Saturday 17 July 2010

ஆக்டபஸைத் தொடர்ந்து விளையாட்டுக்களில் மேலும் மூட நம்பிக்கை



உலகக் கிண்ண கால்பந்தாட்ட முடிவைச் சரிவரச் சொல்லி எட்டுக்கால் சோதிடரான ஆக்டபஸ் உலகைக் கலக்கியதைத் தொடர்ந்து இன்னும் ஒரு மூட நம்பிக்கை வளர்க்கும் செய்தி ஜேர்மன் பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியரிடம் இருந்து வந்துள்ளது. "அதிஷ்டம் தரும் பொருட்களையோ ஆடைகளையோ அணிவதால் விளையாட்டு வீரர்களின் திறன் உளரீதியாக அதிகரிக்கும் என்று University of Colonge இன் Dr. Lysann Damisch என்னும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் Lysann Damisch தனது கருத்துக்கு முன் வைக்கும் ஆதாரங்கள்:
  • டைகர் வூட்ஸ் ஞாயிற்றுக் கிழமைகளில் சிவப்பு மேலாடை அணியும் போது பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்.
  • ஷெரீனா வில்லியம்ஸ் ஒரு டெனிஸ் போட்டியில் தொடர்ந்து ஒரே காலுறையை அணிந்திருந்தார்.
  • இங்கிலாந்து கால்பாந்தாட்ட வீரர் பேரூந்தில் ஒரே இருக்கையை மட்டும் எப்போதும் பாவிப்பாராம்.
  • பொபி மூர் என்னும் 1960களில் இங்கிலாந்துக்கு விளையாடிய கால்பந்தாட்ட போட்டிகளுக்கு முன் வீரர்கள் ஆடை மாற்றும் அறையில் தான் கடைசியாக காற்சட்டை மாற்றுவாராம்.
  • இன்னொரு இங்கிலாந்து கால் பந்தாட்ட வீரரான கரி நெவில் ஒரே பின்-சவர பூச்சைப் பாவிப்பாராம். அத்துடன் ஒரே இடுப்புப் பட்டி, ஒரே காலணி பாவிப்பாராம்.
  • அமெரிக்க பந்தாட்ட வீரரான மைக்கேல் ஜோர்டன் தனது ஒரே காற்சட்டையை எப்போதும் தனது காற்சட்டைக்குள் அணிவாராம்.
Dr. Lysann Damisch பல விளையாட்டு வீரர்களை வைத்து பல பரிசோதனைகளை மேற்கொண்டாராம். அவர்களில் தங்கள் அதிஷ்டம் தரும் பொருள்கள் இல்லாமல் விளையாடும்போது அவர்களின் திறன் குறைந்து இருந்ததாம். சில Golf வீரர்களிடம் இந்தப் பந்து அதிஷ்டகரமானது என்று சொல்லிக் கொடுத்தபோது அவர்கள் திறமையாக செயற்பட்டார்களாம்.

Richard Lustberg என்னும் மனோதத்துவ நிபுணர் மனப்பயம் தன்னம்பிக்கையின்மை உடையவர்கள் அதிஷ்டம் தரும் என்று சொல்லப்படும் பொருட்களைத் தம்முடன் வைத்திருக்கும் போது பயம் நீங்கப் பெறுவர். தன்னம்பிக்கை அடைவர் என்று சொல்கிறார்.

Friday 16 July 2010

சீன ஆயுத வலிமையும் இந்திய மடைமையும்


உலகில் அதிக எண்ணிக்கையிலான படையினரைக் கொண்டது சீனா. அதன் படையினரின் எண்ணிக்கை இருபத்தி எட்டு இலட்சத்திற்கும் மேலானதாகக் கணிக்கப்படுகிறது. எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட போர் டாங்கிகள், நாலாயிரத்திற்கு மேற்பட்ட போர் விமானங்கள், அறுபதிற்கு மேற்பட்ட நீர் மூழ்கிக் கப்பல்கள், அறுபதிற்கு மேற்பட்ட போர் கப்பல்கள் என்று கணக்கிடப் பட்டுள்ளது. எண்ணிக்கை தெரியாத அணு ஆயுதங்கள்.

உலக படை வலிமையில் ஐக்கிய அமெரிக்கா முதலாம் இடத்தையும் சீனா இரண்டாம் இடத்தையும், இரசியா மூன்றாம் இடத்தையும் இந்தியா நான்காம் இடத்தையும் ஐக்கிய இராச்சியம் ஐந்தாம் இடத்தையும் வகிக்கின்றன. பாக்கிஸ்த்தான் பதினைந்தாம் இடத்தில் இருக்கிறது.

