Friday 22 June 2012

தொடரும் யூரோ நெருக்கடியும் உலகப் பொருளாதாரப் பிரச்சனையும்

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது உண்மைதான். ஆனால் ஒன்றாகத் திரளும் அடம்பன் கொடிகள் ஓரளவிற்காவது சம பலத்துடன் இருக்க வேண்டும். அவை வேறு வேறு பலமுடையவைகளாக இருந்தால் பலமுள்ள கொடி தாங்கக் கூடிய இழுப்பு விசைக்கு பலம் குறைந்த கொடிகள் தாங்க முடியமல் அறுந்து போகும். யூரோ நாணயக் கட்டமைப்பில் ஒன்றிணைந்த நாடுகளுக்கும் இது பொருந்தும். இருபத்தியேழு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பதினொரு நாடுகள் 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஒன்றிணைந்து தமது நாடுகளை யூரோ நாணயக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்தன. பின்னர் மேலும் ஆறு நாடுகள் அதில் இணைந்தன. ஒஸ்றியா, பெல்ஜியம், சைப்பிர்ஸ், எஸ்ரோனியா, பின்லாந்து, பிரான்சு, ஜேர்மனி, கிரேக்கம், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மோல்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சுலோவேக்கியா, சுலொவெனியா, ஸ்பெயின் ஆகியவை அந்நாடுகளாகும். இந்த நாணயக் கட்டமைப்பில் இல்லாவிடிலும் அண்டோரா, கொசோவா, மொன்ரினிக்ரொ, மொனக்கோ, சன் மரினோ ஆகிய நாடுகளும் தங்கள் நாடுகளின் நாணயங்களாக யூரோவைக் கொண்டுள்ளன. லித்துவேனியா, லத்வியா ஆகிய நாடுகள் யூரோ நாணயக் கட்டமைப்பில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இணையவிருக்கின்றன. 330 மில்லியனிற்க்கு மேற்பட்ட மக்கள் இப்போது யூரோ நாணயத்தை தமது தேசிய நாணயமாகக் கொண்டுள்ளனர்.

மக்கள் தொகையே பலம் தரும்.
ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதர வளர்ச்சிக்கு அங்குள்ள மக்கள் தொகை பெரிதும் உதவின. உள் நாட்டில் நல்ல பலமிக்க சந்தையக் கொண்ட நாடுகளே பொருளாதரத்தில் மேல் ஓங்க முடியும் என்ற உண்மையைப் பல நாடுகள் உணர்ந்து கொண்டன. ஒரு உற்பத்தி நிறுவனம் தனது உற்பதிகளை உள்நாட்டில் சந்தைப்படுத்தி போதிய இலாபத்தைப் பெற முடியுமானால் அந்த நிறுவனம் குறைந்த விலையில் பன்னாட்டுச் சந்தையில் மற்றைய நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு தனது உற்பத்தியைச் சந்தைப்படுத்த முடியும். இந்த வகையில்தான் ஜப்பானின் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை உலகச் சந்தையில் வெற்றிகரமாக விற்பனை செய்தன. இதனால் அதன் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி கண்டு அது ஒரு பொருளாதார வல்லரசானது. அடுத்த பொருளாதார வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உருவாகும் எனக் கூறப்படுவதற்கு  அவற்றின் மக்கள் தொகைகளே காரணம். குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடுகளான ஐரோப்பிய நாடுகளிற்கு  தாம் பொருளாதாரத்தில் பின் தங்கி விடுவோம் என்ற பயம் எழுபதுகளின் ஆரம்பத்திலேயே ஏற்பட்டு விட்டது. இதன் விளைவுதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கம்.

