Tuesday, 15 May 2012

அமெரிக்காவிற்குப் பணியாத ஈரானின் பொருளாதாரம் சீரழியுமா?

ஈரானியக் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தமது செய்மதித் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு எண்ணெய்யுடன் கடலில் எண்ணெய் விற்பதற்கு வழியின்றி அலைகின்றன. ஐக்கிய அமெரிக்காவின் செய்மதிக் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்கு அவை தமது செய்மதித் தொடர்புகளைத் துண்டித்துவிட்டன. ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இப்போது காப்புறுதி இன்றி கடலில் மிதக்கின்றன. ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் அவற்றிற்கு காப்புறுதி எடுப்பது சிரமம்மாக இருக்கிறது. பெரும்பாலான கப்பல் காப்புறுதி நிறுவனங்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. அவை ஈரானியக் கப்பல்களுக்கு காப்புறுதி செய்ய மறுத்துவிட்டன. ஏற்கனவே பன்னாட்டுக் கொடுப்பனவு முறைமையான SWIFT(Society for Worldwide Interbank Financial Telecommunication)இல் இருந்து ஈரான் வெளியேற்றப்பட்டுள்ளது.

ஈரான் அணுக் குண்டுகளை உற்பத்தி செய்வதற்கான முயற்ச்சி செய்யக் கூடாது என்று மேற்கு நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தின. உலகச் சந்தையில் தனது எண்ணெயை விற்கச் சிரமப்படும் ஈரான் தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்களை தான் உற்பத்தி செய்யும் எண்ணெயை களஞ்சியப்படுத்துகிறது. ஜப்பான் இந்தியா போன்ற நாடுகள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்துக் கொண்டு வருகின்றன. பொருளாதாரத் தடையால் ஈரான் மிகக் குறுகிய காலத்துக்குள் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை இழந்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எண்ணெய் விலை அதிகரிப்பால் ஈரான் 100பில்லியன் அமெரிக்க டாலர்களை வெளிநாட்டுச் செலவாணி இருப்பாக வைத்துள்ளது.  ஈரானிய எண்ணெய் வழங்கல் இல்லாமல் உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைவது அமெரிக்காவிற்கு ஒரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

பயன்படுத்தும் சீனா
ஈரான் மீதான பொருளாதாரத் தடையை எதிர்க்கும் சீனா ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி  செய்து அதனை தனது நாணயமான யுவானால் செலுத்துகிறது.  இந்திய வர்த்தகரகள் ஈரானுடனான வர்த்தகத்திற்கான பணக் கொடுப்பனவில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். இந்திய வங்கிகள் ஈரானின் மீதான பொருளாதாரத் தடையை பயன்படுத்தி வர்த்தக ரீதியில் இலாபமீட்டுவது பற்றி ஆலோசிக்கின்றனர். பொருளாதாரத் தடையால் நலிவடைந்துள்ள ஈரானிய வங்கிகளிற்கு இந்திய வங்கிகள் உதவி செய்யலாம். சென்ற வாரம் இந்தியாவிற்குப் பயணம் செய்த அமெரிக்க அரசச் செயலர் ஹிலரி கிளிண்டன் ஈரான் மீதான பொருளாதாரத் தடைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஹிலரி டில்லியில் இருக்கும் போதே இந்தியாவுடனான வர்ததகத்தை விரிவுபடுத்த ஈரானிய அதிகாரிகளும் டில்லியில் இருந்தனர்.

எச்சரித்த ஈரான் அடங்கியது
தன் மீது பொருளாதாரத் தடை கொண்டுவந்தால் ஹோமஸ் நீரிணையை மூடிவிடுவேன் என்று ஈரான் சென்ற ஆண்டின் இறுதிப் பகுதியில் இருந்தே எச்சரித்து வந்தது.  ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள ஹோமஸ் நீரிணையை தான் மூடி விடுவேன் என்று ஈரான்  எச்சரித்திருந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானிற்கு அண்மையில் உள்ள் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உலகை ஆட்டிப்படைக்கலாம் என்பது ஈரானின் கனவு கண்டிருந்தது. ஆனால் பொருளாதாரத் தடையை மேற்குலக நாடுகள் கொண்டுவந்த போது அது அடங்கிவிட்டது.


பொருளாதார நெருக்கடி
ஈரான் தனது பொருளாதாரம் தொடர்பாக வெளிவிடும் தகவல்கள் நம்பத்தகுந்தவை அல்ல எனச் சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானில் 20% வேலையில்லாப் பிரச்சனையும் 20% விலைவாசி அதிகரிப்புக் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். ஈரான் தனது மக்களுக்கு மின்சாரம் எரிவாயு, பாண் போன்றவற்றை மக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதனால் அரச செலவீனங்கள் ஈரானில் அதிகமாகும்.

ஜூலை முதலாம் திகதி
ஈர்ரன் தனது அணு ஆராய்ச்சியில் பின் வாங்குவதாக இல்லை. இன்னும் ஒரு ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டுக்குள் ஈரான் அணுக் குண்டு உற்பத்தி செய்யலாம். ஈரானுக்கு எதிரான முழுமையான பொருளாதாரத் தடை ஜுலை முதலாம் திகதியில் இருந்து அமூலுக்கு வருகிறது. அதன் பின்னர் ஈரான் பெரும் பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும். ஆனால் சீனாவும் இரசியாவும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை கடுமையாக எதிர்க்கின்றன. ஈரான் தனது பொருளாதாரத் தேவைகளுக்கு சீனா, இரசியா, வட கொரியா, வெனிசுலேவியா போன்ற பல நாடுகளை நாடலாம். அவற்றுடன் வர்த்தகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் மேற்குலக நாடுகள் இந்த நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா? அதுவும் இப்போது அவை எதிர் கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...