Sunday 1 April 2012

தொடரும் மனித உரிமைக் கழகமும் நழுவும் இலங்கையும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச கண்டியில் நடந்த கூட்டமொன்றில் பங்குபற்றியுள்ளார். இந்தக் கூட்டத்தின் அடிப்படை "இலங்கை ஒரே நாடு! ஒரே மக்கள்!!" என்பதாகும். இதுதான் மஹிந்த சிந்தனையின் கருப்பொருளுமாகும். இலங்கை சிங்கள நாடு!! இது சிங்கள மக்களுக்கே சொந்தமானது என்றே மஹிந்த கருதுகிறார். ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்படமைக்கு முக்கிய காரணம் மனித உரிமை அமைப்புக்களும் சனல் - 4 தொலைக்காட்சிச் சேவையும் தான் காரணமென்பதால் தனது நாடு வெளிநாட்டு ஊடகங்களால் பலியிடப்பட்டது என்றும் தனது நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் பின்னணியில் இருந்து செயற்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

தீர்க்க முடியாவிட்டல் குழப்பு
இலங்கை தனக்கு எதிரான பன்னாட்டு சமூக நிலைப்பாட்டை எதிர் கொள்ள முடியாத நிலையில்  நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவர்களைக் குழப்புவது உரிய வழி என கருதுகிறது. முதலில் வெள்நாட்டமைச்சர் ஜீ எல் பீரிஸ் மனித உரிமைக் கழகத் தீர்மானத்தை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார். அதைத் தொடர்ந்து இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன அது அரசின் கருத்து அல்ல பீரிஸின் தனிப்பட்ட கருத்து அது என்றார். மீண்டும் பீரிஸ் அதுதான் அரசாங்கத்தின் கருத்து என்றார். இம்மாதிரி பல முரண்பட்ட கருத்துக்களை வெயிட்டு கடந்த காலங்களில் இலங்கை பன்னாட்டு சமூகத்தை வெற்றீகரமாகக் குழப்பியதுண்டு.  இப்படிக் குழப்புவது  கால இழுத்தடிப்புத் தந்திரத்திற்குப் பெரிதும் உதவும். இப்படி அதிகம் ஏமாற்றப்பட்டது இந்தியாவே.

பீரிஸைக் கவனமாகக் கையாளும் எதிர்க்கட்சியினர்
இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸை பாரளமன்றத்தில் கிண்டல் செய்த எதிர்க் கட்சியினர் தமது கிண்டலை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மேற்கொண்டனர். அவர்களுக்குத் தெரியும் அமைச்சர் பீரிஸ் எந்த நேரமும் கட்சிதாவலாம் என்று. இது அவருக்குக் கைவந்த கலை.

மௌனமாயிருக்கும் மஹிந்த
ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் மஹிந்த ராஜ்பக்ச தனது பேச்சை குறைத்துள்ளார். ஜெனீவாத் தீர்மானத்தை ஏற்கப் போகிறாரா இல்லையா என்று கருத்துச் சொல்வதைத் தவிர்த்துவிட்டு இலங்கையில் அன்னியத் தலையீடு ஏற்படுகிறது என்று கூச்சலிடுகிறார். ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னணியைத்தான் விமர்சிக்கிறார். அவர் கடாஃபிக்கு நடந்தது தனக்கு நடக்காது என்று கூறுவதில் அதிக நேரம் செலவிட்டார். அவரது கனவிலும் நினைவிலும் கடாஃபிதான் வருகிறார் போல் இருக்கிறது. கடாஃபியை சீனாவோ இரசியாவோ காப்பாற்ற முடியாமல் போனதை அவர் அறிவார். அதுமட்டுமல்ல சூடானிலும் ஈராக்கிலும் சீனாவாலோ இரசியாவாலோ எதையும் செய்ய முடியாமற் போனது என்பதையும் மஹிந்த அறிவார். இந்தியா ஈழத் தமிழர்களின் நண்பனாக நடித்து எப்படி கடைசியில் அவர்களைக் காலை வாரிவிட்டு பெரும் அழிவிற்கு வழிவகுத்தது என்பதையும் மஹிந்த அறிவார். இதே மாதிரி சிங்களவர்களுக்கும் துரோகம் செய்ய "நண்பன்" இந்தியா தயங்காது என்பதையும் மஹிந்த அறிவார்.

2013இல் 22-ம் கூட்டத் தொடர்
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத் தீர்மானத்தில் உள்ள முக்கிய அம்சம் இலங்கைக்கு மனித உரிமைகள் தொடர்பாக மனித உரிமைக்கழகம் ஆலோசனை வழங்க வேண்டும் என்பதும் கழகத்தின் 22-ம் கூட்டத் தொடரில் இது பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதே. மனித உரிமைக் கழகம் இலங்கையில் இதற்கு ஒரு பணிமனையைத் திறக்கவிருக்கிறது. இது மனித உரிமைக்கழகம் இலங்கையை சும்மா விடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. 2013வரை இலங்கைக்கு கால அவகாசம் இருக்கிறது. இலங்கை அரசு 2013 வரை காலத்தை இழுத்தடித்துவிட்டு 2013 மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடர் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் மஹிந்த தனது மனித உரிமை பேணல் தொடர்பான சில திட்டங்களை வெளிவிட்டு மேலும் கால அவகாசம் கேட்கலாம். மஹிந்தவின் திட்டம் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தல் வரை இனப்பிரச்சனையை இழுத்தடிக்க வேண்டும் என்பதே. ஆனால் 2012 மார்ச்சில் நடந்த கூட்டத் தொடருக்கு முன்னரும் இலங்கை இப்படி சில முன்மொழிவுகளை முன்வைத்தது. ஜெனீவாவில் தீர்மானம் வரப்போகிறது என்று தெரிந்ததும், கிளிநொச்சிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையில் ஐந்து பேர் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் எதுவும் எடுபடவில்லை. கடந்த இரு வாரங்களாக பன்னாட்டு ஊடகங்களில் எழுதப்பட்ட அரசியல் ஆய்வாளர்களின் பத்திகளில் இலங்கை அரசு இதுவரை பன்னாட்டு சமூகத்தை எப்படி ஏமாற்றியது என்பதை பல தரப்பினரும் உணர்ந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. 2013 இல் நடக்கவிருக்கும் மனித உரிமைக் கழக்த்தின் 22 வது கூட்டத் தொடரில் கழகம் சமர்ப்பிக்கும் அறிக்கை இலங்கைக்கு சாதகமாக இல்லாவிடில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஒரு பொருளாதாரத் தடைக்கான தீர்மானத்திற்கு வழிவகுக்கும். அது இலங்கையில் மஹிந்தவிற்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்யும். 2014இல் இலங்கையில் ஒரு வசந்தப் புரட்சி ஏற்படும்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...