Sunday, 1 January 2012

புத்தாண்டுப் பலன்கள்

சகல பஞ்சாங்கங்களின் படியும் இந்தப் புத்தாண்டு 01-01-2012இலன்று பிறக்கிறது என்பது மிக மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஆனால் வேறு வேறு நாடுகளில் பிறக்கிறது. நியூசினாந்து ஜப்பான் போன்ற கிழக்கு நாடுகளில் முதலும் பின்னர் இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலும் அதன் பின்னர் மத்திய கிழ்ககு நாடுகளிலும் அதைத் தொடரிந்து ஐரோப்பாவிலும் கடைசியாக அமெரிக்காவிலும் பிறக்கிறது.

2012 இல் சனிபகவான் forward gearஇலும் reverse gearஇலும் மாறி மாறிப் பயணம் செய்வதால் பல நற்பலனும் தீயபலனும் கலந்து நடக்கும். 26-03-2012இல் சனிபகவான் துலாவில் இருந்து இறங்கி கன்னியுடன் வாசம் செய்யவிருக்கிறார்

பிறக்கும் புத்தாண்டு எந்த இலக்கினத்தில் பிறக்கிறது என்று பார்க்கப் போனால் பெரும் குழப்பம் ஏற்படும். அதனால் அதை விட்டுவிடுவோம்.

இங்கு சொல்லப்படும் பலன்கள் உங்கள் இராசியை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் பலன்களே. உங்கள் சரியான பலன்களை உங்கள் ஜாதகத்தின் திசை புத்திகளை அடிப்படையாகக் கொண்டு சரியாக ஒரு நல்ல சோதிடருக்கு பணம் கொடுத்து அறிந்து கொள்ளவும்.


புத்தாண்டுக்கான பலன்கள்

திருவாளர் உலகம் - உங்கள் நிதி நிலை தொடர்ந்து மோசமாகவே இருக்கும். உங்கள் ஓசோன் கூரையின் ஓட்டை தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே இருக்கும். உடலெங்கும் பல பிரச்சனைகள் தொடர்ந்தும் இருக்கும்.

திருவாளர் தமிழினம்: இளிச்சவாயர் என்னும் உங்கள் இயற்பெயருக்கு ஏற்ப தொடர்ந்து நடந்து கொள்வீர்கள். தமிழனைத் தவிர யாரும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாம். ஆளலாம். உங்களிடம் புகழ் பெறலாம். அயலவர்களுடன் உங்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்படும். உங்களுக்கு தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கூடத் தரமாட்டார்கள். ஆனால் அவர்கள் உங்கள் நிலத்தில் தொடர்ந்தும் உங்களைச் சுரண்டிப் பிழைப்பு நடத்துவார்கள்.

 நகைச்சுவை விட்டிட்டு சரியாக சிந்திப்போமானால் 2012 ஒரு மோசமான ஆண்டாகவே இருக்கப் போகிறது.
உலகத்தைப் பொறுத்தவரை பொருளாதார நெருக்கடி தொடர்ந்து கொண்டே இருக்கும். மேலும் பல நாடுகளில் இளைஞர்கள் கிளர்ச்சி தொடரும்.

அமெரிக்கா
அமெரிக்காவிலும் ஆட்சி முறைமை மீதான அதிருப்தி வளர இடமுண்டு. தேர்தலை எதிர் நோக்கும் அமெரிக்காவில் பராக் ஒபாமா தோல்வியடைந்து குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் செய்யப் போகும் பொருளாதாரச் சிக்கன நடவடிக்கை பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். பராக் ஒபாமாவிற்கு எதிரான ஒரு சரியான போட்டியாளர் இன்னும் உருவெடுக்கவில்லை. அமெரிக்காவின் பாதீட்டுப் பற்றாக் குறை தொடர்ந்தும் பெரும் தலையிடியாகவே இருக்கும். வேலையில்லாப் பிரச்சனையும் தொடரும்.

ஈரான்
உலகின் பிரச்சனைக்கு உரிய பிராந்தியமாக மத்திய கிழக்கே இருக்கும். சிரியாவில் பெரும் பிரச்சனைகள் தலை தூக்கும். வளைகுடாவை மூடுவேன் என்று அறிவித்து 2011ஐ பெரும் திகிலுடன் முடித்த ஈரான் தொடர்ந்தும்மீசை முறுக்கிக் கொண்டிருக்கும். தன் படை வலிமையை மேலும் பெருக்கி தனது தனித்து இருப்பை அப்பிராந்தியத்தில் உறுதி செய்ய முயலும். இதற்காக அது தனது அணு ஆயுத உற்பத்தி செய்வதை ஒத்தி வைக்கலாம்.

