Saturday 10 March 2012

இலங்கையில் ஓர் இனக்கலவரம் வரலாம்

இனக்கலவரம் என்பது இலங்கையில் அவ்வப்போது நடந்து வந்த ஒன்று. இலங்கையில் ஆட்சிபீடத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும்போது சிங்களவர்களின் ஆத்திரத்தை திசை திருப்பவும் அவர்களின் விரக்திக்கு ஒரு வடிகாலாகவும் ஆட்சியாளர்கள் இனக்கலவரத்தைப் பாவிப்பார்கள். 1983இற்குப் பின்னர் இலங்கையில் இனக்கலவரம் நாளாந்தம் நடந்து கொண்டிருக்கின்றது. இலங்கைப் படையினருக்கோ அல்லது காவற்துறையினருக்கோ பணத் தட்டுப்பாடு என்றால் அவர்கள் சோதனை என்ற போர்வையில் ஒரு தமிழரின் வீட்டுக்குள் சென்று அங்குள்ளவற்றைச் சூறையாடிச் செல்வதும், அகப்பட்ட ஒரு தமிழரைக் கைது செய்து கப்பப் பணம் வாங்குவதும். சோதனைச் சாவடியில் அகப்பட்ட தமிழனிடம் உள்ளவற்றைச் சுருட்டுவதும் நாளாந்த நடவடிக்கைகள். இப்படிப் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்போது இலங்கையில் ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன:
  •  பொருளாதார நெருக்கடி: உலகெங்கும் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனைகள் இலங்கையிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இப்போது தனது வெளிநாட்டுச் செலவாணிக்கு மத்திய கிழக்கில் பல இன்னல்களுக்கு மத்தியில் பணிபுரியும் அப்பாவிகளின் உழைப்பிலேயே தங்கியுள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் இந்த வருமானம் பாதிக்கப்படவும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் வீழ்ச்சியடையவும் இலங்கையின் அந்நியச் செலவாணி இருப்பு விழ்ச்சி கண்டது. இதனால் இலங்கையின் நாணய மதிப்பு விழ்ச்சியடைந்தது. அதைத் தடுக்க இலங்கை மத்திய வங்கி தனது வெளிநாட்டு நாணயக் கையிருப்பை விற்றது. அது மேலும் அந்நியச் செலவாணிக் கையிருப்பைக் குறைத்தது. இந்தப் பிரச்சனைச் சுற்று இலங்கையின் நாணய மதிப்பில் மேலும் தாக்கம் ஏற்பட அதைத் தடுக்க முடியாத நிலையில் இலங்கை மத்திய வங்கி இருக்கிறது. இதனால் பாரிய விலைவாசி அதிகரிப்பு இலங்கையில் ஏற்படத் தொடங்கிவிட்டது. அத்துடன் விவசாயிகளின் வருமானத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தப் போகிறது.
  • தொழிற்சங்கப் பிரச்சனை: பல தொழிற்சங்கங்கள் இப்போது ஆட்சியாளர்களுக்கு எதிராக மாறியுள்ளன. தொடர் வேலை நிறுத்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • மாணவர்கள் பிரச்சனை: பல மாணவர் அமைப்புக்கள் ஆட்சியாளரகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த காலங்களில் அவர்களது ஆர்ப்பாட்டங்களை அரசு கையாண்ட விதங்கள் அவர்களின் ஆத்திரத்தை கிளறி விட்டுள்ளன.
  • உட் கட்சிப் பிரச்சனை: ஆளும்  கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் ஆட்சியாளர்கள் நாட்டில் உள்ள பிரச்சனைகளையும் மக்கள் எதிர்ப்புக்களையும் கையாண்ட விதங்களை இட்டு அதிருப்தி அடைந்துள்ளனர். சிலர் தாம் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் மிரட்டுகின்றனர்.
  • பன்னாட்டு அரங்கில் பெரும்பாடு: இப்போது மஹிந்த ராஜபக்சவை தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளச் செய்யும் பிரச்சனை மனித உரிமை மற்றும் போர்க்குற்றப் பிரச்சனை. இது தற்போது நடக்கும் ஜெனிவா மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடருடன் முடியப்போவதில்லை. இப்பிரச்சனை இன்னும் அதிகரித்துச் செல்லும்.
அடுத்த குடியரசுத் தலைவர்த் தேர்தல் வரை இலங்கை இனப்பிரச்சனையை இழுத்தடித்து அடுத்த தேர்தலிலும் அமோக வெற்றியடையலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச இப்போது தனது பதவிக் காலம் முடியும் வரை பதவியில் இருப்பேனா என்ற கவலையில் மூழ்கியுள்ளார். இவற்றில் இருந்து விடுபட ஜெனிவாவில் தனக்கு எதிரான தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்பட்டால் தமிழர்கள் தன்னைப் பழிவாங்கி விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்து  ஒரு இன விரோதத்தை இலங்கையில் கிளறி விட்டு ஒரு இனக் கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் சிங்கள மக்களின் விரக்த்திக்கு ஒரு வடிகால் தேடுவது மஹிந்தவிற்கு ஒரு வழியாக அமையலாம். தமிழர் தேசியக் கூட்டமைப்பு  ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடருக்குச் சென்று தமது தரப்பு நியாயத்தை முன்வைக்காமல் தடுக்க இந்த இனக் கலவரப் பூச்சாண்டி பயன் படுத்தப் பட்டிருக்கலாம்.

    1 comment:

    Anonymous said...

    உங்கள் பதிவுகளை www.hotlinksin.com இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

    Featured post

    உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

    விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...