இலங்கையில் சீனா
அண்மையில் அவுஸ்த்திரேலியத் தமிழ் வானொலிக்குப் பேட்டியளித்த இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி இலங்கையில் சீனாவின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தைப் பற்றியும் அதனால் இந்தியாவிற்கு உள்ள ஆபத்தைப்பற்றியும் குறிப்பிடுகையில் சீனக் கடற்படை இந்தியாவின் கடற்படையிலும் பார்க்க எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் இந்தியக் கடற்படை சீனாவின் கடற்படையிலும் பார்க்க நவீனமானது என்றார். நான் சென்ற ஆண்டு வாங்கிய கணனி எனது நண்பன் மூன்று ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கணனியுடன் ஒப்பிடுகையில் நவீனமானதாகத்தான இருக்கும். ஆனால் அடுத்த ஆண்டில் எனது நண்பன் புதுக் கணனி வாங்கும் போது அவனது கணனி எனது கணனியிலும் நவீனமாகிவிடும். இலங்கையில் சீன படைகள் எதுவும் இல்லாத நிலையில் இருப்பதிலும் பார்க்க இலங்கையில் அம்பாந்த்தோட்டையிலும் முல்லைத்தீவிலும் சீனப் படைகள் இருக்கையில் சீனாவின் இந்தியா மீதான தாக்குதல் திறன் அதிகமானதாகவே இருக்கும். இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மருமகள் தாலி அறுவதற்கு மகனைக் கொன்றதைப் போன்றது. இந்தியா தமிழ்த்தேசிய போராட்டத்தை அழிக்கவும் தலையெடுக்காமல் இருக்கவும் இலங்கையில் சீனாவுடன் இணைந்தும் சீனாவிற்குப் பல விட்டுக் கொடுப்புகளைச் செய்தும் தன் பிராந்திய நலன்களைப் பலியிட்டு வருகிறது.

தீராத எல்லைப் பிரச்சனை
இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் தீராத எல்லைப் பிரச்சனை இருக்கிறது. முக்கியமாக அருணாச்சலப் பிரதேசத்தில் இது ஒரு கொதி நிலையில் உள்ளது. அண்மைக்காலங்களில் சீனா இப்பகுதியின் ஊருடுவல்களை மேற் கொண்டது. இந்தியா தனது எல்லை என்று சொல்லப் பட்ட பகுதிகளுக்குல் சீனப் படைகள் ஊடுருவி தமது தளங்களையும் முகாம்களையும் அமைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது 50,000இற்கும் 60,000இற்கும் இடைப்பட்ட துருப்புக்களைக் கொண்ட இரு பெரும் படையணிகளை அருணாச்சலப் பிரதேரத்திற்கு நகர்த்தியது. இதற்கு சீனா தனது எச்சரிக்கையை சென்ற மாதம் ஆறாம் திகதி இப்படி வெளியிட்டது: India’s current course can only lead to a rivalry between the two countries. India needs to consider whether or not it can afford the consequences of a potential confrontation with China.” சீனா இரசியாவுடனும் வியட்நாமுடனும் தனது எல்லைப் பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்துவிட்டது. சீனா சோவியத் வீழ்ச்சியின் பின்னர் இரசியாவுடன் சுமூக உறவுகளை ஏற்படுத்தி வருகிறது. முன்னர் இரசியாவின் எல்லையில் இருந்த படைகளை இப்போது அதிகம் இந்திய எல்லைகளுக்கு நகர்த்தியுள்ளது.

மேற்குலகு இந்தியாவின் பக்கமா?
இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் சீனா இந்தியாவுடன் போர் புரிந்தால் மேற்குலகம் தம்பக்கமே நிற்கும் என்று நம்புகிறார்கள். மேற்குலகம் சீனா இந்தியாவை ஆக்கிரமித்து வெற்றி பெறுவதை விரும்பவில்லை என்பது உண்மைதான். ஆனால் தமக்கு எதிர் காலத்தில் மிகப் பெரிய சவாலாக அமையப் போகும் இரு நாடுகள் ஒன்றோடு ஒன்று போரிட்டு பொருளாதார ரீதியில் சீரழிவதை அவை நிச்சயம் விரும்பும். அப்படி ஒரு போரில் இருபக்கத்திற்கும் ஆயுதங்களை விற்பனை செய்து தமது வருவாயைப் பெருக்கிக் கொள்ளும்.