சிரியா
சிரியாவில் ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். ஆனால் இது தொடர்பான கிளர்ச்சி ஆண்டு முழுக்க நீடிக்கலாம். பல இரத்தக் களரிகளை எதிர்பார்க்கலாம்

எகிப்த்து
எகிப்திய மக்கள் தொடர்ந்தும் கிளர்ச்சியில் ஈடுபடுவர். அங்கு ஒரு அமெரிக்க ஆதரவு சக்தி ஆட்சியில் அமர்வதா அல்லது இசுலாமியவாத சக்தி ஆட்சியில் அமர்வதா என்ற கேள்விக்கான விடை தேடலில் பெரும் மோதல் வெடிக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
உலகிலேயே பெரும் பொருளாதார நெருக்கடியை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே எதிர் கொள்ளும். பிரித்தானியாவில் ஏற்பட்டது போல் சமூகக் கிளர்ச்சி பல நாடுகளில் நடக்கலாம். யூரோ நாணயம் பல நெருக்கடிக்களின் மத்தியில் தப்பிப் பிழைக்கலாம். ஓரிரு நாடுகள் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலகி சொந்த நாணயங்களுக்கு மீண்டும் திரும்பலாம்.

சீனா
சீனாவிலும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றும். அவற்றை ஆட்சியாளர்கள் இலகுவாகச் சமாளிப்பதற்கு அதன் வெளிநாட்டுச் செல்வாணிக்கையிருப்பு பெரிதும் உதவும். சீனா தனது படைத் துறை வலிமையை அபரிமிதமாக அதிகரிக்கும். குறிப்பாக சீனா தனது கடற்படை வலிமையை பெரிதும் அதிகரித்து தனது கடலாதிக்கத்தை விரிவு படுத்தும். இது ஜப்பான், இந்தியா, தென் கொரியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், ஒஸ்ரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை படைத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.


பாக்கிஸ்த்தான்
அரபு நாடுகளில் ஏற்பட்டதிலும் பார்க்க மோசமான சமூக அரசியல் பொருளாதார நெருக்கடி பாக்கிஸ்தானில் ஏற்படும். பாக்கிஸ்த்தான் ஒரு சீனவின் செய்மதி நாடாக மாறும். ஹக்கானி மற்றும் லஸ்கர் ஐ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் பெரும் வளர்ச்சி காணும்.

இந்தியா
நேர்மையற்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக பல நாடுகளில் இளைஞர்கள் கிளர்ந்து 2011இல் கிளர்ந்து எழுந்த போது இந்தியாவில் மட்டும் ஒரு வயோதிபர் ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தார். அவருக்குப் பின்னராவது இளைஞர்கள் ஆட்சியாளர்களின் ஊழல்களைப் பற்றிச் சிந்திப்பார்களா. ராகுல் காந்தியின் மோக்கைத் தனம் அம்பலமாகும். இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றும்.

தமிழ்நாடு
முதல்வர் ஜெயலலிதா பார்ப்பனர்களின் கைப்பொம்மையாக மாறுவார். சங்கர் மடத்துடன் சமரசம் ஏற்படலாம். 2014 பாராளமன்றத் தேர்தல்வரை தமிழ்த் தேசிய ஆதரவாளர்களை ஜெயலலிதா கவனமாகக் கையாள்வார். தேர்தலின்பின்னர் கைகழுவி விடுவார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளா பணிந்து வரலாம்.

ஈழப்பிரச்சனை
மஹிந்த ராஜபக்ச மீது மேலும் பல போர்க்குற்ற ஆதரவு முன்வைக்கப்படும். சீனாவும் இரசியாவும் அவருக்குக் கை கொடுப்பதை நிறுத்தலாம். அவருக்கு அவரது ஆதரவாளர்களிடமிருந்தே பிரச்சனைகள் வரும். மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்களிடையே  ஊடுருவிய இலங்கை இந்திய ஆதரவு சக்திகளில் பலர் அடையாளம் காணப்படுவர். பலர் கைது செய்யப்படலாம். ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் தமிழத் தேசியத்திற்கு ஆதரவு போல் வேடமிட்டுக் கொண்டிருக்கும் இலங்கை இந்திய ஆதரவு ஊடகங்களின் சதி அம்பலமாகும்.


புத்தாண்டு வாழ்த்து
ஞாயிறுகளெல்லாம் நலன்கள் பெருகட்டும்
திங்கள்கள் தோறும் மங்களங்கள் பொங்கட்டும்
செவ்வாய்களெல்லாம் நல்வாய்ப்பாகட்டும்
புதன்களெல்லாம் பொன்னாகட்டும்
வியாழன்கள் இன்பங்களாகட்டும்
வெள்ளிகளில் மகிழ்ச்சிகள் மிளிரட்டும்
சனிகள் எல்லாம் இனிதாகட்டும்
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...