Sunday 10 April 2011

தமிழ்நாட்டில் ஒரு அரசியல் முள்ளி வாய்க்கால்


தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சி 63 இடங்களில் போட்டியிடுகிறது என்பது தமிழின உணர்வாளர்களுக்கு ஒரு தோல்வியான நிகழ்வாகும். காங்கிரசைப் பொறுத்தவரை இலங்கையில் தமிழர்களை அடக்கிவிட்டது. இலங்கையில் அது நடந்து கொண்டவிதம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இனி கனவிலும் ஒர் உரிமைப் போர் பற்றி சிந்திக்கக் கூடாது என்ற ஒரு படிப்பினையை அவர்களுக்கு ஊட்டும் செயலாகும். தமிழ்நாட்டுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி நடந்து கொள்ளும் விதம் திராவிடக் கட்சிகளை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு நகர்வாகும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை இனி பதவியில் இருந்து அகற்றுவதே காங்கிரசுக் கட்சியின் திட்டம். துக்ளக் சோவின் வழிகாட்டலின்படி செயற்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு திராவிடக் கட்சியல்ல. இலங்கையில் நடந்தது தமிழர்களுக்கு எதிரான படைத்துறை முள்ளிவாய்க்கால் என்றால், தமிழ்நாட்டில் இன்று நடந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஒர் அரசியல் முள்ளி வாய்க்கால்.

தேர்தல் செல்லாக் காசுகளான தமிழின உணர்வாளர்கள்
சோவின் வழிகாட்டலின்படி ஜெயலலிதா காய்களை நகர்த்தி வை. கோபாலசாமியை செல்லாக் காசு ஆக்கிவிட்டார். ஏற்கனவே நெடுமாறன் தமிழருவி மணியன் போன்ற தமிழின உணர்வாளர்கள் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை செல்லாக் காசுகளே. இவர்களால் ஒரு தொகுதியின் வெற்றியைத் தன்னும் தீர்மானிக்கக் கூடிய வாக்கு வங்கி இல்லை. திருப்பி அடிப்பேன் என்கிற சீமான் யாருக்கு, எங்கே, எப்போத, எப்படி அடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2007-ம் ஆண்டில் இருந்தே காங்கிரசுக் கட்சி தனது "தோழமைக் கட்சி" திமுகவை மிரட்டி தான் நினைத்தபடி ஆட்டி வைக்கத் தொடங்கிவிட்டது. திமுகவிற்கு எதிராக மத்திய அரசின் கையில் இருக்கும் ஆதாரங்களை வைத்து காங்கிரசு திமுகவை இலகுவாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது சிவ சங்கர மேனன், நாராயணன், பிரணாப் முஹர்ஜி போன்றோர் அடிக்கடி வந்து கருணாநிதியைச் சந்திப்பர். அது இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாகவும் அங்கு போர் நிறுத்தம் ஏற்படுத்துவது தொடர்பாகவும் கருணாநிதியைச் சந்திப்பதாக வெளியில் கூறப்பட்டது. ஆனால் இலங்கையில் நடக்கும் போரில் தமிழர்கள் கொன்றொழிக்கப் படும் போது அதற்கு எதிரான உணர்வலை தமிழ்நாட்டில் கிளர்ச்சியாக மாறாமல் இருக்க எப்படி தமிழின உணர்வாளர்களை அடக்க வேண்டும் என்பது பற்றிய பேச்சு வார்த்தைகளே நடந்தன. இலங்கையில் இந்தியா தனது பிராந்திய நலன்களைப் பலியிட்டு தமிழத் தேசிய வாதத்தை அடக்கியது. தமிழ்நாட்டுத் தேர்தலில் கூட்டணி தர்மத்தைப் பலியிட்டு தானது கட்சி தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை திமுகவை சரிப்பதையே காங்கிரசுக் கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் உளவுத்துறை அனைத்துமே திமுக வெற்றி பெறாமல் இருக்க சகல நடவடிக்கைகளையும் மேற் கொள்கிறன. காங்கிரசின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் முள்ளிவாய்க்கால் அழிவை தமிழ்நாட்டுத் தமிழ் இன உணர்விற்கு எதிராக அரங்கேற்றுவதாகவே அமைந்துள்ளது. தான் இன்னொரு அவசரநிலைக்கு( இந்திராகாந்தியின் "எமேர்ஜென்சி") உள்ளாக்கப் பட்டிருப்பதாக கருணாநிதி பகிரங்கமாக அறிவித்தது இதைத்தான். காங்கிரசை மனதில் வைத்துக் கொண்டுதான் பேராசிரியர் அன்பழகன் சொன்னார் திமுகவை தோற்கடிக்க நினைக்கும் சக்திகளை மனதில் வைத்துக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று.

