Saturday 12 March 2011

பிரித்தானிய இந்துக் கோவில்களில் தமிழில் பூசை செய்யும் விவாதம்.© 2011 Vel Tharma



பிரித்தானியாவில் உள்ள கோவில்களில் தமிழில் பூசை செய்வது பற்றி பல வாதப் பிரதிவாதங்கள் இப்போது நடக்கின்றன. பூசை என்ற சொல் தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கு சென்ற ஒரு சொல். பூ+செய் என்பதுதான் பூசை என்பதாகும். பூக்களை வைத்து வழிபடும் முறையை தமிழர்கள் ஆரியக் கலாச்சாரம் தமிழர்களிடை வர முன்னரே பின்பற்றினர். அதே போல் தூம வழிபாடு வாசனைப் புகை மூலம் வழிபடுதலும் தமிழர்களுடையதே. அதையே "ஹோமம்" என்று சொல்கிறார்கள். ஆரியர் வரமுன் தமிழர்கள் கோவில்களில் பூசாரியார் தான் சகலதும் செய்வார்.

ஆரியர் வருகைக்குப்பின்னர் பல மாற்றங்கள் நடந்தது. புதிய (அ)நீதிகள் உருவாக்கப்பட்டன. அந்த அநியாயத்திற்கு அவர்கள் கொடுத்த பெயர் மனு தர்ம சாஸ்திரம். "அவாள் சாஸ்த்திரங்கள்" சமஸ்கிருதத்தை "தேவ பாஷா" என்றும் மற்றவை "நீச்ச பாஷா" என்றும் கூறுகின்றன. "நீச்ச பாஷா"வினால் இறைவனை வழிபட்டால் தீட்டு உண்டாகி "லோகத்தில்" பெரும் அனர்த்தங்கள் நிகழும் என்கின்றனர்.

இதற்கு சில உதாரணங்கள் உண்டு:

1. தமிழில் கதைத்தால் தீட்டு.
இந்துக்களின் உயர் பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காஞ்சி காமகோடி பீடத்தில் நடந்தது இது. அங்கு வேலை செய்தவர் ஒருவர் அங்கு நடந்தவற்றை அம்பலப்படுத்தி வருகிறார். அவர் எழுதியது:
சில பக்தர்கள் சங்கராச்சாரியாரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்... நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகாபெரியவரை பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கிவிட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.
அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்... ‘இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்..’ என்றேன்.

‘இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்’ என்றார் பக்தர்.எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார். போனேன். கேட்டார் சொன்னேன்.

  • ‘இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே. தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ...” என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன். சுவாமிகள் மௌனத்தில் இருக்கார். நாளைக்கு வாயேன்.. என்றேன்.( நன்றி: thathachariyar.blogspot.com) இங்கு கவனிக்க வேண்டியது: தமிழில் பேசுவதிலும் பார்க்கப் பொய் சொல்லலாம் என்பது சங்கராச்சாரியாரின் கொள்கை. பொய்பேசுவது ஐம் பெரும் பாவங்களில் ஒன்று அதிலும் பாவம் தமிழில் பேசுவதா?

2. தமிழில் பாடுவதற்கு எதிராக வழக்கு

தில்லை சிதம்பரத்தில் வள்ளலார் தனது அருட்பாக்களைப் பாடி வந்தார். அங்கு தமிழில் பாடுவது தில்லை வாழ் அந்தணர்களுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு எதிராக அவர்கள் தூண்டியது நாம் தமிழ் வளர்த்தார் எனக் கூறும் ஆறுமுக நாவலரை. ஆறுமுக நாவலரும் அருட்பாவை மருட்பா என வர்ணித்து அது சிதம்பரத்தில் பாடக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்தார். இதே பார்பனக் கும்பல் தமிழில் எழுதிய திருமுறைகளை சிதம்பரத்தில் பூட்டி வைத்து விட்டு அடம்பிடித்த கதையும் உண்டு.

