Thursday 7 April 2011

முரண்பட்டு நிற்கும் லிபிய எழுச்சியாளர்கள்


லிபியத் தலைவர் மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் சிறு பிள்ளைகள் போல் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார் அவர்களை ஒற்றுமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அரசறிவியல் விஞ்ஞானி ஃபத்தி பாஜா. லிபியாவின் கிளர்ச்சிக்காரகளில் மூன்று ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்ளும் முக்கியமானவர்கள் இருக்கிறார்கள்.

அப்துல் பத்தா ஜூனிஸ்: இவர் லிபியத் தலைவர் மும்மர்கடாஃபியின் முன்னாள் உள்துறை அமைச்சருமாவார். சில வாரங்களுக்கு முன்னர் வரை இவர் கடாஃபியுடந்தான் இருந்தார். இவர்தான் பெயரளவில் மும்மர்கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் படைகளுக்கு தலைமை தாங்கினார். இவர் ஒரு திறமையான படைத் தலைவன் அல்ல.

ஹலிபா ஹெஃப்டர்: இவர் முன்னாள் படைத் தளபதி. 1980களின் பிற்பகுதியில் சாட் நாட்டில் லிபியாவின் படை நடவடிக்கையைத் தொடர்ந்து இவருக்கும் லிபியத் தலைவர் மும்மர்கடாஃபிக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்ற இவர் அங்கு வர்ஜீனியாவில் வசித்து வந்தார். இவரைச் அமெரிக்க உளவுத் துறை சிஐஏயின் கையாள் என்று பலரும் நம்புகின்றனர். அமெரிக்காவில் இருந்து லிபியா வந்த இவர் தன்னைத்தானே கிளர்ச்சிக்காரர்களின் Field Commanderஎன்று பிரகடனப்படுத்திக் கொண்டார்.

ஒமர் மொக்தர் அல் ஹரிரி(Omar Mokhtar El-Hariri):இவர் கடாபியுடன் இணைந்து 1969இல் அப்போது இருந்த லிபிய மன்னருக்கு எதிராக புரட்சி செய்தவர். பின்னர் மும்மர் கடாஃபியின் படைத்துறை அமைச்சராக இருந்து வருகையில் 1975 இல் கடாபிக்கு எதிராகப் புரட்சி செய்ய முயன்று தோல்வி கண்டவர். பின்னர் சிறையில் இருந்தவர். பின்னர் 2011இல் லிபியாவில் மக்கள் எழுச்சி ஏற்படும் வரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர். இவர் இப்போது கிளர்ச்சிக்காரர்களின் பாதுகாப்புத் துறை அமைச்சர்.

இவர்களை ஒன்றிணைக்கப் பெரும்பாடுபட்டார்கள் லிபியக் கிளர்ச்சிக்காரர்கள். அரசறிவியல் விஞ்ஞானி ஃபத்தி பாஜா அவர்களின் தலைமையில் பல இணக்கப்பாடுக் கூட்டங்கள் நடந்தன. முடிவில் அப்துல் பத்தா ஜூனிஸ் படைத் தலைவராகவும் ஒமர் மொக்தர் அல் ஹரிரி பாதுகாப்பு அமைச்சராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். ஹலிபா ஹெஃப்டர் தான் ஒமர் மொக்தர் அல் ஹரிரின் கீழ் பணியாற்றத் தயாரில்லை என்று கூறிவிட்டார். பின்னர் அல்ஹரிரின் மகன் தனது தந்தைதான் இப்போதும் படைத் தளபதி என்று சொன்னதைத் தொடர்ந்து மீண்டும் பிரச்சனைகள் உருவானது.

கட்டுக் கோப்பில்லாத ஆனால் உறுதியான படை அமைப்பு
லிபியத் தலைவர் மும்மர்கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் படைகள் நேட்டோவின் குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர் கூட காத்திரமான முன்னேற்றம் காணவில்லை. அவர்கள் முன்னேறுவதும் பின்வாங்குவதாகவும் இருக்கின்றனர். லிபியக் கிளர்ச்சிக்காரர்களின் படையைச் சேர்ந்த ஒரு இளைஞன் எறிகணை ஒன்றைச் செலுத்த முற்பட்டவேளை அவனத் தடுத்தி நிறுத்தி எப்படி அந்த எறிகணையைச் செலுத்த வேண்டும் என்று ஒரு அனுபவம் வாய்ந்த ஒருவர் சொல்ல முற்பட்ட போது "நான் 37 நாட்களாகச் சண்டையிடுகிறேன் எனக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை" என்று பதிலளித்தான் அந்த இளைஞன். இதை அவர்களுக்கு இடையில் கட்டுக் கோப்பின்மையை எடுத்துக் காட்டுகிறது என்கிறார் ஒரு ஊடகர். அதே வேளை அவர்களின் தீரமும் சுதந்திர வேட்கையும் மிகவும் உறுதியானது என்கிறார் அந்த ஊடகர்.

தேக்க நிலையில் போர்
லிபியாவின் உள்ளூர் போர் இப்போது ஒரு தேக்க நிலையிலேயே உள்ளது. யாரும் வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. மும்மர் கடாஃபியும் பாரிய திட்டங்களுடன் தான் செயற்பட்டு வருகிறார். தனது நிலைப்படு பற்றி முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வேண்டு மென்றே கசியவிட்டு எதிரிகளைக் குழப்புவதில் வெற்றி கண்டுள்ளார். மிக ஆரம்ப நிலையிலேயே தான் நாட்டை விட்டுத் தப்பி ஓடிக் கொண்டிருப்பது போல் ஒரு செய்தியை கசிய விட்டு பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சரின் முகத்தில் கரி பூசினார். போதாக் குறைக்கு நேட்டோவின் குண்டுகள் அவ்வப்போது பொதுமக்களையும் கிளர்ச்சிக்கார்களையும் கொல்கிறது. நேட்டோவில் உள்ள ஒரே ஒரு முசுலிம் நாட்டான துருக்கியை லிபியக் கிளர்ச்சிக்காரர்கள் நேட்டோவின் தாக்குதல் மந்த நிலையை அடைந்தமைக்கான காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

கூலிப்படை எதிர் கூலிப்படை.
லிபியத் தலைவர் கடாஃபி கைக்கூலிப்படைகளைப் பாவிக்கிறார் என்ற கூச்சல் இருந்தது. இப்போது நேட்டோ அமைப்பு வெறும் விமானக் குண்டுத்தாக்குதலும் தொலைதூர ஏவுகணைத் தாக்குதல்கள் மட்டும் போதாது தரையிலும் படைகள் தேவை என்று உணர்ந்து தாமும் கூலிப்படையினரை லிபியாவிற்குள் அனுப்ப முயற்சி செய்கிறார்கள். அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா போர் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வந்தவர், இப்போது அடுத்த தேர்தலை விரைவில் எதிர் நோக்குகிறார். அமெரிக்காவும் தனது தரைப்படையை மற்ற நாட்டுப் படைகளுடன் இணத்து லிபியாவிற்கு அனுப்ப திரைமறைவில் திட்டமிடுகிறது. கடாஃபியை அகற்றுவது அவ்வளவு சுலபமல்ல.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...