காணமற் போன கொள்கை அரசியல். வெற்றி பெற்ற இலவச அரசியல்.
ஒரு கட்சி தனது கொள்கைகளை மக்கள் முன்வைத்து அதற்காக மக்களிடமிருந்து தேர்தல் நிதி திரட்டி தன் கொள்கைகளை மக்களிடையே பரப்பும் கொள்கை அரசியல் தமிழ்நாட்டு அரசியலில் காணாமல் போய்விட்டது. இப்போது பணபலமும் ஊடக பலமும் உள்ள ஒரு கட்சி வாக்காளர்களுக்கு பணமும் பிரியாணியும்வாக்காளர்களுக்குக் கொடுத்து இலவசங்களை வழங்குவதாகப் பிரச்சாரம் செய்தால்தான் தேதலில் வெற்றி பெற முடியும். பணபலமும் ஊடக பலமும் உள்ள திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான் தமிழ்நாட்டு அரசியலில் மிகுந்த செல்வாக்கைச் செலுத்த முடியும். பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை இந்த இருகட்சிகளைச் சார்ந்தே தேர்தலில் போட்டியிட வேண்டும். அல்லது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போல் போட்டியில் இருந்து விலகவேண்டும்.

புதிதாக உருவாகிய மிரட்டல் அரசியல்.
காங்கிரசுக் கட்சிக்கு என்று ஒரு நல்ல தலைவர்களோ அல்லது ஒழுங்கான கட்டமைப்போ தமிழ்நாட்டில் இல்லை. அது தனது வாக்குப் பலத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசி திமுக கூட்டணியில் 63 இடம் பெறவில்லை. மாறாக திமுகவை மிரட்டியே அவற்றைப் பெற்றது. தமிழர்கள் தொடர்பான தனது கொள்கைகளையோ அல்லது திட்டங்களையோ அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் தனது அரசியல் செல்வாக்கை வளர்க்காமல் காங்கிரசின் அதிகாரபலம் தமிழர்களை ஒடுக்கி ஆள முற்படுகிறது.

காங்கிரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை தமிழர்களை எவ்வளவு முட்டாள்களாகப் பார்கிறது என்று அதன் தேர்தல் அறிக்கையைப் பார்கத் தெரிகிறது.
  • தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலத் திட்டங்களை பரவலாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஒரு புதிய இயக்கமாக செயல்படும்.
  • கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலத்திட்டங்கள், சமூகநீதி, மதசார்பற்ற நிர்வாகம் ஆகியவற்றை லட்சியமாகக் கொண்ட புதிய இயக்கமாக காங்கிரஸ் செயல்படும்.
காங்கிரசு இதுவரை இங்கு ஒரு பழைய இயக்கமாகவே இருக்கிறது. கான் என்ற பெயரைக் காந்தி என்று மாற்றியவர்களின் கட்சி மதசார்பின்மையைப்பற்றி பேசுகிறது.
  • மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் மூலம் தூய்மையான நிர்வாகத்தை வழங்க பாடுபடுவோம். லஞ்சக் கொடுமை, நிர்வாக திறமையின்மை வேரறுத்து ஒழிக்கப்படும்.
அலைக்கற்றை ஊழல் பற்றி ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்று காங்கிரசு நினைக்கிறது.
  • சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தில் நடக்க காங்கிரஸ் துணை நிற்கும்.
தமிழ்மக்களிடை சாதியை ஒழிக்காமல் அதை வளர்தெடுத்து சாதி அடிப்படையில் மோதவிடுதல் ரெம்ப வசதி.
  • முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இரு மாநிலங்களுக்கு இடையே நட்புறவு பாதிக்கப்படாமல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

காவேரி நீர்ப் பிரச்சனை தீர்த்தது போல் இதுவும் தீர்க்கப்படும்.

மீனவர் பாதுகாப்புப் பற்றி ஏதாவது சொன்னார்களா?

தொடர்புடைய பதிவுகள்:
நீலப்பட நடிகர்களுக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் என்ன ஒற்றுமை?
நகைச்சுவைக் கதை: கண்விழித்த காங்கிரசுப் பூனை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...