Monday 12 September 2011

துருக்கி: மத்திய கிழக்கில் அமெரிக்கா திறக்கும் புதிய களமுனை

துருக்கி மற்றைய இசுலாமிய நாடுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அது ஒரு குடியரசு நாடு தேர்தல் மூலம் தனது பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கிறது. சம்பிரதாய குடியரசுத் தலைவர் கூட தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  அதன் அரசு மதசார்பற்றது. மேற்கு நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்புரிமை கொண்ட ஒரே இசுலாமிய மக்களைப் பெரும்பான்மையினர்களாகக் கொண்ட நாடு.  அமரிக்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்ட நாடு.


மூன்று கணடங்கள் மத்தியில் துருக்கி
பூகோள ரீதியிலும் துருக்கி ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு, பால்க்கன் பிராந்தியம், வளைகுடாப் பிராந்தியம், கோக்கஸ் பிராந்தியம் ஆகியவற்றிக்கு அண்மையில் துருக்கி அமைந்துள்ளது. மேற்குலகின் கிழக்கு வாசல் துருக்கி என விபரிக்கப்படுகிறது. அத்துடன் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையில் உள்ள அனட்டோலியன் குடாப் பிராந்தியத்தில் துருக்கி இருக்கிறது. மேற்குலகிற்கும் இசுலாமிய உலகிற்கும் ஒரு பாலமாக துருக்கி செயற்படுகிறது. கருங்கடல், மத்திய தரைக்கடல், ஈகன் கடல் (Aegean Sea) ஆகியவற்றிடை துருக்கி அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்தும் வளைகுடாவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளிற்கான எரிபொருள் விநியோகத்திற்கு துருக்கி முக்கியத்துவம் பெறுகிறது.


வளரும் துருக்கி
துருக்கி தொழில் நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடந்த சில பத்தாண்டுகளாக வளர்ந்து வருகிறது. தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நாடுகளில் துருக்கியும் ஒன்று என்றாலும் அது கிரேக்கம், இத்தாலி போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை என்று சொல்லலாம். துருக்கியின் 74 மில்லியன் மக்கட்தொகை ஒரு சிறந்த சந்தையுமாகும். அத்துடன் துருக்கி தன்னை ஒரு பிராந்திய வல்லராசாக வளர்த்தெடுப்பதில் பெரும் அக்கறை காட்டுகிறது. சில பிராந்தியப் பிரச்சனைகளில் அது தன் பிராந்தியத் தலமைத்துவத்தையும் நிரூபித்துள்ளது.

அமெரிக்காவின் மத்திய கிழக்கின் முதல்தரத் தேர்வு.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கேந்திரோபாய நண்பனான எகிப்த்தின் முன்னாள் அதிபர் ஹஸ்னி முபராக் பதவியில் இருந்து விரட்டப்பட்ட பின்னரும் பாஹ்ரெயின் அமெரிக்கக் கடற்படையின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையிலும் மத்திய கிழக்குப் பிராந்திய ஆதிக்கத்திற்கு அமெரிக்காவிற்கு ஒரு புதிய நண்பன் அவசியம் தேவைப்படுகிறான். அதற்கு துருக்கிதான் அமெரிக்காவின் முதல்தரத் தேர்வாக அமைகிறது.




துருக்கியில் அமெரிக்க விமானப்படைத் தளம்
அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்திற்கும் தனக்கு எதிரான தீவிரவாத இயக்கங்களை ஒழித்துக் கட்டவும் தனது ஆளில்லா விமானங்களை நவீன மயப் படுத்தி வருகிறது. காணொளி விளையாட்டுக்களை(Video Games) மழலைப் பருவத்தில் இருந்தே பழகிவந்த அமெரிக்காவின் புதிய தலைமுறையினருக்கு இது உகந்த படைத்துறைச் செயற்பாடாக அமைகிறது. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் அல் கெய்தாவிற்கும் தலிபானிற்கும் எதிராக பெரும் வெற்றியை ஈட்டி வருகிறது. துருக்கி குர்திஷ் இனத்தவர்களின் போராளிகளால் பெரும் தொல்லைகளை அனுபவிக்கிறது. குர்திஷ் கிளர்ச்சிக்காரர்களை இலகுவாக ஒழிக்க அமெரிக்காவால் தனது ஆளில்லா விமானங்கள் மூலம் துருக்கிக்கு உதவ முடியும். இந்த நிலமையை  அமெரிக்கா தனக்குச் சாதகமாக்கி துருக்கியில் ஒரு ஆளில்லா விமானத் தளத்தை கட்டி எழுப்ப முயல்கிறது. அந்தத் தளம் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறிய பின்னர் ஈராக்கில் உருவாகும் அமெரிக்க எதிர்ப்பு இசுலாமியப் புனிதப் போராளிகளை அடக்கவும் அமெரிக்காவிற்கு உதவும். அது மட்டுமல்ல துருக்கியைச் சூழவுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பு இசுலாமியத் தீவிரவாதிகளை அடக்கவும் பெரும் உதவியாக இருக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...