Monday, 14 May 2012

மஹிந்த வளைந்து நழுவுவாரா? நிமிர்ந்து விழுவாரா?

குரங்கிற்கு முடிவு காலம் வந்துவிட்டால் அது பாயும் கொப்பு எல்லாம் வழுக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவிற்கும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது. அண்மைக் காலமாக பல நிகழ்வுகள் அவருக்கு சாதகமாக இல்லை. நாட்டில் உச்ச நிலையில் அவரின் இருப்பிற்கு பல சவாலகள் ஏற்படுகின்றன. அவரது உத்திகள் அவருக்கு எதிராகவே கிளம்புகின்றன.

தங்க வேட்டை
இலங்கையின் தங்கக் கையிருப்புக்களை இலங்கை மத்திய வங்கி இரகசியமாக விற்றமையை ஊடகங்கள் அம்பலப்படுத்திவிட்டன. இலங்கை அரசின் அந்நியச் செலவாணிப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய இலங்கை தன்னிடமுள்ள தங்கக் கையிருப்புக்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தம். இலங்கை ரூபாவின் மதிப்பை அதள பாதாளம் செல்ல விடாமல் தடுக்க இலங்கை மத்திய வங்கி தனது அந்நியச் செலவாணிக் கையிருப்பை செலவு செய்து விட்டது. தங்கக் கையிருப்பில் இருந்து 9.3தொன் தங்கம் விற்றமை மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான பிரச்சாரமாக இனிவரும் காலங்களில் இடம்பெறும். அது மட்டுமல்ல பிரதம் நீதியரசரின் கணவரும் அரச வங்கியான தேசிய சேமிப்பு வங்கியின் தலைவருமான பிரதீப் காரியவாசம்  47 ரூபாக்கள் பெறுமதியான பங்குகளை முப்பது ரூபாக்களுக்கு வாங்க முயன்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையை இரத்துச் செய்த மஹிந்த ராஜபக்ச  பிரதீப் காரியவாசம் மீது எந்த சட்ட நடவைக்கையும் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.


புதையல் வேட்டை
அநுராதபுரத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் பிடிபட்டபோது அவர்கள் இலங்கைக் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி அம்பலப்படுத்தப்படுத்தப்பட்டது. இது மஹிந்த ராஜபக்சமீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 மோசமான பொருளாதாரம்
இலங்கைப் பொருளாதாரம் இரு இரத்தப் பிழிவுகளில் தங்கியுள்ளது. ஒன்று மலையகத் தொழிலாளர்களின் இரத்தப் பிழிவு. மற்றது மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் முக்கியமாக பணிப்பெண்களாக தொழில் புரிபவர்களின் இரத்தப் பிழிவு. மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தேயிலை ஏற்றுமதியைப் பாதித்தது. மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையர்கள் தொகை இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் அந்நியச் செலவாணி வருவாய் குறைந்துவிட்டது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை தடுக்க முடியாமல் இலங்கை அரசு தடுமாறுகிறது. இலங்கைப் பங்குச் சந்தையில் ஒரு வெளிநாட்டவர் செய்த 2011 செய்த முதலீடு இலங்கை நாணய மதிப்பிறக்கத்தாலும் பங்கு விலை வீழ்ச்சியாலும் தனது முதலீட்டுக்கு 30% மேற்பட்ட இழப்பைக் கண்டுள்ளார். விலைவாசி அதிகரிப்பு 10%இலும் அதிகரித்து விட்டது. இது பணியாளர்களை சம்பள அதிகரிப்பு வேண்டி பெரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வைக்கலாம். இனி வரும் காலங்களில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகலாம்.

மஹிந்த குடும்பத்திலும் சகோதரப் போர்
மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்துக்குள்ளும் சகோதர போர் உக்கிரமாக நடை பெறுகிறது. கோத்த பாய ராஜபக்சவிற்கு பசில் ராஜபக்சவைப் பிடிக்காது.  பசில் ராஜபகசவிற்கு மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவைப் பிடிக்காது. மஹிந்தவின் மனைவிக்கு கோத்தபாய ராஜபக்சவைப் பிடிக்காது.

யாழில் புலிக் கொடி
யாழ்ப்பாணம் செல்லும் சிங்கள எதிர்க்கட்சியினருக்கு எதிராக கடந்த காலங்களில் பல ஆளும் கட்சிய்கள் பல சதிகளை வெற்றிகரமாக நிகழ்த்தியது உண்டு. ஜே ஆர் ஜயவர்த்தன அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவர் யாழ் சென்றார் அவரது கூட்டதில் பெரும் குழப்பம் விளைவித்து மேடையை சிதைத்து அவர் விரட்டியடிக்கப்பட்டார். ரோஹண விஜயவீர மீது கல்வீசிக் காய்பப்டுத்தப்பட்டு மயங்கி விழச்செய்யப்பட்டார். ஆனால் தற்போதைய  ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பணத்திற்கு மேதினம் கொண்டாடச் சென்றபோது அவருக்கு எதிராக ஒரு புலிக்கொடியை அவரது ஊரவலத்தில் பிடித்து அவர் புலியுடன் இணைந்து விட்டார் என்று பிரச்சாரம் செய்ய முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அம்முயற்ச்சியை ரணில் அரச படைகளின் சதி அது என்று வெற்றிகரமாக அம்பலப்படுத்தி விட்டார்.