சீனா தொழில் நுட்பத்தில் பின்தங்கியதா?
சீனா தொழில் நுட்பத்தில் பின்தங்கியுள்ளது என்று இந்தியா நம்புகிறது. உலக தகவல் தொழில் நுட்ப வெளிமூல(I. T Out sourcing) வர்த்தகத்தில் சீனாவின் பங்கு 5% இந்தியாவின் பங்கு 43%. இதை மட்டும் வைத்துக் கொண்டு சீனா தொழில் நுட்பத்தில் பிந்தங்கியது என்று சொல்லி இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அன்னியச் செலவாணி இருப்பில் சீனா முதலாமிடத்திலும் இந்தியா 159வது இடத்திலும் இருக்கின்றன. தகவல் தொழில் நுட்பத்தில் சீனா இந்தியாவிலும் பார்க்கப் பின்தங்கி இருக்கலாம் ஆனால் பல தொழில்நுட்பங்களில் அது முன்னணியில் திகழ்கிறது. சீனா ஏவுகணைத்துறையில் பாரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. அது அமெரிக்கவையே அசர வைத்துள்ளது. செய்மதிகளை அழித்தொழிக்கும் தொழில் நுட்பத்தில் சீனா அதிக கவனம் செலுத்துகிறது. அமெரிக்கா தனது படை வலிமைக்கு செய்மதிகளில் அதிகம் தங்கி இருக்கிறது என்று அறிந்தே சீனா அதைக் குறிவைத்து தனது தொழில் நுட்பத்தை வளர்க்கிறது. இந்திய ஏவுகணைகள் ஐயாயிரம் தொடக்கம் ஆறாயிரம் கிலோ மீற்றர் வரை சென்று தாக்கும் வல்லமையுடையன என்பதை சீனா அறிந்துள்ளது. இவை சீனாவின் பெரும் பகுதிகளைக் குறிவைக்கக்கூடியன என்பதை சீனா நன்கு உணர்ந்துள்ளது. அதற்கு ஏற்ப ஒரு மாற்று வழியை ஏற்படுத்த தீவிர முயற்ச்சியில் இறங்கியுள்ளது. தீபெத்தை அண்மித்த பிரதேசங்களில் தனது ஏவுகணைகளை பாரிய அளவில் இந்தியாவைக் குறிவைத்து அமைத்துள்ளது.

இந்தியாவுக்குள் சீனா
மாவோயிஸ்ட் கொள்கைகளைக் கொண்டா நக்சலைட்டுக்கள் இந்தியாவுக்குள் ஒரு சீனப் படையா என்ற கேள்விக்கு என்ன பதில்?

சீனா இந்தியாவைக் கூறு போடலாம்.
தேவை ஏற்பட்டால் இந்தியாவைப் பலநாடுகளாகப் பிரிக்கும் எண்ணத்தைக் சீனக் கொள்கை வகுப்பாளர்கள் கொண்டுள்ளார்கள். இதை அவர்கள் பகிரங்கப் படுத்தியும் உள்ளனர்.

சீன அணு ஆயுதங்கள்
உலகிலேயே இப்போது மிகத் தீவிரமாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. சீனாவின் இரகசியம் பேணும் திறன் உலகிலேயே மிக இறுக்கமானது. அதனால் சீனாவின் படைத்துறைச் செலவீனம் எவ்வளவு அதன் பலம் எவ்வளவு என்பது எமக்குத் தெரியாது. அதன் உண்மையான பலம் நாம் கொண்டதிலும் பார்க்க நிச்சயம் அதிகமானது.