பெரியண்ணா ஜேர்மனி
யூரோ நாணய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கியான ஐரோப்பிய மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்கு அமைய தமது நாட்டின் நிதிக் கொள்கையை வகுக்க வேண்டும். யூரோ நாணய நாடுகள் தமது அரச கடன், அரச செலவீனம், பணவீக்கம் போன்றவற்றை யூரோ நாணயக் கட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு அமைய நிர்வகிக்க வேண்டும். ஆனால் இந்த அரச நிதி நிர்வாக நிபந்தனைகளை விதிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் ஜெர்மனி அதிக செல்வாக்கு வகிக்கிறது. ஒரு நாட்டுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அந்நாடு தனது நாணய மாற்று வீதத்தையும் வங்கிக் கடன் வட்டி வீதத்தையும் பொருளாதார சூழ் நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும். கிரேக்கம் 17 நாடுகளைக் கொண்ட யூரோ  கட்டமைப்பில் இருப்பதனால் அப்படிப்பட்ட நடவடிக்கைகளைச் செய்ய முடியாது. யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதமும் அதில் உள்ள 17 நாடுகளில் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனியின் பொருளாதார நிலைமைக்கு ஏற்பவே நிர்ணயிக்கப் படுவதாக குற்றச் சாட்டு உண்டு. யூரோ நாணயக் கட்டமைப்பில் இருக்கும் நாடு தனது கடன் பளு பண வீக்கம் போன்றவற்றை சில வரையறைகளுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனால் கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. கிரேக்கம் அப்படி விலக்கப்படுமிடத்து அது பலத்த நெருக்கடியைச் சந்திக்கும். அந்த நெருக்கடி மற்ற நாடுகளுக்கும் பரவும். இதனால் கிரேக்கமும் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலக விரும்பவில்லை. மற்ற நாடுகளும் கிரேக்கம் விரும்புவதை விரும்பவில்லை. செய்தி நிறுவனமொன்று 19 பொருளியல் நிபுணர்களிடை நடாத்திய கருத்துக் கணிப்பில்  மூவர் மட்டுமே கிரேக்கம் யூரோ நாணயக் கட்டைமைபில் இருந்து விலக வேண்டும் என்று கருதுகின்றனர். ஐரோப்பிய நாணயக்கட்டமைப்பு மருத்துவ மனையில் கிரேக்கமும் ஸ்பெயினும்  இப்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே இருக்கின்றன. யூரோ நாணயத்தால் பாதிக்கப்ப்பட்ட மற்ற நாடுகளான அயர்லாந்து, போர்த்துகேயம், இத்தாலி ஆகிய நாடுகள் பூரண சுகமடைய முன்னரே மருத்துவ மனையில் இருந்து விலகி விட்டன. கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இணையும் போது தனது பொருளாதார நிலை பற்றி திரிக்க்கப்பட்ட தகவல்களை வழங்கியிருந்தது.

பிரித்தானியாவும் திருக்குறளும் யூரோவும்

யூரோ நாணயக் கட்டமைப்ப்பு ஆரம்பிக்கப் பட்டபோது பிரித்தானியா அதில் இணைய மாட்டேன் என்று அறிவித்தது. இதனால் பிரித்தானியா பெரும் இழப்புக்களைச் சந்திக்கப் போகிறது என்று சில பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று யூரோ நாணயக் கட்டமைப்பு பெரும் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது ஒரு திருக்குறள் ஞாபகத்திற்கு வருகிறது. "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்." ஒருவன் எது எதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறானோ அவற்றால் வரும் துன்பங்களில் இருந்தும் அவன் விடுபட்டவனாகிறான் என்பது இதன் பொருள். யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து பிரித்தானியா விடுபட்டதால் அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளிலும் இருந்து விடுபட்டு இருக்கிறது. பிரித்தானியப் பிரதமர் அவ்வப் போது யூரோ நாணய நாடுகளிற்கு கூறும் அறிவுரை பிரேஞ்சு ஆட்சியாளர்களைக் கடுப்பேத்துகிறது.




நிம்மதிப் பெருமூச்சு
கிரேக்கத்தில் நடந்த பொதுத் தேர்தல் முடிவும் புதிதாக ஆட்சியமைத்த கூட்டணி அரசும் உலகப் பொருளாதரம் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட ஏதுவாக அமைந்துள்ளன. அத்துடன் ஸ்பெயினைப் பொருளாதாரப் பிணை எடுப்பு நடவடிக்கைகள் ஒத்துக் கொள்ளப்பட்டதும்  ஆனாலும் கிரேக்கமும் ஸ்பெயினும் தமது பொருளாதாரத்தை மறுசீரமைக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. கிரேக்கத்தில் புதிதாகப் பதவி ஏற்றுள்ள அரசு ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியமும் வழங்கிய 130பில்லியன் யூரோக்கள் பெறுமதியான பிணை எடுப்பு நடவடிக்கையை மீள் பேச்சுவார்த்தை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இதனால் ஜேர்மனி சற்றுக் கடுப்படைந்துள்ளது. கிரேக்க அரசு செய்யவிருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழலாம்.

