Thursday, 26 July 2012

பாதுகாப்பை உடைத்த 11 வயதுச் சிறுவன்:பிரித்தானியாவின் முகத்தில் கரிக்கு மேல் கரி

வீட்டில் பிரச்சனை, படிப்பில் பிரச்சனை போன்ற காரணங்களால் விரக்தியடைந்த சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடுவதுண்டு. பிரித்தானியாவில் ஒரு சிறுவன நாட்டை விட்டே ஓடி விட்டான். ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரித்தானியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் நடக்கும் வலயத்தில் 9-11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் பாணியில் தற்கொலை விமானத் தாக்குதலை எதிர் கொள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப் பட்டுள்ளன. இலண்டன் ஒலிம்பிக் இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அதிக படைத்துறை மயப்படுத்தப்பட்ட ஒலிம்பிக் என்று சொல்லப்படுகிறது.

Home Alone திரைப்படம் மாதிரி Rome Alone
பலத்த பாதுகாப்புக்கள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படும் வேளையில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு லியாம் கொர்கோரன் என்னும் பெயருடைய ஒரு 11 வயதுச் சிறுவன் கடைத்தெருவில் இருந்து தாயாருக்குத் தெரியாமல் ஒரு பேருந்தில் ஏறி மன்செஸ்டர் விமான நிலையம் சென்று அங்கிருந்து பயணிகளோடு பயணியாக ரோமாபுரி செல்லும் விமானத்தில் பயணச் சீட்டும் கடவுச்சீட்டும் இன்றி ஏறிவிட்டான். விமானம் பிரிதானியா கடந்து பிரான்ஸ் மேல் பறந்து கொண்டிருக்கையில் ஒரு பெண் பயணி விமான ஊழியர்களிடம் தனியாக ஒரு பையன் பயணம் செய்கிறான் என்ற சந்தேகத்தை தெரிவித்தார். பையனை விசாரித்து அவர்கள் உண்மையை அறிந்து மன்செஸ்டர் விமான நிலையத்திற்கும் ரோம் விமான நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். மகனைக் காண்வில்லை என்று காவற்துறையிடம் முறையிட்ட 29 வயது தாயார் மேரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த விமானத்தில் பையன் திருப்பி அனுப்பப்பட்டான்.

வீட்டுக் கணக்கிலும் பார்க்க இலகு
தனது பயணத்தைப் பற்றி பத்திரிகையாளிரடம் கூறிய லியாம் விமானத்தில் ஏறுவது பாடசாலை தரும் வீட்டுக்கணக்கிலும் இலகுவானது என்றான். தான் விமான நிலையத்தில் கண்டபடி நடந்து திரிந்து கொண்டிருக்கையில் பார்த்தால் ஒரு கட்டத்தில் ஜெட்-2 விமானத்துக்குள் தான் இருப்பதை உணர்ந்தானாம். கழிப்பறை செல்ல வேண்டும் போல்  இருந்ததால் கழிப்பறையில் தான் இருக்கையில் விமான பறக்கத் தொடங்கி விட்டதாம். ஆனால் பையனின் செயல் விமானநிலையப் பாதுகாப்புத் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி விட்டது. லியாம் சகல பாதுகாப்பு கண்காணிப்பு நிலைகளிலும் ஆபத்தற்றவன் எனக் காணப்பட்டதால் அவன் இலகுவாக போகக் கூடியதாக இருந்தது என்கின்றனர். அவன் ஒரு குடும்பத்துடன் இணைந்து சென்றிருக்க வேண்டும் ஆட்களை எண்ணும் போதுதவறு நடந்திருக்கலாம் என்கின்றனர் மன்செஸ்டன் விமான நிலையப் பாதுகாப்புத் துறையினர். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பலத்த பாது காப்பு ஏற்படுகள் செய்யப் பட்டிருக்கும் வேளையில் இது நடந்தது பிரித்தானியாவையே அதிர வைத்துள்ளது.

வட கொரியா தென் "கொடியாப்" பிரச்சனை
பெரிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதில் தாம் விற்பன்னர்கள் என்று பிரித்தானியருக்கு ஒரு தற்பெருமை உண்டு. அதை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நிரூபிக்கவேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். சீனாவில் கடந்த முறை ஒலிம்பிக் சிறப்பாக நடந்தது. ஆனால் அங்கு தீபெத்தியரின் ஆர்ப்பாட்டம் ஒரு இழுக்காக அமைந்தது. சீனர்கள் ஒலிம்பிக்கின் போது ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்திருந்தனர். ஆனால் இலண்டனில் ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. கோபி சிவந்தன் என்னும் தமிழ் இளைஞன் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறான். தமிழர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் செய்ய விருக்கின்றனர். பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி வட கொரியாவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையில் நடந்த போது வட கொரிய வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் போது அவர்களின் படமும் அவர்களின் தேசியக் கொடியும் பெரிய காணொளித் திரையில் காண்பிக்கப்பட்டது. ஆனால் வட கொரியத் தேசியக் கொடிக்குப் பதிலாக அவர்களின் பரம விரோதிகளான தென்கொரியாவின் தேசியக் கொடி காண்பிக்கப்பட ஆத்திரப்பட்ட தென்கொரிய வீராங்கனைகள் மைதானத்தில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டு விளையாட மறுத்தனர். சகலருக்கும் மன்னிப்புத் தெரிவிக்கப்பட்டு பின்னர் சரியாக கொடிகளைக் காட்டிய பின்னரே விளையாட்டு ஒரு மணி நேரம் தாமதித்து ஆரம்பமாகியது.


Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...