கட்டுக்கு அடங்காத வளர்த்த கடாக்கள்
மஹிந்த ஊட்டி வளர்த்த சிங்கள பௌத்த வெறியர்கள் இப்போது போடும் ஆட்டம் கட்டுக்கு அடங்காமல் போகிறது. இசுலாமிய இந்து ஆலயங்கள் மீது அவர்கள் நடாத்தும் தாக்குதல்கள்களும் அவர்கள் விடும் அறிக்கைகளும் இதைத் தெளிவாகச் சுட்டிக்க்காட்டுகிறது. அடிதடி அமைச்சர் என விமர்சிக்கப்படும் மேர்வின் டீ சில்வா விவகாரம் மஹிந்தவிற்கு அவரது கட்சிக்குள்ளேயே பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.


படையினர் இடையிலான குழப்பம்
இலங்கை அரச படையினர் இடையிலான குழப்பங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. வடக்குக் கிழக்கில் இருந்து கணிசமான தொகை படையினரை மஹிந்த தெற்கு நோக்கி நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் இனி  வரும் காலங்களில் ஏற்படும். இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று  வடக்குக் கிழக்கில் அதிக அளவில் படையினர் இருப்பதாக பன்னாட்டு சமூகம் கருதுகிறது. இரண்டாவது மஹிந்தவிற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்து எழுவதை அடக்க மஹிந்தவிற்கு அதிக படையினர் தெற்கில் தேவைப்படலாம். தெற்கிற்கு வரும் படையினர் தமிழர்களுக்கு எதிராக செய்த அடக்கு முறைகளை சிங்களவர்களுக்கு எதிராகச் செய்வாரக்ள். இது மஹிந்தவிற்கு எதிராக மக்களை மேலும் மோசமகக் கிளர்ந்து எழச் செய்யும்.

பொன்சேக்கா நேர வெடி குண்டு
முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேக்கா இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ எல பீரிஸ் ஐக்கிய அமெரிக்காவின் அரசச் செயலர் ஹிலரி கிளிண்டனைச் சந்திக்க முன்னர் சிறையில் இருந்து விடுதலை செய்தே ஆக வேண்டும். அல்லாவிடில் ஹிலரியைச் சந்திக்க வெறும் கையுடன் சென்றவர் ஆவார். (இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது சரத் பொன்சேக்கா விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்.)சரத் பொன்சேக்க்கா விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர் தனது மருத்துவ சிகிச்சைக்கு என்று சொல்லி வெளிநாடு செல்வார். அதை மஹிந்த தடுத்தால் அவர் உச்ச நீதி மன்றம் வரை செல்வார். சரத் பொன்சேக்கா வெளிநாடு சென்றால் அவர் மஹிந்தவைப் பற்றிய மேலும் பல போர்க்குற்ற உண்மைகளை பகிரங்கமாக அம்பலப்படுத்துவார் அல்லது இரகசியமாக  அம்பலப்படுத்த உதவுவார்.


2016இன் பின்னர் மஹிந்த தண்டிக்கப்படுவார்.
இலங்கையிலும் பங்களாதேசத்திலும் மியன்மாரிலும் சீன ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட முழுமுனைப்புடன் செயற்படுகிறது ஐக்கிய அமெரிக்கா.இப்போது அமெரிக்கா இந்தியாவை வலுக்கட்டாயமாகத் தன்பக்கம் இழுத்து மஹிந்த ஆட்சிக்கு எதிராக இணைந்து செயற்பட செய்துள்ளது. இவர்களுடன் இணங்கி இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்தும் தமிழர்களுக்கு எதிரான போரில் உதவியமைக்காக அமெரிக்காவிற்கு உரிய பங்கிலாபத்தை வழங்கியும் மஹிந்த ராஜபக்ச வளைந்து கொடுப்பாரா? அப்படி வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்து நின்று முரண்டு பிடித்து சீனாவின் பக்கம் மேலும் சாய்வார் ஆனால் அவருக்கு ஐக்கிய அமெரிக்கா பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கும். 2014இல் சோனியா காந்தியின் காங்கிரசுக் கட்சி இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் பிறகு வரும் இந்திய அரசை இலங்கையில்  நடந்த போர்க்குற்றத்திற்கு உனக்கும் பங்கு உண்டு உனது போரையே நான் நடத்தினேன் என்று சொல்லி மஹிந்த ராஜபகசவால் மிரட்டி தனக்கு பணிய வைக்க முடியாது. தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனன் நாராயணன் போன்றோர்கள் இந்திய அரசின் செயற்பாடுகளில் செல்வாக்கு வகிக்க மாட்டார்கள். தமிழின விரோத கதர் வேட்டிகளும் மஹிந்தவிடம் தட்சணை வாங்கிக் கொண்டு செயற்படும் பூனூல்களும் காணாமல் போய்விடுவார்கள். இப்போது ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் பான் கீ மூனும் வில்லங்கம் பிடித்த வில்லன் விஜய் நம்பியாரும் 2015இன் பின்னர் இருக்க மாட்டார்கள். 2016இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக அமெரிக்க சார்புடைய ஒரு கிழக்கு ஐரோப்பியரே வரும் சாத்தியம் உண்டு. இப்போது அமெரிக்கவுடன் இசைந்து நடக்காவிடில் 2016இன் பின்னர் மஹிந்த பன்னாட்டு நீதிமன்றில் தண்டிக்கப்படலாம்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...