3. தமிழிற்கு எதிராக தடை உத்தரவு
சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் எனப்படும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் மீது இன்று பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன. இந்நிலையில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாட ஆறுமுகச்சாமி புலவர் என்ற ஒதுவார் 2008இல் தீர்மானித்தார். ஆனால் இதை அனுமதிக்க மாட்டோம் என தீக்ஷிதர்கள் தெரிவித்தனர். மேலும் சிதம்பரம் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தடை உத்தரவும் வாங்கினர். பின்னர் இது பெரிய கலவரத்தில் முடிந்ததையும். அரசு தமிழில் பாடலாம் என்று உத்தரவிட்டதையும் நாம் அறிவோம்.

பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் வேதம் ஓதக் கூடாதா?
கிருத்தவர்கள் யாவரும் பைபிள் படிப்பர். இசுலாமியர் யாவரும் குரான் படிப்பர். ஆனால் இந்துக்கள் எல்லாரும் வேதம் படிக்கலாம் என்று "அவாள் சாஸ்திரங்கள் கூறவில்லை. பிராமணர்கள் மட்டும்தான் வேதம் ஓதலாம் என்கிறார்கள். இந்த விதி இடையில் புகுத்தப் பட்ட விதி. வேதம் என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருபவர் வியாச முனிவர். இவர் வேதங்களை நான்காக வகுத்தவர். இவர் வேதம் படித்தார். வேதம் ஓதினார். ஆனால் இவர் பிராமணர் அல்ல. முதல் மரியாதை படத்தில் வந்த ராதா போல் ஆற்றின் ஒரு கரையில் இருப்பவர்களை தன் படகின் மூலம் மறுகரைக்கு அழைத்துச் செல்லும் தொழில் செய்து வந்த திருமணமாகாத மீனவப் பெண்ணான சத்தியவதிக்குப் பிறந்த வியாச முனிவர் பிராமணன் அல்லர்.

மந்திரங்கள் மொழிகளுக்கு அப்பால் பட்டவை
ஒம் என்னும் பிரணவ மந்திரம் எந்த மொழிக்கும் உரியதல்ல. இவ்வாறே மற்ற பீட மதிரங்களான விநாயகருக்குரிய கம், கலைமகளுக்குரிய எய்ங். திருமகளுக்குரிய சிறீம், துர்க்கைக்குரிய தும் போன்ற மதிரங்கள் ஒரு குறிப்பிட்ட அதிர்வலையை ஏற்படுத்தும் ஒலி வடிவங்கள். அந்த ஒலி வடிவங்கள் கொடுக்கும் அதிர்வுகள் வலுமிக்கவை; எமது உடலிலும் உள்ளத்திலும் மாற்றங்கள் செய்யக் கூடியவை என்று சொல்கிறார்கள். இந்த மந்திரங்கள் மிருகங்கள் எழுப்பும் ஓசைகளில் இருந்துதான கண்டுபிடித்தார்களாம்.

விதிகளை மாற்றுங்கள் அவாள் சாஸ்த்திரங்களைக் கொழுத்துங்கள்.
இலண்டனில் ஜீரீவி தொலைக்காட்சியில் தோன்றிய ஒரு பார்ப்பனர் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படியே தாங்கள் செய்ய முடியும் என்றார். அவர்களது மனு தர்ம சாஸ்திரம் சொல்கிறது ஒரு தந்தை தனது மகள் பூப்படைய முன்னர் திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அந்த தகப்பனுக்குத் தண்டனையாக அந்த மகள் திருமணமாகும் வரை தகப்பன் அவள் மாதவிலக்கை அருந்த வேண்டும். இந்த "சாஸ்திரத்தை" எவன் கடைப்பிடிக்கிறான்? கால்பந்தாட்டம் விளையாடுவதாயின் கையால் பந்தைத் தொடக்கூடாது என்ற விதியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதை மீற முடியாது. இல்லைக் கையால்தான் தொடுவேன் என்று அடம்பிடிப்பதாயின் அந்த விதியை மாற்ற வேண்டும். தமிழில் வழிபாடு செய்வதாயின் இந்த "சாஸ்த்திரங்களை" கொழுத்துங்கள். காஞ்சி மடத்தைப் பின்பற்றுவதா காஞ்சித் தலைவன் சொல்லைக் கேட்டு ஈரோட்டுப் பக்கம் திரும்புவதா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...