் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்ததும் உண்டு இணைந்து தாக்குதல்கள் நடாத்தியதும் உண்டு. இலங்கைப் படையினர் தமது முகாம்களை விட்டு வெளியேற அஞ்சிக் கொண்டிருந்தனர். இலங்கையின் எந்தப்பகுதியிலும் தாக்குதல் நடத்தும் திறனை தமிழ் போராளிக் குழுக்கள் கொண்டிருந்தன. பல பிரதேசங்கள் தமிழ் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. `இந்த நிலையை வளரவிட்டால் இலங்கையில் தமிழர்கள் தமக்கு என ஒரு நாட்டை அமைத்து விடுவார்கள் என்று அஞ்சியே இந்தியா இலங்கையில் தலையிட்டதை ஹரிகரன் மறைத்து விட்டார். இலங்கையில் சண்டை நடந்து நாடு பிரிவடைவதையோ அல்லது ஒரு சமாதானத்தின் மூலம் இந்தியாவில் உள்ளதிலும் பார்க்க அதிக அளவு அதிகாரம் கொடுக்கும் ஒரு அரசியல் தீர்வு அடைவதையோ இந்தியா விரும்பவில்லை.



ஹரிகரனின் விசர்க்கதை:இந்தியா அயலவர் நலன் கருதியது            இந்திரா காந்தி பாக்கிஸ்த்தானைத் துண்டாடி அதைப் பலவீனப் படுத்தும் நோக்கத்துடன் கிழக்குப் பாக்கிஸ்தானுக்கு தன் படையினரை அனுப்பினார். 1980களின் ஆரம்பப் பகுதியில் இலங்கையில் திருகோணமலைத் துறை முகத்தில் அமைய இருந்த அமெரிக்க கடற்படையினருக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமைய இருந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான அதி தாழ் அலைவரிசை(ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தையும் தடுக்கவும் அதற்குக் கைக்கூலியாக தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிக்கவும் இந்தியா அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கை வந்தது. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை இந்தியச் சுயநலம் என்பதை ஹரிகரன் உணராமல் விட்டு விட்டார்.

 ஹரிகரனின் பொய்க்கதை: புலிகளுடன் எதிர்பாராத மோதல்
 இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படையினர் எதிர்பாராத விதமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் மோத வேண்டி ஏற்பட்டது என்று பொய் சொல்லுகிறார் தனது கட்டுரையில். இந்திய அமைதிப்படை இலங்கை வரமுன்னரே அப்போதைய இந்தியப் படைத் தளபதி சுந்தர்ஜீ சரம் கட்டிய இரண்டாயிரம் பையன்களை தன்னால் ஒரு வாரத்தில் ஒழித்துக் கட்ட முடியும் என்று ராஜீவ் காந்தியிடம் கணக்குக் காட்டியிருந்தார். டெலோ அமைப்பின் மூலம் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்ட முயன்று தோற்ற இந்தியா அதை நேரில் அமைதிப்படை என்ற போர்வையில் வந்து செய்ய முயன்றும் தோற்றது.