Thursday 15 July 2010

அந்த அழகியின் பலான கடைசி ஆசை


அது ஒரு குளிர் காலம். கடலில் பெரும் உறை பனிகளிடையே ஒரு கப்பல் மெல்லச் சென்று கொண்டிருந்தது. அது உல்லாசப் பிரயாணிகளின் கப்பல். பலதரப்பட்டவர்களும் அதில் தங்கள் விடுமுறையை வெகு இன்பமாகக் கழித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று கப்பலின் ஒரு புறம் தீப்பிடித்து கடலுக்குள் மூழ்கத் தொடங்கிவிட்டது. கப்பலில் இருந்த எல்லோரும் மறு புறத்தில் கூடினர். கடல் நீர் கடும் குளிராக இருந்தது. பாய்ந்து நீந்தவும் முடியாது. இறக்கப் போகும் பயத்தில் அனைவரும் ஏங்கி நின்றனர். ஒரு இளம் அழகி எல்லோருக்கும் முன் வந்து எனக்கு இறப்பு நிச்சயம். இறக்க முன் எனது உன்னதமான பெண்மையை ஒரு ஆணுக்காவது நிரூபித்து விட்டு இறக்க விரும்புகிறேன். யாராவது ஆண்மை மிக்கவன் உங்களில் இருந்தால் என் பெண்மையின் மேன்மையை அனுபவியுங்கள் என்று கூறி தனது ஆடைகளை களைந்தெறிந்து விட்டு நிர்வாணமாக நின்றாள். அனைவரும் வியப்புடன் நிற்கையில் ஒரு கட்டான உடம்பு கொண்ட வாலிபன் அவன் முன் வந்தான். தனது ஆடையக் கழற்றி அவளிடம் கொடுத்து இந்தா இது அழுக்கடைந்து கிடக்கிறது இதை ஒழுங்காக துவைத்து உன் பெண்மையைக் காட்டு என்றான்.

கதையின் நீதி: உயிர் போகும் நிலையிலும் ஆணினம் பெண்ணினத்தை அடிமையாகத்தான் பார்க்கிறது.

காதல் முதலாளித்துவமல்ல


நினைத்தால் இனிக்குமாம்
புகை பிடித்தேன்
இரத்தத்தில் நிகோடீன் படிந்தது
சாப்பிட்டேன்
இரத்தத்தில் கொழுப்புப் படிந்தது
மது அருந்தினேன்
இரத்தத்தில் மது படிந்தது
உன்னை நினைத்தேன்
இரத்தத்தில் சர்க்கரை படிந்தது

காதல் முதலாளித்துவமல்ல

காதல் என்பது
முதலாளித்துவப் பொருளாதாரமல்ல
போட்டியில் சேவைகள் சிறக்க
ஒருவரையே காதலி
காதல் பொதுவுடமை
காதலர் தனியுடமை

யாவும் நீயே

கல்வி தேடினேன் கிடைக்கவில்லை
பொருள் தேடினேன் கிடைக்கவில்லை
காதல் தேடினேன் நீ கிடைத்தாய்
வாழ்வில் சகலமும் கண்ட திருப்தி

Wednesday 14 July 2010

இடை கிள்ளி இதழில் முத்தம், போர் குற்றம்- ஹைக்கூ கவிதைகள்


எழும்பியது
பொறுமை இடறி விழுந்தது
இடறு பட்ட மிருகம்
கோபம்

தமிழினக் கொலை
மகன் சாகட்டும்
மருமகள் தாலி அறட்டும்
இந்திய வெளியுறவுக் கொள்கை

பாதக நாடு
துரோகத்தின் உச்சக் கட்டம்
தமிழர் துயரங்களின் மூலம்
இந்திய சிங்கள கூட்டமைப்பு

போர் குற்றம்
மறைந்து போன உண்மைகள்
மறந்து போன துயரங்கள்
ஈழப் படுகுழிகள்

வாழ்க்கை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ

இது வேறு

இடையில் கிள்ளி
இதழில் முத்தம்
ரோசாப்பூவிற்கு

Tuesday 13 July 2010

உலகக் கிண்ணம்: வென்றது தென் ஆபிரிக்காவே.






