Saturday 14 May 2011

பின் லாடன் கோட்டை(யில்) விட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்



1979இல் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்த சோவியத் படையை எதிர்த்து வீரமாகவும் விவேகமாகவும் போரடியவர் பின் லாடன். 2001-09-11இல் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலை துல்லியமாகத் திட்டமிட்டவர் பின் லாடன். அன்றிலிருந்து 2011-05-02 வரை அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தவர் பின் லாடன்.

ஒரு வல்லரசுக்கு ஒரு பெயரைத் தேடிப் பிடிக்க எடுத்த மூன்று ஆண்டுகள்
பின் லாடனை அமெரிக்கா பிடிக்க/கொல்ல முயல்கிறது என்றவுடன் தன்னை மற்றவர்களிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்தி தனக்கும் தனது அல் கொய்தா இயக்கத்தினருக்கும் இடையில் நம்பிக்கை மிகுந்த ஒரு தொடர்பாளராக குவைத்தில் பிறந்த ஷேக் அபு அகமத் அவர்களை நியமித்து அமெரிக்காவிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை 10 ஆண்டுகளாக நெறிப்படுத்திய திறமை மிக்கவர் பின் லாடன். தொடர்பாளர் ஷேக் அபு அகமத்தின் பெயரைக் கண்டுபிடிக்க மட்டும் அமெரிக்காவிற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் எடுத்தன. பல மில்லியன்கள் செலவாகின. அந்த அளவிற்கு தனது அமைப்பின் இரகசியங்களைக் கட்டிக் காத்தவர் பின் லாடன்.


சிஐஏ இயக்குனரின் நேரடிக் கண்காணிப்பில் நடவடிக்கை.
பின் லாடனின் இருப்பிடத்தை 2010 ஆகஸ்ட் மாதம் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை அறிந்து கொண்டது. அவரைப் பிடிப்பதற்கான அல்லது கொல்வதற்கான திட்டம் தீட்ட அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு ஆறுமாதங்கள் தேவைப்பட்டன. அமெரிக்காவின் கடற்படையின் ஒரு சிறப்புப் படையணியான சீல் பிரிவின் மிகச்சிறந்த ரீம் - 6 வீரர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இரவு நேரத் தாக்குதலில் சிறப்புப் பயிற்ச்சி பெற்றவர்கள். அவர்கள் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குனர் லியோன் பானெட்டாவின் கீழ் நேரடியாக தாக்குதல் ஒத்திகைகளை மேற் கொண்டனர்.
ஒரு நாயும் படையணியில்
மொத்தமாக 80 வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின் லாடனுக்கு எதிரானா தாக்குதலில் ஒரு நாயும் பயன்படுத்தப்பட்டது. Belgian Malinois அல்லது German Shepherd வகையைச் சேர்ந்த இந்த நாய் இரண்டு மைல் தொலைவில் உள்ள எதிரிகளை மோப்பம் பிடிக்கும் வல்லமை கொண்டது. வெடிகுண்டுகளை கண்டறியும் திறமை கொண்டது. பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் வெடி குண்டுகளைக் கண்டுபிடிக்கவும் பின் லாடன் அல்லது அவரது உதவியாளர்கள் மாளிகையில் எங்காவது ஒழித்திருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்கவும் நாய் தாக்குதல் அணியில் உள்ளடக்கப் பட்டது.


கோட்டை(யில்) விட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
அமெரிக்கா 40 நிமிடங்களில் தனது தரப்பினர்களுக்குக் காயங்கள் கூட ஏற்படாமல் தனது நடவடிக்கையை முடித்தது அமெரிக்கத் தரப்பின் திறமையை எடுத்துக் காட்டுகிறதா அல்லது அவர்களின் எதிரியின் பாதுகாப்புப் பலவீனத்தைக் காட்டுகிறதா? பின் லாடன் தனது இருப்பிடத்தை ஒரு பிரபல இடத்தில் ஒரு வித்தியாசமான மாளிகை அமைத்துத் தங்கியது ஏன்? 12அடி உயரமான முட்கம்பி வலை கொண்ட சுற்றுச் சுவர், உள் மாடிகளிற்கு 7 அடிச் சுற்றுச் சுவர். இவை அந்த விட்டைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைத்தது உண்மை. அவர் இந்த மாளிகையை அமைக்கும் போது அங்கு நீண்டகாலம் தங்கும் எண்ணத்துடனேயே அமைத்தார். உலகில் மிகவும் தீவிரமாகத் தேடப் படும் ஒருவர் 10 ஆண்டுகள் தனது இருப்பிடத்தை மாற்றாமல் இருந்தது ஏன்? பின் லாடனைத் தேடிப் போனவர்கள் அங்கு ஒரு தற்கொலைத் தாக்குதலாளி இருக்கலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அங்கு அப்படி எவரும் இருக்கவில்லை. இது பின் லாடனின் பாதுகாப்பில் ஒரு குறைபாடு. பின் லாடனின் மாளிகையில் நடந்த சண்டையின் நேரம் மிகக் குறுகியதே. 40 நிமிடத்தில் பெரும் பகுதி பின் லாடனின் உடலையும் அங்கிருந்த 100 இற்கு மேற்பட்ட கணனிகளையும் காணொளிப் பதிவுகளையும் பதிவேடுகளையும் ஹெலிக்கொப்டரில் ஏற்றவே அமெரிக்கப் படையினர் செலவழித்தனர். குறுகிய நேரத்தில் சண்டை முடியும் அளவிற்கு மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்தன. பின் லாடனின் மாளிகை விமானத் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற எதிர்பார்பு ஏன் பின் லாடனிடம் இல்லாமல் போனது? அதிலும் அண்மைக் காலங்களாக அமெரிக்க விமானங்கள் குறிப்பாக ஆளில்லா விமானங்கள் பாக்கிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல்கள் நடாத்தி வருகின்றன. இப்படி இருக்கையில் இரண்டு ஹெலிக்கொப்டர்கள் வருவதை உணரக்கூடிய வகையில் எந்த ஏற்பாடுகளும் ஏன் அங்கு செய்யப்படவில்லை? பின் லாடனின் உடையில் சிறப்பாக அமைக்கப் பட்ட ஒரு பையில் சில யூரோ நாணயத் தாள்களும் சில தொலைபேசி இலக்கங்களும் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தன. பின் லாடனின் கைக்கு எட்டிய தூரத்தில் எந்தவித ஆயுதங்களும் இல்லாமல் போனது எப்படி? பின் லாடனின் மாளிகையில் தப்பி ஓடும் மார்கங்கள் ஏதும் இல்லாமல் போனது ஏன்? பின் லாடனுக்கு பின்னால் இருப்பவர்கள் இதைச் சிந்திக்க வேண்டும்.

1 comment:

santhosh said...

அருமையான தகவல்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...