Saturday 16 April 2011

இலங்கைப் போர்க் குற்றம்: நீதிபதியின் ஆசனத்தில் குற்றவாளி


இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசால் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் பற்றிய பன்னாட்டு மட்ட விசாரணை தேவை பல தமிழர் அமைப்புக்களும் பல மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. நீண்ட இழுத்தடிப்புக்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் இலங்கையில் நடந்தவை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் (Marzuki Darusman), தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டவாளர், நீதியாளர் யஸ்மின் சூகா (Yasmin Sooka), அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.
இலங்கையில் நடந்தது ஒரு இனக்கொலை என்று பலரும் கருதுகிறார்கள். மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடந்தவற்றை போர்க் குற்றம் என்று குறிப்பிட்டன. ஐநா ஆலோசனைச் சபை போர்க் குற்றம் என்ற அடிப்படையில் அமைக்கப்படவில்லை. இலங்கையின் இறுதிப் போரில் நடந்தவை தொடர்பாக வகைசொல்லல்(Accountability) தேவை என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டது. பான் கீ மூன் அமைத்தது ஒரு விசாரணைக் குழு அல்ல ஆலோசனைக் குழுவே.
இனக்க்கொலை போர்க் குற்றமாகி, போர்க்குற்றம் வகைசொல்லலாகியுள்ளது.

பக்கிஸ்த்தானில் பெனாசிர் பூட்டோ கொலை தொடர்பாக விசாரித்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு விசாரணை முடிந்தபின்னர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அதில் ஊடகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது. ஆனால் இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு இதுவரை எந்த ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நடத்தவில்லை.

ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கையை இதுவரை ஐநா தரப்பு பகிரங்கப்படுத்தவில்லை. ஐநாவின் வழமைப்படி மதிப்புரவின்(courtesy) நிமித்தம் இலங்கையிடம் அறிக்கையின் ஒரு பிரதி வழங்கப்பட்டது. அறிக்கையில் சில பகுதிகள் இலங்கையில் சில ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டு அது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை தொடர்பாக தனது "தீர்ப்பை" இலங்கை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக அறிக்கை விடும்படி தனது நட்பு நாடுகளைத் தூண்டி வருகிறது. இந்தியாவுடன் இலங்கை இது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.

ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அடுத்த கட்டத்திற்கான ஆரம்பம் மட்டுமே. அறிக்கைக்குப் பின்னர் ஐநா என்ன செய்யும்? ஐநாவின் பாதுகாப்புச் சபையில் சீனா, இரசியா ஆகிய இரு நிரந்தர உறுப்பினர்களும் தற்காலிக உறுப்பினரான இந்தியாவும் நிச்சயம் இலங்கைக்குச் சாதகமாக நடந்து கொள்ளும். அமெரிக்க நிலைப்பாடு இலங்கைக்கு எதிராக இல்லை. ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை இலங்கைக்கு "வகைசொல்லல்" இற்கு உதவி செய்யும் என்று அமெரிக்கா தெரிவிக்கிறது.

ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை இலங்கைக்கு எதிராக அமையும் என்று நாம் எல்லோரும் கருதிக் கொண்டு இருக்கையில் அது இலங்கைக்கு ஒரு சொத்தாக அமையும் என்று அமெரிக்கப் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்:
  • I think that we believe that the Lessons Learnt commission and Reconciliation commission were good steps. But we believe also that the UN Panel of Experts is a useful asset and should be taken advantage of by the government.
அமெரிக்கா மீண்டும் இலங்கை அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு என்ற வெத்து வேட்டில் நம்பிக்கை கொண்டுள்ளது. பன்னாட்டு நெருக்கடிக்குழுவும் பன்னாட்டு மன்னிப்புச் சபையும் இலங்கையின் ஆணைக்குழுவை நிராகரித்து விட்டன. ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கையின் மீதான அடுத்த நடவடிக்கை பன்னாட்டு அரங்கில் மேற் கொள்ளப்படாமல் அது தொடர்பான விசாரணையை மேற் கொள்ளும் பொறுப்பு இலங்கையிடம்தான் வழங்கப்படுமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...