என்னுடன் வேலை செய்யும் ஆங்கிலேயர் தென் ஆபிரிக்காவில் நடந்த உலகக் கிண்ண கால்பாந்தாட்டத்தில் இங்கிலாந்து அணியின் மோசமானா விளையாட்டால் அதிருப்தியடந்திருந்தார். அவரைக் கிண்டல் செய்வதற்கு நான் அவரிடம் கூறினேன் இங்கிலாந்து இந்தியா இலங்கை பாக்கிஸ்தானுடன் கால்பந்தாட்டமும் ஐரோப்பிய தென் அமெரிக்க நாடுகளுடன் துடுப்பாட்டமும் (கிரிக்கெட்) ஆடினால் நிச்சயம் வெற்றி பெறும் என்று. ஆங்கிலேயர்கள் தாங்கள் இன்றும் உலகின் மேன்மை மிக்க இனம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு மட்டத்தில் பாரிய நிகழ்வுகளை வெற்றீகரமாக ஒழுங்கு செய்வதில் தமக்கு நிகரில்லை என்றும் எண்ணுகிறார்கள். பிபிசி செய்தி நிறுவனம் வேறு நாடுகளில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளில் குறைகண்டு பிடித்து வெளியிடுவதில் முன்னிற்கும். ஆனால் தென் ஆபிரிக்காவில் நடந்த உலகக் கிண்ணக் கால்பாந்தாட்டத்தை தென் ஆபிரிக்கா ஒழுங்கு செய்த விதத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளது. ஆரம்பத்தில் ஆபிரிக்க கால் பந்தாட்ட இரசிகர்கள் vuvuzelas என்னும் ஊதுகுழல் பலரது விமர்சனங்களுக்கு உள்ளானது நாளடைவில் அது பல நாட்டினராலும் பாவிக்கப்பட்டு உலகப் பிரசித்தி பெற்றது. ஆப்பிள் ஐ போனில் அதுவும் ஒரு செயற்படு பொருளாக இணைக்கப் பட்டது.

இங்கிலந்தும் ஜெர்மனியும் கால்பந்தாட்டத்தில் மோதிக் கொள்ளும் போது இரசிகர்கள் மத்தியில் பலத்த பதட்டம் நிலவும். போட்டி முடிந்தவுடன் பாரிய கலவரம் நடப்பது வழக்கம். இம்முறை எந்த அசம்பாவிதங்களுக்கும் இடமின்றி தென் ஆபிரிக்கா சமாளித்தது பெரும் சாதனை.

இப்போதைய உலக நிலையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதில் முக்கிய பிரச்சனை பாதுகாப்புப் பிரச்சனை. இதை தென் ஆபிரிக்கா சாதுரியமாகச் சமாளித்தது. அடுத்தது உலகத்திலேயே மோசமான இரசிகர்களைக் கொண்டது கால்பந்தாட்டம் தான். பலநாடுகளிலும் இருந்து வந்த பல தரப்பட்ட இரசிகர்கள், பல மொழி பேசிம் இரசிகர்கள் அவர்களின் குழறு படிகள் எல்லாவற்றையும் தென் ஆபிரிக்கா சாதுரியமாக சமாளித்தது.

கால்பந்தாட்டத்தால் இனஒதுக்கல் உதைத்துத் தள்ளப்பட்டது
தென் ஆபிரிக்காவின் சுதந்திரப் போராட்டத்திற்கும் கால் பந்தாட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நிற வெறியர்களால் தென் ஆபிரிக்கா ஆளப்பட்ட போது அரசு கால் பந்தாட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை. கால் பந்தாட்டத்தில் கறுப்பினத்தவர்கள் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் மத்தியில் கால்பந்தாட்டத்திற்கு பலத்த வரவேற்பும் இருந்தது. தென் ஆபிரிக்காவின் சிறைகளில் இருந்த கறுப்பினத்தவர்கள் தங்களுக்குள் பல கால்பந்தாட்டக் குழுக்களை உருவாக்கி அவற்றுக்குள் போட்டிகளை ஏற்படுத்தி சிறந்த குழு நிலைப்போட்டிகளை ஒழுங்கு செய்தனர். இவை மிகச் சிறப்பாக அமைந்தமை அவர்களை சிந்திக்க வைத்தது. மோசாமான நிலையில் எம்மால் இப்படி சிறப்பாக ஒழுங்கு செய்ய முடியுமாயின் ஏன் நம்மையே நாம் ஆள முடியாது என்று சிந்திக்க வைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய அப்போது தடை செய்யப் பட்டிருந்த ஆபிரிக்க தேசியக் காங்கிரசும் மக்களை ஒரு இடத்தில் திரட்டுவதற்கு கால்பந்தாட்டங்களை ஒழுங்கு செய்தது. அங்கு தனது கொள்கை விளக்கங்களையும் செய்தது. போராட்ட நிதியும் திரட்டப்பட்டது. இதனால் கால்பந்தாட்டத் தரம் மிகவும் உயர்ந்தது. 1976இல் முதல் முதலாக கறுப்பினத்தவரும் வெள்ளை இனத்தவரும் கலந்த ஒரு கால்பந்தாட்ட அணி உருவாக்கி ஆர்ஜெண்டீனாவுடன் விளையாடியது. வீரர்கள் மைதானத்தில் ஒன்று பட்டு நிற்க பார்வையாளர்கள் கறுப்பு வெள்ளை எனப் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். தென் ஆபிரிக்க அணி 5-0 என்று வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்காவின் சுதந்திரப் போராட்டத்திற்கான முக்கிய நிதி மூலமாக கால்பந்தாட்டம் திகழ்ந்தது.

