Monday, 28 November 2011

பிரபாகரன் இறந்த கட்சியும் இறவாத கட்சியும் பிளவு பட்டு நிற்கின்றன வெளிநாடுகளில்.


வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கிடையிலான பிளவு மாவீரர் தின ஏற்பாட்டில் பிரித்தானியா உடபட சில நாடுகளில் இரு வேறு போட்டிக் குழுக்கள் ஒழுங்கு செய்தமை மூலம் பகிரங்கமானது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடையே மூன்று குழுக்கள் இருக்கின்றன என்று இக்குழுவினரே  பகிரங்கமாக ஒத்துக் கொணடுள்ளனர். மூன்று குழுக்கள் இருக்கின்றன என்றால் அதில் ஒன்று கொழும்பின் கைக்கூலி என்றும் இரண்டாவது டில்லியின் கைக்கூலி என்றும் முன்றாவது தமிழர்களுக்கானது அல்லது சுயநலம் கொண்டது அல்லது மேற்கு நாடுகளின் வால் பிடிகள் என்று ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் பற்றி அறிந்தவர்களால் இலகுவில் ஊகிக்க முடியும். இந்த முன்று குழுக்களும் எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை அறிய ஒவ்வொன்றும் தம்மைப் பற்றிச் சொல்வதையும் ஒவ்வொன்றைப் பற்றி மற்றையவை சொல்பவற்றை வைத்துத்தான் அறிந்து கொள்ள முடியும்.

குமரன் பத்மநாதன் என்னும் KP
பிரபாகரன் இறக்கவில்லை என்று முதல் அறிக்கை விட்ட பத்மநாதன் பின்னர் ஒரு குத்துக் கரணம் அடித்து அவரது எஜமானர்களின் கட்டளைக்கு இணங்க பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அறிக்கை விட்டார். இதை ஜீரீவி தொலைக்காட்சி செய்தியாய் வெளிவிட மக்கள் கொதித்து எழுந்தார்கள். ஜீரிவி ஒளிபரப்பையே நிறுத்த வேண்டிய சூழ் நிலை உருவாகியது. பின்னர் ஜீரீவி குத்துக்கரணம் அடித்தது. தமக்கு ஒன்றும் தெரியாது தமக்கு வழங்கிய செய்தியைத் மட்டுமே ஒளிபரப்பினோம் என்று திருப்பித் திருப்பி மன்னிப்புக் கோரினார்கள். பத்மநாதன் தன்னைத் தானே இனி விடுதலைப் புலிகளின் தலைவர் என்றும் பிரகடனப் படுத்திக் கொண்டார். பின்னர் பத்மநாதன் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டார். தனது கைதைப்பற்றி பத்மநாதன் இப்படிக் கூறினார்:

  • நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால், நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது. துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இப்போது NERDO (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.

"கைது" செய்யப்பட்ட பத்மநாதன் இப்போது ஆடம்பர மாளிகையில் இருக்கிறார். பத்மநாதன் கைது செய்யப்படவில்லை அவர் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுகிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் கூறுகிறார்கள். அவரது NERDO (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு)இனால் எவருக்கும் குறிப்பிடத்தக்க எந்த நன்மையும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