ஹரிகரனின் மோட்டுக்கதை: தலைமைத்துவப் பண்பு       இந்திராகாந்தியின் தலைமைத்துவம் சிறந்தது என்ற படியால் 1971இல் கிழக்குப் பாக்கிஸ்த்தானில் செய்த தலையீடு வெற்றியளித்தது ராஜீவ் காந்தியின் தலையீடு அவரின் தலைமைத்துவப் பண்புகள் சரியில்லாததால் வெற்றியளிக்கவில்லை என்கிறார் ஹரிகரன். 1971இல் இந்திரா காந்தியின் தலையீடு வெற்றியளித்தமைக்கு அவருக்கு காரணம் அவருக்கு சிறந்த ஆலோகர்கள் அதிகாரிகள் இருந்தமையும் அப்போதைய தளபதி சாம் மனெக்ஸாவும் பெரும் பங்காற்றினர் என்பதையும் ராஜிவ் காந்தியின் தோல்விக்கு அவருக்கு ஆலோசனை வழங்கிய ரொமேஷ் பண்டாரி போன்றவர்களும் ஹரிகரன் போன்ற கோணல் புத்தி உளவுத்துறைத் தலைமையும்தான் என்பதை ஹரிகரன் சொல்ல மாட்டார்.  ரொமேஸ் பண்டாரி வீட்டுத் திருமணம் ஜே ஆர் கொடுத்த பணத்தில் நடந்தது என்று பரவிய வதந்திகளை ஹரிகரன் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பார். தனது கட்டுரையில் ஒரு இடத்தில் இலங்கைக்கு தான் அமைதிப்படையின் உளவுத் துறை தலைவனாக சென்று இறங்கிய போது ஜே ஆர் ஜயவர்த்தன இந்தியப்படையை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோத வைப்பார் என்று இலங்கையில் சிலர் தெரிவித்த கருத்துக்களை தான் நம்பவில்லை என்று தனது கட்டுரையில் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இதில் ஹரிகரன் ஒன்றில் பொய் சொல்கிறார் அல்லது தன் திறமையின்மையை அமபலப்படுத்துகிறார். அதாவது தாம் இலங்கை சென்றது புலிகளை அழித்தொழிக்கவே என்ற உண்மையை மறைக்கிறார். அல்லது இலங்கை ஆட்சியாளர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாத ஒரு உளவுத் துறைத் தலைவனாக அவர் இருந்திருக்கிறார். அதுவும் சாதாரண குடிமக்களுக்குத் தெரிந்தவை களம் பல கண்ட ஹரிகரனுக்குத் தெரியவில்லை. பாக்கிஸ்த்தான் போரில் இறந்த இந்தியப்படையினர்களின் எண்ணிக்கை பாக்கிஸ்த்தானியப் படையினரின் எண்ணிக்கை பற்றி விலாவாரிய எழுதிய ஹரிகரனுக்கு இலங்கையில் எத்தனை அப்பாவித் தமிழர்களை இந்திய அமைதிப்படை கொன்றது என்பது பற்றி எழுதத் தெரியவில்லை.



ஹரிகரனின் புளுகுக்கதை: 13வது திருத்தமும் சுயாட்சியும்                   ராஜிவ் ஜேஆர் ஒப்பந்தத்தைப் பற்றி ஹரிகரன் இப்படிப் புளுகுகிறார்:
  • The most significant achievement of the Accord was the introduction of the 13th Amendment to the Sri Lankan Constitution which provided a degree of autonomy to the newly created provinces. And it still exists as the only constitutional tool available to redress Tamils. இலங்கைத் தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு தன்னாட்சி வழங்கிய இலங்கை அரசியலமைப்புக்கு செய்யப்பட்ட 13வது திருத்தம் ஒப்பந்தம் செய்த மிகவும் குறிப்பிடத்தக்க சாதனை. அத்துடன் இன்றுவரை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய ஒரு அரசமைப்புக் கருவியாக இருக்கிறது.
ஐயோ பாவம். ஹரிகரனுக்கு தன்னாட்சி என்பது என்ன என்றும் தெரியவில்லை. 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் என்ன என்பது பற்றியும் தெரியவில்லை. 13வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பிரபல சட்ட அறிஞர் நடேசன் சந்தியேந்திரா அது ஒரு உப்புச் சப்பில்லாத திருத்தம். அதில் அதிகாரப் பரவலாக்கம் என்பதே இல்லை என்று மிக விளக்கமாக எழுதியிருந்தார். அது வயது போன ஹரிகரனுக்கு நினைவில்லாமல் இருக்கலாம். ஆனால் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் சட்ட விரிவுரையாளர்  குமரகுருபரன் 13வது திருத்ததில் உள்ள குறைபாடுகளை பிட்டு பிட்டு வைத்ததைக் கூட மறக்கும் அளவிற்கு ஹரிகரனுக்கு வயது போய்விட்டதா? இதை ஹரிகரன் சாதனை என்கிறார். அது இன்றுவரை ஒரு அரசமைப்புக் கருவியாக இருக்கிறதாம். ஆம் பிள்ளையாருக்கு நாளைக்குத் திருமணம் என்று கைலாய மலையில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில் பிள்ளையார் இன்றும் இருக்கிறார்.



 ஹரிகரன் மறைத்த கதை: அமைதிப்படையின் அட்டூழியங்கள்
ராஜீவ் ஜேஆர் ஒப்பந்தம் செய்த போது தமிழர்களுக்கும் ராஜிவிற்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழ் போராளிகள் தம் படைக்கலன்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் தமிழர்களுக்கும் போராளிகளுக்குமான பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும். அந்தக் கனவான் ஒப்பந்தத்தை அயோக்கிய இந்தியா ஒரு சில மாதங்களுக்குள் மறந்துவிட்டு அப்பாவித் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததையோ அப்பாவிப் பெண்களைக் கற்பழித்ததையோ ஹரிகரன் மறைத்துவிட்டார். அந்தக் கனவான் ஒப்பந்தத்தின் பின்னர் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அயோக்கிய இந்தியா உதவியது. இன்றும் இலங்கைப் படையினருக்கு உதவுகிறது.