இன்று இன ஒதுக்கற் கொள்கையில் இருந்து தென் ஆபிரிக்கா மீண்டு வந்து எப்படி வீறு கொண்டு நிற்கிறது என்பதை இந்தக் கால் பந்தாட்டப் போட்டி பறை சாற்றி நிற்கிறது.

தோல்வியடைந்த நடுவர்கள்
இந்த உலகக் கிண்ண கால் பந்துப் போட்டியில் தோல்வி கண்டது நடுவர்களே. நடுவர்கள் பல தவறுகளை விட்டனர்.
இது தொடர்பான தகவல்களை இங்கு பார்க்கலாம்: தடுமாறிய நடுவர்கள்

ஐநா பான் கீ மூனுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் திரை மறைவு உடன்பாடா?


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று பல பன்னாட்டு மனித நேய அமைப்புக்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பான் கீ மூன் தான் இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை கூற ஒரு நிபுணர் குழு அமைக்க இருப்பதாக அறிவித்தார். பின் காலத்தை இழுத்தடித்து சென்ற மாதம் அந்த நிபுணர் குழுவை அமைத்தார். இது கொழும்பை உலுக்கி விட்டது. அங்கு பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. உச்சக் கட்டமாக இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் உள்ள ஐநா பணிமனையை தனது அடியாட்கள் சகிதம் முற்றுக்கையிட்டு அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாக்கியதுடன் பணிமனை முன் ஒரு சாகும் வரையிலான உண்ணா விரதத்தையும் ஆரம்பித்தார். பின்னர் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபகசவின் வேண்டுதலின் பேரில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

விமல் வீரவன்சவின் உண்ணாவிரதம் கைவிட முன்னராக ஐநா இந்த அறிக்கையை வெளியிட்டது:

New York, 9tha July2010: Statement attributable to the Spokesperson for the Seretary General on Sri Lanka
Following his decision yesterday to recall the United Nations Resident Coordinator in Colombo and close the UNDP Regional Centre in Colombo, the Secretary-General calls again upon the Government of Sri Lanka to take urgent action to normalise conditions around the United Nations Offices in Colombo so as to ensure the continuation of the vital work of the Organization to assist the people of Sri Lanka.

The Secretary-General believes the strong reaction to his establishment of a Panel of Experts on accountability in Sri Lanka is not warranted. The United Nations has consistently held that this Panel has been set up to advise the Secretary-General with regard to taking forward the objectives of the Joint Statement of 23rd May 2009. These objectives include the further fostering of reconciliation and related issues as well as reflecting the commitment by Sri Lanka to the promotion and protection of human rights and the importance of accountability in order to continue the strengthening of peace and development in that country. The United Nations recognizes that the responsibility in this regard is that of the Government of Sri Lanka. The Panel itself will advise on the modalities, applicable international standards and comparative experience relevant to an accountability process. It will be a resource available to assist the Government of Sri Lanka and the Commission on Lessons Learnt and Reconciliation in applying the international best practice in this regard.

இந்த அறிக்கையின் படி பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க அமைத்த நிபுண்ர்கள் குழு:
  • பான் கீ மூனும் மஹிந்த ராஜபக்சவும் 23-05-2009இலன்று வெளியிட்ட கூட்டறிக்கைக்கு இணங்க அமைக்கப் பட்டது.(இந்த அறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்: http://www.un.org/News/Press/docs/2009/sg2151.doc.htm).
  • இணக்கப்பாட்டிற்கும் மனித உரிமைப் பாது காப்பிற்கும் வகை சொல்லலின் முக்கியத்துவத்திற்கும் இலங்கையில் அமைதியையும் அபிவிருத்தியையும் மேம்படுத்த அமைக்கப் பட்டது. (இவை தொடர்பான பொறுப்பு இலங்கை அரசினுடையது என்று ஐநா ஏற்றுக் கொள்கிறது.)
  • இலங்கைக்கு உதவக்கூடிய ஒரு மூல வளமாக அமையும்.

