Monday 14 November 2011

தாலி கழற்றும் இத்தாலியும் சீனாவிடம் கையேந்தும் ஐரோப்பியாவும்.

ஒரு இத்தாலியாளின் தாலி கழன்றமைக்காக இலட்சக்கணக்கான தாலிகள் இலங்கையில் அறுக்கப்பட்டன. இப்போது இத்தாலிய தேசத்தின் தாலியே கழர்கின்றது. ஒரு புறம் சர்வாதிரிகள் ஆயுதப் புரட்சிகள் மூலம் பதவியில் இருந்து விரட்டப் படும் வேளையில் மறு புறம் பணநாயகங்களின் தலைவர்கள் பண நெருக்கடியால் பதவிகளில் இருந்து விரட்டப்படுகின்றனர். இத்தாலி 17 நாடுகளைக் கொண்ட யூரோ வலய நாடுகளில் மூன்றாவது பெரிய பொருளாதாரம். முதலாம இரண்டாம் இடங்களை ஜெர்மனியும் பிரான்சும் வகிக்கின்றன. அதன் கடன்கள் 1.9டிரில்லியன் யூரோக்கள். இது இத்தாலியின் வருட மொத்த உறபத்தியுடன் ஒப்பிடுகையில் 120%.

யூரோ நாணயம் இத்தாலியின் கடன் நெருக்கடியால் தனது பெறுமதியை இழந்து வருகிறது. அயர்லாந்து, கிரேக்கம், போர்ச்சுக்கல் ஆகியவற்றின் அரசத் தலைவர்கள் ஏற்கனவே பதவியில் இருந்து விலகிவிட்டனர். இத்தாலியின் அரச கடன் முறிகளின் வட்டி வீதம் பிரச்சனைக்குரிய 7%ஐத் தாண்டிவிட்டது. ஒரு நாட்டின் அரச கடன் முறிகளின் வட்டி வீதம் பிரச்சனைக்குரிய 7%ஐத் தாண்டினால் அது தனது கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. கிரேக்கத்தில் இவ்வீதம் 50ஐத் தாண்டியது. இத்தாலியின் கடன் நெருக்கடியால் அதன் பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனி பதவியில் இருந்து விலகினார். மிக இளம் பெண்களை வைத்து பலான விருந்து கொடுத்து வந்த இத்தாலியப் பிரதம மந்திரி, அது அம்பலமான போது பதவி விலகவில்லை. அவரது திறமை அற்ற நிர்வாகம் எப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவரது நிர்வாகத்தில் ஊழல்கள் நிறைந்திருந்தன. 17 வருட அரசியல் வாழ்க்கையில் 19 தடவை நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டவர். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அவர் பதவியில் நிலைத்தது அவர் வத்திக்கானுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் என்று விமர்சனங்கள் வந்திருந்தன. இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனியின் பதவி விலகலை பல இத்தாலியியர்கள் ஹல்லலூயா எனக் கூக்குரலிட்டுக் கொண்டாடினர். பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனியின் பதவி விலகலுடன் இத்தாலிய அரசு பல சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது ஊழியர்கள் ஓய்வி பெறும் வயதை 65இல் இருந்து 67 ஆக உயர்த்தியதுடன். பல அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியின் புதிய பிரதமராக ஜியோஜியோ நெப்பொலிற்றனொ பதவி ஏற்ப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய பிரதமர் பொருளாதார நிபுணர் ஜியோஜியோ நெப்பொலிற்றனொ
 புதிய பிரதமாராகப் பதவி ஏற்கவிருக்கும் பொருளாதார நிபுணர் ஜியோஜியோ நெப்பொலிற்றனொ அரசியல் பொருளாதாரவியலில் வல்லவர். பொக்கன் பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்தவ்ர். ஐரோப்பிய ஒன்றியத்தில் வர்த்தக்த்துறையில் ஆரோக்கியமான போட்டிக்குப் பொறுப்பாக இருந்து சிறப்பாகச் செயற்பட்டவர். அப்பதவியில் இருக்கும் போது மைக்ரோசொfற் நிறுவநனத்திற்கு 650 மில்லியன் யூரோ தண்டம் விதித்தவர். பல ஜேர்மனிய வங்கிகள் ஜெர்மன் மாநில அரசுகளிடம் இருந்து பெற்ற மானியங்களை திரும்பச் செலுத்தச் செய்தவர். இத்தாலியப் பாராளமன்றத்திலோ அல்லது இத்தாலிய அரசியலிலோ முன் அனுபவம் இல்லாதவர்.

யூரோ அதிர்ச்சி - "euroquake"
பணநாயக நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி டொமினோச் சரிவைப்(domino effect) போல மற்ற நாடுகளின் நிதி நிலைமையைப் பெரிதும் பாதுக்கும். இதில் முதல் பாதிக்கப்படுவது பிரான்ஸ் ஆகும். உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இத்தாலிய அரசுக்கு பிரெஞ்சு வங்கிகள் 365பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை வழங்கியுள்ளன. பிரென்ஸில் கடன் நெருக்கடி ஏற்பட்டால் அதற்குக் கடன் கொடுத்த பிரித்தானிய ஜேர்மனிய நாடுகளின் வங்கிகள் பாதிக்கப்படும். பிரித்தானியாவிலும் ஜெர்மனியிலும் கடன் நெருக்கடி ஏற்பட்டால் முழு உலகத்திலும் பொருளாதரப் பிரச்சனை ஏற்ப்படும்.  ஐரோப்பாவில் முக்கியமக யூரோ வலயநாடுகளில் ஏற்படும் நிதி நெருக்கடி முழு உலகப் பொருளாதரத்தையும் உலுக்கும். இதை யூரோ அதிர்ச்சி - "euroquake" எனக் கூறப்படுகிறது.

கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.
இத்தாலியில் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதாலோ அல்லது அரச செலவுகளைக் குறைப்பதாலேயோ இத்தாலியப் பொருளாதாரப் பிரச்சனை தணியப்போவதில்லை. இப்போதைய உலகப் பொருளாதாரப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை உலக அரசியல்வாதிகளோ பொருளாதார நிபுணர்களோ இதுவரை சரியாக குறிப்பிடவில்லை.

விழமுடியாததும்  விடுவிக்க முடியாததுமான பெரிய பொருளாதாரம்,Too big to fail; too big to bail
உலகின் எட்டாவது பெரிய யூரோ நாணய வலயத்தில் முன்றாவது பொருளாதாரமான இத்தாலியப் பொருளாதாரம் விழ முடியாது என்று சொல்லி வந்தவர்கள் இப்போது கடன் நெருக்கடியில் இருந்து விடுவிக்க முடியாத பெரிய பொருளாதாரம் இத்தாலியினுடையது என்று சொல்கின்றனர். அடுத்த ஆண்டு மட்டும் இத்தாலி முன்னூறு பில்லியன்கள் பெறுமதியான புதிய கடன்களைப் பெற்று  பழைய கடன்களைத் தீர்க்க வேண்டும். இதை €300 billion roll over என்பார்கள். இத்தாலியின் புதிய அரசு கடன் வழங்கும் வங்கிகளின் நம்பிக்கையைப் பெறவேண்டும்.


சீனாவிடம் கையேந்தும் ஐரோப்பா
அமெரிக்காவும் பிரித்தானியாவும் தமது நிதி நெருக்கடியைத் தீர்க்க பணத் தாள்களை(நோட்டுக்கள்) அச்சடித்தன. இதற்கு அவை Quantitative Easing (QE)என்ற கௌரவப் பெயர் கொடுத்தன. யூரோ வலய நாடுகளின் கடன் நெருக்கடிகளைத் தீர்க்க அவை அதிக பண நோட்டுக்களை ஐரோப்பிய மத்திய வங்கி அச்சடிக்க வேண்டும். அதிக பண நோட்டுக்கள் அச்சடிக்கப்படும் போது அது யூரோ வலய நாடுகளில் பணவீக்கத்தை ஏற்படுத்தும். யூரோ நாணயத்தின் பெறுமதியை இது பாதிக்கும். யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதவும் ஜெர்மனியின் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப் படுவதை யூரோ நாணயக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜேர்மனி விரும்புகிறது. இத்தாலியின் பதவி விலகிய பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனி சீனாவிடம் இருந்து கடன் பெற விரும்பினார். இதற்கான தொலைபேசிப் பேச்சு வார்த்தைகளும் நடை பெற்றன. சீனா மறுக்கவுமில்லை உடன் ஒத்துக் கொள்ளவுமில்லை. தன்னிடம் இருந்து கடன் பெறுவதாயின் ஐரோப்பிய நாடுகள் தனது நாட்டு மனித உரிமை மீறல்களைப் பற்றி கண்டுக்காமல் இருக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாகத் தெரிவிக்கப் படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடியைத் தீர்க்க பன்னாட்டு நாணய நிதியம் நிதி உதவி கடன் போன்றவற்றை வழங்க வேண்டும் இதற்குத் தேவையான கடனை அது சீனாவிடம் இருந்து பெற முயற்ச்சிக்கிறது. இலண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இப்படித் தலைப்பிட்டது: Humiliated Europe forced to beg China for bailout. யூரோ வலய நாடுகள் அக்டோபர் மாதக் கடைசியில் நடாத்திய மாநாட்டை அடுத்து பிரெஞ்சு அதிபர் நிக்கொலஸ் சார்க்கோஜி சீன அதிபர் ஹூ ஜின்ராவோவை தொடர்பு கொண்டு தமது நாடுகளுக்கு கடன் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். 3.2 ரில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாட்டுச் செலவாணி உபரியாகக் கொண்ட சீனா ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் வழங்க விதிக்கும் நிபந்தனைகள்:
  1. பன்னாட்டு நாணய நிதியத்தில் சீனாவிற்கு அதிக செல்வாக்கு
  2. உலக வர்த்தக நிலையத்தில் ( WTO) சீனாவிற்கு சந்தைப் பொருளாதார நாடாக அங்கீகாரம். 2001இல் இந்த நிலையத்தில் சீனா இணையும் போது ஒரு சந்தைப் பொருளாதார நாடாக அங்கீகரிக்கப் படாமையை சீனா ஏற்றுக் கொண்டே இருந்தது.
  3. ஐரோப்பிய நாடுகள் சீனாவிற்கான ஆயுத ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும். 1989இல் ரினமன் சதுக்கத்தில் சீன அரசு மாணவர்களின் கிளர்ச்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தமையைத் தொடர்ந்து சீனாவிற்கான ஆயுத ஏற்றுமதியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது.

சீனா தனது 3.2 ரில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாட்டுச் செலவாணி உபரியை எங்காவது முதலிட்டே ஆக வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...