Sunday 12 February 2012

பாக்கிஸ்தான் பத்திரிகையில் ஈழப் போர்க்குற்றம் விபரிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றம் இப்போது உலகின் பல நாடுகளில் உள்ள ஊடகங்களில் பிரபலமாக அடிபடுகிறது. ஆர்ஜெண்டீனாவில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் பற்றி வெளியிட்டபோது அதை இரண்டு மில்லியன்களுக்கு மேற்பட்டவர்கள் பார்வையிட்டனர். இப்போது பாக்கிஸ்த்தானில் இருந்து வெளிவரும் Dawn என்னும் பத்திரிகை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தனது கருத்துரைப் பத்தியில் வெளியிட்டுள்ளது.

பாக்கிஸ்த்தானுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையில் ஒரு நீண்டகாலப் பகையுண்டு. பாக்கிஸ்தான் ஈழத் தமிழர்களை வெறுப்பதற்கு முக்கிய காரணம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாமீது இருக்கும் அல்லது இருந்த பாசம். 1971இல் நடந்த பங்களாதேச விடுதலைப் போரில் ஈழத் தமிழர்களும் அரசியல் தலைவர்களும் பங்களாதேச மக்களை ஆதரித்தனர். அப்போது இலங்கையினூடாக பாக்கிஸ்த்தான் போர் விமானங்கள் பறப்பதை இலங்கைப் பாராளமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் எதிர்க்குரல் கொடுத்தனர் குறிப்பாக அப்போது உடுவில் பாராளமன்ற உறுப்பினராக இருந்த தர்மலிங்கம் அவர்கள் கடுமையாக எதிர்த்தார். பின்னர் பாக்கிஸ்தானில் நடந்த பாராளமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் பங்குபற்றச் சென்றிருந்த சாவகச்சேரி பாராளமன்ற உறுப்பினர் வி என் நவரத்தினம் அவர்களை பாக்கிஸ்தானில் "நீ தர்மலிங்கத்தின் கட்சியா?" எனக் கேட்டதுமுண்டு.

ஈழ விடுதலைப் போரில் சிங்களவர்களுக்கு உதவுவதில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் அடுத்தபடியாக பாக்கிஸ்தான் திகழ்ந்தது. ஆனால் சீனாவும் பாக்கிஸ்த்தானும் இந்தியாவைப் போல் தமிழர்களைக் கொல்வதில் நேரடியாக களத்தில் இறங்கிச் செயற்படவில்லை.

பாக்கிஸ்த்தானில் இருந்து வெளிவரும் Dawn என்னும் பத்திரிகையில் சொல்லப்பட்டவை:
2009இல் தமிழ் புலிகளுக்கு எதிராக நடந்த கொடூரமான போரில் இறுதிப் பகுதியில் இலங்கைப் படையினர் செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்களிற்கு இலங்கை அரசைப் பொறுப்புக் கூற வைக்க பன்னாட்டுச் சமூகம் முன்னெடுப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அடுத்தமாதம் ஜெனிவாவில் நடக்க விருக்கும் மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பாக்கிஸ்த்தான் தடையாக இருக்கக்கூடாது. தற்போது இலங்கை அதிபர் பாக்கிஸ்தானிற்கு மூன்று நாள்ப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பூர்வாங்க விசாரணையின் படி இலங்கைப் படைகள் போரை நடத்திய விதம் முழு பன்னாட்டுச் சட்டங்கள் மீதான ஒரு தாக்குதலைப் பிரதிபலிக்கிறது. போரின்போது ஐந்து மாதங்களில் மட்டும் நாற்பதினாயிரத்திற்கு மேலான பொது மக்கள் கொல்லப்பட்டனர். உண்மையில் கொல்லப்பட்டவர்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம்.

கொழும்பு புலிகளிற்கு எதிரான போரில் வெற்றி கண்டமையைப் பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியாகப் பிரசாரம் செய்து வருகிறது. அதைத் தனது தெரிவு எனத் தெரிவிக்கிறது. போராட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபாடின்றி அனைவரையும் சாட்சியமின்றி கொழுத்தியதை  மோசமாக திரித்துக் கூறுகிறது இலங்கை அரசு.

2009 ஜனவரி மாதத்திற்ககும் மே மாதத்திற்ககும் இடையில் இலங்கையின் வட பகுதியின்திவிரவாதிகளின் சிறு நிலப்பரப்பில் சிக்குண்டிருந்த பல இலட்சக் கணக்கான மக்கள் மீது பத்திரிகையாளர்களையும் பன்னாட்டுத் தொண்டர்களையும் வெளியேற்றி விட்டு இலங்கைப்படையின கண் மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் அங்கு நடந்தவைபற்றிக் கூற ஒருவரும் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் மயிரிழையில் தப்பியதைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் உயிர்கள் பிரிக்கப்பட்டன.

மண்ணாலான பதுங்கு குழிகளில் இருந்து மிகையொலி விமானங்களில் இருந்தும் பல் குழல் ஏவு கணைச் செலுத்திகளில் இருந்தும் வீசப்பட்ட குண்டுகளில் இருந்து தப்பிய மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உணவும் நீரும் மறுக்கப்பட்ட நிலையில் நரக வாழ்க்கை வாழ்ந்ததைக் கூறுகின்றனர். போரில் ஓய்வு ஏற்பட்டபோது வெளிவந்த மக்கள் துண்டிக்கப்பட்ட காலகளையும் மரத்தில் தொங்கும் குழந்தைகளின் தலைகளையுமே கண்டனர். அந்த இடைவெளியில் இறந்த உடல்களை நாய்கள் உண்ணாமல் இருக்க அவசர அவசரமாக மண்ணில் புதைத்தனர்.
அரைவயிற்றை மக்கள் தங்களிடமிருந்த சிறிதளவு அரிசியில் சமைக்கப்பட்ட கஞ்சியால் சிரமப் பட்டு நிரப்பிக் கொண்டனர். பட்டினியால் ஒரு ஓன்பது வயதுச் சிறுமி தனது நிறையின் அரைவாசியை ஒரு மாதத்தில் இழந்தார்.  குழந்தையை ஈன்றதாய் தனது தங்க நகைகளை பத்தில் ஒரு பங்கு விலைக்கு விற்றார். இரண்டு கிலோ அரிசிக்காக 16கிராம் தங்கம் பண்டமாற்றுச் செய்யப்பட்டது.