2009 மே 23-ம் திகதி வெளியிடப்பட்ட மஹிந்த-மூன் கூட்டறிக்கையில் போர் குற்றம் என்ற சொல் ஒரு இடத்தில் தன்னும் இடம் பெறவில்லை. ஒரு இடத்தில் மட்டும் தமிழர் தரப்பு என்ற சொல் பாவிக்கப் பட்டிருக்கிறது.


2010 ஜூலை 9-ம் திகதி ஐநா வெளியிட்ட அறிக்கையின் படி பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க அமைத்த நிபுண்ர்கள் குழு தொடர்பான விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் போர் குற்றம் என்ற சொல் இடம் பெறவில்லை. தமிழர்கள் என்ற சொல்லும் இடம் பெறவில்லை.பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க அமைத்த நிபுண்ர்கள் குழு தொடர்பான சரியான விளக்கத்தையோ அதன் அதிகாரங்களையோ இது வரை தெளிவு படுத்தவில்லை. இந்தக் குழுவைப் பற்றி தேவையான நேரத்தில் தேவையான சந்தர்ப்பவாத வியாக்கியானங்களை கொடுத்து மனித நேய அமைப்புக்களை பான் கீ மூன் ஏமாற்றப் போகிறாரா?

பான் கீ மூன் தான் இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை கூற அமைத்த நிபுணர் குழு 2010 ஜூலை 9-ம் திகதி ஐநா வெளியிட்ட அறிக்கையின் படி போர் குற்றம் தொடர்பாக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டாது என்பது போல் தெரிகிறது. இந்த அறிக்கை பான் கீ மூன் ஏற்கனவே இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை கூற அமைத்த நிபுணர் குழு தொடர்பாக கூறப்பட்ட கருத்துக்களுடன் ஏன் முரண்படுகிறது?

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் விமல் வீரவன்ச உண்ணா விரதத்தை முடித்தது மஹிந்தவிற்கும் பான் கீ மூனிற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

Monday 12 July 2010

காதல் பிரசவம்


காதல் பிரசவம்
காதலும் பிள்ளைப்
பெறுவது போலே
காதலில் விழுவது சுகம்
காதலைத் தெரிவிப்பது
பிரசவ வேதனை

அவலம் தந்த அநுபவம்
கும்மினேன் துவைத்தேன்
காயவைத்தேனன்
அழுத்தமும் கொடுத்தேன்
தூய்மையானது
என் அழுக்குச் சட்டை
உள்ளமும் அப்படியே
பல சோதனைகளின் பின்

திருப்பதியில் சிங்களம் வெல்லப் பூசை
புனித தீர்த்தங்களிலும் தமிழன் குருதி
புண்ணிய தலங்களிலும் தமிழர் குருதி
பௌத்த காவியுடைகளிலும் தமிழன் குருதி
பார்பனப் பூணூல்களிலும் தமிழன் குருதி
பட்டை நாமத்திலும் தமிழன் குருதி
வீபூதிக் குறிகளிலும் தமிழன் குருதி

கதைக்கச் சிறந்த நண்பன்

எனக்கு நானே பேசிக் கொள்வேன்
நான் காதல் வசப்பட்டவன் அல்ல
புத்தி பேதலித்தவனும் அல்ல
இதிலும் சிறந்த பேச்சுத்துணை
இந்த உலகத்தில் இல்லை.

சொல்லுங்கள் தேவ தூதுவரே


இவள் வேறு
காதலிக்காக அழாதே
அழவைப்பவள் காதலியல்ல
வாழவைப்பவளே காதலி

சந்தர்ப்பவாதிகள்

கிடைத்த சந்தர்ப்பத்தில்
சிரமம் கண்டான் சோம்பேறி
சிரமத்தில் சந்தர்ப்பம் தேடுவான்
வெற்றி பெறுபவன்.

சந்தர்ப்பத்தை நழுவ விட்டான் மூடன்
சந்தர்ப்பம் கிடைத்தவன் பாக்கியசாலி
சந்தர்ப்பத்தை உருவாக்கினான் உழைப்பாளி
சந்தர்ப்பத்தை பயன் படுத்தினான் புத்திசாலி

சொல்லுங்கள் தேவ தூதுவரே
ஒரு கன்னத்தில்
அறைந்தவனுக்கு
மறு கன்னத்தை
காட்டினேன்
இரு கன்னத்திலும்
மாறி மாறி அறைகிறான்
என்ன செய்ய தூதுவரே

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...