ஹரிகரனின் புரட்டுக் கதை: கேந்திரோபாய வெற்றியா? இந்தியா சிறுபான்மையினர் போராட்டத்திற்கு உதவுமா?
ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தம் இந்தியாவை அண்டியுள்ள பிரதேசங்களில் உருவாகும் கேந்திரோபாய தோற்றங்களை இந்தியா உதாசீனம் செய்யாது என்ற செய்தியையும் சிறுபானமை இனங்களின் சம உரிமைக் கோரிக்கைக்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்ற செய்தியையும் உலகிற்கு அனுப்பியது என்கிறார் ஹரிகரன் அவர்கள். The Accord sent home a strong message to all stakeholders: India would not ignore strategic developments in its close proximity in Sri Lanka, and would support the minority demand for an equitable deal. ஐயா சாமி நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? அம்பாந்தோட்டையில் சீனா துறை முகம் அமைத்தது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்று பல படைத்துறை ஆய்வாளர்கள் நிறைய எழுதி விட்டனர். இந்த strategic development இற்கு எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் இருக்கும் இந்தியாவின் பரிதாபகரத்தை ஹரிகரன் அறிய மாட்டாரா? இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் சுற்றி வளைக்கப்பட்டு உணவு, மருந்து, குடிநீர் வழங்குவதைத் தடுத்து இலங்கைப் படையினர் மருத்துவ மனைகள் உட்பட எல்லா குடிமக்கள் நிலைகள் மீதும் கண்மூடித்தனமாக குண்டுகள் வீசிக் கொன்றபோது இந்தியா என்ன செய்தது? அந்தப் போர்க்குற்றங்களுக்கு தானும் உடந்தையாக இருந்தது. அதைத் தடுக்க முயன்ற மற்ற நாடுகளையும் தடுத்தது. இப்படி இருக்க ஏன் ஹரிகரன் முழுப்பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்கிறார்?


ஹரிகரனுக்குத் தெரியாத கதை
ஹரிகரன் ராஜீவ் ஜேஆர் ஒப்பந்தத்தை புகழோ புகழ் என்று புகழ்ந்து விட்டு கட்டுரையை முடிக்கத் தெரியாமல் முடித்திருக்கிறார். கடைசியில் The Accord failed to achieve its strategic goals in full என்று சொல்லியுள்ளார். ஆனாலும் ஒப்பந்தம் நல்லதுதானாம். இந்தியாவிற்கு சிறந்த தலைமை தேவையாம். The Accord failed to achieve its strategic goals in full என்பது தமிழர்களைப் பொறுத்தவரை பாதிக் கிணறு தாண்டிய கதைதான். 25 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கு எந்தவித நன்மையையும் தராத ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தில் தமிழர்களுக்குச் சாதகமாக ஒன்றையும் செய்யவில்லை. கொழும்பில் இந்த ஒப்பந்தத்தைப்பற்றி அடிபடும் கதையின் படி ஒப்பந்தம் செய்யப்படும் போது தமிழின விரோதிகளாக இருந்த இந்திய அதிகாரிகள் ராஜீவிற்குத் தெரியாமல் ஜே ஆர் ஜயவர்த்தனேயிற்கு இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படத் தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள. இதனால்தான் இன்றுவரை இந்தியா சும்மா உதட்டளவில் மட்டும் 13-வது திருத்தத்தின்படி இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. 13-வது திருத்தத்தின் முக்கிய அம்சமான வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை இலங்கை இரத்துச் செய்த போது இந்தியா ஒருவார்த்தை கூட த் தெரிவிக்கவில்லை. இது கேணல் ஹரிகரனின் கோணல் கதையில் இடம்பெறவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரை ஒன்றுக்குமே உதவாததுதான் 13வது திருத்தம். இது தான் சகல பிரச்சனைக்கும் தீர்வு என இந்திய உளவாளிகளும் கைக்கூலிகளும் தொடந்து பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...