Saturday 7 January 2012

உச்சிதனை முகர்ந்தால் - ஒரு கண்ணோட்டம்

பாக்கியராஜின் சுந்தரகாண்டத்தில் இருந்து இலங்கைப் பிரச்சனையையும் சம்பந்தப் படுத்தி பல திரைப்படங்கள் தென் இந்தியாவில் இருந்து உருவாக்கப்பட்டன. சுந்தரகாண்டம் இலங்கையில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் காட்டியது. நள தமயந்தி ஈழப் பெண்களைக் கேவலப்படுத்தியது கன்னத்தில் முத்தமிட்டால் ஈழப்பிரச்சனையை வைத்துப் பிழைப்புத் தேடியது. உச்சிதனை முகர்ந்தால் தணிக்கைக் குழுவிற்கு மிகவும் பயந்து போய் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கதை ஈழப்பிரச்சனையை மற்றப் படங்களிலும் பார்க்க மிக ஆழமாகத் தொட்டிருக்கிறது. மற்றப் படங்களிலும் பார்க்க இது அதிகம் கண்கலங்க வைக்கிறது.

உச்சிதனை முகர்ந்தால் படத்தில் ஒரு இடத்திலும் புலிகள் என்ற வார்த்தை பாவிக்கப்படவில்லை.  ஒரு இடத்தில் தமிழ்ச்செல்வன் என்ற வார்த்தை வருகிறது அதில் தமிழ் என்னும் ஓசை தணிக்கை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் அவர்களுடன் புனிதவதி நெருங்கிப் பழகுவதும் அவர்களுக்கு வற்புறுத்தி பிட்டு சாப்பிடக் கொடுப்பதும் காட்டப்படுகிறது. பின்னணியில் எந்த இடத்திலும் கண்ணீர் அஞ்சலி என்றோ அல்லது வீர மரணம் என்றோ சுவரொட்டிகள் காணப்படாதது யாதார்தத்திற்குப் புறம்பானதே. தணிக்கைக்குப் பயந்திருந்தால் பாதி கிழிக்கப்பட்ட சுவரொட்டியையாவது காட்டியிருக்கலாம். இடம் பெயர்ந்து செல்லும் மக்கள் மத்தியில் காலிழந்த ஒரு பெண் விரைவாகச் செல்வதாகக் காட்டியது சிறப்பாக இருக்கிறது.கருபுலித் தாக்குதல் பற்றி 13 வயதுப் புனிதவதிக்குத் தெரியாதது நம்பமுடியாததாக இருக்கிறது.

படம் சொல்லும் சேதிகளில் முக்கியமானவை 1. விடுதலைப் புலிகள் மக்களுடன் நெருங்கிப்பழகினார்கள். 2. விடுதலைப்புலிகளுக்கு மக்கள் வலியச் சென்று உதவினார்கள். 3. தமிழ்நாட்டில் மருத்துவர்கள், காவல் துறையினர், மூன்று சில்லு வாகன ஓட்டுனர், திருநங்கைகள் உட்பட சகலரும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உதவுகின்றனர். ( அது உண்மையாய் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி). மருத்துவர்கள் மிகவும் மனிதாபிமானத்துடன் நடக்கிறார்கள் என்றால் மூன்று சில்லு வாகன ஓட்டுனர் புனிதவதிக்கு திருநங்கைகள் இல்லத்தைக் கண்டுபிடிக்க அலையோ அலை என்று அலைந்து பின்னர் புனிதவதியை மருத்துவ மனையில் திருநங்கைகளுடன் சேர்ந்து கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு இறுதியில் பின்னால் நின்று புனிதவதிக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கே வேண்டும் என்று கையெடுத்துக் கும்பிடும் போது கண்ணீர் வரவைக்கிறார்.

நிர்மலாவின் தாய் பேராசிரியர் நடேசனுக்கு மகளைத் திருமணம் செய்ய மறுத்தது சாதிப் பிரச்சனைதான் என்று சொல்லியிருந்திருக்கலாம். நிர்மலாவின் தாய்க்கு புனிதவதியில் வெறுப்பு வரக்காரணம் வர்க்க பேதமா? சரியான விளக்கம் கொடுத்திருந்திருக்கலாம்.

காசி ஆனந்தனுக்கு தமிழிற்குள் ஆங்கிலம் கலந்து பேசுவதில் உள்ள வெறுப்பு சில இடங்களில் காட்டப்பட்டுள்ளது. புனிதவதி நாயின் பெயரைத் தமிழ்ப்பெயராக மாற்றுகிறாள். காவல் நிலையத்தில் இது தேத்தண்ணீர் இல்லை ரீ என்று சொல்லப்படுகிறது. எல்லாப் பிள்ளைகளும் பிறந்த நாள் வாழ்த்தை ஆங்கிலத்தில் பாடும் போது புனிதவதி தமிழில் பாடுகிறாள்.

படத்தின் கதாநாயகி புனிதவதி என்றால் கதாநாயகன் நாய்தான். புனிதவதி விட்டை விட்டுப் போகும் போது அதுவும் அவளுடன் போகிறது. அவள் சாப்பிடாத போது அதுவும் சாப்பிடாமல் இருக்கிறது. படத்தின் கடைசியில் அந்த நாய்க்கு இருக்கும் உணர்வு  ..............இல்லையே என்று கூறப்படுகிறது. தணிக்கை செய்யப்பட்ட வார்த்தை தமிழனா? இந்தியனா? கதை அமைப்பில் நாயைப் புகுத்தி படத்தின் செய்தியை அதன் மூலம் தெரிவித்த தமிழருவி மணியனின் திறமை பாராட்டப்பட வேண்டியது

ஈழப்பிரச்சனை பற்றிய எந்த ஆக்கத்திலும் ஈழப்பிரச்சனை பற்றிய பூணூல்களின் கண்ணோட்டம், கதர் வேட்டிகளின் பாராமுகம், ராஜீவை கொன்றவர்கள் நீங்கள் என்ற வார்த்தை பிரயோகம் போன்றவை இல்லாமல் இருந்தால் அது ஒரு சரியான ஆக்கம் ஆகாது.

 பேராசிரியர் நடேசனினும் மனைவியும்  மருத்துவர்களும் நடத்தும் பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு நாமம் போட்டவரோ அல்லது தினமலர் நிருபரோ இருந்து  ஈழப்பிரச்சனைக்கு விரோதமான கேள்வி கேட்பது போல் காட்டியிருக்க வேண்டும் என்பது கதர்களுடனும் பூணூல்களினடனும் நெருங்கி இருந்த தமிழருவி மணியனுக்கு எப்படித் தெரியாமல் போனது?

ஈழத் துயரைச் சொல்ல இரண்டரை மணித்தியாலம் போதாது.


கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை கடைசியாக திரைப்படக் கொட்டகைக்குச்(Theatre - Kasi anna excuse me) சென்று பார்த்த பின்னர் உச்சிதனை முகர்ந்தால் படத்தை திரைப்படக் கொட்டகைக்குச் சென்று பார்த்தேன். அடுத்த படம் "முதுகில் குத்தினால்" வரும் நாளிற்காகக் காத்திருக்கிறேன்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...