விவசாயிகளும் கடை உரிமையாளர்களும் ஆசிரியர்களும் அரச ஊழியர்களும் நாற்பது தடவைகள் இடம் பெயர்ந்தனர். பசியால் பிள்ளைகள் தவிப்பதைப் பார்க்க முடியாத பெற்றொர்கள் கடலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றனர். பிள்ளைகள் தங்கள் சிநேகிதர்கள் உடல் சிதறிக் கொல்லப்படுவதைப் பார்க்க முடியாமல் கைகளால் கண்களை மூடியபடியே இருந்தனர்.

இறுதி நேரத்தில் பதுங்கு குழி வெட்ட முடியாத மணற்தரையில் அகப்பட்ட மக்கள் தங்கள் விலை உயர்ந்த திருமணச் சேலைகளை மண்பை தயாரிக்கப் பயன்படுத்தினர்

போதிய அளவு ஊழியர்களோ மருந்துகளோ இல்லாத தற்காலிக மருத்துவ மனைகள் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகின. கருவறையிலேயே குண்டடிபட்ட பிள்ளை பிறக்கும் போதே காலில் துளைக்கப்பட்டிருந்த குண்டுடன் பிறந்தது. மருத்துவர்கள் இறைச்சி வெட்டும் கத்திகளை சத்திர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தினர். தேவாலயத்தில் குண்டால் அடிபட்ட பாதிரியாரின் கால் மயக்க மருந்தின்றி துண்டிக்கப்பட்டது.

பிரேதங்கள் நிறைந்த தண்ணீரூடாகவும் இரத்தக் குட்டைகளூடாகவும் குண்டடிபட்ட மக்கள் வெறும் கால்களுடன் தப்பி ஓடினர். தங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி காயப்பட்ட உறவினர்களைக் காப்பாற்றக் கூட மூடியாமல்  தப்பி ஓடினர்.

தப்பியவர்களில் பலர் தற்கொலை செய்யும் மனோ நிலையில் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படக் கூடிய ஒன்றல்ல. அங்கு கடமையாற்றிய மருத்துவர் ஒருவர் இப்போது இரத்தத்தைக் காணப் பயப்படுகிறார். ஒரு படப்பிடிப்பாளர் வில்லையூடாக பார்க்கும் போது அவருக்கு இறந்த குழந்தைகளின் உடல்கள்தான் தெரிகின்றன. ஒரு கத்தோலிக்க கன்னி தன் கண்ணால் கண்ட காட்சிகளின் பின்னர் கடவுள் மீது தனது நம்பிக்கையைத் தக்கவைக்கப் போராடுகின்றார்.

போர்க்குற்றமும் மாநிடத்திற்கு எதிரான குற்றமும் ஒருதரப்பால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. புலிகளும் மூர்க்கமாக முன்னேறும் படையினருக்கு எதிராக மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர். அவர்கள் மக்களைத் தப்பி ஓடாதபடி தடுத்து வைத்தனர். புலிகள் பதின்ம வயதினரை பொருளில்லாத போருக்கு கட்டாயப் படுத்திச் சேர்த்தனர். மே 18-ம் திகதி புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் கொலைகள் முடியவில்லை எஞ்சி இருந்தவர்களைத் துடைத்தழிக்கும் நோக்குடன் காயப்பட்டபடி பதுங்கு குழிகளுக்குள் இருந்தவர்கள் மீது கைக்குண்டுகளை வீசிக் கொன்றனர்.

280,000இற்கு மேற்பட்ட களைப்படைந்த பொது மக்கள் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நெருக்கமான இடங்களில் முட்கம்பிகளாலும் ஆயுதம் தாங்கிய படையினர் சூழத் தடுத்து வைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கானோர் இலஞ்சம் கொடுத்துத் தப்பித்தனர். உலகின் மிகப் பெரிய தடுப்பு முகாமில் பதினொராயிரத்திற்கு மேலான சந்தேகிக்கப்படும் கிளர்ச்சிக்காரர்கள் விசாராணை ஏதுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கண்டபடி கொல்லுதல், குழுக்கற்பழிப்பு, சித்திரவதை போன்றவை போர் முடிந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் தொடர்கின்றன.

இலங்கை அரசால் செய்யப்பட்ட பிழையான விசாரணைக் குழு அற்புத உலகில் அலிஸ் கதை போல சகல குறைகளையும் புலிகள் மீது சகல குற்றத்தையும் சுமத்திவிட்டு அரசை குற்றமற்றதாக்கிவிட்டது.

மனித உரிமை அமைப்புக்கள் போர்க்குற்றம் தொடர்பான சுயாதின விசாரணை தேவை என வலியுறுத்துகின்றன.
தப்பிய தமிழர்கள் தங்கள் நொருக்கப்பட்ட வாழ்கையை மீள ஆரம்பிக்கவும் இணக்கப்பாட்டிற்கும் உண்மை கண்டறிய்பப்பட வேண்டும் என்கின்றனர். உண்மையின்றி இணக்கப்பாடோ மன்னிப்போ இல்லை. மோதலுக்கு வழிவகுத்த குறைபாடுகள் இப்போதும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...