புலிகளின் தலைமைச் செயலகம் - விநாயகமும் தப்பி ஓடிவந்த புலிகளும்
பத்மநாதனின் "கைது"க்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் தாம் இறுதிவரை களத்தில் நின்று போராடிய புலிகள் இப்போது தப்பி வந்துள்ளோம் என்று கூறிக் கொண்டு சிலர் புதிதாகத் தோன்றினர். இவர்கள் தம்மை விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தினர் எனக் கூறுகின்றனர். இவர்களில் விநாயகமூர்த்தியும்(விநாயகம்) சங்கீதன் என்பவரும் முக்கியமானவர்கள். இவர்கள் தாங்கள்தான் இனி விடுதலைப் புலிகள் என்கின்றனர். இதில் விநாயகம் கொழும்பில் விடுதலைப்புலிகளின் புலானாய்வில் இருந்தவர். சங்கீதன் தான் இறுதிவரை முள்ளிவாய்க்காலில் தலைவருடன் இருந்து போராடிப் பின்னர் தப்பி வந்தவர் என்கிறார்.  இவர்கள் இலங்கை அரசிடம் பிடிபட்டு பின்னர் அவர்களுடன் இணைந்து செயற்படுகிறார்கள். இவர்களை இலங்கை அரசும் பத்மநாதனுமே அனுப்பி வைத்துள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் அங்குள்ள தமிழ்த் தேசிய ஆதரவுக் கட்டமைப்பை கைப்பற்றுவதுமே. இப்படி இவர்களுக்கு எதிரானவர்கள் கூறுகின்றனர். அகதியாக அண்மையில் வந்த சங்கீதன் எப்படி பல நாடுகளில் பிரயாணம் செய்கிறார். இவர் பல கூட்டங்களை ஆடம்பர உணவகங்களில் எப்படி நடத்துகிறார். இவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
2009மே மாதத்திற்குப் பின்னர் நாடுகடந்த அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அது சனநாயக அடிப்படையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் செயற்படவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் வி. உருத்ரகுமார் சொல்லிக் கொண்டு தமிழர் முன் வந்து பல ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகளில் தேர்தல் வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைத்தார். அதற்கு அவரே பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நாடுகடந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் குற்றச் சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதில் இவர்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என நம்புகிறார்கள் அதை வெளியில் சொன்னால் தமது செல்வாக்கிற்கு பாதகம் வரும் என்பதால் அதை வெளியில் சொல்வதில்லை. வி. உருத்திரகுமார் இனி தானே தலைவன் இனிப் பிரபாகரனைப்பற்றி பாடல்கள் எழுதி இசைத்தட்டுகளாய் வெளிவிடுவதைப் போல் தன்னைப் பற்றி பாடல் எழுதவும் என்று கூறினார் என்றும் சொல்கிறார்கள். தானே இனி பிரபாகரனைப்போல் மாவீரர் நாள் உரை நிகழ்த்த வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாகவும் சொல்கிறார்கள். நாடுகடந்த அரசுக்கு நடந்த தேர்தலில் பல குளறுபடிகள் நடந்தன என்ற குற்றச் சாட்டும் உண்டு. தெற்கு இலண்டன் பிரதேசத்திற்கான நாடுகடந்த தமிழீழ அரசிற்கான பிரதிநிதி தேர்வில் 90%இற்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற மருத்துவர் மூர்த்தியையும் பரராஜசிங்கத்தையும் திரை மறைவில் மிரட்டி பதவி விலகச் செய்தனர். தேர்தலில் தோல்வி கண்டவர்களை உறுப்பினர்களாக்கினர். இப்படி வேறு சில  தேர்தல் தொகுதிகளிலும் நடந்தது. சில தொகுதிகளில் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டு உருத்திரகுமாரே உறுப்பினர்களை நியமித்தார். ஒரு தொகுதியில் தேர்தல் நடந்தது பிழை என்றால் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவி விலகினால் தேர்தல் மீள நடத்தப்படவேண்டும். அந்த இடத்திற்கு தோற்றவர்களை நியமிப்பது சனநாயகமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. பிரபாகரன் சனநாயக வழியிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடக்கவில்லை என்றும் திரை மறைவில் குற்றம் சாட்டி தாம் சனநாயக முறைப்படியும் வெளிப்படைத் தன்மையுடனும்  ருத்திரகுமாரும் அவரது ஆதரவாளர்களும் சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் அவர்களிடம் இது இரண்டும் இல்லை என்று ருத்திரகுமாருக்கு எதிரானவர்கள் சொல்கிறார்கள். அத்துடன் நாடுகடந்த அரசிடம் ஆட்பலமோ அல்லது பணபலமோ இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இன்னொரு குழுவுடன் ஒட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. திரைமறைவில் உருத்திரகுமாரும் அவரது ஆதரவாளர்களும் இந்தியாவின் ஆதரவுடனேயே தமிழர்கள் எதையாவது பெற முடியும் என்றுக் கூறுகிறார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பு - காசு சேர்த்த கூட்டம் - உண்டியல் குலுக்கிகள் - அமைப்பு
வெளிநாடுகளில் தமிழ்த் தேசியத்திற்கான ஆதரவுத் தளம் அங்கு அகதியாகச் சென்ற தமிழர்கள் தமக்கு நிரந்தர வதிவிடம் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தால் உருவானது என்று தமிழ்த் தேசியத்தின் எதிரிகள் அடிக்கடி கூறுவதுண்டு. இலங்கையில் எப்போது ஆயுத போராட்டம் உருவானதோ அன்றில் இருந்தே இலங்கை விடுதலை அமைப்புக்களுக்கு சமாந்தரமான அமைப்புக்கள் ஐரோப்பியாவிலும் அமெரிக்காவிலும் உருவானது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் அதாவது எழுபதுகளில் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை கொல்லப்பட்டுவிட்டார் என்பதை அவரது குடும்பத்தினருக்கு இலண்டனில் இருந்து சென்ற தொலைபேசியூடாகவே அறிவிக்கப்பட்டது. ஈழத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு அன்றிலிருந்தே நிதி உதவி மற்றும் ஆலோசனைகள் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இருந்தே வழங்கப்பட்டன. பிரபாகரன் இதற்காக ஒரு சர்வதேசக் கட்டமைப்பை உருவாக்கி இருந்தார். இதற்கு வேறு வேறு கட்டங்களில் வேறு வேறு பேர்கள் பொறுப்பாக இருந்தனர். இப்போது இதற்குப் பொறுப்பாக இருப்பவர் நெடியவன் எனப்படும் சிவபரன் பொறுப்பாக இருக்கின்றார்.  இதுவரை ஈழ விடுதலைப் போருக்கு நிதி திரட்டியவர்கள் நாம் என்று இவர்கள் கூறுகின்றனர். இலண்டனிலும் சரி ஜெனிவாவிலும் சரி மற்றும் எந்த மேற்கு நாடுகளிலும் சரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் கச்சிதமாக ஒழுங்கு படுத்தியவர்கள் நாம் என்றும் இவர்கள் கூறுகின்றனர். அத்துடன் இவர்கள் பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுகின்றனர். போராட்டம் முடியவில்லை. முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பமே, விழ விழ் எழுவோம் என்கின்றனர். இந்தியா எமது எதிரி என்று இவர்கள் திரைமறைவில் அடித்துச் சொல்கின்றனர்.  இவர்கள் சட்டப் பிரச்சனைகளில் இருந்து தப்ப வேறு வேறு காலங்களில் வேறு வேறு பெயர்களில் செயற்படுவார்கள். இப்போது இவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் செயற்படுகிறார்கள். பிரித்தானியாவில் இவர்கள் தம்மை அமைப்பு என்று அழைத்துக் கொள்வர். மற்ற நாடுகளில் கட்டமைப்பு என்று தம்மை இவர்கள் அழைக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக மற்றவர்களால் சொல்லப்படுவது: இது காசு சேர்த்த கூட்டம், உண்டியல் குலுக்கிக் கொண்டு திரிந்த கூட்டம். இவர்களுக்கு பிரபாகரன் எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. இவர்கள் கமிஷனுக்கு காசு சேர்த்தவர்கள். காசு சேர்ப்பதற்காகவே இவர்கள் போராட்டம் தொடரும் என்கிறார்கள். சிலர் இவர்கள் அப்பாவிகள் இவ்வளவு காலமும் பல சிரமப்பட்ட்டு போராட்டத்திற்கு உதவியவர்கள் என்றும் இவர்கள் அதிக உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறார்கள் என்றும், யாதார்த்த நிலையை உணர்கிறார்கள் இல்லை என்றும் கூறுகிறார்கள். கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் இலண்டனிலும் பாரிஸிலும் தாக்கப்பட்டுள்ளனர். பலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை விநாயகம் குழுவே செய்ததாக கட்டமைபினர் கூறுகின்றனர. 2009இல் போரின் இறுதிக் கட்டதில் இந்த கட்டமைப்பினர் தாம் மக்களிடம் சேர்த்த பணத்தை கையாடிவிட்டனர் என்று இவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் தாம் சேர்த்த பணம்  முழுவதும் பத்மநாதனுக்கு அனுப்பினோம் என்கின்றனர்.

