Thursday 3 November 2011

ஆளில்லாப் போர் விமானங்கள்: மார் தட்டிய அமெரிக்க தலையைச் சொறிகிறது

அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயும் அமெரிக்க சார்புப் படைத்துறை விமர்சகர்களும் அமெரிக்கா தனது ஆளில்லாத விமானங்கள் மூலம் அண்மைக்காலங்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் ஈட்டிவரும் வெற்றிகள் பற்றி மார்தட்டிப் பேசி வந்தனர். இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் பல முக்கிய தலைவர்கள் உட்படப் பலரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. நவம்பர் 2-ம் திகதி சோமாலியாவில் 20 பேரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. கடாஃபி இறுதியாக 70இற்கு மேற்பட்ட வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயன்றபோது அதன் மீதான முதல் தாக்குதல் அமெரிக்க ஆளில்லா விமானங்களாற்தான் மேற் கொள்ளப்பட்டன.

பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பல இசுலாமியத் தீவிரவாதிகளையும் அவர்களின் முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் சொந்தமாக ஆளில்லா விமானத் தளங்களை உலகின் பலபாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா விமானங்கள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை களமிறக்கியுள்ளது.

ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பான முந்தைய பதிவுகள் பற்றி அறிய கீழுள்ள இணைப்புக்களில் சொடுக்கவும்:
ஆளில்லாப் போர்விமானங்கள் -1
ஆளில்லாப் போர்விமானங்கள் -2
அமெரிக்க ஆ.இ.வி களில் வைரஸ்

 அப்பாவிகள் கொலை
அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் பல அப்பாவி மக்களையும் கொன்று குவித்துள்ளன என்று இப்போது பாக்கிஸ்தானில் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாக்கிஸ்த்தானின் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பிரதேச நகரான வாரிஸ்தானில் பல அப்பாவிகளை அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் கொன்றுள்ளன. ஆளில்லாப் போர் விமானங்களில் இருந்து பார்க்கும் போது ஒரு இசுலாமியத்தீவிரவாதிக்கும் ஒரு சாதாரண இசுலாமியக் குடி மகனுக்கும் வித்தியாசம் காணமுடியாது என்கிறார் மிஸ்ரா ஷாசாத் அக்பர் என்னும் பாக்கிஸ்தானியச் சட்டவாளர்.

ஊர்ப் பிணக்கைத் தீர்க்கக் கூடியவர்கள் கொலை
வாரிஸ்த்தானில் ஒரு பகுதியில் குரோமைட் சுரங்கம் தொடர்பாக இரு குழுக்களிடை நடந்த மோதலைத் தவிர்க்க அவர்கள் பேச்சு வார்த்தைக்காக ஒரு இடத்தில் ஒன்று கூடினர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. அங்கு சென்ற  அமெரிக்க ஆளில்லா விமானம் அவர்கள் தலிபான்கள் எனக் கருதி அவர்கள் மீது மூன்று ஏவுகணைகளை வீசியது. நாற்பது அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

 அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பற்றிய காணொளிப்பதிவு:


பாக்கிஸ்த்தானின் இரட்டை வேடம்
பாக்கிஸ்தானிய படைத்துறை உயர் அதிகாரியான அஷ்ஃபக் கயானி தமது நாட்டுக்குள் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடாத்தும் தாக்குதல்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதலுக்கு எதிராக பாக்கிஸ்த்தான் தெரிவிக்கும் எதிர்ப்பு ஒரு இரட்டை வேடமே என்றும் கருதப்படுகிறது. திரைமறைவில் பாக் அரசு அமெரிக்க விமானங்கள் தமது நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்துவதை அனுமதித்துள்ளன என்றே கூறப்படுகிறது.

 பன்னாட்டுச் மனித உரிமைச் சட்டவாளர் கிளைவ் ஸ்ரஃபோர்ட் அமெரிக்காவின் போர் ஆப்கானிஸ்தானில் மட்டுமே. அதற்கும் பாக்கிஸ்த்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தும் உரிமை கிடையாது என்கிறார். பாக்கிஸ்த்தானுக்குள் அமெரிக்கா செய்பவை அப்பட்டமான கொலைகள் என்கிறார் அவர். New America Foundation என்னும் அமெரிக்க சிந்தனைப் பெட்டக (think-tank) நிறுவனம் இந்த ஆண்டு ஜூலைவரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் 2551பேர்களைக் கொன்றதாகவும் அவற்றில் 80% மானவர்கள் போராளிகள் என்கிறது.

அமெரிக்காவிற்குத் தலையிடி
உலகின் பல பகுதிகளில் தமது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மூலம் தாம் பெரு வெற்றியீட்டி வந்ததாக மார்தட்டிய அமெரிக்காவிற்கு இப்போது இரு முனைப் பிரச்சனை தலை தூக்கியுள்ளது. ஒன்று பன்னாட்டுச் சட்டப் பிரச்சனை.  மற்றது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்குதல்கள் நடாத்தும் இடங்களில் பாதிக்கப் பட்ட மக்கள் மத்தியில் அதிக அமெரிக்க எதிர்ப்புத் தீவிரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள். தலிபான் பாக்கிஸ்த்தான் எல்லை நகர்களில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தமக்கு ஆட்களைச் சேர்க்கும் கருவிகளாகச் செயற்படுகின்றன என்கின்றது. இதன் விளைவாக இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களால் பல தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

Shanmugam Rajamanickam said...

இந்தியா ஆளில்லாத விமானம் வசிருக்கன்களா..? இல்ல இனிமேல் தயார் பண்ணுவாங்கள..?

Anonymous said...

இந்தியாவில் விமானமில்லாத ஆட்கள் வைத்திருக்கிறாங்களோ!!!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...