ஜி-20 மாநாட்டில் வறுத்தெடுக்கப்பட்ட ஜேர்மனி

பிரேசிலில் நடந்த 20 பொருளாதார ரீதியில் முன்னணி நாடுகளான ஜி-20 நாடுகளின் கூட்டத்தில் திரைமறைவிலும் பகிரங்கமாகவும் ஜேர்மனி யூரோ நாணய வலய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு ஆவன செய்யவில்லை என்ற குற்றச் சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டன.  யூரோ நாணய வலய நாடாகிய இத்தாலி பகிரங்கமாக ஜேர்மனியைக் குற்றம் சாட்டியது. 2007இற்கு முன்னர் யூரோ நாணய வலய நாடுகளிடை பண வழங்கல்களை ஜேர்மனி அதிகரித்தது. அந்தப் பணப் புழக்கம் பல யூரோ நாணய வலய நாடுகள் ஜேர்மனியில் இருந்து அதிக இறக்குமதிகளைச் செய்ய ஏதுவாக அமைந்தன. இதனால் ஜேர்மனி தனது முன்னணி  ஏற்றுமதி நாடு என்ற நிலையை உறுதி செய்து கொண்டது. இதனால் அதிக இறக்குமதி செய்த நாடுகளின் கடன் பளு அதிகரித்தது. இதுவே இப்போது யூரோ நாணய வலய நாடுகளிடை பெரும் பொருளாதாரப் பிரச்சனையாக உருவெடுத்து உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது. ஆனால் ஜேர்மனையில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வர இருப்பதால் ஜேர்மனியால் எவ்வளவு தூரம் மற்ற நாடுகளுக்குக் கை கொடுக்க முடியும் என்ற கேள்வி இருக்கிறது. ஜேர்மன் வாக்காளர்கள் தமது வரிப்பணம் மற்ற நாடுகளுக்கு போய்ச் சேருவதை விரும்புவார்களா? ஆனால் சிக்கலில் உள்ள நாடுகளிற்கு கை கொடுத்து உதவாவிடில் தாமும் அவர்களுடன் விழ வேண்டி வரும் என்பதை ஜேர்மன் ஆட்சியாளர்கள் நன்கு அறிவர்.


ஜி-20 ஒத்துக் கொள்ளப்பட்டவை
ஒஸ்ரேலியா தொழிலாளர் திறமைகளை வளர்க்கவும் கட்டமைப்புக்களில் முதலீடு செய்யவும் ஒத்துக் கொண்டது.
சீனா தனது பெரும் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைக் குறைக்கவும் நாணய வீதத்தில் இறுக்கத்தை தளர்த்தவும் ஒப்புக் கொண்டது.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள இணங்கியதுடன் பொருளாதார வளர்ச்சி, அரச செலவுக் கட்டுப்பாடு, நிதி நிலைமைய உறுதி செய்வதற்கும் இணக்கம் தெரிவித்தன. மேலும் பொருளாதாரப் பிரச்சனையில் உள் ள்ள நாடுகளான கிரேக்கம், இத்தலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பதாகவும் ஐரோப்பிய நாடுகள் இணங்கின.


நீண்ட காலம் எடுக்கும்
பொருளாதாரம் ஒரு விஞ்ஞானம் ஆனால் எலிகளில் பரீட்சித்துப் பார்க்க முடியாத விஞ்ஞானம். உலக வரலாற்றில் மிகப் பெரிய பொருளாதாரப் பரீட்சார்த்த நடவடிக்கை 17 ஐரோப்பிய நாடுகள் இணைந்து யூரோ நாணயத்தை உருவாக்கியமையே. இதன் வெற்றி தோல்வி பற்றி அறிய இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கும். இப்போது உள்ள உலகப் பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து நாம் எல்லாம் விடுபட இன்னும் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது எடுக்கும். பல நாடுகளில்புதிய எரிபொருள் இருப்புக் கண்டு பிடித்துள்ளமை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

1 comment:

Unknown said...

வானத்தில் இருக்கும் பிரச்சனைக்கு தரையில் தீர்வு தேடும் கட்டுறை..

யூரோ விழ வேண்டும் என சதி செய்யும் அமரிக்காவை பற்றி ஒரு வரியும் இல்லை.....

என்ன எழுத்தோ...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...