முரண்பாட்டின் ஆரம்பம்
புலிகளின் தலைமைச் செயலகம் எனப் படும் விநாயகம் குழு மாவீரர் தினத்தை இனித் தாமே நடத்த வேண்டும் என சர்வதேசக் கட்டமைப்பைக் கேட்டது முரண்பாடு ஆரம்பித்தது. மாவீரர் தினம் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட வேண்டும் என்று விநாயகம் குழு கூறியது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கட்டமைப்பு கூறுகிறது. மாவீரர் நாளைக் குழப்பதுவதே இவர்களின் நோக்கம் என கட்டமைப்பு அடித்துச் சொல்கிறது. கட்டமைப்பில் இருந்து சிலர் விநாயகம் குழுவிற்குத் தாவிவிட்டனர். நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தலில் உருத்திரகுமார் குழுவிற்கும் கட்டமைப்பு எனப்படும் நெடியவன் குழுவிற்கும் மோதல் ஆரம்பித்துவிட்டது. உருத்திரகுமாரின் மாபெரும் கனவான மாவீரர் உரையாற்றுதலிற்கு விநாயகம் குழு சம்மதித்ததால் அவரது குழு  அவர்களுடன் இணைந்து விட்டது. அத்துடன் இருவருமே பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற கொள்கையுடையவர்கள் என்றும்  இந்தியக் கைக்கூலிகளான உருத்திரகுமாரின் குழுவும் இலங்கைக் கைக்கூலிகளான விநாயகம் குழுவும் இலங்கையும் இந்தியாவும் இணைந்து தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செயற்படுவது போல கைகோர்த்து நிற்கிறார்கள் என்கின்றனர் கட்டமைப்பினர்.

தமிழ்நாட்டிலும் பிளவு
சுபவீரபாண்டியனும் திருமாவளவனும் விநாயகம் குழுவுடனும் நெடுமாறன்ஐயா வைக்கோஐயா போன்றவர்கள் கட்டமைப்பு எனப்படும் நெடியவன் குழுவினருடனும் இணைந்து விட்டனர் போலத் தெரிகிறது. இது உறுதி செய்யப்பட முடியாத் ஒன்று. ஈழக் கவிஞரும் அரசியல்வாதியுமான காசி ஆனந்தன் கட்டமைப்பினருடன் இணைந்து நிற்கிறார்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...